லயக்குடியிருப்பு தனி வீடாகும் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

லயக்குடியிருப்பு தனி வீடாகும் திட்டம்

இ.தொ.கா.வின் அன்றைய தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் நீண்டகாலமாக தோட்டத் தொழிலாளர் குடியிருக்கும் வீடுகளுடன் காய்கறித் தோட்டங்களும் அவர்களுக்கே சொந்தமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தோட்டங்களை தனியார் கம்பனிகளிடம் கையளிக்கும்போது தொழிலாளரின் குடியிருப்புக்களையும் காய்கறித் தோட்டங்களையும் கம்பனி நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரக்கூடாது என இ.தொ.கா வலியுறுத்தியது. அந்த அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

ஏற்கனவே அரசாங்கம் கொள்கையளவில் தோட்டக் குடியிருப்புக்களும் காய்கறித் தோட்டங்களும் தொழிலாளர்களுக்கே சொந்தமாக்குவதை ஏற்றுக் கொண்டிருந்தது. தொடர்ந்து மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளின் காரணமாக அரசாங்கம் வீடமைப்பு நம்பிக்கை நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து இ.தொ.காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் பெருந்தோட்டங்களைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களின் குடியிருப்புக்களும் 31.05.1993அன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாகும். இந்தக் குடியிருப்புக்கள் ஒவ்வொரு குடும்பத் தலைவர்களுக்கும் சொந்தமாக்கப்பட வேண்டும்.

இ.தொ.காவின் அயரா முயற்சியின் பயனாக தோட்டக் குடியிருப்புக்கள் தொழிலாளர்களுக்கே சொந்தமாகும்.

இது 1993ம் ஆண்டு இ.தொ.காவின் அப்போதைய உப தலைவராக இருந்த மறைந்த ஏ.எம்.டி. இராஜன் கையெழுத்திட்டு சகல தோட்டக் கமிட்டித் தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் கொட்டகலை பிளாண்டேசன் கம்பனியின் பிரதான நிறைவேற்று அதிகாரியினால் கையெழுத்திட்ட 27.4.1993திகதியுடன் கூடிய 50/1993இல. சுற்றுநிருபம் ஒன்றும் சகல தோட்ட அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று 28ஆண்டுகள் கடந்துவிட்டன. அன்று கூறியவாறு குடியிருப்புக்களும் காய்கறித் தோட்டங்களும் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமாக்கப்பட்டுள்ளதா? இன்றுவரை அது சாத்தியப்படவே இல்லை. தொழிலாளர் வசித்துவரும் குடியிருப்புக்களும் காய்கறித் தோட்டங்களும் சொந்தமாக்கப்படுவதை விடுத்து வீட்டுத் தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள மா, பலா, தென்னை மற்றும் வேலியில் நாட்டப்பட்டுள்ள தீக்குச்சி (கினிகூறு) போன்ற மரங்களில் விளையும் பயன்களை மட்டுமே அனுபவித்து வரும் இவர்கள் தமது தேவையின் நிமித்தம் இந்த மரங்களை வெட்டிப் பயன்படுத்தவோ அல்லது குடியிருப்புக்களில் விழுந்து ஆபத்தை உண்டுபண்ணும் நிலையில் காணப்படும்போது வெட்டி அகற்றவோ அனுமதிக்கப்படுவதில்லை.

இதனால் பல தடவைகள் அறிவித்த பின்னர் வந்து மரங்களை வெட்டி அகற்றும் தோட்ட நிர்வாகங்கள் பயிரிடப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு பங்கை தானும் வழங்க முன்வருவதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் முன்னாள் இராஜாங்க அமைச்சரான வீ. இராதாகிருஷ்ணன் ம.ம. முன்னணியின் இங்கிரிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றியபோது இவ்வாறு வெட்டி அகற்றப்படும் மரங்களில் ஒரு பங்கை பயிரிடப்பட்டவர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். ஆனால் அதுவும் சாத்தியப்பட்டதாக இல்லை.

