இதுவரை இருபது தடவைகளில் திருத்தங்கள் கண்டுள்ள 78 ஆம் ஆண்டு அரசியலமைப்பு | தினகரன் வாரமஞ்சரி

இதுவரை இருபது தடவைகளில் திருத்தங்கள் கண்டுள்ள 78 ஆம் ஆண்டு அரசியலமைப்பு

20 ஆவது திருத்தத்தில் இருந்து 21 ஐ நோக்கிய நகர்வு; மற்றொரு திருத்தத்துக்கு தயாராகின்றது அரசியல்யாப்பு!

நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதென்ற கருத்தாடல் பல தசாப்த காலமாக முடிவின்றித் தொடர்கிறது

''ன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனவினால் 1978 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவது தொடர்பில் கருத்தாடல்கள் தற்பொழுது இடம்பெற்று வருகின்றன.''

1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசான பின்னர் கொண்டுவரப்பட்ட 78 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு இதுவரை 20 தடவைகள் திருத்தப்பட்டுள்ள போதும், நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமல் ஒழிப்பதற்கான முயற்சிகள் இன்னமும் பேச்சு மட்டத்திலேயே காணப்படுகின்றன. ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பெரும்பாலான ஜனாதிபதிகள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகக் கூறி தேர்தல்களில் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த போதிலும், அதிகாரத்துக்கு வந்த பின்னர் அதனை ஒழிப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஆர்.பிரேமதாச, அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது இந்த முறையை ஒழிப்பதாகக் கூறியிருந்தார்கள். இருந்தபோதும் அதனை ஒழிப்பதற்கு அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

இந்த நிலையில், இந்தியாவின் அழுத்தம் காரணமாக ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் அரசியலமைப்புக்கு 13 ஆவது திருத்தம் கொண்டு வர வேண்டியதாயிற்று. அதாவது இந்தியாவில் இருப்பதைப் போன்று மாகாணசபை முறை இதன் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்டது. மாகாண சபைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஏற்பாடுகள் 13 ஆவது திருத்தத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டன. இருந்த போதும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இதுவரை மாகாண சபைகளுக்கு வழங்கப்படவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் இந்த அதிகாரத்தை வழங்காது தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டிருந்தனர்.

மாகாண சபைகள் அமைக்கப்பட்டு அதிகாரங்களைப் பகிர்வதற்கான ஏற்பாடுகள் இருந்த போதும் அவ்வப்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டே இருந்தன. அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது என்பதற்கு அப்பால் அரசியலமைப்பின் ஊடாகப் பல்வேறு திருத்தங்களுக்கு முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.

இவற்றில் விசேடமாக சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட 17 ஆவது திருத்தம் குறிப்பிடத்தக்கதாகும். சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு அதிகாரத்தை அளிக்கும் வகையிலும், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை வலுப்படுத்தும் வகையிலும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இருந்த போதும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான அதிகாரங்களைக் குறைத்து மீண்டும் ஜனாதிபதிக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் 18வது திருத்தத்தைக் கொண்டு வந்தார்.

இதன் ஊடாக சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டன. பாராளுமன்றத்தின் அதிகாரமும் கணிசமானளவு மட்டுப்படுத்தப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேர்தலில் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தனக்கு வழங்கப்பட்டிருந்த நிறைவேற்று அதிகாரத்தில் கணிசமான விடயங்களைக் குறைப்பதற்கு இணங்கினார். இதற்கு அமைய அரசியலமைப்பு 19 ஆவது தடவையாகத் திருத்தப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறப்பட்ட அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தத்தில் நிறைவேற்று ஜனாதிபதிக்குக் காணப்படும் அதிகாரங்கள் சில பாராளுமன்றத்துக்கு வழங்கப்பட்டன. பல விடயங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கிய போதும், அவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையால் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாது குறைக்கக் கூடிய அளவிலான அதிகாரங்களைக் குறைப்பதற்கு அப்போதைய அரசு தீர்மானித்தது.

அது மாத்திரமன்றி, மீண்டும் சுயாதீன ஆணைக்குழுக்களை வலுப்படுத்தவும், உயர் நியமனங்கள் உள்ளிட்டவற்றை அரசியலமைப்புச் சபையின் ஊடாக அங்கீகரிப்பதற்கும் இதன் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதேநேரம், ஜனாதிபதி ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேலாக பதவி வகிக்க முடியாது, இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது போன்ற விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான சட்ட ஏற்பாடுகள் ஒரு சில நபர்களை இலக்கு வைத்து அவசர அவசரமாக உள்ளடக்கப்பட்ட விடயங்கள் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு கொண்டு வரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவற்ற தன்மைகள் பல காணப்பட்டமையால் நிறைவேற்று அதிகாரத்துக்கும், சட்டவாக்கமான பாராளுமன்றத்துக்கும் இடையில் போட்டிநிலை உருவானது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் ஆட்சியை மாற்றுவதற்கு எடுத்த முயற்சிகள் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்தப்பட்டு பாரியதொரு குழப்பநிலை ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட அனுபவத்தால் ஸ்திரமான ஆட்சிநிலையைக் கொண்டுவர 19 ஆவது திருத்தம் ஒழிக்கப்படும் என்ற உறுதிமொழியை வழங்கி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார். நாட்டை ஸ்திரமான நிலையில் முன்நோக்கிக் கொண்டு செல்வதாயின் நிறைவேற்று அதிகாரம் பலப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியே ஜனாதிபதி மக்கள் ஆணையைக் கோரியிருந்தார்.

இதற்கு நாட்டில் உள்ள வாக்காளர்களில் 69 இலட்சம் பேரின் ஆணை வழங்கப்பட்டது. மக்களின் ஆணைப்படி 20 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகளில் கைவைக்கப்படாவிட்டாலும், நியமனங்கள் மற்றும் தீர்மானங்கள் எடுப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட்டன. இது தவிரவும், பாராளுமன்ற சபையானது ஜனாதிபதிக்குப் பரிந்துரையை மேற்கொள்ளும் கட்டமைப்பாக மாற்றப்பட்டது. உயர் நியமனங்கள் குறித்து ஜனாதிபதி எடுக்கும் தீர்மானத்தை ஆராய்ந்து பரிந்துரைப்பதே பாராளுமன்ற சபையின் அதிகாரமாகும். இது தவிரவும் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்கு வருவதில் காணப்பட்ட தடையும் நீக்கப்பட்டது.

இதற்கிடையில் புதிய அரசியலமைப்பைத் தயாரிக்கும் நோக்கில் குழுவொன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்திருந்தார். இந்தக் குழுவின் அறிக்கை தற்பொழுது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியில் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள எதிர்ப்புக்களால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது, சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் வகையில் 19 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை மேலும் திருத்தங்களுடன் மீள நடைமுறைக்குக் கொண்டு வருவது பற்றிப் பேசப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஆளும் கட்சியிலிருந்து எதிர்த்தரப்புக்குச் சென்றுள்ள சுயாதீனக் குழுவினர் அரசியலமைப்புத் திருத்த யோசனைகளை சபாநாயகரிடம் முன்வைத்துள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தனிநபர் பிரேரணையாக 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை முன்வைத்துள்ளார். சுயாதீனக் குழுவின் சார்பில் விஜயதாச ராஜபக்ஷ 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை முன்வைத்துள்ளார்.

இந்த இரண்டு யோசனைகளிலும் பெரும்பாலும் பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் யோசனைகளே உள்ளடங்கியுள்ளன. அதேவேளை, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் நிதி அதிகாரத்தைப் பலப்படுத்தல், பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறக் கூடிய அமைச்சரவையை உருவாக்குது போன்ற யோசனைகள் அடங்கிய வரைபொன்றைச் சமர்ப்பித்துள்ளார். இதற்கிடையில் அரசாங்கம் சார்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அமைச்சரவையில் மற்றுமொரு அரசியலமைப்புத் திருத்த யோசனையை முன்வைத்துள்ளார். பாராளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் யோசனைகள் இதில் உள்ளடங்கியிருப்பதாகத் தெரியவருகிறது.

ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால் தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்த யோசனைகள் யாவும் ஏறத்தாழ ஒரே மாதிரியான விடயங்களைக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. எனவே, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் விரைவில் அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டுவந்து பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளையே அரசியல்வாதிகள் அனைவரும் மேற்கொள்ள வேண்டும். நாட்டை முற்போக்கான பாதையில் கொண்டு செல்லக் கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை அனைவரும் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Comments