ருசிக்கு சாப்பிட்டது போய் பசிக்கு சாப்பிடும் காலம் இது | தினகரன் வாரமஞ்சரி

ருசிக்கு சாப்பிட்டது போய் பசிக்கு சாப்பிடும் காலம் இது

ன்னதான் தடை வந்தாலும் விழாக்களும் சடங்குகளும் நிற்பதில்லை. மக்கள் அதை தியாகம் செய்வதுமில்லை. நாங்கள் சின்ன வயதில் இருந்த போது என் தந்தை சொல்வார்.

' பண்டிகைகள் ஒருநாளில் வரும்போது அன்றாடம் உணவின்றி இருப்பவனும் கூட கடன உடனப்பட்டு பிள்ளைகளுக்கு புதுத்துணி எடுத்து நல்ல பட்சணங்கள் செய்து முதல்தரமென தாம் கருதும் உணவைத் தயாரித்து உறவுகளை அழைத்து பங்கிட்டு உண்டு மகிழ்வான். அது முடிந்த பின்னும் மனம் நோகாமல் இது பண்டிகைக்காக தான் பட்ட கடன் என்று மகிழ்ச்சியாக உழைத்துக் கட்டுவான். அதற்கு அந்த பண்டிகையன்று அவன் உறவுகளுடனும் தன் குடும்பத்தினருடனும் அனுபவித்த மகிழ்ச்சிப் பரவசம் அவனுக்குள் ஒரு தெம்பைத் தரும்.'

என் தந்தையும் அப்படித்தான் ஒவ்வொரு பண்டிகை வருமுன்னும் நான்கு நாட்களுக்கு முன்னாக வாழைத் தோட்டத்தில் பருவமான வாழைக்குலைகளை வெட்டி புகை போட்டு பழுக்க வைப்பார். மரக்கறிகளை ஒழுங்கு படுத்துவது போல கோழிச் சேவலோ விடலைப்பருவத்து சேவலோ அது பண்டிகை நாளுக்காக விடப்படும். அப்படியே பச்சைநெல் குத்தி பச்சையரிசி சோற்றுக்கு முத்துச்சம்பா என தனித்தனி குத்த வேண்டும். இந்த ஏற்பாடுகளை ஒவ்வொரு பண்டிகைக்கும் பார்த்துப் பழகிய நாம் அதேபோல எனது குடும்பத்திலும் செய்தேன். இப்போது எனது பிள்ளைகள் பேரர்களும் அதைத் தொடர்ந்து செய்கிறார்கள்.

காலம் மாறிவிட்டது. அப்போதிருந்தது போல இப்போது விவசாய விளை பொருட்கள் இல்லை. நெல்லரிசியை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. வாழைப்பழமும் அப்படியே கோழிச்சேவலும் அப்படித்தான் ஆக, எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்படுகிறது. அதேபோல தேக ஆரோக்கியமும் மாத்திரைகளில்' தங்கியுள்ளது. மூட்டு வலி வீட்டுக்கு வீடு இருக்கிறது. ரத்த அழுத்தம் அதேபோலத்தான். சிறு நீரகப் பிரச்சினை ஒவ்வொரு தெருவிலும் தெரிகிறது. யாரையாவது பார்த்து உபசரிக்க வேண்டியிருந்தால். முதலில் நாம் அவரிடம் உங்களுக்கு சுகர் இருக்கோ? கொலஸ்ரோல் இருக்கோ என்று கேட்டுத்தான் விருந்தை தயாரிக்கிறோம். இரண்டு வருடங்களுக்குமுன் என் வீட்டில் ஒருவேளை உணவை ஏற்ற நண்பர் இன்றைய நிலையில் தனக்கு உணவளிக்க வேண்டாம் என மறுத்துவிட்டார். காரணம் பொருட்களில் விலைகள் அவரை விருந்துக்குப் போவதை அனுமதிக்கவில்லை என்கிறார். அப்படியாயின் நான் வருந்தியிருக்க வேண்டுமே ஊகும் நான் லேசாக ஒரு கணக்குப் போட்டுப் பார்த்தேன். சில நூறுரூபாக்கள் மீதமாகிறது. எனக்குள் ஏற்பட்டது வருத்தமா அல்லது திருப்தியா என்பது புரியவில்லை. இப்போது இலங்கைவாழ் மக்களின் பொதுத்தேர்வு இதுவாகத்தான் இருக்கும். என்னவோ விவேக சிந்தாமணியில் வருமே ஒரு பாடல்.

' தாங்கொணா வறுமை வந்தால் சபைதனில் செல்ல நாணும்.

வேங்கைபோல் வீரங்குன்றும் விருந்தினைக்காண நாணும்

பூங்கொடி மனையாட் கஞ்சும். புல்லருக்கு இணங்கச் செய்யும்.

ஓங்கிய அறிவு குன்றி உலகெலாம் பழிக்குந்தானே.'

இருக்காதா பின்னே மனிதர்களை இப்போது நிமிர்ந்து நிற்க வைப்பது பணந்தான். அந்தப்பணம் தன் மதிப்பை இழந்து பொருள்களை உயர்த்திக் கொண்டாடும் இந்த நேரம் சாதாரண மக்களில் மகிழ்ச்சி என்பது இந்த பண்டிகை நாட்களில் மட்டுந்தான் நிலைக்கிறது.

ஒவ்வொரு குடும்பத்திலும் ருசிக்கு சாப்பிட்டது போய் பசிக்கு சாப்பிடும் காலம் இது. பெண்களின் நிலை மிக மோசம். இருக்கிறதை வைத்துக் கொண்டு சமைக்க முடியாமல் உணவு விடுதிகளில் கட்டுச்சோறு கட்டிய குடும்பங்கள் இப்போது கட்டுப்படியாகாமல் சமைத்தேயாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பண்டிகை வருகிறதே என்ன பலகாரம் செய்யப்போகிறீர்கள்?' என்றால், 'பலகாரமா இந்த முறை ஒண்டுமில்லை' என்றவர் கடையிலேயே கேக் பிஸ்கட் தொதல் சிப்ஸ் என்று வாங்கி அசத்தி விட்டார். என்ன லாப நட்டக்கணக்கு பார்க்கிறீர்களா?

விலைவாசி அதிகம்தான் அதற்காக பண்டிகை கொண்டாடாமல் விட முடியுமா? ஆனால் இம்முறை மதுபானக்கடைகள் பூட்டியிருப்பதால் அது ஒரு நீண்ட விடுமுறையாகவும் இருப்பதால் கிராமத்தில் சரக்கு விற்பனை சக்கைப்போடு போடுகிறது. இதற்காகவெல்லாம் நொந்து கொள்ளக்கூடாது. இலங்கையின் ஆரம்ப பணக்காரர்களின் முதலீடும் வியாபார உத்திகளும் இலங்கையின் ஏழைத் தொழிலாளர்களையும் நாட்டையும் எந்த நிலையில் வைத்திருந்தது அதாவது வெள்ளையர் ஆட்சிக்காலத்தில். இன்றைய அரசியற் பிரமுகர்களின் முப்பாட்டன்மார் எந்தளவுக்கு நாட்டை வங்குரோத்து ((bankrupt என்ற சொல்லின் திரிபே வங்குரோத்து எனப்படும்) நிலைக்கு தள்ளினார்கள் என்பது தனி வரலாறு. அதனால்தான் இன்றைய குடிமக்கள் மதுபானங்களை சட்டரீதியாக அல்லாமல் சட்ட விரோதமாகவும் தயாரிக்கும் திறமையை பெற்றுய்ந்தார்கள்.

இம்முறை வானமும் பொத்துக் கொண்டு அடைமழையை நிகர்த்த வெள்ளப் பெருக்கை ஏற்படுத்திவிட்டது துணிக்கடைகள் மிகவும் சோர்வாக காணப்பட்டன. காரணம் ஒவ்வொரு கடைகளும் ஒவ்வொரு பொருளுக்காக கியூ வரிசைகளை வைத்திருந்தது. காலையில் வங்கியில் லைன் அங்கிருந்த சதொசவில் லைன் அப்படியே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் லைன். பொழுது சரியாகிவிட களைத்து வந்து வீட்டில் படுக்க, நாளைய பொழுதுக்கான பட்டியல். இதில் வேலைக்கும் போக வேண்டும். என்ன சமையல் எரிவாயுவை விட்டுவிட்டேனா நல்ல உமி எடுத்து வைத்திருக்கிறேன். உமி அடுப்பில் செலவில்லாத சமையல் வசதியாகவும் வேகமாகவும் செய்ய முடிகிறது.

நல்ல விறகுகளை கறையான் தின்ன, காஸ்வாங்கி சமைப்பதற்கு நான் என்ன கையாலாகாதவளா. இயற்கையை நாம் போற்றி வாழ்பவர்களாக இருந்தால் எவருக்கும் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இப்போதெல்லாம் வீட்டில் ஆடைகளை தைத்து அணிபவர்கள் மிக அரிது ஒருவிழாவிற்கு போட்ட ஆடையை மற்ற விழாவுக்கும் போடக்கூடாது என்று பழக்கமாகி வருகிறது. இதற்கு அந்த ஒருநாள் உடையின் பெறுமதி கையைக் கடிக்குமளவுக்கு உள்ளது. இந்த ஒருநாள் விடயம் இப்போது அதிகமாகி வருகிறது 'பாஸ்ட் புட' என்று இந்தியாவில் ஒன்று பார்த்தேன். அது ஒன்றும் பாஸ்ட் இல்லை. ஆற அமர தயாரித்ததுதான். சாப்பிடுபவர்கள்தான் வேகமாக சாப்பிட்டார்கள். உட்காரவில்லை. நின்ற நிலையில் கையில் தட்டை ஏந்தி சாப்பிட்டபின் தட்டை எறிந்து விட்டு செல்வர். இந்தக் கடைகளும் தெருவில் ஓடிக்கொண்டிருக்கும், மக்கள் அநேகமாக இதை கையேந்திபவன் என்றும் குறிப்பிடுவார்கள். முற்காலத்தில் நாங்கள் கள்ளுக்கொட்டில்களை கையேந்தி மாதா கோவில் என்று கூறுவது நினைவிருக்கிறதா? எறிகிறார்கள் என்றால் 'வண்டேகப்'; 'வண்டேபிளேட்'வண்டே (one day ) பொட்டில்' என எல்லாம் 'வண் டே' ஆகி நாடும் குப்பையாகிக் கொண்டிருக்கிறது. ஆச்சா இப்போது அதற்கும் தட்டுப்பாடாகி விட்டது.

'எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு 'வாழ்க்கையை வாழவேண்டியது கடமை. ஆனால் அதில் சேமிப்பு, கொள்வனவு, வசதி வாய்ப்புகள் என்பதெல்லாம் ஒரு அங்கமாக வைத்திருந்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் அதாவது நாட்டுமக்களும் அரசும் கடனைப்பெருக்கி வசதிகளை ஏற்படுத்தி மாதாந்தம் வட்டிகட்டும் வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; சும்மா என்னத்துக்கு கவலை. 'அரசன் எவ்வழி குடிகளும் அவ்வழி' அதை மாற்றிப்போடுவோம் 'குடிகள் எவ்வழி அரசனும் அவ்வழி'

Comments