தவத்திரு சிவயோக சுவாமிகளின் பங்குனி ஆயிலிய ஆண்டுக் குருபூஜை 2022 | தினகரன் வாரமஞ்சரி

தவத்திரு சிவயோக சுவாமிகளின் பங்குனி ஆயிலிய ஆண்டுக் குருபூஜை 2022

தவத்திரு யோகர் சுவாமிகள் 29.05.1872ஆம் ஆண்டு மாவிட்டபுரத்தில் திரு அவதாரம் செய்தார். அவருடைய தந்தையார் கொழும்புத்துறையை சேர்ந்த அம்பலவாணர் அவருடைய தாயார் மாவிட்டபுரத்தை சேர்ந்த சின்னாச்சிப்பிள்ளை சுவாமிகளின் இளமைப்பெயர் சதாசிவன். 

சுவாமிகளின் நற்சிந்தனைப் பாடல்களிலிருந்து அவருடைய பெயர் யோகநாதன் என்று அறியமுடிகின்றது. சுவாமிகளின் சிறு வயதிலே தாயார் இறக்க தந்தையாரின் சகோதரி முத்துப்பிள்ளை என்பவரால் வளர்க்கப்பட்டார். தனது கல்வியை யாழ்ப்பாணம் செம்பத்திரிசியார் கல்லூரியில் கற்றார். கல்வியை முடித்துக் கொண்டு தந்தையாருடன் மஸ்கொலியாவில் உள்ள கடைக்குச் சென்றார். ஆனால் அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்க அதிகரிக்க மஸ்கெலியாவில் இருந்து வந்து கிளிநொச்சி இரணைமடுவில் களஞ்சியப் பொறுப்பாளராக கடமையாற்றினார். இருந்தும் அவருக்கு ஆன்மீக நாட்டம் நல்லூர் தேரடியில் ஞான உபதேசம் புரிந்த செல்லப்பா சுவாமிகளின் மீது ஏற்பட்ட குரு சீட பந்தம் காரணமாக சுவாமி 46மைல் நடந்து கிளிநொச்சியில் இருந்து ஒரு நாள் நல்லூர் தேரடிக்கு வந்து தனது குருவிடம் சரணடைந்தார். 

முதல் சந்திப்பில் 'யாரடா நீ' என்று சிங்கம் கர்ச்சிப்பது போல் செல்லப்பா மூர்த்தம் .... சுவாமி தனது குருவை நல்லூர் தேரடியில் கண்ட பெற்ற அனுபவத்தை  

'ஆசானைக் கண்டேன் அருந்தவர் வாழ் நல்லூரில் 

பேசாதனவெல்லாம் பேசினான் - கூசாமல் நின்றேன் 

நீ யாரடா வென்றே அதட்டினான் 

அன்றேயான் பெற்றேன் அருள்' 

சுவாமிகளை செல்லப்பா குரு பல சோதனைகளுக்கு உட்படுத்தி ஆட்கொண்டார். 

ஒரு பொல்லாப்பும் இல்லை 

எப்பவோ முடிந்த காரியம் 

நாம் அறியோம் 

முழுவதும் உண்மை 

என்ற மகா வாக்கியத்தை உபதேசித்து நாற்பது நாட்கள் தேரடியில் நிட்டையில்; இருந்து பின்னர் கால் நடையாக கதிர்காமம் சென்று கிழக்கிலங்கை வாயிலாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். 

அச்சந்தர்ப்பத்தில் தேரடியில் இருந்த யோகநாதனைக் காணாத அடியவர்கள் செல்லப்பா சுவாமியிடம் யோகர் சுவாமி எங்கே என்று கேட்டனர். அதற்கு அவர் 'அவன் செத்துப் போய் விட்டான்' என்று பதில் அளித்தார். 

சுவாமிகள் பாத யாத்திரையை முடித்துக் கொண்டு 1911ஆம் ஆண்டு கொழும்புத்துறை இலுப்பை மரத்தடியில் தனது துறவை 1914ஆம் ஆண்டு வரை மேற்கொண்டார். பின்னர் சுவாமிகளுக்கு கொழும்புத்துறையைச் சேர்ந்த திரு திருமதி சம்பந்தன் குடும்பத்தினர் தமது காணியில் சிறு குடில் அமைத்து அங்கே வந்து அமருமாறு வேண்ட சுவாமிகளும் அவர்களுடைய வேண்டுதலை ஏற்று அங்கே சென்று அவ்விடத்தை ஒரு தெய்வீக இருப்பிடமாக மாற்றினார். 

அங்கே கந்தபுராணப் படிப்பு, பெரிய புராணப்படிப்பு தேவார திருவாசம் ஓதுதல் என்பன நடைபெறும் சுவாமி திருமுறைகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கோளறு பதிகம், இடர்களைப் பதிகம், திருத்தாண்டகப் பாடல்களை அடியார்களுடன் சேர்த்து பாடுவார். 

தமது குடும்பப்பிரச்சினைகளை கூறி வரும் அடியவர்களுக்கு தான் சாத்திரம் பார்க்கும் சாத்திரக்காரனல்ல நீங்கள் கோளறுபதிகம், இடர்களைப் பதிகங்களை பாடுள் என்று கூறுவார். 

கொழும்புத் துறை ஆச்சிரமத்திற்கு அன்றைய நாட்களில் சாதி, இன, மத, பேதங்களுக்கு அப்பால் சுவாமியிடம் ஆன்மீக வழிகாட்டல்களைப் பெற பெரும்திரள் மக்கள் கூடுவர்.  சுவாமிகள் யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் சிவதொண்டன் நிலையத்தையம், செங்கலடியில் ஒரு நிலையத்தையும் நிறுவி. புராண படிப்பு, தியானம், போன்றவை அங்கே நடைபெறச் செய்தார். சிவத்தொண்டர் பத்திரை 1935ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இப்பத்திரிகை உயர் அன்மீக பண்புகளைக் வெளிக்கொணர்வதாக அமைந்தது. 

