ஈழத்து நவீன இலக்கிய இயக்கத்தின் பல்துறை முதல்வர் வரதர் | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து நவீன இலக்கிய இயக்கத்தின் பல்துறை முதல்வர் வரதர்

ஈழத்து தமிழ் நவீன இலக்கிய வரலாறு 1930களிலிருந்து படிப்படியாக வளர்ச்சியுற்ற போதும் ஒரு கருத்துநிலையோடு ஓர் இலக்கிய இயக்கம் பரிணமித்தது 'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்' தோன்றிய பின்னர்தான்.

எழுத்தாளர் சங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தனது நண்பர்களுக்கு முதலில் அழைப்பு விடுத்தவர் வரதர்.  13.06.1942அன்று யாழ்நகரில்; 20பேர் கூடி ஆரம்பிக்கப்பட்டதுதான்  'தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம்'. இதுவேஈழத்தின் முதலாவது தமிழ் எழுத்தாளர் சங்கமாகும். 

இந்தச் சங்கத்திலிருந்து'மறுமலர்ச்சி'என்ற சஞ்சிகை 1946இல் வெளியிடப்பட்டது.  இதன் ஆசிரியராக சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் வரதர்.  பழைய மரபுவழி காவியங்கள்,கவிதைகள்தான் இலக்கியம் என்று நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியிலே புதியசிறுகதைகளும் நவீன கவிதைகளும்கூட இலக்கியம்தான் என்று எடுத்துக்காட்டிய முதலாவதுநவீன இலக்கியச் சிற்றிதழாக மறுமலர்ச்சி மலர்ந்தது.

இந்தியாவில்  மணிக்கொடிகாலம்  போன்று ஈழத்தில் 'மறுமலர்ச்சிக் காலம்'விளங்கியது எனஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

'மறுலர்ச்சி இயக்கம்தான் பிற்பட்டகாலத்தில் முற்போக்கு இலக்கிய இயக்கம் முளைவிடுவதற்குப் பசளையாக அமைந்தது' என்று குறிப்பிடுவார் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி.

வரதரின் இலக்கியத் தடம் விரிவானது.  சிறுகதையாளர், பத்திரிகையாளர், நாவலாசிரியர்,கவிஞர், நூல்வெளியீட்டாளர், பத்திரிகையாளர் என அவரது பணிகள் பரந்துபட்டவை.

யாழ்ப்பாணம் பொன்னாலையில் தியாகர் சண்முகம் சின்னத்தங்கம் தம்பதிக்கு  01-.07.-1924இல் மகனாகப் பிறந்த வரதராசன் தனது ஆரம்பக் கல்வியை பொன்னாலை அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் அதன்பின் அயற்கிராமங்களிலுள்ள பாடசாலைகளிலும் பெற்றார். அச்சக முகாமையாளராகவும் நூல்வெளியீட்டாளராகவும் தொழில் புரிந்தார்.   

1940ல் ஈழகேசரி ஆண்டு மலரில் 'கல்யாணியின் காதல்'என்ற சிறுகதையினை எழுதி 16வயதில் இலக்கியப் பிரவேசம் செய்தவர் வரதர்.    சாதிக்கொடுமை,பெண் விடுதலைபற்றி ஈழத்துஎழுத்தாளர்கள் விரிவாகச் சிந்திப்பதற்குபலஆண்டுகளுக்குமுன்னரே இவைபற்றித் தனது எழுத்துக்களில் ஓங்கிக் குரல் கொடுத்த புரட்சி எழுத்தாளர் இவர்.   இவரது'கற்பு'என்ற சிறுகதை ஐம்பது வருடங்களுக்கு முன்னரே வெளிவந்த பெண்ணியச் சிந்தனைகொண்ட சிறுகதையாகும்.

வரதர்,கவிதைக்கெனஒருமாதஇதழை'தேன்மொழி'என்ற பெயரில் வெளியிட்டுப் புதுமைசெய்தவர்.  இதுவே ஈழத்தின் முதலாவது கவிதைச் சஞ்சிகையாகும்.

வரதரை நிர்வாக ஆசியராகவும் மஹாகவியை இணைஆசியராகவும் கொண்ட ஈழத்தின் முதல் கவிதை இதழான  தேன் மொழி  1955ஆம் ஆண்டு புரட்டாதிமாதம்  வெளிவரத் தொடங்கியது. 'கவிதைகளை மாத்திரமே தாங்கிய ஒரு இதழைவெளிக்கொணரவேண்டும் என்பது ஒரு                                         எண்ணம். நவாலியூர் சோமசுந்தரப் புலவருக்கு              ஒருநல்ல நினைவுச் சின்னம் உருவாக்கவேண்டு மென்பது மற்ற எண்ணம். இந்த இரண்டு எண்ணங்களும் சேர்ந்து தேன்மொழியை உருவாக்கிவிட்டன.' என்று முதலாவது இதழின் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். தேன்மொழி பதினாறு பக்கங்கள் கொண்ட சிறுசஞ்சிகையாக மாதந்தோறும் வெளிவந்தது. ஆறு இதழ்களே வெளிவந்தன. ஒவ்வொரு இதழின் அட்டையிலும் சோமசுந்தரப் புலவரின் ஒருபாடல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொரு பின் அட்டையிலும் சிறப்பாக ஒரு கவிஞர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். ஈற்றடிகள் கொடுத்து வெண்பா பாடத் தூண்டும் முயற்சிகளும் தேன்மொழி மேற்கொண்டுள்ளது. சில மொழிபெயர்ப்புக் கவிதைகளும் தழுவல் கவிதைகளும் தேன்மொழியில் வெளிவந்துள்ளன. குறிப்பாக சீன, ஸ்பானிய, பிரான்சிய,கவிதைகள் இவற்றுள் அடக்கம்.தேன்மொழியில் அக்காலத்தில் புகழ்பெற்ற கவிஞர்கள் பலரும் கவிதைகள் எழுதினார்கள். வித்துவான் வேந்தனாரின் 'காலைத் தூக்கிக் கண்ணில் ஒற்றிக்கட்டிக் கொஞ்சும் அம்மா| என்ற புகழ்பெற்ற கவிதை,தேன்மொழியிலேதான் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. (தேன்மொழி ஆறு இதழ்களையும் ஒன்றுசேர்த்த தொகுப்பு, நூலாகத் தற்போது வெளிவந்துள்ளது.)

ஈழத்தில் புதுக்கவிதை பற்றிப் பேசுவதற்கு முன்னரே அதற்குச் செயல்வடிவம் கொடுத்தவர் வரதர். 1943இல் ஈழகேசரியில் அவர் எழுதிய'ஓர் இரவிலே'என்ற கவிதையே ஈழத்தின் முதலாவது நவீன கவிதை எனப் போற்றப்படுகிறது.

அது பற்றி ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் வரதர் பின்வருமாறு கூறியுள்ளார்:

'அந்தக்காலத்தில் ந.பிச்சமூர்த்தியும் வேறுசிலரும் வசன கவிதை என்று சிலகவிதைகளை எழுதியதை நான் பார்த்தேன்.அதற்கு முன்பே பாரதியாரும் வசனகவிதைஎழுதியிருந்தது  எனக்குப் பின்னால்தான் தெரியும். பிச்சமூர்த்தியின் இலக்கிய வடிவம் என்னை மிகவும் கவர்ந்தது.எதையாவது புதுமையாகக் கண்டால்நானும் அந்தமாதிரிசெய்துபார்க்கவேண்டுமென்றுமுயல்வதுஎனது இயல்பு.

நானும் வசனகவிதை எழுத வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.ஒரு சித்திரைமாதம் மூன்று நான்கு நாட்களாக ஒரேமழை. ஊரெல்லாம் பெருவெள்ளம் அவற்றுடன் புயலும் சேர்ந்து ஊரை ஒரு ஆட்டுஆட்டியது. அதனையே வசன கவிதையாக'ஓர் இரவிலே என்ற தலைப்பில் எழுதினேன்..'

வரதர் எழுதிய வசன கவிதை பின்வருமாறு:

இருள்! இருள்! இருள்!

இரவினிலே,நடு ஜாமத்திலே,

என் கால்கள் தொடும் பூமிதொடங்கி,

கண்பார்வைக் கெட்டாத மேகமண்டலம் வரை

இருள் இருள்!

பார்த்தேன்.

பேச்சுமூச்சற்று

பிணம்போல் கிடந்ததுபூமி

இது பூமிதானா?

மனிதசந்தடியேயற்ற,

பயங்கரமானபேய்களின் புதியஉலகமோ?

ஷஒவ் ஒவ்|என்றிரைவது

பேயா? காற்றா? பேய்க்காற்றா?

ஹா!

மனிதன் சக்தியற்றுக் கிடக்கும் இந்தவேளையில்,

அவனுடைய சின்னமே அற்றுப் போகும்படி

பூமியை ஹதம் செய்யவோ வந்தது இப்பேய்க்காற்று!

ஹா, ஹா, ஹா!

'பளிச்! பளிச்!'

அதன் ஒளியிலே இன்பம் வளைவிலே இன்பம்.

ஓ!

ஒளியிலேபயங்கரம்! வளைவிலேபயங்கரம்!

மேகத்தின் கோபம்.

அவன் கண்கள்...... கண்கள் ஏது?

உடம்பிலிருந்துபீறிட்டுக் கிளம்பும் கோபாக்கினி!

விளக்கில் விழுகின்றவிட்டிலைப்போல,மின்னலின் அழகிலேகண்

கெட்டுப் போகாதே!

பத்திரம்! | கண்ணை மூடிக்கொள்.

'பளிச்! பளிச்! பளிச்!

பட்,பட்...படாஹ்...........பட்,படப.....

ஓ!......ஹோ !........

முழக்கம்!

இடி!

பேய்க்காற்றின் ஹுங்காரத்தோடு,வேதாளமுழக்கம்! முழக்கம்!

காதுவெடித்துவிடும்!

உன் ஹிருதயத் துடிப்புநின்றுவிடும்!

காதைப்பொத்திக்கொள்,வானம் வெடித்துவிடுகிறது!

'டபார்!'

வரதர் பலதரப்பட்ட சஞ்சிகைகளை காலத்துக்குக் காலம் வெளியிட்டுள்ளார்.

ஆனந்தன் (1952),வெள்ளி (1957), புதினம் (1961),அறிவுக்களஞ்சியம் (மாணவர்களுக்கான இதழ் 1992) போன்ற பல்வேறு சஞ்சிகைகளை வெளியிட்டு ஈழத்து இதழியல் வரலாற்றில் தனது சுவடுகளைஆழமாகப் பதித்தவர்.

'வரதரின் பலகுறிப்பு'என்ற பெயரில் இவர் முதன் முதலில் தமிழ் டிரெக்டரியை வெளியிட்டவர்.

ஈழத்துத் தமிழிலக்கியத்தின் முக்கிய பிரசுரகர்த்தருள் வரதரும் ஒருவராவார். வரதர் வெளியீடு, என்னும் அவரது பிரசுராலயம் மூலமாக பண்டிதமணிசி. கணபதிப்பிள்ளையின் இலக்கியவழி என்ற நூல் முதலாகபல முக்கியமான  நூல்களை வெளியிட்டுள்ளார்.

வரதரின் படைப்புகளாக நாவலர்,வாழ்க நீசங்கிலிமன்னர் கயமை மயக்கம் (சிறுகதைத்தொகுதி),மலரும் நினைவுகள் (சுயவரலாறு),பாரதக்கதை,சிறுகதைப்பட்டறிவுக் குறிப்புகள் என்பன வெளிவந்துள்ளன.

இலங்கை அரசின் இலக்கியத்திற்கான அதியுயர் விருதான சாகித்திய ரத்தினா விருதினை (2002இல்)முதன்முதலில் பெற்ற தமிழர் இவர்.

வரதர் 21.-12-.2006 அன்று தனது 82ஆவது வயதில் அமரரானார்.

Comments