அனைவரையும் விரும்பும் அனைவராலும் விரும்பப்படும் ஆசான் | தினகரன் வாரமஞ்சரி

அனைவரையும் விரும்பும் அனைவராலும் விரும்பப்படும் ஆசான்

கல்வியியல் துறையில் பேராசிரியராகவும் கொழும்பு பல்கலைக்கழக பீடாதிபதியாகவும் பதவிவகித்து ஓய்வுபெற்ற சோமசுந்தரம் சந்திரசேகரம் கல்வியியல் சார்ந்த சிந்தனைகளையும்,உலகளாவிய கல்விமுறைகளின் அண்மைக்காலசெயல் நெறிகள் பற்றிய அறிவையும் வகுப்பறை மாணவர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ளாமல்,சகஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள்;பெற்றோர்கள் கல்வியில் ஈடுபாடுகொண்ட பொதுமக்களையும் வாசகர்களையும் இச்சிந்தனைகள் சென்றடைய வேண்டும் எனும் உயர்ந்த நோக்குடன் அச்சுமற்றும் இலத்திரனியல் ஊடகங்களுடாகத் தனது கட்டுரைகள், அறிக்கைகள், உரைகள் மூலம் பரவலாக சமூகத்தின் பல்வேறு மட்டங்களையும் கல்வியின் பயன்கள் சென்றடைய உழைத்தமை அவருடைய பணிகளின் சிகரமாக அமைபவை.  

கல்வியியலை கற்பித்தல் கல்வியியல் அறிவை பரப்புதல் போன்றவைகளுக்குமப்பால் கல்விமேம்பாடு தொடர்பாக நிறுவப்பட்ட பல்வேறு அரசாங்கஆணைக்குழுக்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றி இலங்கையின் கல்விவளர்ச்சி தொடர்பான அறிவையும் அனுபவங்களையும் பெற்றுக்கொண்டவர். 

மலையகத்தின் ஊவாமாகாணத் தலைநகர் பதுளையில் 23-.12-.1944ல் பிறந்தவர் இவர். பதுளை ஊவா கல்லூரியில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்று உயர்கல்வியை பேராதனை பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டவர். 

பல்கலைக்கழக பட்டதாரியான புதிதில் பேராதனை பல்கலைக்கழக கல்வியியல் போதனாசிரியராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.  மத்திய வங்கியின் மொழிபெயர்ப்பாளர்,கல்லூரி ஆசிரியர்,விரிவுரையாளர் என பணியாற்றி ஜப்பானிய அரசின் புலமைப்பரிசில் பெற்று ஒசாக்கா அயல்மொழிப் பல்கலைக்கழகம், ஹிரோஷிமா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்று கொழும்பு பல்கலைக்கழக இணைப்பேராசிரியராகவும் பீடாதிபதியாகவும் உயர் பதவிவகித்தவர்.  கல்வியியல் சிந்தனைகளில் நிகரற்ற வளர்ச்சி பெற்ற சமூகஊழியனாகத் தன்னை புடம்போட்டுக்கொண்ட முழுவள மனிதனான பேராசியரியர் சோ.சந்திரசேகரனின் திடீர் மறைவு கல்வித்துறைக்கு மட்டுமல்லாது முழுமனித சமூகத்துக்குமான ஒருபேரிழப்பேஆகும். 

அவர் விட்டுச்சென்றுள்ள வெற்றிடம் இட்டுநிரப்புவதற்கரியது.காற்றைப் போல,ஒரு கவிதையைப் போல,எழுத்தைப் போல, இலக்கியம் போல,மானுடமெங்கனும் அவர் இல்லாத இடம்,நுழையாத இடம் இல்லைஎன்று கூறுமளவுக்கு மனிதர்கள் மத்தியில் மனிதர்களுடன் வாழ்ந்தவர் அவர்.  

எழுத்திலும் கல்வியியல் சிந்தனைகளும் அவருடைய உயிர் மூச்சாக இயங்கியவை.  

மலையக சமூகம் சார்ந்த கல்வியியலாளர்களில் மிகவும் தனித்துவமானவர். முக்கியத்துவம் கொண்டவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம். 

மலையகத் தமிழரின் கல்விநிலைமை பற்றி ஏராளமான கட்டுரைகளை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளபேராசிரியர் இவ்விடயம் பற்றி வானொலி,தொலைக்காட்சி ஆகியவற்றிலும் நிறையவே உரைகளாற்றியுள்ளார். 

மலையகமக்கள் பற்றியதும் கல்வியியல் பற்றியதுமான முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டுள்ள பேராசிரியரின் முதல் நூல் 'இலங்கை இந்தியர் வரலாறு' 1989. ஒரு 30ஆண்டுகாலத்தின் பின் 2020ல் அவர் வெளியிட்ட (கடைசியாக வெளிவந்த) நூல்: 'இலங்கை மலையகத் தமிழர்கள் நூல் விபரப்பட்டியல்' என்பது. 

பேராதனை பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் மலையகக் கல்வித்துறையின் விடிவெள்ளியாக ஒளிவிடும் கலாநிதி இரா.ரமேஷுடன் இணைந்து வெளியிட்ட நூல் இது. 

மலையகம் தொடர்பான சமூக,பொருளாதார அரசியல் கண்ணோட்டங்களில் வெளியிடப்பட்ட நூல்களின் விபரங்கள் அடங்கிய நூல் இது. 

இலங்கையின் கல்வி வரலாற்றில் காற்றுநுழையா இடங்களில் எல்லாம் தான் நுழைந்து மேற்கொண்ட தேடல்கள் மூலம் தன்னை ஒரு முழு வளர்ச்சிபெற்ற மனிதநேயம் கொண்ட மலையகம் பெருமை கொள்ளும் இப் பெரியாரின் சுயவரலாற்றை இவரே எழுதிக்கொண்டிருந்த சூழலில் ஒரு கள்வனைப் போல் இருட்டுக்குள் வந்த மரணம் அவரை இழுத்துக் கொண்டு போய்விட்டது. 

பெரும் காற்றடித்து ஓய்ந்த இடம் போல் அமைதியாய்க் கிடக்கும் அவரைப் பார்க்கையில் நெஞ்சை அடைக்கிறது. அன்னாரின் அன்பு மனைவி சாந்தா,மகன் தயாளன்,மகள்களான கவிதா,யசோதா மற்றும் உறவினர்களுக்கானஆறுதலையும் ஆற்றுப்படுத்தலையும் அஞ்சலிகளையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். 

வரலாற்றோட்டத்தின் குறியீடுகளாக தனிமனிதர்களும் அமைவார்கள் என்பதற்கோர் அடையாளமாக வாழ்ந்துகாட்டியவர் பேராசிரியர் சோ.சந்திரசேகரம். 

தெளிவத்தை ஜோசப்

 

Comments