இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையும் சர்வதேச நாணய நிதியமும்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மோசமடைந்து ஒரு அரசியல் நெருக்கடியாகவும் சமூக நெருக்கடியாகவும் மாறிவருவதை மிகுந்த கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. எரிபொருள் உணவு மற்றும் மருந்துவகைகள் என்பவற்றின் விலைகள் பாரியளவில் அதிகரித்துச் சென்றுள்ளதுடன் சந்தையில் விலை அதிகரிப்புக்கு மத்தியிலும் அவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.

நாட்டில் நாளாந்தம் மின்வெட்டு தொடர்ந்தும் அமுலில் உள்ளது. அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கு போதிய அந்நியச் செலாவணி நாட்டில் இல்லாத நிலையில் இப்பிரச்சினைகள் அடுத்த சில வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாய நிலையை உள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்புகள் கூறுகின்றன.

நீண்டகால இழுபறிகளுக்குப் பின்னர் இலங்கை ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நியுூயோர்க் நகரத்தில் IMF உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது.

2020ஆம் ஆண்டின் முற்பகுதியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தலையைக் காண்பித்த உடனேயே வருமுன் காப்போனாக IMF இனை நாடியிருந்தால் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தவிர்த்திருக்கலாம் அல்லது அதன் தீவிரத்தன்மையைக் குறைத்திருக்கலாம் என துறைசார்ந்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்போது வந்தபின் காப்போனாக IMF இன் நிதி உதவிகளை இலங்கை நாடி நிற்கிறது. தற்போது 190அங்கத்துவ நாடுகளைக் கொண்ட IMF நிறுவனம் இரண்டாம் உலகப்போரின் முடிவினைத் தொடர்ந்து 1944ஜூலை மாதம் அமெரிக்காவின் நியூஹம்ஷயர் மாநிலத்தில் உள்ள பிரெட்டன் வூட்ஸ் என்ற நகரத்தில் இடம்பெற்ற மாநாட்டில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை அடுத்து உருவாக்கப்பட்டது.

போரினால் பாதிக்கப்ட்ட நாடுகளின் சென்மதி நிலுவைப் பிரச்சிகைளுக்கு தீர்வுகாணும் பொருட்டு குறுங்கால நிதி உதவி வழங்கவே இது உருவாக்கப்பட்டது. அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளை மீளக்கட்டியமைக்கத் தேவையான நிதியுதவிகளை வழங்க உலக வங்கிக் குழுமமும் (World Bank Group) இதே மாநாட்டில் உருவாக்கப்பட்டது. எனவே தான் இவ்விரு நிறுவனங்களையும் பிரெட்டன்வூட்ஸ் இரட்டைச் சகோதரிகள் (Brettonwoods twinsisters) என அழைக்கின்றனர்.

இலங்கை IMF இல் 1950ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்டது. இலங்கை IMF இலிருந்து முதலாவது கடனை 1965இல் பெற்றுக்கொண்டது. அதிலிருந்து இற்றை வரையிலும் 16தடவைகள் கடன்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. IMF இன் கடன்கள் பல்வேறு வகைப்பட்டவை. அவற்றுள் சலுகைக் கடன்களும் சலுகை அல்லாக் கடன்களும் உள்ளடங்கும். IMF இன் கடன்கள் வசதிகள் (facility) என்றோ ஏற்பாடு (arrangement) என்றோ அழைக்கப்படும்.

கடந்த காலங்களில் இலங்கை தயார் நிலை ஏற்பாடு (Standby Arrangement) அல்லது விரிவுபடுத்தப்பட்ட நிதி ஏற்பாடு (Extended Fund/Credit Facility) வடிவிலேயே கடன்களைப் பெற்றுள்ளது. அவற்றிலும் ஏழு தடவைகள் அந்தக் கடன்களை முழுமையாகப் பயன்படுத்தாமல் இடைநடுவில் கைவிட்டுள்ளது.

