எமது கோரிக்கைகளை அரசு பொருட்டாக கொள்ளவில்லை | தினகரன் வாரமஞ்சரி

எமது கோரிக்கைகளை அரசு பொருட்டாக கொள்ளவில்லை

இந்த அரசாங்கம் மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக எவ்வித முடிவுகளையும்எடுக்கவுமில்லை; அவை தொடர்பாக முன்னெடுக்க எம்முடன் கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவுமில்லை. இரசாயன உரம் தடைசெய்யப்பட்டபோது எமது கோரிக்கைகளுக்கு சரியானதோர் முடிவையோ பதிலையோ ஜனாதிபதி வழங்கவில்லை. நானும் இ. தொ.கா பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரனும்  பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷடன் கலந்து உரையாடியதன் பின்னரே மலையக தோட்டங்களுக்கு ஜனாதிபதி உரம் வழங்க முடிவெடுத்தார். மலையக மக்களின் தேவைகளை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்தே பெற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இவற்றின் விளைவாகவே பாராளுமன்றத்தில் எமது இரு தொ.கா. உறுப்பினர்களும் சுயேச்சையாக செயல்பட தீர்மானித்தனர். மக்களின் நலனே முக்கியம் என்ற நிலையில் இ.தொ.கா சுயேச்சையாக செயல்பட ஆரம்பித்தது.

கே: ஜனாதிபதி கோட்டாபயாவின் ஆட்சியில் பங்காளி கட்சியாகுவதற்கு முன்னரேயே ஏதேனும் உடன் படிக்கை செய்து கொண்டீர்களா?

தேர்தலின் போது நாம் பல கோரிக்கைகளை முன்வைத்தோம். இ.தொ.கா என்பது அரசியல் ரீதியாகவும், தொழிற்சங்க ரீதியாகவும் வலிமையானது. எமது மக்களின் நலத்திலும் சமூக மற்றும் கல்வி வளர்ச்சிக்காகவும் பல தியாகங்களை மேற்கொண்ட வரலாறு இ.தொ.கா வுக்கு உண்டு.

நாம் மலையக பெருந்தோட்ட மக்களின் ஒரு நாள் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துமாறு கோரினோம். அது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.

மலையக பல்கலைக்கழகம், பிரதேச செயலக அதிகரிப்பு, தொழிற் பயிற்சி கல்லூரி அமைத்தல், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலை கட்டமைப்புக்குள் உள்வாங்குதல் உள்ளிட்ட கோரிக்ைககளை முன்வைத்தோம்.

கே: இடைக்கால அரசு ஒன்று அமையுமானால் அவ்வரசுடன் இணைந்து செயல்படுவீர்களா?

இடைக்கால அரசு அமைக்கப்படுமானால் இப் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டுவருவதற்கான நடைமுறை சாத்தியமான, வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதா என்பதை காங்கிரசின் உயர் மட்டக்குழு ஆராய்ந்து பார்க்கும். இந்த ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்படுமானால் அதன் பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம்.

கே: ஜனாதிபதியை பதவி விலகச் சொல்லி போராட்டம் நடைபெறுகிறதே இது தொடர்பாக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எந்த நிலையிலும் இ.தொ.கா நாட்டு மக்களின் பக்கமே நிற்கும். இரண்டரை கோடி மக்களை கொண்ட நாடு இது. தற்போது மக்கள் துன்பத்தில் வாழ்கின்றனர். மக்களின் உணர்வை அரசு உணர வேண்டும். புரிதல் அவசியம். இதன் அடிப்படையில் அரசு தன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள கடமைப்பட்டுள்ளது. மக்களின் குரல் ஜனநாயக வடிவம் கொண்டது. அதை கொச்சைப்படுத்த கூடாது.

கே: அரசை விட்டு இ.தொ.கா வெளியேறியமைக்கு கபினெட் அமைச்சரவை அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வழங்கப்படாமையே காரணம் என சிலர் தெரிவிக்கின்றனர். இதில் உண்மை உண்டா?

இது தவறான கருத்து இ.தொ.கா அமைச்சரவை அமைச்சு பதவி கோரிக்கையை அரசின் முன்வைத்திருக்குமாயின் அரசும் அப்பதவியை வழங்கத் தயாராகவே இருந்தது. எமது அமைச்சு பதவியை தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக உயர்த்தவும் அரசு முன்வந்தது. ஆனால் மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கையில் நாம் அமைச்சு பதவியை ஏற்பது பொருத்தமானதாக இருக்காது. மக்கள் இப்பிரச்சினையிலிருந்து விடுபட பொருத்தமான வழிமுறைகள் தேவை. இன்றைய சூழலில் நாம் அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.

கே: பொருளாதார பிரச்சினையை எவ்வாறு தீர்க்கலாம் எனக் கருதுகிறீர்கள்?

