அரசின் பெரும்பான்மைப் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதி சபாநாயகர் தெரிவு! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

அரசின் பெரும்பான்மைப் பலத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதி சபாநாயகர் தெரிவு!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இலகுவாகவே தோற்கடிக்கப்பட்டு விடுமென்பது உறுதி!

பாராளுமன்றத்தில் தமக்கு பலமுள்ளதென நிரூபிப்பதற்கு எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மேற்கொண்ட முயற்சிகள் ஒரே நாளில் படுதோல்வி!

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பிரதி சபாநாயகர் தெரிவில் ரஞ்சித் சியம்பலா பிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே உறுதியளித்திருந்தது. ஆனால் இறுதி நேரத்தில் தமது வேட்பாளரை (இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்) நிறுத்தியதால், அவர்கள் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழியை மீறிவிட்டதாக குற்றச்சாட்டு!

 

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். இதற்காக நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 148 வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதற்கமைய அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதி இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை விட 83 மேலதிக வாக்குகளைப் பெற்று பிரதி சபாநாயகரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் நிலையில் காணப்படுகிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆளும் பொதுஜன பெரமுனவின் பங்காளிக் கட்சியாகவிருந்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட 11 கட்சிகள் அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகக் குழுவாகச் செயற்படத் தீர்மானித்திருந்தன. இத்தீர்மானத்துக்கு அமைய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் வகித்த அனைத்துப் பதவிகளும் இராஜினாமா செய்யப்பட்டன.

இந்த அடிப்படையில் பிரதி சபாநாயகர் பதவியை வகித்த ரஞ்சித் சியம்பலாபிட்டியவும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

தனது இராஜினாமா குறித்த அறிவிப்பை எழுத்து மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர் அனுப்பி வைத்திருந்தார். இருந்த போதும் ஜனாதிபதி அதனை ஆரம்பத்தில் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜனாதிபதியின் கோரிக்கைக்கு அமைய ஏப்ரல் 30 ஆம் திகதி வரை குறித்த பதவியில் தான் தொடர்வதாகவும், மே 4 ஆம் திகதி புதியவரைத் தெரிவு செய்யுமாறும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய சபையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், புதிய பிரதி சபாநாயகர் தெரிவு குறித்து மீண்டும் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. ஜனாதிபதியின் நிலைப்பாடு சபாநாயகருக்கு அறிவிக்கப்படவில்லையென ஆரம்பத்தில் கூறப்பட்ட போதும், தனது கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டார் என்பதற்கான பதில் கிடைத்துள்ளது என ரஞ்சித் சியம்பலாபிட்டிய புதன்கிழமை பிற்பகலே சபைக்கு அறிவித்து விட்டார்.

இதற்கமைய கடந்த வியாழக்கிழமை பிரதி சபாநாயகரைத் தெரிவு செய்வதற்கான அழைப்பை சபாநாயகர் சபையில் விடுத்தார். இதன் போது எதிர்க்கட்சியில் உள்ள சுயாதீனக் குழுவினர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரை மீண்டும் பிரதி சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்தனர்.

நிமல் சிறிபால டி.சில்வா இதனை முன்மொழிய, கலாநிதி சுசில் பிரேமஜயந்த வழிமொழிந்தார். இதற்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குவதாக அரசாங்கம் சார்பில் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்தார்.

எனினும், மறுபக்கத்தில் பிரதி சபாநாயகர் பதவிக்கு தமது வேட்பாளரை நிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அறிவித்தார். இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் பெரை அவர் முன்மொழிய, லக்ஷ்மன் கிரியல்ல அதனை வழிமொழிந்தார்.

பிரதி சபாநாயகர் தெரிவுக்கு இரு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டமையால் இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு சபாநாயகர் பணித்தார். இதற்கமைய நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவாக 148 வாக்குகளும், இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு ஆதரவாக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

மூன்று வாக்குகள் செல்லுபடியற்றவையாக அமைந்ததுடன், 8 பேர் வாக்கெடுப்பின் போது சபையில் சமுமகளித்திருக்கவில்லை. இதற்கமைய ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் பிரதி சபாநாயகர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வாக்கெடுப்பின் மூலம் அரசாங்கம் பாராளுமன்றத்தில் மீண்டும் பலமான நிலையில் காணப்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் தமது பலத்தைக் காண்பிப்பதற்கு பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தாலும் இது பலன் தராமலேயே போய் விட்டது.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பிரதி சபாநாயகர் தெரிவில் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்த போதும், இறுதி நேரத்தில் தமது வேட்பாளரை நிறுத்தியதால் அவர்கள் ஏற்கனவே வழங்கிய உறுதிமொழியை மீறியிருப்பதாக சுயாதீனக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.

