ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஆசிரிய சமூகமே சான்று | தினகரன் வாரமஞ்சரி

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஆசிரிய சமூகமே சான்று

மலையக சங்கங்கள் இணைந்து பணியாற்றுவது எப்போது?

பெருந்தோட்டங்களில் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்றைய வாழ்க்கைச் செலவை சமாளிக்கக்கூடிய நாட்சம்பளமாக 2500 ரூபா வழங்கப்படுவதே நியாயம். உடல் உழைப்பை உறிஞ்சிவிட்டு பிச்சைக்காரனுக்கு தட்டில் காசு போடுவதைப் போல சம்பளம் தருவது எந்த வகையில் பொருத்தம்? இன்று கோதுமை மா ஒரு கிலோ 240 ரூபா, அரிசி ஒரு கிலோ 200 ரூபா, சீனி ஒரு கிலோ 240 ரூபா, பருப்பு ஒரு கிலோ 470 ரூபா, பால்மா 400 கிராம் ஒரு பக்கட் 1025 ரூபா. இந்த பால்மாவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பால்மா பிரச்சினையால் பெருந்தோட்டங்களில் அநேக குழந்தைகளுக்கு தாய்மார் பிளேன் டீயும் கொத்தமல்லி நீரும் வழங்கி வருகின்றனர்.

நகரங்களில் வாழும் மக்கள் எரிவாயு மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இன்று நகரத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் முக்கிய பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வாய்ப்பும் பெருந்தோட்ட மக்களுக்கு கிடைப்பதில்லை. குறிப்பாக மண்ணெண்ணெய் பெற்றுக்கொள்ளக்கூட ஒரு நாள் வேலையை இழந்து எரிபொருள் நிரப்பும் நிலையத்தில வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலுள்ளனர்.

நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி அதிகரித்து செல்லச் செல்ல உணவு பொருட்களின விலையும் உயர்ந்து செல்கின்றது. பெருந்தோட்டங்களிலுள்ள மக்கள் நகரங்களுக்குச் சென்று உணவு பொருட்கள் வாங்குவது குறைவு. தோட்டங்களில் அருகிலுள்ள கடைகளில் பொருட்களின் விலையைக் கூறவேண்டிய அவசியமில்லை. அவர்கள் விற்கும் யானை விலைகளில்தான் இவர்கள் பொருட்களை வாங்கியாக வேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை முழுமையாக பெற்றுக்கொள்வதே பெரும்பாடு. இந்த நிலையில் இவர்களுக்கு இன்றைய வாழ்க்கைச் செலவை சமாளிக்க குறைந்தது 2500 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு மலையக தொழிற்சங்கவாதிகளும் அரசியல்வாதிகளும் முன்வருவார்களா? வெற்று அறிக்கை விடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

முன்னாள் தொழிற்சங்க தலைவர்களான தொண்டமான், அஸீஸ், செல்லசாமி போன்றவர்கள் இருக்கும் காலத்தில் தொழிற்சங்கங்கள் பலமாகவிருந்தன. இதற்கு காரணம் அவர்கள் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு பொதுக்கூட்டங்களை மலையகப் பகுதிகளுக்கு மட்டுமல்ல, காலி, மாத்தறை, தெனியாய, மத்துகம, களுத்துறை போன்ற பகுதிகளிலுள்ள தோட்டங்களிலும் நடத்தி தொழிலாளர்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினர்.

இன்று தொழிற்சங்கவாதிகள் தேர்தல் காலங்களில் வாக்குகளை பெறுவதற்கு மாத்திரமே தோட்டங்களுக்கு செல்கின்றார்கள். அந்த காலத்தில் ஒரு தோட்டத்தை எடுத்துக்கொண்டால் ஒன்று அல்லது இரண்டு தொழிற்சங்கங்களே தோட்டங்களில் காணப்பட்டன.

அந்தக் காலத்தில் தொழிற்சங்கங்கள் என்றால் தோட்ட நிருவாகம் யோசிக்கும். தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் தொழிலாளர் மத்தியில் நல்ல மரியாதை இருந்தது. அதைப் பயன்படுத்தி தொழிற்சங்கத் தலைவர்களும் தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தினர். தொழிலாளர்களின் பிரச்சினை என்றால் தோட்டக் காரியாலயத்திற்கு சென்று தோட்ட அதிகாரியை சந்தித்து பிரச்சினைகளைத் தீர்ப்பதில் மாவட்ட தொழிற்சங்கவாதிகளும் கண்ணும் கருத்துமாக இருந்தனர். இன்று அந்த நிலை மாறி ஒரு தோட்டத்தில் நான்கு ஐந்து தொழிற்சங்கங்கள் முளைத்துள்ளன. தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்றால் அதனை பேசித்தீர்க்க முடியாத நிலையில் போராட்டம் செய்ய முற்படும்போது மற்ற தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் வேலைக்கு செல்வார்கள். போராட்டத்துக்கு ஒத்துழைப்பு தரமாட்டார்கள்.

எனவே பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது கடினமாகவிருக்கிறது. சில தோட்டங்களில் தொழிலாளர்கள் காவல் வேலை மற்றும் கங்காணி வேலைகளை பெற்றுக்கொள்வதற்காக தமக்கென ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கிக்கொள்வர். இதுதான் இன்று மலையகத்தில் சங்கங்கள் வலுவிழக்கக் காரணம்.

தொழிலாளர்களுக்கு பொய் வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை பெற்றுக்கொண்டு வெற்றிபெற்ற பின் தொழிலாளர்களின் கோரிக்கை சம்பந்தமாக பேரம் பேசாமல் தமக்கு அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்வதற்காக பேரம் பேசுவதைத்தான் காணமுடிகிறது. அது மட்டுமல்லாமல் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல்காலத்தில் பேசியதையும். மறந்துவிடுகின்றனர். இதுதான் 1000 ரூபாவிற்கும் நடந்தது.

மலையக அரசியல்வாதிகள் மக்களின் வாக்குறுதிகளை பெறுவதற்கு புதிதாக தொழிற்சங்கங்களை ஆரம்பித்து அதில் அவர்களை அங்கத்தினராக்கிக் கொள்கின்றனர். இதுவே மலையகத்தில் தொழிற்சங்கங்கள் அதிகரிப்புக்கு காரணமாகும்.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக கொழும்பு காலிமுகத்திடலில் இளைஞர், யுவதிகள் போராட்டம் செய்கின்றனர். 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேவையில்லை என்கிறார்கள். ஒரு வகையில் பார்க்கும்போது இது மலையகத்திற்கும் பொருத்தமாக இருக்குமென எண்ணத் தோன்றுகிறது.

ஆகவே, எதிர்காலத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து இன்றைய வாழ்க்கைச் செலவை சமாளிக்கக்கூடிய நியாயமான சம்பளத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையாகவே மலையக தொழிற்சங்கவாதிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் மீது அக்கறை இருந்தால் எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து ஓரேமேடையில் அமர்ந்து கூடி பேச்சுவார்த்தை நடத்தி மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். அதைவிட்டு விட்டு ஒருவர் மீது ஒருவர் அறிக்கை விட்டு சேறு பூசுவதை கைவிடவேண்டும்.

ஆசிரிய சமூகத்தின் மத்தியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இருந்தபோதிலும் அவர்களின் உரிமை போராட்டம் என்று வரும்போது கட்சி அரசியல் இன மதம் எல்லாவற்றையும் மறந்து போராட்டத்தில் ஈடுபட்டதை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். ஒன்றிணைந்ததனால் அவர்கள் வெற்றி பெற்றனர்.

இதனை மலையக அரசியல் தொழிற்சங்கவாதிகள் மறந்துவிடக்கூடாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு ஆசிரிய சமூகமே சான்று.

நாவலப்பிட்டி டி. வசந்தகுமார் ...?

 

Comments