உதாரணமாக, இறுதியாக 2016இல் இணங்கப்பட்ட கடன் தொகையில் 50சதவீதத்தை மட்டுமே இலங்கை பயன்படுத்தியுள்ளது. IMF இன் செயற்திட்டத்தை இடைநடுவில் கைவிட்டுவிட்டதன் விளைவாக இக்கடன் நிறுத்தப்பட்டதாகவே பொருள்கொள்ள வேண்டும். ஆகவே இலங்கை 16தடவைகள் IMF இடம் சென்று கடன் பெற்றிருந்த போதிலும் பெரும்பாலும் செய்வதாக ஏற்றுக் கொண்ட பொருளாதாரச் சீராக்கங்களைச் செய்யாது இடைநடுவில் கைவிட்டுள்ளது.

பொருளாதார நிலைமைகள் வழமைக்குத் திரும்பும் போது நாடுகள் பொருளாதாரச் சீராக்கங்களை இடைநடுவில் கைவிட்டு விடுவது வழமையாக அவதானிக்கப்பட்டுவரும் ஒரு நடத்தை தான்.

இம்முறை இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலைமையின் போதே IMFஐ நாடியுள்ளது. அதுவும் மிக அவசரமான நிலைமையின் கீழ் துரித கடன் கருவியின் (Rapid Finance Instrument) வசதியினைப் பெற்றுத்தருமாறு இலங்கை கோரி க்கை விடுத்திருக்கிறது.

இயற்கை அனர்த்தங்கள் நோய்த்தாக்கங்கள் துரித விலையதிகரிப்புகள் போன்ற நிலைமைகளின் போது அங்கத்துவ நாடுகளுக்கு உதவும் பொருட்டு இக்கடன் வசதி உருவாக்கப்பட்டது. IMF இல் இலங்கையின் அனுமதிப்பங்கின் (Quota) அடிப்படையிலேயே இவ்வசதி அனுமதிக்கப்பட்டால் இலங்கை நிதியைப் பெறலாம். ஆனால் இந்த வசதியின் கீழ் உள்ள நிபந்தனைகளின்படி இலங்கை இதனைப்பெற முடியாதெனக் கூறப்படுகிறது. ஆனால் இந்தியா இலங்கைக்கு இவ்வசதியைப்பெற தனது புூரண ஆதரவை வழங்கியுள்ளது.

தற்போது IMF இல் இலங்கையின் அனுமதிப்பங்கு 786மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமேயாகும். இதில் 50சதவீதத்தை அதாவது 395மில்லியன் டொலர்களை மாத்திரமே சாதாரண நிலைமையில் துரித கடன் கருவி மூலம் பெறமுடியும். இலங்கையின் தேவைக்கு இது எவ்விதத்திலும் போதுமானதல்ல. ஆனால் தயார்நிலை வசதியின் மூலம் அனுமதிப்பங்கின் 435சதவீதத்தை அதாவது 3.4பில்லின் டொலர்களை 36மாத கால இடைவெளியில் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் வாஷிங்டனில் உள்ள IMF அதிகாரிகளின் கருத்தின்படி பேச்சுவார்த்தைகள் மிக ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாகவும் எந்த ஒரு கடனையும் வழங்க முன்னர் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை மீளச்செலுத்துவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கி அரச கடன் நிலைபேறற்ற தன்மையிலிருந்து விடுபடுவதற்குப் போதுமான நம்பகரமான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே இன்றைய நிலையில் IMF இடம் சென்ற மாத்திரத்தில் இலங்கையின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என பிழையாக கருதிவிடக் கூடாது.

எனவே தான் இலங்கை அயல்நாடான இந்தியாவிடமும் சீனாவிடமும் மேலதிக நிதி உதவிகளைக் கோரியுள்ளது. அத்துடன் ஜப்பான், ஓமான், கட்டார் மற்றும் கல்ப் கோபரேஷன் கவுன்ஸில் அரபு நாடுகளிடமும் நிதியுதவிகளைப் பெற எதிர்பார்க்கிறது. ஆனால் இவை அத்தனையுமே இன்னமும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளன.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments