எதிர்க்கட்சிக்குள் நாளுக்கு நாள் வலுவடையும் உட்கட்சிப் பூசல்! | தினகரன் வாரமஞ்சரி

எதிர்க்கட்சிக்குள் நாளுக்கு நாள் வலுவடையும் உட்கட்சிப் பூசல்!

மக்களின் சுமைகளை மறந்த நிலையில் அரசியல் அதிகாரத்துக்கான போட்டி!

ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக் கட்சிகளிடையே தலைமைத்துவப் போட்டி! ஒருவரையொருவர் பகிர ங்கமாகவே விமர்சிக்கும் வகையில் முரண்பாடுகள்!

எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி அதிகரிப்பு, மின்சாரத் துண்டிப்பு எனப் பல்வேறு அன்றாடப் பிரச்சி னைகளுக்கு மக்கள் முகங்கொடுத்து வரும் இன்றைய நிலையில், பிரச்சினைக ளுக்குத் தீர்வு காண்பதில் அரசியல் ரீதியான தலையீடு போதுமானதாக இல்லையென்ற சாதாரண கோபம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது.

மக்கள் வீதியில் இறங்கி ஆரம்பித்துள்ள போராட்டங்கள் ஒரு மாதத்தையும் கடந்துள்ள போதும், அரசியல்வாதிகள் நிலையான தீர்வொன்றை முன்வைக்கத் தவறியிருப்பது கண்கூடு. அரசாங்கம் என்ற ரீதியில் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும், எதிர்க்கட்சி தரப்பில் குறிப்பாக பிரதான எதிர்க்கட்சி ஆக்கபூர்வமான முயற்சிகளை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை.

அரசாங்கம் மக்கள் பிரச்சினையைத் தீர்க்கத் தவறி விட்டது என எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டுவதாயின், அந்தத் தவறுகளைத் திருத்தக் கூடிய மாற்றுயோசனைகள் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அவ்வாறு ஆக்கபூர்வமான முயற்சிகள் எதனையும் எதிர்க்கட்சி எடுத்ததாகத் தெரியவில்லை.

ஆரம்பம் முதலே எதிர்க்கட்சியின் செயற்பாடுகள் வெறுமனே அரசாங்கத்தைக் குறைகூறுவதை மாத்திரமே இலக்காகக் கொண்டவையாகவே காணப்படுகின்றன. குறிப்பாக கொவிட்-19 தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து எடுத்ததற்கு எல்லாம் குறை கூறுவதையும், குற்றங் கண்டுபிடிப்பதிலுமே எதிர்க்கட்சி காலத்தைக் கடத்தி வருகிறது.

அது மாத்திரமன்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் தேவையற்ற கருத்துக்களால் மக்கள் மத்தியில் வீண் குழப்பங்களே ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறந்த உதாரணமாக கொவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி ஏற்றுவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் தெரிவித்த கருத்துக்கள் மக்களுக்கிடையில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தின. இதனால் பலர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலை காணப்பட்டது.

இது போன்று பல்வேறு விடயங்களில் வீணாக அவர்கள் மக்களைக் குழப்பியிருப்பதுடன், இன்னமும் குழப்பங்களை இருக்கின்றனர்.

மறுபக்கத்தில், பிரதான எதிர்க்கட்சியாகவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் பல்வேறு கட்சிகள் பங்காளியாக இணைந்துள்ளன. இந்தப் பங்காளிக் கட்சியின் தலைவர்களுக்கிடையில் பாரியளவு ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சிக் கூட்டணியில் அடுத்த தலைவருக்கான உட்பூசல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதான எதிர்க்கட்சி அரசாங்கத்தைக் கண்டித்து கண்டியிலிருந்து கொழும்பு வரை பேரணியொன்றை நடத்தியிருந்தது.

இதன் இறுதிநாள் நிகழ்வு மேதினத்திலன்று கொழும்பில் நடைபெற்றது. இதில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவும், சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினரான சரத் பொன்சேகாவும் பொதுவெளியில் சண்டையிட்டுக் கொண்டமை ஊடகங்களில் அறிக்கையிடப்பட்டிருந்தது.

நிகழ்வில் உரையாற்றுவதற்கு தனக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரியே பொன்சேகா முரண்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்திருந்த பொன்சேகா, ஒரு சிலர் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டு செய்படுகின்றமையை கட்சிக்குள் அவதானிக்க முடிவதாகவும், சிரேஷ்ட தலைவர் என்ற ரீதியில் தனக்கு உரையாற்றும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியதாகவும் குறிப்பிட்டிருந்தார். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இடம் தொடர்பில் சிலர் புரிந்து நடக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஐ.ம.ச சிரேஷ்ட தலைவர்களுக்கிடையில் இவ்வாறான குழப்பங்கள் இடம்பெற்றமை இது முதற்தடவையல்ல.

இதற்கு முன்னரும் ஐக்கிய மக்கள் சக்தியினர் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் உரையாற்றுவதற்கு சிரேஷ்ட தலைவர்கள் சிலர் தயாராக இருந்தபோதும் எதிர்க்கட்சித் தலைவர் தவிர வேறு யாரும் அங்கு உரையாற்றுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பில் சிரேஷ்ட தலைவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலர் தமது தனிப்பட்ட பிம்பத்தை பிரபல்யமாக்கும் நோக்குடனேயே செயற்பட்டு வருவதாக பொன்சேகா விமர்சித்திருந்தார். எதிர்வரும் காலத்தில் நடக்கக் கூடிய பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து எதிர்க்கட்சியில் உள்ள தலைவர்கள் காய்களை நகர்த்தி வருவதால் ஒருவருக்கு ஒருவர் போட்டிபோடும் நிலை காணப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

நாடு தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் ஸ்திரமற்ற சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சி ஆக்கபூர்வமாக செயற்படவில்லையென்ற விமர்சனம் பொதுமக்கள் மத்தியில் காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்துக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதன் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்பட்ட பகுதிக்குச் சென்று அவர்களுடன் கதைக்க முற்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் முரண்பாடு ஏற்பட்டது.

“அரசியல்வாதிகள் அனைவரும் சேர்ந்து நாடகம் ஆடி வருகின்றீர்கள். நீங்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள், நீங்கள் இங்க வர வேண்டாம்” எனக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள், கூக்குரல் எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். ஒட்டுமொத்த அரசியல் முறைமைக்கு எதிராகவும் மக்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வரும் நிலையில், போராட்டங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருப்பதையே இச்சம்பவம் எடுத்துக் காட்டியிருந்தது.

எனவே, மக்களின் நியாயமான போராட்டங்களைத் தமது சொந்த அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்த எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் முயற்சிக்கக் கூடாது. இதனை விடுத்து அரசாங்கத்தின் பிழைகளைச் சுட்டிக்காட்டி நாட்டை இந்தக் குழப்பத்திலிருந்து மீட்டெடுப்பதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்களாயின் தற்பொழுது காணப்படும் குழப்பத்தை தீர்க்க இடைக்கால சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அரசாங்கத்தை முழுமையாகப் பொறுப்பெடுப்பதற்கான தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டும். அவர்களால் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க முடியாது.

இவற்றில் எந்தவொரு தெரிவையும் மேற்கொள்ளாமல் எதிர்க்கட்சி என்ற ஒரே காரணத்துக்காக அனைத்தையும் விமர்சித்துக் கொண்டு மக்கள் மேலும் துன்பங்களுக்கு ஆளாவதற்கு இடமளிக்கக் கூடாது.

சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிசெய்த அனைவரும் தம்மை ஏமாற்றியிருப்பதாக மக்கள் கூறி வருவதால் சரியான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதில் அரசாங்கத்துக்கு மாத்திரமன்றி, எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு உள்ளது என்பதை அவர்கள் மறந்து விடக் கூடாது.

பி.ஹர்ஷன்...

Comments