நுவரெலியாவின் வசந்த விழா | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியாவின் வசந்த விழா

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடாத்தப்படும் ஏப்ரல் வசந்தக்கால கொண்டாட்டங்கள் இம் முறை கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இம்மாதம் முழுவதும் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த முதலாம் திகதி பாடசாலை மாணவ மாணவிகளின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு மரியாதையுடன் நுவரெலியா மாநகரசபை முதல்வர் சந்தனலால் கருணாரட்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட ஆகியோர் ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தனர். இந் நிகழ் ஆரம்பித்து சிறிது நேரத்தில் திடீரென புகுந்த ஒரு குழுவினர் அரசாங்கத்திற்கு எதிராக கோஷமிட்டு தொடர்ந்து நிகழ்வுகளை நடத்தவிடாமல் இடையூறு விளைவித்தனர்.

நுவரெலியா ஏப்ரல் வசந்தக்கால நிகழ்வு ஆரம்ப வைபவம் இடையில் நிறுத்தப்பட்டாலும் என்ன எதிர்ப்புக்கள் வந்தாலும் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஏப்ரல் வசந்தகால நிகழ்வுகள் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைபெறும் என மாநகர சபை தெரிவித்துள்ளது. ஏப்ரல் வசந்த காலத்தை முன்னிட்டு நுவரெலியா பொது மைதானத்தில் கிரிக்கெட், கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டம் போட்டிகளும், மாநகர விளையாட்டு உள்ளரங்கில் மேசை பந்து (டேபல் டெனிஸ்) பூப்பந்தாட்டம் (பெட்மிடன்) மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகளும் நடைபெறும் என ஏப்ரல் வசந்தக்கால ஏற்பாட்டுக்குழு தலைவரும் நுவரெலியா மாநகர முதல்வருமான சந்தனலால் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா ஒரு சுற்றுலா நகரம் இங்கு 90வீதமானோர் சுற்றுலா துறையை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றார்கள். இங்கே வர்த்தக நடவடிக்ைககள் அனைத்தும் சுற்றுலாவை மையப்படுத்தியே இருக்கும். இவர்களின் வருடாந்த வருமானத்தின் பெரும்பகுதியை ஏப்ரல் மாதமே தேடிவிடும் அவசரத்தில் இவர்கள் இருப்பார்கள். இங்கு வாழும் மக்களின் நலன் கருதியே நுவரெலியா மாநகரசபை வருடம் தோறும் ஏப்ரல் வசந்த காலத்தை கோலாகலமாக நடத்தி வருகின்றது. இதனை குழப்பி நுவரெலியா வாழ் மக்களின் வயிற்றில் அடிக்கக்கூடாது.

ஏப்ரல் வசந்த காலத்தில்தான் நுவரெலியாவிலுள்ள சுற்றுலா விடுதிகள், வாடகை விடுதிகள், பழ வியாபாரிகள், மரக்கறி வியாபாரிகள், நகர வர்த்தகர்கள் வாடகை வாகன சாரதிகள் மட்டக்குதிரை சவாரி தொழில் செய்பவர்கள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் என அத்தனைத் துறைகளைச் சார்ந்தவர்களும் பணம் பார்க்கும் சந்தர்ப்பமே ஏப்ரல் சீசன்.

நுவரெலியா குதிரைப்பந்தய திடலில் எதிர்வரும் 15, 23ஆம் திகதிகளில் குதிரைப்பந்தயப் போட்டிகளும், அதனை சுற்றியுள்ள பிரதான பாதையில் வருடம் தோறும் நடைபெறும் மோட்டார் காரோட்டப் போட்டியும் நுவரெலியா கிறகறி வாவியில் நடைபெறும் படகோட்டப் போட்டியும் இம்முறை நடைபெறாது, கிறகறி வாவிக் கரையில் எதிர்வரும் 23, 24ஆம் திகதிகளில் 4 * 4ஜீப் ஓட்டப் போட்டியும் மோட்டர் குரோஸ் மோட்டர்சைக்கள் ஓட்டப்போட்டி எதிர்வரும் 16, 17ஆம் திகதிகளில் நடைபெறும்.

நுவரெலியா விக்டோரியா பூங்காவில் எதிர்வரும் 17, 18ஆம் திகதிகளில் மலர் கண்ககாட்சி போட்டி நடைபெறும், தினந்தோறும் காணிவேல் களியாட்ட நிகழ்வுகள் நுவரெலியா பொது விளையாட்டு மைதானத்திலும் நுவரெலியா கிறகறி வாவிக் கரையிலும் நடைபெறும். தினசரி இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது.