தோட்ட நிர்வாகங்கள் குறிப்பாக பெறுமதி வாய்ந்த பலாமரங்கள் மீது குறிவைத்து மிகவும் தந்திரமான முறையில் அவற்றை வெட்டி எடுத்துச் செல்லும் ஒரு உபாயத்தையே இன்றுவரையில் கையாண்டு வருகின்றன. தொழிற்சங்கங்களும் நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இந்தப் பிரச்சினை தொடர்பாக தலையிட்டு தொழிலாளர் சார்பாக நன்மை பெற்றுக்கொடுக்கும் எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லையென்பது கவலைக்குரியதாகும்.

இனி தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டுத்திட்டம் குறித்து ஆராய்ந்து பார்க்கும்போது வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 500மில்லியன் தோட்டத் தொழிலாளரின் வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கப் போதுமானதா?

சுபீட்சத்தை நோக்கிய தற்போதைய அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் தோட்டத் தொழிலாளரின் வீட்டுத் திட்டத்துக்கென 500மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மூன்று வருட காலத்தில் லயன் குடியிருப்புக்கள் ஒழிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளரின் வீட்டுத் திட்டத்துக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்த 500மில்லியன் போதுமானதா? தற்போதைய நிலையில் இந்தத் தொகையில் எத்தனை வீடுகள் அமைக்க முடியும்? சுமார் 300வீடுகள் அளவில் அமைப்பதற்குப் போதுமானதாக இருக்கும்போது லட்சக்கணக்கான லயன் குடியிருப்புக்கள் இல்லாதொழிக்கப்படும் என கூறப்படுவது சாத்தியமாகுமா? அதுவும் மூன்றுவருட காலத்துக்குள் லயன்களை இல்லாதொழிக்கப்படும் என்பதை நம்பமுடியுமா?

தீவிபத்தினால் எரித்து அழிந்த வீடுகள் வௌ்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான பாதிப்பை எதிர்நோக்கியுள்ள லயன் குடியிருப்புக்களுக்கு பதிலாக ஆரம்பிக்கப்படும் சில வீடுகளை அமைத்துக் கொடுக்கவே மூன்று வருடங்களுக்கு மேலான காலத்தை எடுக்கும்போது ஒரு லட்சம் வரையிலான லயன் குடியிருப்புக்களை மூன்றுவருட காலத்தில் இல்லாதொழித்து புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என்று கூறப்படுவது பெரும் விந்தையே.

2014ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின்போது அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்‌ஷவினால் பெருந்தோட்ட மக்களுக்கு 50ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அப்போதைய தோட்டத் தொழில் அமைச்சராக இருந்த களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த சமரசிங்க தலைமையில் களுத்துறை, அகலவத்த, டெல்கித் தோட்டம் லெண்ட்ஸ்கேப் பிரிவில் 23.10.2018முதலாவது வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவந்த நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஒவ்வொரு வீடும் 12லட்சம் ரூபா செலவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதுடன் மாவட்டத்தின் மொகமதியா, அஷ்க்வெளி, ஹெடிகல்ல ஆகிய தோட்டங்களிலும் முன்னுரிமை அளித்து இத்திட்டம் விஸ்தரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டதுடன் அன்றைய தினம் தெனியாய பகுதியிலும் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு அமைதியான முறையில் குறிப்பிடத்தக்க சேவையாற்றி வருகின்றனர். வியர்வை சிந்தி உடல் உழைக்கின்றனர். பெருந்தொகையான அந்நிய செலாவணியை இந்த நாட்டுக்குப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்ைகயில் ஈடுபட்டுள்ளனர். எனவே பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றோம் என முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப்போது தெரிவித்திருந்தார்.

வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு இன்று எட்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படாது கைவிடப்பட்டு மறந்த ஒரு விடயமாகிவிட்டது.

இடிந்துவிழும் நிலையில் உள்ள மிகவும் பழைய லயன் குடியிருப்புக்களிலேயே பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்த நிலையில் பொழுதைக் கழித்துவருகின்றனர்.

நல்லாட்சியின்போது 2017ல் ஏற்பட்ட வௌ்ளம், மண்சரிவு மற்றும் தீ விபத்துக்களினால் சேதமான குடியிருப்புக்களுக்குப் பதிலாக ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் இன்றுவரையில் பூர்த்தி செய்யப்படாது அரை, குறை நிலையில் கிடப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள, கொபவெல தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட 21குடும்பங்களுக்கான வீட்டுத் திட்டம் ஒரு சிறந்த உதாரணமாகும். இங்கு 13வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள போதிலும் எஞ்சிய வீடுகள் அமைக்கப்படாது கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதுடன் இதில் ஏதோ மோசடி இடம்பெற்றுள்ளதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த எச்.பி. சுமணசேகர, இ.தொ.காவின் கணபதி கனகராஜ், பரத் அருள்சாமி மற்றும் களுத்துறை மாவட்டத்துக்குப் பொறுப்பான செந்தில் தொண்டமான், காலி ட்ரஸ்ட்  ஆகியோரின் கவனத்துக்கு  கொண்டுவந்த போதிலும் எந்தவொரு பலனும் ஏற்படவில்லை.

பெருந்தோட்டப் பகுதியில் வாழ்கின்ற தோட்ட மக்களுக்கு ஒரு லட்சத்து 60ஆயிரம் வீடுகள் தேவைப்படும் நிலையில் 2020ம் ஆண்டுக்கு முன்னர் 25ஆயிரம் வீடுகளைக்கட்டி முடிப்பேன். இந்த வீடுகளைக் காட்டியமைத்த பின்னரே மக்கள் மத்தியில் வாக்கு கேட்க வருவேன் என நல்லாட்சியின் மலைநாட்டு புதிய கிராமம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக இருந்த பி. திகாம்பரம் 2018ஒக்டோபர் 13ம் திகதி பண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வின்போது தெரிவித்திருந்தார். இவர் கூறியவாறு 25ஆயிரம் வீடுகளைக் கட்ட முடிந்ததா?

மலையக மக்களுக்கு வீடமைப்பு முக்கியமில்லை. காணி உரிமையே அவசியம். காணி இருந்தால் வீடுகளைக் கட்டிக்கொள்ள முடியும். அந்த வசதிகள் அவர்களுக்கு இருக்கின்றன. அதனால் அந்த மக்களுக்கு வீடு வழங்குவதை விட அவர்களுக்குச் சொந்தமான காணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கட்சியின் இலக்கும் அந்த மக்களுக்கு காணி பெற்றுக்கொடுப்பதே என ஜீவன் தொண்டமான் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். லயன்முறை ஒழிக்கப்படும், தனி வீட்டுத்திட்டம், மாடி வீட்டுத் திட்டம், கொன்கிறீட்டிலான வீட்டுத்திட்டம், இந்திய அரசின் உதவியின் வீட்டுத்திட்டம் என்றெல்லாம் கூறப்படும்போது மலையக மக்களுக்கு வீடமைப்பு முக்கியமில்லை. காணி உரிமையே தேவையாகும் என கூறியிருந்தது மலையக மக்கள் மத்தியில் குழப்ப நிலையை ஏற்படுத்தியது.

நாம் எவ்வளவுதான் பேசினாலும் பெருந்தோட்டத்துறை தொழிலாளர் சமூகத்தை இந்நாட்டின் முக்கியமானதோர் சமூகப் பிரிவாகவோ பொருளாதாரத்துக்கு பங்களிப்புச் செய்யும் ஒரு பிரிவினராக ஏற்று அங்கீகரிக்கும் மனப்பக்குவம் இன்னும் ஏற்படவில்லை. அவர்களும் இந்த நாட்டுக்கு உரியவர்கள் என்பதை ஏற்றுக்கொள்வதில் உள்ளொன்று வைத்து புறமொன்றைப் பேசி புறக்கணிக்கப்பட்டு வரும் போக்கு இருந்து வருவதையே உணரமுடிகிறது.

இங்கிரிய மூர்த்தி

Comments