அதேநேரம், அரசாங்கத்திலிருந்து விலகி சகல பதவிகளையும் இராஜினாமா செய்வது என்ற கட்சியின் முடிவுக்கு அமையவே பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள தான் தீர்மானித்ததாக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அது மாத்திரமன்றி எதிரணி சார்பில் தன்னைத் தெரிவு செய்தமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறினார்.

இது ஒருபுறமிருக்கையில் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ரீதியான குழப்பங்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் சர்வகட்சி அரசாங்கமொன்று அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அரசாங்கத்துக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதால், தாமே தொடர்ந்தும் அரசை முன்னெடுத்துச் செல்வோம் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இவ்வாறான பின்னணியில் சுயாதீனமாகச் செயற்படுவதாகக் கூறும் குழுவினரின் ஆதரவுடன் அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபித்துள்ளமை உறுதியாகியுள்ளது. பாராளுமன்றத்தில் எந்தத் தரப்பினராவது 113 இற்கும் அதிகமான ஆதரவைக் காண்பித்தால் பதவி விலகத் தயார் எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்த நிலையில், அரசாங்கமே தற்பொழுது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

மறுபக்கத்தில், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கியதாக சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்குத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கடந்த வாரத்திலும் ஜனாதிபதி அனைத்துக் கட்சிக்கும் அழைப்பு விடுத்திருந்த போதிலும், சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் பிவித்துர ஹெல உறுமய உள்ளிட்ட சுயாதீனமாகச் செயற்படும் 10 கட்சிகளின் பிரதிநிதிகள் மாத்திரமே இக்கூட்டத்துக்குச் சென்றிருந்தனர்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய தரப்பினரையும் இதில் இணைப்பதற்கான பேச்சக்களை நடத்தும் பொறுப்பு உதய கம்மன்பில உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இருந்த போதும் பிரதான எதிர்க் கட்சியோ அல்லது தேசிய மக்கள் கட்சியோ எவரும் சர்வகட்சி அரசாங்கத்துக்குத் தயாராகவில்லை. அது மாத்திரமன்றி தற்பொழுது நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கூடிய எவ்வித விட்டுக்கொடுப்புக்கும் எதிர்க்கட்சி தயாராகவில்லையென்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இது இவ்விதமிருக்க அரசாங்கத்தின் மீதும், ஜனாதிபதி மீதும் நம்பிக்கையில்லையெனக் கூறி இருவேறு நம்பிக்கையில்லா தீர்மானங்களை பிரதான எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. இதில் ஏறத்தாழ 50 உறுப்பினர்களே கையொப்பமிட்டுள்ளனர்.

விடயத்தில் எதிர்க்கட்சிக்குள் இருக்கும் தரப்பினருக்கிடையில் மாற்றுக் கருத்துக்கள் நிலவுவதாகவே தெரியவருகிறது. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சபாநாயகர் கூறியிருந்தார். இருந்தபோதும் ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைக் கோரியிருப்பதாகவும் சபாநாயகர், கட்சிகளின் தலைவர்களுக்குத் தெரிவித்தர்ர.

பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைய ஜனாதிபதிக்கு எதிராக விசேட பிரேரணையொன்றையே கொண்டு வர முடியும் அல்லது அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை (இம்பீச்மென்ட்) கொண்டு வர முடியும்.

இருந்தாலும் இதற்கு குறிப்பிடப்பட்ட காரணிகள் காணப்பட வேண்டும் என அரசியலமைப்புக் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு எதிராக விசேட பிரேரணையொன்றைக் கொண்டு வருவதாகவும், இதில் ஜனாதிபதி மீது பாராளுமன்றத்துக்கு நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது என்ற விடயத்தைக் கூறியிருப்பதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

இருந்தபோதும் இது விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று உரிய நடவடிக்கை எடுப்பேன் என்ற உறுதிமொழியை சபாநாயகர் எதிர்க்கட்சியினருக்கு வழங்கியுள்ளார்.

பிரதி சபாநாயகர் தெரிவு விடயத்தில் அரசாங்கத்துக்குக் காணப்படும் பெரும்பான்மை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருப்பதால் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இலகுவில் தோற்கடிக்கப்பட்டு விடும் என அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

எதுவாக இருந்தாலும் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைக்கு அரசியல்வாதிகள் தீர்வு வழங்க வேண்டும் என்பதே பலருடைய வேண்டுகோளாக உள்ளது. பாராளுமன்றத்தில் உள்ள அரசியல்வாதிகள் தமது பலத்தை நிரூபிப்பதற்கு எடுக்கும் முற்சிகளைக் கைவிட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இது இவ்விதமிருக்க, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண அரசாங்கம் முழுமையான முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தான் உள்ளிட்ட அரசாங்கப் பிரதிநிதிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தியுள்ள பேச்சுவார்த்தைகள், அவற்றின் முன்னேற்றம் தொடர்பில் அமைச்சர் பாராளுமன்றத்துக்கு விளக்கமாகக் கூறியிருந்தார். அமைச்சரின் விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கடந்த மூன்று நாட்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments