சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆடவர் கிரிக்கெட் குழுவில் மஹேல ஜயவர்தன | தினகரன் வாரமஞ்சரி

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஆடவர் கிரிக்கெட் குழுவில் மஹேல ஜயவர்தன

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் பயிற்சியாளருமான மஹேல ஜயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின்  ஆடவர் கிரிக்கெட் குழுவின்  உறுப்பினராக இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

மொத்தம் ஐந்து பேர் அடங்கிய இந்த கிரிக்கெட் குழுவில் மஹேல ஜயவர்தன, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் உறுப்புரிமை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக காணப்படும் ஜெய் சாஹ்வும், இந்த குழுவில் உறுப்பினராக மாறியிருக்கின்றார். ஜெய் சாஹ் கிரிக்கெட் சபை ஒன்றினை பிரதிநிதித்துவம் செய்கின்ற வகையில் ஐ.சி.சி. இன் கிரிக்கெட் குழுவில் உறுப்புரிமை பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுதவிர நியூசிலாந்து கிரிக்கெட் பயிற்சியாளர் கேரி ஸ்டேட், மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த கிரிக்கெட் போட்டி நடுவர் ஜோயல் வில்சன் மற்றும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தினை (Marylebone Cricket Club) பிரதிநிதித்துவம் செய்கின்ற ஜேமி கோக்ஸ் ஆகியோரும் இந்த குழுவில் இடம்பெற்றிருக்கின்றனர். ஐ.சி.சி. இன் கிரிக்கெட் குழுவானது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு தேவையாக இருக்கும் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கும் ஒரு அமைப்பாக காணப்படுகின்றது.

இந்த கிரிக்கெட் குழு முன்னதாக வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய 2022/23 இற்கான கிரிக்கெட் பருவகாலத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிகளின் போது பொதுவான போட்டி நடுவர்களும் (Neutral Umpires), ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளில் சொந்த மைதான போட்டி நடுவர்களும் (Home Umpires) பயன்படுத்தப்படுவர் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஏற்கனவே, கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக டெஸ்ட் போட்டிகளின் போது அணிகள் தங்களது சொந்த மைதான போட்டி நடுவர்களை உபயோகம் செய்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments