சாதாரண தேமல் கூட ஆபத்தில் முடியலாம் | தினகரன் வாரமஞ்சரி

சாதாரண தேமல் கூட ஆபத்தில் முடியலாம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரிக்கும் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஐனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 50 பேர் இந்நோய் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர். தொழுநோயினால் பாதுகாப்புக்குள்ளான சுகாதார வைத்திய பிரிவுகளாக ஆரையம்பதி, ஏறாவூர், செங்கலடி போன்ற பகுதிகளில் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேசிய ரீதியாக கணிக்கும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்தொற்றுநோயானது முதலாவது இடத்தில் காணப்படுகிறது. தொழுநோயானது சுவாச தொற்றின் மூலம் பரவும் ஒரு தொற்று நோயாகும். இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவரை இனங்காண்பதற்கு பல வருடங்கள் தேவைப்படுகிறது. பொதுவாக தொழுநோய் அடையாளங்களாக தோலில் உணர்வு அற்ற வெந்நிற படலங்கள், சிறு கட்டிகள் காணப்படுகிறது.

இந்நோயின் ஆரம்ப அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக தோல் வைத்திய நிபுணரை அணுகி உடனடியாக சிகிச்சையை 6 மாதம் முதல் ஒரு வருடத்தினுள் பெறுவதன் மூலம் 100 சதவீத பூரணசுகமடையலாம் என இந்நிகழ்வில் சுகாதார அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.

1983 இற்கு முற்பட்ட காலகட்டத்தில் இந்நோய்க்கான மருத்துவ வசதிகள் காணப்படவில்லை தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச தரத்திலான மருந்துகள் உலக சுகாதார ஸ்தாபனம் மூலம் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு இன்மையால் சிறுவர் முதல் பெரியவர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை பெறுவதான் மூலம் தம்மையும் தமது சமூகத்தையும் பாதுகாக்க வேண்டியது அவர்கள் கடமையாகும்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொழுநோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் தொழுநோய் தடுப்பு இயக்கம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், வைத்தி அதிகாரிகளான, வே.குணராஐசேகரம், டான், பொது சுகாதார பரிசோதகர் வேணிதரன் அலைன்ஸ் டெவலோப்மன்ட் ட்ரஸ்ட் அரச மற்றும் சார்பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் பங்குகொண்ட செயலமர்வு ஒன்றும் புதன்கிழமை(27)இடம்பெற்றது.

 

இலங்கையில் அதிகூடிய தொழுநோய்

தாக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில்

எந்தவொரு நீண்டகால தோல் வியாதி காணப்பட்டாலும் உடனடியாகவே அருகிலுள்ள வைத்தியசாலையிலோ அல்லது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திலோ சென்று ஆலோசனை பெறுங்கள்.

சாதாரண தேமல் என்று நாம் நினைப்பது ஆபத்தில் முடியலாம். நாம் மட்டக்களப்பு மாவட்டம் பூராக தொழுநோய் தடுப்பு நடவடிக்கைகள் மிகத்தீவிரமாக முன்னெடுக்கவுள்ளோம். அது தொடர்பான ஆலோசனைக் கூட்டமொன்று அண்மையில் எமது அலுவலகத்தில் நடைபெற்றது. கடந்த வருடம் (2021) இலங்கையில் 731 பேர் யானைக்கால் நோய்த் தொற்றுக்கு உள்ளாகினர், அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வருடம் (2022) ஜனவரி மாதம் இலங்கை பூராகவும் 30 அடையாளம் காணப்பட்டனர்.

அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இது ஒரு பயங்கரமான நி​ைலமையாகவுள்ளது. இதனை மிகவும் அவதானமாக கட்டுப்படுத்த வேண்டி இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச, அரச சார்பற்ற அமைப்புக்கள், ஊடகவியலாளர்களுடனும் இணைந்து, தொழு நோய் தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தப்படவுள்ளது. 25 தொடக்கம் 50 ஆயிரம் பேர் வரையில் பரிசோதிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ.சுகுணன் தெரிவிக்கின்றார்.

 

தொழுநோய் என்றால் என்ன?

மைக்ரோ பக்டீரியம் லெப்ரே என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்று நோயே தொழுநோய். மிகமெதுவாகப் பெருகுவதால் தொற்று ஏற்பட்டு 3 தொடக்கம் 5 வருடங்கள் கழித்தே இந்நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்த நோய் பொதுவாகத் தோல், நரம்பு விளிம்புகள், மேல் மூச்சு மண்டலம் உள்ளிட்ட பலவற்றேயே பாதிக்கின்றது.

நோய் எவ்வாறு பரவுகிறது?

தொழுநோயாளியின் உடலில் இருந்து நோய்க்கிருமிகள் பரவும் முக்கிய வழி சுவாச மண்டலமே. குறிப்பாக மூக்கு. சிகிச்சை பெறாதவர்களோடு தொடர்ந்து கொள்ளும் போது நோய்க்கிருமிகள் வாய் அல்லது மூக்கு வாழியாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. உடலுக்குள் நுழைந்த நுண்ணுயிரிகள் நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன. ஆரம்பக் கட்டத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால் நரம்புகளுக்கு மேலும் சிதைவு ஏற்பட்டு நிரந்தர ஊனம் உண்டாகலாம்.

தொழுநோய் சிகிச்சையால் குணப்படுத்தக் கூடியது. தொடர்ந்து சிகிச்சையை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாகக் குணப்படுத்தப்பட்டு, ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, பரவலும் தடுக்கப்படுகிறது. ஆரம்பக்கட்ட நோயறிதல், தகுந்த சிகிச்சை மற்றும் முழுவேளை மருந்து தொழு நோயால் ஏற்படும் ஊனத்தைத் தடுக்கும். தொழுநோய் மரபுவழி நோயல்ல. இது பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்குக் கடத்தப்படுவதில்லை. கைகுலுக்குதல், சேர்ந்து விளையாடுதல் அல்லது சேர்ந்து பணிபுரிதல் ஆகிய வழக்கமான நடவடிக்கைகள் மூலம் தொழுநோய் பரவுவதில்லை. சிகிச்சை பெறாத நபர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்வதால் பரவக் கூடும். தொழுநோய், பழைய பாவத்தாலோ கெட்ட நடத்தையாலோ ஏற்படுவதில்லை. மைக்கோபாக்டீரியம் என்ற ஒரு நுண்ணுயிரியால் ஏற்படுகிறது. என சுகாதாரத்துறை தெரிவிக்கின்றது.

எனவே மாட்டத்தில் எப்போதுமில்லாத வகையில் அதிகரித்துவரும் தொழுநோயைக் கட்டுப்படுத்த வேண்டியது துறைசார்ந்த வைத்திய மற்றும் நிருவாகத்துறையினரின் பாரிய பொறுப்பு மிக்க கடமையாக இருந்தாலும், அவர்கள் கூறும் அறிவுரைகளையும், நெறிமுறைகளையும், பின்பற்றிக் கைக்கொள்ள வேண்டியது பொதுமக்களின் தலையாய கடமையாகும். தன்னையும். தான்சார்ந்த சூழலையும், தற்கால நெருக்கடியாக காலத்திலும், பாரிய கொவிட் - 19 இலிருந்து பாதுகாப்பது போன்று கொள்ளை நோயாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மெல்ல மெல்ல உருவெடுத்து தற்போது வியாபித்துள்ள இந்த தொழுநோயை முற்றாக நீக்குவதற்கு அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்பதுவே பலரதும் எதிர்பர்ப்பாகும்.

 

Comments