'விண் ' | தினகரன் வாரமஞ்சரி

'விண் '

இறந்துபோன ஒரு பறவை வானில் தொடர்ந்து விழுவதுபோல் சுற்றிக்கொண்டிருந்தது சர்வதேச விண்வெளி  நிலையம் .

மேகக்கூட்டங்களை மேய்ப்பவன் எவன் ?

 இந்த மேகக்கூட்டங்களின் சாயலை வைத்து எந்தக் கண்டத்தின் மேல் நாம் பறந்துகொண்டிருக்கிறோம் என்று சொல்ல முடியும். அந்த விளையாட்டில் கைதேர்ந்தவன் அவன். இருப்பினும் இன்று ஒரு சிறு கணிப்பைக் கூட செய்ய அவன் மூளை திராணி அற்றதாய் இருக்கின்றது. 

 கண்டங்கள், தேசங்கள், மலைகள், கடல்கள், மேகக்கூட்டங்கள், வெவ்வேறு நிறமுடைய மணல்கள்,அலைகள், எல்லாம் ஒன்றிணைந்து  எங்கு பார்த்தாலும் அவள் முகத்தைக் காண்பிக்கின்றன. சூழ்ந்து கிடக்கும்  இருள் கூட அவள் கூந்தலை நினைவுறுத்துகின்றது. அவள் தான் அவன் உலகம். இன்று அது நிஜமாய், நிச்சயமாய், விஸ்வரூபமாய் விரிந்து நிற்கிறது. 

#2 

 “ஹேய் , கோல் கனக்ட் ஆயிட்டுது” அவனை ஒருவன் அழைத்தான். 

 சுரங்கப் பாதைக்குள் மிதந்து வரும் ஒரு மெழுகுவர்த்தியின் சுடர்போல் இவன் இருசோடி விழிகள் மிதந்து செல்கின்றன. ஈர்ப்பற்ற இப்பாதை இளைப்பாறும் தேவையற்றது. வட்டவடிவமான இந்தச் சுவர்களிடை ஒரு சூப்பர்மேன்போல் அவன் பறந்தாலும், அவனால் அவளைக் காப்பாற்ற முடியாத இயலாமையை எண்ணி அவன் இதயம் கொந்தளிக்கிறது. எழுந்து விழும் ஒவ்வெரு அலைகளுடனும் , இதயம் குருதியைக் கொப்பளிக்கிறது. ஒவ்வெரு மூச்சுடனும் நெஞ்சைக் கிழித்துக்கொண்டு பேரலையாய் வெளிவரத் துடிக்கிறது. சோகம் தொண்டையை முட்டுகிறது. கடைசியில் கண்ணீர்த் துளிகளாய் மட்டும் கசிகிறது. 

#3

விண்வெளி நிலையத்தின் அறை ஒன்று,  அங்கு ஒரு இயந்திரப் பெண். மின்னிடும் உலோகத்தில் கதிரொளி தெறிக்க அவள் நிலவாய் ஒளிர்ந்தாள். காற்றில் ஒரு வெண்ணிறப் புறா இறகைப்போல் கிடையாக சாய்ந்து மிதக்கிறாள். திசைகள் தொலைத்த இந்த விண்வெளியில் கிடையும் செங்குத்தும் வெறும் வார்த்தைகளே. சூரியனின் விம்பம் அவள் வெள்ளி மார்பின் மீது நகர்வது, மலைகளிடை எழுவதுபோல் உண்டு. காலணியாகவும் கையுறையாகவும் மட்டும் ஸ்பரிசம் தரித்திருந்தாள். அவள் வயிற்றுப் பகுதி வளையக்கூடிய கண்ணாடியால் ஆனது. அதற்குள் கணினியின் நீல சமிக்கை ஒளி மின்மினிபோல் மின்னியது. அவள் உடலைப் பார்க்கும் பொழுது எவ்வாறு அவள் மனிஷி இல்லையென்று தெள்ளத் தெளிவாய்த் தெரிகிறதோ, அதுபோல் அவள் கண்களைப் பார்க்கும் பொழுது அவள் உயிருள்ள உண்மை என்று மறுக்கமுடியாத அளவு மலைத்து நிற்கிறது. சொல்லப்போனால் அது உண்மையும் கூட. அந்தக்கண்கள் பூமியில் உள்ள அவனின் காதலியின் கண்களைத்  தத்ரூபமாய் மீள்பிறப்பிக்கின்றன. கண்களை மட்டுமல்ல, அவள் உடல் அசைவுகள் ஒவ்வொன்றையும், பூமியில் நிகழும் நேரத்திலேயே, இங்கு விண்வெளியிலும் நடித்துக்காட்டுகின்றது. அந்தக் கண்களைத் தாங்கிநிற்கும் இயந்திர மண்டையோட்டின் மீது ஒரு தோள் முகமூடியை எடுத்துப் போர்த்திக்கொள்கிறாள். வெறும் கண்கள் மட்டுமன்றி அவன் காதலியின் முழுமுகமும் அவன் கண்முன். பூமிக்கும் இவனுக்கும் இடையிலிருக்கும் நானூறு கிலோமீட்டர்களை அவள் ஒரே வினாடியில் பாய்ந்து வந்துவிட்டாள்.

 #4

மௌனக் குளத்துள் ஒரு கல்லாக அவன் முதல் வார்த்தையை எறிகிறான்.

இவன் - “நான் உன்கூட அங்க இருந்திருக்கணும்”

வலிமையிழந்த அவள் குரல் ஒவ்வொரு சொற்களையும் நடக்கப் பழகும் ஒரு குழந்தைபோல் பொருத்தின .

அவள் - “இப்ப மட்டும் என்ன குறைச்சல். சொல்லப் போனா உன்னோட இந்த ரோபோ உன்னவிட அழகா இருக்கு”

பூமியில் மருத்துவமனை அறையில், இவனைப்போன்ற உருவம் உள்ள இயந்திர மனிதன் இவனின் உடல் அசைவுகளை, வசனங்களை, கண் கருமணியின் நுண்ணிய அசைவுகளை, அனைத்தையும் மீள் இயற்றி அவள் கண்முன் அரங்கேற்றினான்.

கைகளைக் கூப்பி நீரினைத் தேக்க முயற்சிப்பதுபோல், அவன் அவள் கையைப் பிடித்து நிமிடங்கள் கசியாமல் நிறுத்த முயற்சிதான்.

இயந்திரப்பெண் கண்கள் கசியும் கண்ணீரைக்கூட மிகவும் தத்ரூபமாய் மீள்பிறப்பித்தது. இதயத் துடிப்புக் கூட விண்வெளி நிலையத்தின் நீங்காத ரீங்காரத்துள் துளைத்தது. அப்பொழுது ஒரு அசரீரியாய் ஒலித்தது.

இயந்திரக் குரல் - “This call is being recorded” (இந்த அழைப்பு பதிவு செய்யப்படுகிறது).

அவள் - “என்ன என் கடைசி நிமிடங்களை ரெக்கோர்ட் பண்ணி அந்த ரோபோவை வைச்சு திருப்பித் திருப்பி நடிக்கவைக்கப்போறியா ? எதுக்கு ? நான் தான் உன்ன விட்டுப் போக மாட்டனே. பேயா  உன்கூடவே சுத்துவன்.”

இவன்  - “ஹ்ம்ம்...பேய் வீடு கேள்விப்பட்டிருக்கன். பேய் ஸ்பேஸ்  ஸ்டேஷன்  இப்பதான் கேள்விப்படுறன்.”

அவள் - “ஏன்? பூமிக்குத் திருப்பி வார பிளானே  இல்லையோ ஐயாக்கு.”

இவன்- “அப்பிடியே கதவைத் திறந்துட்டு குதிச்சிடனும் போல இருக்கு”

அவள்- “நடிக்காதடா, எனக்குக் கன்சர் எண்டு தெரிஞ்ச அடுத்த நாளே உன்கூட வேலைசெய்யுற அந்தப் புள்ளைய கரெக்ட் பண்ணத் தொடங்கியிருப்பாய்.”

காற்றில்  மிதந்து சரிந்து அந்த இயந்திரப் பெண்ணைக் கட்டியணைத்துக்கொண்டான். பூமியில் மருத்துவமனையில் இவனின் இயந்திரப் பொம்மையும் அவள் அருகில் படுத்து அவளை இறுக்க  அணைத்துக்கொண்டது. பொய்யான சிரிப்பை உடைத்துக்கொண்டு கண்ணீர் பெருகியது. அந்தக் கண்ணீர்த்துளிகள் விண்வெளியில் முத்துக்களாய் மிதந்தன.

அவள்- “எனக்கு ஒரு டவுட். இப்ப நீ விண்வெளியுல குதிச்சா கீழ விழுவியா ? மேல போவியா?”

இவன் - “இங்க கீழ மேல வடக்கு கிழக்கு ஒன்றும் இல்ல, தண்ணியில்லாம உயிர் பிரியும் வரை  அப்பிடியே விண்வெளிக்குள்ள போய்கிட்டே இருக்கவேண்டியது தான்.”

அவள் - “திசைகள் இல்லா தேசத்தில் உன்னை எங்கெனத் தேடுவேன்.”

அவள் நெற்றிப்பொட்டில் இவன் முத்தமிட்டான்.

அவள் - “நீ விண்வெளிக்குள்ள பாய்ஞ்சு கொஞ்ச நேரத்துல உன் ஸ்பேஸ் சூட்டில இருக்க பியூஎல் (எரிபொருள்)  முடிஞ்சிடும். அதுக்கப்புறம் நீ விண்வெளியில தத்தளிச்சுட்டு  நடுவுல நிக்க மாட்டியா.”

இவன் - “ஏய் லூசு நியூட்டனின் முதலாம் விதி - புறவிசை தாக்காதவிடத்து  ஓய்வில் இருக்கும் பொருள் தொடர்ந்து ஓய்வில் இருக்கும், இயங்கிக்கொண்டிருக்கும் பொருள் மாறா கதியுடன் நேர்கோட்டில் தொடர்ந்து பயணிக்கும். பியூஎல் விசையை உருவாக்கத்தான் தேவை. விசை திசையையும் கதியையும்  மாற்ற மட்டும்தான்…”

அப்பொழுதுதான் கவனித்தான், அவன் நெஞ்சோடு அழுத்தியிருந்த அவள் நெஞ்சு எழுந்து விழுவதை நிறுத்திவிட்டது.

#5
காலம் தாண்டிக்
காதல் ஒன்று
தூரம் தாண்டித்
தூருதின்று
மௌனம் அலைகள்  வீசுது
மௌனம் அலைகள்  வீசுது
நாணம் கொண்டு வானம்
வண்ணம் அள்ளிப்  பூசுது
நாணம் கொண்டு வானம்
வண்ணம் அள்ளிப்  பூசுது
மௌனம் அலைகள் வீசுது
அவ் அலைகள் மீது இந்த
விண்கப்பல் போகுது
தள்ளாடி எங்கோ
தென்றல் காவிச்  செல்லும்
பூவைப் போல தேகம்
பூஜ்ஜிய ஈர்ப்பில்
மிதந்தது தானும் 
இந்த உணர்ச்சியை அன்றே
நான் உணர்ந்தனே  உன்னில்
இந்த உணர்ச்சியை அன்றே
நான் உணர்ந்தனே  உன்னில்
விண்ணும் மண்ணும் காதல் கொண்டு
மோதி நிற்கும் ஒரு நிமிடத்தில்
நானும் உன்னைக் கண்டேன்

ரதிதேவி, மானிப்பாய்

Comments