ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக மாற்றுவதற்கு திட்டமிடும் குழுக்கள்! | தினகரன் வாரமஞ்சரி

ஆர்ப்பாட்டங்களை வன்முறையாக மாற்றுவதற்கு திட்டமிடும் குழுக்கள்!

விலைவாசி அதிகரிப்பு மற்றும்தற்பொழுது எதிர்கொண்டிருக்கும்பொருளாதார நெருக்கடிகளுக்குத்தீர்வு காணுமாறு வலியுறுத்தி மக்கள்ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்டங்கள் நாட்டின்பல்வேறு  பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

ஆனால் மக்கள் ஆரம்பித்துள்ள இப்போராட்டங்களை வன்முறைப்   போராட்டமாக மாற்றுவதற்கு சில தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அத்தரப்பினர் அரசுக்கு எதிரான தரப்பினரென்பது உறுதியாகியுள்ளது.

அரசியல் பின்னணியுடன் செயற்படும் சில சக்திகள் இன்றைய போராட்டங்களை வன்முறை வடிவத்துக்கு மாற்றும் வகையில் செயற்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக ஆர்ப்பாட்டங்களின் போது ஆங்காங்கே விரும்பத்தகாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கடந்த மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற போராட்டம் இறுதியில் வன்முறையாக உருவெடுத்திருந்தது. பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருடன் முரண்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், பாதுகாப்புத் தடைகளையும் மீறிச் செல்ல முற்பட்டமையால் குழப்பநிலைமை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டு வன்முறை உருவெடுத்தது. பாதுகாப்புத் தரப்பினருக்குச் சொந்தமான பஸ், பொலிஸாரின் வாகனங்கள் என பொதுச் சொத்துக்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது.

இந்த வன்முறைகளினால் பொதுச் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதம் 39மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சொத்துச் சேதங்களுக்கு அப்பால் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் நடத்திய பதில் நடவடிக்கைகளில் பலரும் காயமடைந்தனர். ஆர்ப்பாட்டத்தினுள் காணப்பட்ட வன்முறையாளர்களின் தாக்குதல்களில் பொலிசாரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகினர்.

வன்முறைகளில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 30இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகளின் பின்னணியில் சில அடிப்படைவாத சக்திகள் காணப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த ஊடக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மக்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது இயல்பானது. ஆனால் அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் சாத்விகமான முறையிலேயெ அமைந்திருக்க வேண்டுமே தவிர வன்முறையாகவோ தேசிய சொத்துக்களுக்கு சேதங்கள் ஏற்படும் வகையிலோ அமைந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என முன்னாள் அமைச்சரான பிரசன்ன ரணதுங்க கூறியிருந்தார்.

‘குறுகிய அரசியல் நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சில அடிப்படைவாத சக்திகளாலேயே இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களை பகடைக் காய்களாக பயன்படுத்தி அடிப்படை அரசியல்வாதிகள் தமது நோக்கங்களை இதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததையே காண முடிந்தது. நாட்டு மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம்.

நாட்டில் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான நெருக்கடி நிலைமை காணப்படுகிறது. எனினும் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் மூலம் அதனைப் பெற்றுக் கொள்ள முடியாது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கன்றி அவர்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே சில தரப்பினர் செயற்பட்டனர் என்பதை உறுதியாகக் கூற முடியும்’ என பிரசன்ன ரணதுங்க சுட்டிக் காட்டியிருந்தார்.

அது மாத்திரமன்றி, முன்னாள் அமைச்சர்கள் சிலருடைய வீடுகளை முற்றுகையிடுவதற்கும் அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதற்கும் சில தரப்பினர் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே அவர்களின் வீட்டுக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகை ஆர்ப்பாட்டக்காரர்களால் தீயிடப்பட்டிருந்தது. முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் பொலனறுவை இல்லத்துக்குள் புகுந்த விஷமிகள், சொத்துக்களுக்குச் சேதமேற்படுத்தியிருந்தனர். இதுபோன்று பல சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.

அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு இருக்குமானால் மக்கள் அதனை அமைதியான முறையில் வெளிப்படுத்துவதில் எந்தவிதமான தவறும் கிடையாது. இருந்தபோதும் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணுமாறு கோரி மக்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டங்களைப் பயன்படுத்தி, சில சக்திகள் அரசு மீதான தமது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு  முயற்சிக்கின்றன.

தமது வீடுகளை இலக்கு வைத்து முற்றுகையிட்டவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர். அந்த ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், தமது வீடுகளை இலக்கு வைத்து முற்றுகையிட்ட நபர்களில் தமக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டைக் கொண்ட சிலர் இருக்கின்றனர் என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தனர்.

குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சில நபர்கள் இவற்றுக்குத் தலைமை வகித்ததாகவும், அவ்வாறான நபர்களை அடையாளம் காண முடிந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அரசியல் ரீதியான வேறுபாடுகள் இருந்தால் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்கு இது சரியான தருணம் இல்லையென்பதை சம்பந்தப்பட்டவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கான உரிமை அரசியலமைப்பின் ஊடாக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இந்த உரிமையை தவறாகப் பயன்படுத்தி சில அரசியல் சக்திகள் செயற்படுகின்றமை மிகவும் கவலைக்குரிய விடயம் என பலரும் தெரிவித்துள்ளனர்.

‘அமைதியான போராட்டம்' என்ற தொனிப்பொருளின் கீழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக இந்தப் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், இவ்விடயத்தில் இரண்டு குழுக்கள் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது.

“ஒரு பிரிவினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி அமைதியாகக் கலைந்து செல்கின்ற அதேவேளை, மற்றைய குழுவினரோ பொதுச்சொத்துகள் மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். முக்கிய வீதிகள் மற்றும் பொது இடங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் வன்முறைப் போராட்டங்களை வேண்டுமென்றே நடத்துவதாகத் தெரிகிறது” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.

“அவசரகால நிலை நடைமுறையிலிருக்கும் நிலையில், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அமைதியான போராட்டங்கள் நடத்தப்படுவதை ஏற்றுக் கொள்ளலாம். என்றாலும், அமைதிப் போராட்டங்களை நடத்துவது என்ற போர்வையில் செயல்பட்டு, அமைதியை நிலைநாட்டுவதில் உறுதி பூண்டிருக்கும் பாதுகாப்புப் படையினரை ஒரு சங்கடமான நிலைக்கு உட்படுத்தி தனியார் சொத்துக்களை சேதப்படுத்தும் அதேவேளையில், இந்த பிரசாரம் வன்முறைத் தன்மையின் காரணமாக ஜனநாயகத்தின் கட்டமைப்புக்கு அப்பால் சென்றுள்ளது. சில பகுதிகளில், போராட்டக்காரர்கள் மோட்டார் சைக்கிள்களில் சென்று வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மீது கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். மேலும், பல குழுக்கள் திட்டமிடப்பட்ட வகையில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்” என ஜெனரல் கமல் குணரட்ன விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“பொதுமக்களைப் பாதுகாப்பதில் எப்பொழுதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் பொலிஸார், இந்த போராட்டங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஜனநாயக ரீதியில் நடைபெறும் அமைதியான போராட்டங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், வன்முறைச் செயல்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்போம். மேலும், அமைதியை நிலைநாட்ட பாதுகாப்புப் படையினர் செயல்படும் அதேவேளை, வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த படையினர் தயங்க மாட்டார்கள் என்றும் நான் மேலும் வலியுறுத்துகிறேன். நாட்டு மக்கள் தேவைப்பட்டால் தங்கள் ஜனநாயக உரிமைக்காக அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த இடமுண்டு. பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தீவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்” என அவர் அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை வன்முறைகளைக் கையில் எடுக்காது, அமைதியான போராட்டங்களை முன்னெடுக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ளன. தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டங்களைக் குறுகிய அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்தி அவற்றை வன்முறையாக மாற்றும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக உள்ளது.

எரிபொருள் நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்குத் தீர்வு காணுமாறு கோரி அரசாங்க தரப்பினரின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. அரசாங்க முக்கியஸ்தர்களின் வீடுகளுக்குள் பலாத்காரமாகப் பிரவேசிக்க முற்படுவதும் சட்டவிரோதமான குற்றச்செயலாகும் என்பதை அமைதியை விரும்புகின்ற அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டமென்பதன் பேரில் அரசவிரோத சக்திகள் வன்முறையைத் தூண்டி நாட்டில் பதற்ற நிலைமையை ஏற்படுத்த முயற்சிப்பதை எந்தவொரு அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

சம்யுக்தன்

Comments