பேதுரு பேராலயத்தில் நியாயம் கோரி முறையிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்புற்றோர் | தினகரன் வாரமஞ்சரி

பேதுரு பேராலயத்தில் நியாயம் கோரி முறையிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிப்புற்றோர்

இனிமேல் இந்நாட்டில் குண்டு வெடிக்கும் ஓசையே கிடையாது என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த வேளையில்தான் கோரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நிகழ்ந்து அதன் ரணங்களும், வலிகளும் இன்னும் தொடரும் நிலையில் அதற்கு நீதி கேட்கும் போராட்டங்களும் தொடர்கின்றன.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டு தாக்குதல் சம்பவம் இடம்பெற்று மூன்று வருடங்கள் நிறைவு பெற்றிருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களின் சந்தேகங்கள் களையப்பட்டதாக இல்லை.

உண்மைகளை அறியும், நீதியை நிலைநாட்டும் போராட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, அந்த சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து வத்திக்கானில் விசேட சிறப்புத் திருப்பலி மற்றும் வழிபாடுகள் பரிசுத்த பாப்பரசரின் தலைமையில் கடந்த 26 ஆம் திகதி நடைபெற்றன.

உலகின் மிகப் பெரிய ஆலயமான வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுகளில் இலங்கையிலிருந்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் 60 பேர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டனர். அவர்களில் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் அடங்குவர்.

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாத குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன.

அன்றைய தினம் காலை உயிர்த்த ஞாயிறு விசேட திருப்பலி பூசை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் எவரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை பலி கொண்ட அந்த பயங்கர குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதலில் 200க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவானோர் காயமடைந்தனர். கம்பீரமாக காட்சியளித்த புனித அந்தோணியார் திருத்தலம் இரத்தக் களறியானது.

சில நிமிட நேரத்தில் இடைவேளையில் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் ஆலயத்திலும் அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புனித சீயோன் தேவாலயத்திலும் அடுத்தடுத்து குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த மூன்று குண்டுத் தாக்குதல் சம்பவங்களிலும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதே சமயத்தில் இரண்டு நட்சத்திர ஹோட்டல்களில் தாக்குதல்கள் நிகழ்ந்தன.

உயிர்த்த ஞாயிறு சிறப்பு திருப்பலி மற்றும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அந்த வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்த விசுவாசிகளை இலக்கு வைத்தே இந்த குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இலங்கையின் வரலாற்றில் இதுவரை இடம்பெற்றிராத சம்பவமாக இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதல் சம்பவங்களை குறிப்பிடமுடியும். எத்தகைய காரணங்களும் இல்லாமலே அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டபோது நாட்டை மட்டுமன்றி முழு உலகையும் அது அதிர்ச்சிக்குள்ள்ளாக்கியது.

உயிர்த்த ஞாயிறு உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ மக்களின் மிக முக்கியமான தினமாகும். கிறிஸ்தவ மக்கள் நாற்பது நாட்கள் தவக்காலத்தை அனுஷ்டித்து அவரது உயிர்த்தெழுதலை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

அத்தகைய ஒரு பண்டிகை தின சிறப்புத் திருப்பலி பூசையின் போதே குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதானது

இது கிறிஸ்தவ சமூகத்தை மட்டுமின்றி முழு நாட்டு மக்களையும் கதிகலங்கச் செய்து துயரத்தில் ஆழ்த்தியது.

இந்தக் கோர சம்பவத்தின் துயரங்கள் எளிதில் மறந்து போகக்கூடியவை அல்ல. ஒரு குடும்பத்தில் பெற்றோர் இறந்து பிள்ளைகள் தப்பித்தும் இன்னும் சில குடும்பங்களில் பிள்ளைகள் இறந்து பெற்றோர்கள் தப்பித்தும் மேலும் சில குடும்பங்களில் தமது நெருங்கிய உறவுகளை இழந்தும் உறவுகள் பரிதவித்த காட்சி இன்னும் எமது நினைவுகளில் இருந்து மறையவில்லை அவை மறக்க முடியாதவை. (இதில் எனது உறவினர்களும் நண்பர்களும் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

அந்த அப்பாவி மக்களின் படுகொலைகள் என்ன காரணத்திற்காக யாரால் திட்டமிடப்பட்டன. அதன் பின்புலம் என்ன என்பது தொடர்பில் இன்னும் கூட சரியான தகவல்கள் கிடைக்காத நிலையே காணப்படுவதால் பெரும் கேள்விகளுக்கு விடை காண வேண்டியிருப்பதாகவே கத்தோலிக்க சமூகம் உறுதியாக நம்புகிறது.

அந்த சம்பவம் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டும் மேலும் பலர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்ற நிலையில் இந்த சம்பவத்திற்கான உண்மையான சூத்திரதாரி யார் என்பது இன்னும் தெரிய வராத நிலையே உள்ளது.

குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என கத்தோலிக்கத் திருச்சபை தொடர்ந்தும் குரலெழுப்பி வரும் நிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அது தொடர்பில் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

இம்முறை ஈஸ்டர் பண்டிகைக் காலத்தில் அது தொடர்பில் திருச்சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசருக்கு அறிவிக்கப்பட்ததையடுத்தே குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டுதல்கள் முன்வைக்கப்பட்டு வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசரின் தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற ஏற்பாடாகியது.

இந்த வழிபாடுகளில் கலந்து கொள்வதற்காக குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டு காயமடைந்த மற்றும் அங்கவீனர்கள் பலரும் வத்திக்கானுக்கு சென்றிருந்தனர். பரிசுத்த பாப்பரசரை மிக நெருக்கமாக சந்திப்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டது. பரிசுத்த பாப்பரசர் அவர்களுக்கு அருகில் சென்று தொட்டு அவர்களை ஆசீர்வதித்து தமது கவலையையும் தெரிவித்துக் கொண்டார். அவர்களுக்காக விசேட பிரார்த்தனைகளை மேற்கொண்ட பரிசுத்த பாப்பரசர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சாதாரண மக்கள் பரிசுத்த பாப்பரசரை ரோம் பேராலயத்தில் மிக நெருக்கமாக சந்திப்பது சாத்தியமானது அல்ல. வத்திக்கான் புனித பேதுருவானவர் பேராலயத்திற்குள் பிரவேசித்து நேரடியாக வழிபாடுகளில் கலந்து கொள்வதும் பாப்பரசரை அருகில் தரிசிப்பதும் அபூர்வம்.

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் அர்ப்பணிப்புள்ள முயற்சியினாலும் இறைவனின் அருள் வரப்பிரசாதம் அந்த மக்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த காரணத்தினாலும் இந்த வாய்ப்பு இலங்கையைச் சேர்ந்த சாதாரண மக்களுக்கு கிடைத்துள்ளது என்பது பெருமைப்படக் கூடியது.

இந்த ஆராதனையின் மூலம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதலும் அதன் விளைவுகளும் நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அது தொடர்பில் பிரஸ்தாபித்துள்ளார்.

இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதை காணமுடிகின்றது.

உண்மைகள் தாமதமாகலாம் என்றாலும் ஒரு நாள் வெளிப்படும் என நம்புவோம்.

பரிசுத்த வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டில் லூக்கா நற்செய்தி 8 ஆம் அதிகாரத்தில்,

"வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை; அறியப்படாமலும் வெளியாகாமலும் ஒளிந்திருப்பதும் ஒன்றுமில்லை" என்று சொல்லப்பட்டிருப்பதையும் எபிரேயர் 4: 13இல் அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாகவும் வெளியரங்கமாயுமிருக்கிறது. அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதையும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

 லோரன்ஸ் செல்வநாயகம்

Comments