இன்று நாடு தாழமுடியாத கடன் சுமையில் தத்தளிக்கிறது. வெளியில் பெருமளவு கடன்களைப் பெற்று இந்நாட்டை ஆட்சி செய்தவர்கள் கொண்டுவந்த அபிவிருத்திதான் என்ன? இக் கடன் சுமைக்கு அனைத்து ஆட்சியாளர்களும் பொறுப்பாளர்கள். ஒவ்வொரு ஆட்சியாளரும் தாம் பதவி வகித்த காலத்தில் பெற்றுக் கொண்ட கடன்கள் வாயிலாக மேற்கொண்ட அபிவிருத்தியால் கிட்டிய இலாபம் என்ன? என்பதை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

இந்நாட்டுக்கு நல்ல இலாபத்தையும் டொலர்களையும் அளித்த நான்கு துறைகளான தேயிலை உற்பத்தி, உல்லாச பயணம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, ஆடைத் தொழில் என்பன பின்னடைவை சந்தித்துள்ளன. கொவிட் தொற்றின் பின்னர் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. இரசாயன உரம் பாவனை நிறுத்தப்பட்டதால் பெருந்தோட்டக் கைத்தொழில் பெரும் வீழ்ச்சியை கண்டுள்ளது. டொலர் பெறுமதி அதிகரிப்பைத் தடுத்து நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. கடன் சுமை தொடர்ந்ததால் அரசு பெரிதும் பாதிப்பைடைந்துள்ளது.

அரசு முன் கூட்டியே முறையான முடிவுகளை எடுக்காமையினால் மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. பின்னர் எரிவாயு சிலிண்டர்களில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு. பின்னர் டொலர் பிரச்சினை. அடுத்ததாக மின் வெட்டு.

இவற்றுக்கெல்லாம் காரணம் திட்டமிடல் இல்லாத நிர்வாக கட்டமைப்பே. ஏனைய நாடுகளைப் போன்று முன்னரேயே எமது நாட்டிலும் சூரியசக்தி மின் பாவனையை மக்களிடம் எளிய வழிமுறைகளின் ஊடாக அறிமுகம் செய்திருந்தால் இன்றைய மின்வெட்டு பிரச்சினை எழுந்திருக்காது. நாட்டின் அனைத்து துறைகளிலும் முறையான திட்டமிடப்பட்ட கட்டமைப்பு செயற்பாட்டில் இல்லை. இதனால் தான் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கியே நகர்கிறது.

இன்று சர்வதேச நாணய சபையின் ஒத்துழைப்பைக் கோரி நிற்கிறது அரசு. இச்சபையின் ஆலோசனைகள் மற்றும் அவற்றுக்கு அமைவான பொருளாதார வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஏழு, எட்டு மாதங்களாவது செல்லும். எதிர்வரும் மாதங்களில் நாட்டில் பெரும் பொருளாதார கஷ்டத்தை மக்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

இன்றைய பொருளாதார சிக்கலிலிருந்து விடுபட அந்நிய நட்பு நாடுகளிடம் உதவியை பெற வேண்டும். இன்று மக்கள் தடுமாறுகின்றனர். எதிர்வரும் நாட்களில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படலாம். கிரேக்கம், தாய்லாந்து ஆகிய நாடுகள் பொருளாதாரத்தில் கடந்த காலத்தில் வீழ்ச்சியை கண்டன. ஆனால் அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் மேற்கொண்ட பல்வேறு மாற்றுத் திட்டங்களால் அந்நாடுகள் இன்று மீண்டு வந்துள்ளன.

இவற்றை நான் நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன். அதுமட்டுமல்லாது, இவ்விரு நாட்டு பொருளாதார நிபுணர்களையும் இங்கு வரவழைத்து ஆலோசனைகளை பெற்றோமானால் இப் பொருளாதார சிக்கலிலிருந்து விடுபட்டு வெற்றிபெறலாம் எனவும் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். எனினும் சாதகமான சமிக்ஞைகளை எதுவும் கிட்டவில்லை.

ஐ.நாவில் அங்கத்துவம் கொண்டுள்ள எமது நட்பு நாடுகளின் உதவியையும் ஜனாதிபதி பெற வேண்டும். எந்தவொரு முடிவும் ஆக்கபூர்வமான முடிவாக இருக்க வேண்டும். பல நாட்டுத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச வேண்டும். துபாய் பாலைவனப் பிரதேசம். இன்று எமக்கு உதவி வழங்குகிறது. எமது அரசின் அனைத்து நடைமுறைகளும் தோல்வியடைந்துள்ளன. இன்றைய சூழலுக்கு ஏற்றவகையில் அவை மாற்றப்பட வேண்டும்.

எமது நாட்டில் உள்நாட்டு உற்பத்தி பெருக வேண்டும். மூலதன அதிகரிப்பு நடைபெற வேண்டும். பொருளாதார அபிவிருத்தியே எமது முதல் இலக்காக அமைய வேண்டும்.

கே: அண்மையில் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டன. இது தொடர்பாக கருத்து எவ்வாறானது?

சமூக வலைத்தளம் என்பது இன்று பெரியதோர் ஊடகத்துறையாக வளர்ச்சிப்பெற்றுவிட்டது. நாட்டில் மின்சாரம், எரிவாயு, உரம் என மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மனரீதியாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுவே போராட்டமாக மாறியுள்ளது. தீர்வுகாணப்படாத போராட்டங்கள் வன்முறை வடிவெடுக்கும். இதன் எதிரொலியாகவே சமூக வளைத்தளங்கள் முடக்கப்பட்டு பின்னர் செயல்படத் தொடங்கின. இது ஜனநாயக நாடு. இச் செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இன்று மக்கள் சிந்தித்து செயல்பட ஆரம்பித்து விட்டனர்.

நேர்கண்டவர்:
கே.பி.பி. புஷ்பராஜா

Comments