நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தனியொரு கட்சியினால் தீர்வு காண முடியாது! | தினகரன் வாரமஞ்சரி

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தனியொரு கட்சியினால் தீர்வு காண முடியாது!

வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நாளக கொடஹேவ அளித்த பேட்டி

"மாற்றம் வேண்டுமென இளைஞர்கள் கோருவதை நான் ஆதரிக்கின்றேன்"

'நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு ஒரு கட்சியினால் மாத்திரம் தீர்வு காண முடியாது. அனைத்துத் தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது' என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நாளக கொடஹேவ தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எம்மிடம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கே: பிரதமரின் முன்மொழிவுக்கு அமைய அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தற்பொழுது தயாரிக்கப்பட்டிருப்பது 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கான வரைபு அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் ஏற்கனவே இரண்டு திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவினால் ஒரு அரசியலமைப்புத் திருத்த யோசனையும், ஐக்கிய மக்கள் கட்சியினால் மற்றுமொரு அரசியலமைப்புத் திருத்த யோசனையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு திருத்தங்களையும் 21 ஆவது திருத்தங்கள் என அழைக்கலாம். இவ்வாறான நிலையில் 19 ஆவது மற்றும் 20 ஆவது திருத்தம் ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு தற்போதைய அரசியலமைப்பில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்பது குறித்து அமைச்சரவை கலந்துரையாடி இணக்கப்பாடொன்றுக்கு வந்தது. இந்தத் திருத்தங்களில் சில நல்ல விடயங்களும் சில குழப்பமான விடயங்களும் உள்ளன. எனவே 21 ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவதன் மூலம் தற்போதுள்ள அரசியலமைப்பை மேம்படுத்த முடியுமா என்பதை ஆராய அமைச்சரவை தீர்மானித்தது மற்றும் தேவையான முன்மொழிவுகளை முன்வைக்க அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டது.

 

கே: அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு நாட்டை தற்போதைய நிலையில் இருந்து விடுவிப்பதில் உதவுமாறு கோரியதற்கு எந்தவொரு கட்சியும் சாதகமாகப் பதில் வழங்கவில்லையென மகாசங்கத்தின் உயர்பீடாதிபதிகளுக்கு அனுப்பிய பதில் கடிதத்தில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: அதில் உண்மை உள்ளது. சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க வேண்டும் என அவர்கள் கூறினாலும், ஆட்சியமைக்க வருமாறு அழைத்தால் அதிலிருந்து விலகிச் செல்கின்றனர். கடந்த வாரம் கூட ஜனாதிபதி சர்வகட்சிகளுக்கும் அழைப்பு விடுத்த போதும், முக்கிய எதிர்க்கட்சிகள் இடைக்கால அரசாங்கத்தில் பங்கெடுக்கப் போவதில்லையெனக் கூறியிருந்தன. இது சரியான போக்கு என நான் கருதவில்லை. சிறுசிறு அரசியல் இலாபங்களை மறந்து நாட்டின் நலனுக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஒன்றாக இணைந்து கைகோர்க்கத் தயாராக இல்லாத போதும், ஜனாதிபதி அவர்களைத் தொடர்ந்தும் வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றார்.

 

கே: பாராளுமன்றத்தில் சுயேச்சையாக மாறிய பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஐக்கிய மக்கள் சக்தியின் அனுசரணையுடன் வழங்கப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது. இது பற்றிக் கருத்து தெரிவிக்க விரும்புகிறீர்களா?

பதில்: ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால், அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தாலும் பாராளுமன்றத்தில் 65 ஆசனங்கள் மாத்திரமே உள்ளன. சுயேச்சைக் குழுவும் ஆதரவளித்தால் வெறும் 100 ஆசனங்களே கிடைக்கும். ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ள ஏனைய 10 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு வழங்குவார்களா இல்லையா என்பதைப் பொறுத்தே சில மாற்றங்கள் ஏற்படலாம்.

 

கே: தகுதியற்ற சிலர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டமையே நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்குக் காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

பதில்: திறைசேரி மற்றும் மத்திய வங்கியில் இருந்த சில சிரேஷ்ட அதிகாரிகளால் இந்த நெருக்கடியை தடுக்க முடியவில்லை என்பது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும். எனினும், நெருக்கடியானது அவர்களால் உருவாக்கப்படவில்லை. இருந்தாலும் அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விரைந்து செயற்பட்டிருந்தால் இந்த நிலைமையைத் தடுத்திருக்க முடியும். அவர்கள் அதைச் செய்யவில்லை. வரிகளைக் குறைப்பதையும், தொடர்ச்சியாக பணம் அச்சிடப்படுவதையும் நிறுத்த அவர்கள் விரும்பவில்லை.

இதனால் எரிபொருள் நெருக்கடி போன்றவை நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருந்தன. எனவே, பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷ யாப்பா கூறுவது உண்மையே. இன்று நாம் எதிர்நோக்கியிருக்கும் நிலைக்கு இந்த அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். உண்மையில், இது ஒன்று அல்லது இரண்டு நபர்கள் மட்டுமல்ல, நான் இங்கு பெயர் குறிப்பிடவிரும்பாத குறைந்த பட்சம் ஐந்து சிரேஷ்ட அதிகாரிகளாவது இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும்.

 

கே: நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கு சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்து பிரதமர் தலைமையிலான அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டுமென முன்னாள் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: நானும் அவருடைய கடிதத்தைப் பார்த்தேன். இருப்பினும், அவர் தனது சொந்தக் கருத்தை வெளிப்படுத்தியதால் அது பற்றி என்னால் கருத்துக் கூற முடியாது. ஏனைய தரப்பினரையும் உள்ளடக்கி அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

உதாரணமாக அந்த 40 சுயேச்சைக் குழுவில் நான்கு வெவ்வேறு குழுக்கள் உள்ளன. அனைவரையும் ஒன்றிணைத்து தேசிய அரசாங்கத்தை அமைக்க முடிந்தால், தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நாம் மிகவும் வலுவான நிலையில் இருப்போம்.

இந்தக் கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சில முடிவுகளுக்கு பொதுவான ஒப்புதல் தேவை. சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். அந்தக் கொள்கைகளுக்குப் பாராளுமன்றத்தில் பொதுவான ஒப்பந்தம் இருந்தால், அது மிகவும் எளிதாக இருக்கும்.

அதனால்தான் முன்னாள் அமைச்சர் அழகப்பெரும முழு அமைச்சரவையையும் இராஜினாமா செய்யுமாறும், ஜனாதிபதி அனைத்துக் கட்சிகளையும் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்க அழைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு வகையில் நானும் அதே கருத்தை பகிர்ந்து கொள்கிறேன். தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைவதற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே நாங்கள் கூறுவது. அதற்காக தற்போதைய அமைச்சரவை இராஜினாமா செய்ய வேண்டியிருக்கும், சில சமயங்களில் அவர்கள் மீண்டும் நியமிக்கப்படலாம். உதாரணமாக, பெரும்பான்மையினரின் விருப்பமாக இருந்தால், பிரதமர் உட்பட அனைவரும் மீண்டும் நியமிக்கப்படலாம். அந்த வாய்ப்பை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் அழகப்பெரும கருத்து முன்வைத்துள்ளார் என நினைக்கிறேன்.

 

கே: பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியிலிருந்து விலகப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது பற்றி?

பதில்: இதனை நான் செய்திகளில் பார்த்தேன். இந்தக் கட்டத்தில் அது சரியான பேச்சுத்தானா என்று கூறத் தெரியவில்லை.

 

கே: ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றத்தில் எந்தக் கட்சி 113 ஆசனங்களைப் பெற்றாலும் இன்று நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்பதே அடிப்படை யதார்த்தம் என அண்மையில் தெரிவித்தார். உங்கள் பார்வைகள் எவ்வாறு உள்ளன?

பதில்: பாராளுமன்றத்திற்குள் 113 ஆசனங்களைக் காண்பிப்பதில் மாத்திரம் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுவிட முடியாது. எல்லாவிதமான கருத்துகளையும் ஒருங்கிணைக்கும் விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இவ்வாறான சூழ்நிலையில் ஒரு கட்சி ஆட்சி அமைப்பதை விட அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சி அமைப்பதே மிகவும் பொருத்தமானது.

 

கே: தற்போது எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு, தொடர்ந்து மின்வெட்டு மற்றும் மருந்துகள் மற்றும் உணவுப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசால் வழங்க முடியவில்லை என்று சிலர் கூறுகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்: பற்றாக்குறைகள் இருந்தன, அவற்றில் சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன. மருந்துகள் தொடர்பாகவும் தீர்வுகள் காணப்பட்டு வருகின்றன. இந்த நெருக்கடிக்கு தற்போதைய அரசாங்கம் மட்டும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஏனெனில் வெளிநாட்டு நாணயப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடித்தது. இந்நிலைமைக்கு முன்னைய அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் காரணமாகும்.

Comments