மேலும் சுவாமிகளின் நற்சிந்தனை என்னும் பாடல்கள் அடங்கிய நூல் மிகவும் பயன்உள்ள பாடல்களையும் திருமுகங்களையும் கொண்டுள்ளது. கந்தபுராண கலாச்சாரம் என்று போற்றப்படும் வடபகுதியில் உள்ள மாணவர்கள் இந்த நற்சிந்தனைப் பாடல்களை தினம் தோறும் பாடசாலைகள் வீடுகளில் பாடி வர வேண்டும்.  இதனைக் கருத்திற் கொண்டு யாழ் மாவட்ட பாடசாலை சைவசமய ஆசிரியர்களுக்கும், பாடசாலை நூல் நிலையங்களுக்கும் நற்சிந்தனை நூல்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இதை மாணவர்களும், பாடசாலை நிர்வாகங்களும் நல்ல முறையில் பயன்படுத்தி ஒழுக்கம் மிகுந்த நல்ல மாண சமுதாயம் ஒன்றை கட்டி எழுப்புவதோடு சுவாமிகளின் நல்ல சிந்தனைகளை தினந்தோறும் செவிமடுப்போம். 

ஈழத்து சித்தர் பரம்பரை ஒன்று உண்டு என்பதையும் அதை நாம் நம் எதிர்காலச் சந்ததியினருக்கு அறிவிக்க வேண்டிய தார்மீகக் கடமை எமக்குண்டு. அன்று சுவாமிகளிடம் சோல்பரி ஆளுனர் மகன் சாந்த சுவாமி அமெரிக்க சைவ அதீன பீட சிவாய நம சுப்பிரமுனி, மார்;கண்டு சுவாமி செல்லத்துரை சுவாமி போன்றொர்கள் சுவாமிகள் மேல் அளவற்ற பக்தி உள்ளவர்களாக காணப்பட்டனர். 

சாந்த சுவாமிகள் சுவாமியின் நற்சிந்தனைப் பாடல்களை எனது குருவின் வாசகம் என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதியுள்ளார். 

எனது நண்பர் ஒருவர் ஒரு கருத்தை அண்மையில் கூறினார். தாங்கள் சிலர் சேர்ந்து வட இந்திய ரிஷிகேஷ் யாத்திரை போய் இருந்தோம். அங்கு ஒரு மடாலயத்தில் தங்க வைக்கப்பட்டு எங்களுக்கு சற்சங்க வகுப்புகள் நடைபெற்றது. எங்களோடு வந்த அன்பர் ஒருவர் வகுப்பு நடாத்தியவரைக் கேட்டார். 

எங்களுடைய நாட்டில் ஏற்பட்ட பிரச்சினைக்கு ஒரு தீர்வு கிடைக்காதா என்று அப்போது அவர் கூறினார் உங்கள்நாட்டில் உள்ள யோகர் சுவாமிகள் கூறிய படி வாழ்ந்தால் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று எனவே நாம் நம் குருநாதர் சிவயோகநாதர் கூறிய வழியில் நடந்து ஒழுக்கம் உள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம். 

சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். முன்னால் அரசாங்க அதிபர் திரு சிறீகாந்தா எழுதிய 'நான் கண்ட பெரியார்' என்ற நூலில் அற்புதமாக எழுதியுள்ளார். 

சுவாமிகள் தேவாரம் திருவாசகம் என்பவற்றை தானும் ஓதி அன்பர்களுடனும் சேர்ந்து ஓதுவார். அன்பார்ந்த சைவப் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே தேவார திரவாசங்களை ஓதுவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி கொடுங்கள். சுவாமி கோளறு திருப்பதிகம், இடர்களைத் திருப்பதிகம் போன்றவற்றை தினம் தோறும் பாராயணம் செய்யும்படி கூறி உள்ளார். 

ஒருமுறை சுவாமிகள் காசியிலிருந்து எழுதிய கடிதத்தில் நான் 'யாழ்ப்பாணத்துக்கு கறுமாதி செய்துவிட்டேன்'; என்று எழுதியுள்ளார். 

நல்லைக் கந்தப் பெருமான் மீது கொண்ட அளவற்ற பக்தி காரணமாக தனது நற்சிந்தனை என்னும் தெவிட்டாத அமுதத்தில் பல பாடங்களை நல்லூர் கந்தப்பெருமான் மீது பாடியுள்ளார். 

சுவாமிகள் வாழ்ந்த யாழ்ப்பாணத்தில் சைவ அன்பர்கள் ஒவ்வருவரினதும் இல்லத்தில் நற்சிந்தனை என்ற சுவாமிகள் கைப்பட எழுதிய நூல் கட்டாயம் இருக்க வேண்டும். சுவாமிகளின் ஆன்மா 1964ம் ஆண்டு பங்குனிமாத ஆயிலிய நட்சத்திரத்தில் இவ் வெற்றுடலை விட்டு நீங்கினாலும் எம்மத்தியில் இன்றும் நின்று, உலாவி எம்மையெல்லாம் வழ நடத்துகின்றார் என்பது உண்மை. சுவாமி யோகநாதர் என்ற நாமம் இவ் வையகம் இருக்கு மட்டும் ஓங்கி ஒலித்துக் கொண்டே இருக்கும். 

லோகேஸ்வரன்

Comments