நுவரெலியாவிற்கு வருகை தரவிருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை தேவைகளை கவனிப்பதற்காக நுவரெலியா மாநகரசபை மேற்கொண்டுள்ளது. விசேட பாதுக்காப்பு ஏற்பாடுகளுடன் நுவரெலியா பொலிஸாரும் இணைந்துள்ளனர்.

தற்பொழுது நுவரெலியா மாநகர பொது மைதானத்திலும் நுவரெலியா கிறகரி வாவிக்கரையிலும் காணிவேல் களியாட்ட நிகழ்வுளும் ஆரம்பமாகியுள்ளன. கிறகரி வாவியின் கரையில் வசந்தக்கால தற்காலிக கடைகளும் அமைக்ககப்பட்டு வருகின்றன.

கடந்த வருடங்களைவிட இவ்வருடம் பெருந்தொகையான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள் என வசந்தகால நிகழ்வு ஏற்பாட்டு குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

நுவரெலியா சுற்றுலா ஹோட்டல்களிலும், சுற்றுலா விடுதிகளிலும், வாடகை வீடுகளிலும் தங்குவதற்காக பயணிகள் முன்கூட்டியே தம்மை பதிவு செய்திருப்பதாக ஹோட்டல் வட்டாரங்களை விசாரித்தபோது தெரிய வந்தது.

தற்பொழுது நாட்டில் டீசல் பெற்றோல் மண்ணெண்ணெய் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் மக்கள் தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் ஏதாவது ஒரு வரிசைக்கு செல்ல வேண்டியுள்ளது. இந்த ஏப்ரல் மாதத்திலாவது நுவரெலியாவில் தட்டுப்பாடு இல்லாமல் டிசல், பெற்றோல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு வழங்க சம்பந்தப்பட்டவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏப்ரல் வசந்தக்கால ஏற்பாட்டு குழுவினரும் நுவரெலியா வாழ் சுற்றுலாத் துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நுவரெலியாவுக்கு லிட்டில் லண்டன் என்ற பெயரும் உண்டு. என்பது ஒரு உல்லாச வாசஸ்தலம். வெள்ளைகாரர்கள் இந்த இடத்தை கண்டு பிடித்ததில் இருந்து இந்த நுவரெலியா நகரம் உல்லாச பயணிகளுக்கான நகரமாகவே இருந்துவந்துள்ளது. இங்கு வாழும் மக்களின் பிரதான வருமானம் மரக்கறிச் செய்கை மற்றும் சுற்றுலாத் துறை ஆகிய இரண்டில் இருந்தே பெறப்படுகிறது.

ஏப்ரல் மாத வருமாம் பெரிய ஹோட்டல்களில் இருந்து பாதையோர மரக்கறி விற்பனையாளர் வரை பிரிந்து செல்கின்றது.

கடந்த 2019ஆண்டு ஏப்ரல் மாத குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து ஏப்ரல் வசந்தகாலம் படுத்துவிட்டது. அடுத்த வருடம் கொஞ்சம் நிமிர முனைந்தபோது கொவிட் தொற்றினால் தொடர்ந்து இரண்டு வருடங்களாக வசந்த காலத்தில் வெளியார் அற்ற நகரமாக நுவரெலியா இருந்தது.

இந்த வசந்தகாலத்திலும் இடர்கள் இல்லாமல் இல்லை. இம்முறை எரிவாயு, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றது. இந்த சூழ்நிலையில் நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் அதிக விலை கூறாமல் பொருட்களையும், உணவுப் பண்டகளையும், வாடகை அறைகளையும் நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என வசந்தகால ஏற்பாட்டு குழுவினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

2018ம் ஆண்டு வசந்தகாலம் என்று நினைக்கிறேன். சுற்றுலாவுக்கு வந்தவர்கள் நுவரெலியாவுக்கு வெளியே தங்கி நுவரெலியாவுக்கு பகல் பொழுதில் வந்து சென்றார்கள். ஏனென்று கேட்டால், நுவரெலியாவில் அனைத்துமே விலை அதிகம் என்று சொன்னார்கள். அதற்கு முதல் வருடம் விலை அதிகம்; எக்கச்சக்கம் என்று சொல்லி பல பயணிகள் நுவரெலியா வருவதைத் தவிர்த்தார்கள். அனைத்துக்கும் ஒரு விலை உண்டு. அதைத் தாண்டி யானை விலை குதிரை விலைகளில் பொருட்களையும், மரக்கறிகளையும் உணவுப் பண்டங்களையும் விற்பனை செய்ய வேண்டும். ஒரு கஷ்ட காலத்தில்தான் இவ் வசந்த விழா வந்திருக்கிறது. அவர்களை அழைத்து அரவணைத்து புன்சிரிப்புடன் அனுப்பி வையுங்கள்.  

நூரளையூரான்

Comments