
வருடந்தோறும்
வந்து போகிறது மே தினம்
எங்கும் வியாபித்து
ஊர்வலங்கள் பல
வளைந்து நெளிந்து போகின்றன
பலத்த கோஷங்களுடன்!
சம்பிரதாயங்களுக்கு
எல்லாமாகிப் போன
காலம் இதுவாக!
தினந்தினம் வரும்
தினங்களில் ஒன்றாக
மேதினமும் அதன்
உன்னதங்களை இழந்து ?
கொடி பிடித்து
கோஷங்கள் போட்டு
ஊர்வலங்கள்போய் தமது
உள்ளிருப்பை வெளிக்காட்டி
அலங்கார மேடைகளில்
உழைக்கும் வர்க்கத்துக்காய்
ஓங்கிக் குரல் கொடுப்பதுமான ஒரு
வேடிக்கை வினோத தினமாக
மே தினமானது வேதனையாய்!
உச்சி மலையில் உழைப்பவனும்
நித்தம் வியர்வை சிந்தி
பாடுபடும் பாட்டாளியும்
விவசாயியும்
முடிவுகாணா ஏழ்மையின் விளிம்பில்!
மாற்றம் ஒன்றே மாறாதது
இவர்களை ஏமாற்றும் வர்க்கத்தின்
நிலைப்பாடுகளோ
நூற்றாண்டுகள் பல கடந்தும்
மாறாத வழித்தடத்தில்
மிக்க இறுமாப்புகளுடன்....!
இதற்கோர் முற்றுப் புள்ளியாய்.....
சிக்காக்கோவில் சிவந்தெழுந்த
மே தினமே.......
மீண்டும் நீ முகங்காட்டு
மேதினியில் ஓர் விடியல்வர....!
ஷெல்லிதாசன்
திருகோணமலை