பாராளுமன்றத்துக்கு தவறானவர்களை மக்கள் தெரிவு செய்யலாகாது | தினகரன் வாரமஞ்சரி

பாராளுமன்றத்துக்கு தவறானவர்களை மக்கள் தெரிவு செய்யலாகாது

ஜனநாயகத்தின் அதிஉயர் பீடமாக மதிக்கப்படும் இடமே பாராளுமன்றம். நாட்டின் ஒவ்வொரு பிரதேச மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களே மக்கள் பிரதிநிதிகள். அவர்களின் பெரும்பான்மையானவர்கள் குழுவாக, கட்சியாக நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கிறார்கள். நாடு சிறப்பாகவும், பொருளாதாரவளம் கொண்டதாகவும், பாதுகாப்பானதாகவும் விளங்குவதை பாராளுமன்றம் உறுதிப்படுத்துகிறது. எனவே சட்டம் அறிந்தவர்கள், கல்விப்புலமை கொண்டவர்கள், மக்கள் அபிமானம் கொண்டவர்கள், விஷயம் அறிந்தவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்தில் வீற்றிருந்தார்கள். சபையும் கண்ணியம் கொண்டதாக காணப்பட்டது.

அச்சபையில் பேச்சுகள் கண்ணியம் கொண்டவையாக விளங்கின என்பதால் தான் கண்ணியக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை unparlimentary words என ஆங்கிலத்தில் அழைக்கும் வழக்கம் உள்ளது.

ஆனால் சமீபகாலமாக பாராளுமன்றத்துக்கு குறிப்பாக 1977 இன் பின்னர் - பொருத்தமற்றவர்களின் வருகை படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. தனிநபர் துதி, தனிநபர் இழிவுபடுத்தல், மிகவும் தரக்குறைவான வார்த்தைகளை மிகச் சாதாரணமாக பாவித்தல்,  பாராளுமன்றத்தில் அடிதடிகளில் ஈடுபடுவது, செங்கோலை தூக்கிக் கொண்டு ஓடுவது என பாராளுமன்றத்தின் மாண்பை அதன் உறுப்பினர்களே சந்தி சிரிக்கச் செய்திருக்கிறார்கள். ஒருவர் ஒரு பதவியில் இருந்து இராஜிநாமா செய்வதும் பின்னர் அதே பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெறுவதும் 24 மணித்தியாலங்களில் அப் பதவியைத் துறப்பதும் மக்கள் மனதில் பாராளுமன்றம் தொடர்பான மனநிலையை எதிர்திசையில் நிறுத்தியிருக்கிறது.

பாராளுமன்றத்திலும் வெளியிலும் ஒரு உறுப்பினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு பிரிட்டனில் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் இருப்பதாகவும் அதன் கீழ் மாண்பு தவறி நடந்து கொள்ளும் உறுப்பினர்கள் தண்டிக்கப்பட முடியும் என்றும் இன்றைய வாரமஞ்சரியில் வெளியாகியுள்ள நேர்காணலில் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருப்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இலங்கைப் பாராளுமன்றத்திலும் இக் கண்ணியக்குறைவான மற்றும் தரம் தாழ்ந்த பேச்சுகளும் நடத்தைகளும் இம் மன்றம் தொடர்பான மக்கள் அபிப்பிராயத்தை வெகுவாக மாற்றி வைத்துள்ளது என்பதற்கு, பாராளுமன்றம் செல்லும் பாதையை மறித்தபடி நடைபெறும் போராட்டங்களை உதாரணமாகச் சுட்டலாம். ஒரு முறை சபாநாயகரே சபையினரைப் பார்த்து, கலரியில் பாடசாலை மாணவர்கள் இருப்பதால் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்த சம்பவத்தையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று கிராமத்து தேனீர்க் கடைகளிலும் பேசுபொருளாக மாறி இருக்கிறார்கள். முன்னரைப்போல செய்திகளை பத்திரிகையில் வாசித்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இன்றில்லை. அனைத்தும் உடனுக்குடன் விடியோக்களாகவே கிடைக்கின்றன. கிராமத்தில் குடிவெறியில் கூச்சலிட்டு சண்டை போடுபவருக்கும் இவர்களுக்கும் இடையே என்ன வித்தியாசம் என அவர்கள் கேட்கிறார்கள். கணவனும் மனைவியும் தமது பிள்ளைகளுக்கு எதிரே சண்டை போடக் கூடாது என்பார்கள். பெற்றோர் என்ற மரியாதையை குழந்தைகள் இழந்துவிடலாம் என்பதே காரணம். அவ்வாறானால், நாட்டு மக்கள் முன்னிலையில் அவர்களது பிரதிநிதிகள் குஸ்தியில் ஈடுபடுவதை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தற்போது புதிய அரசியல் கலாசாரத்துக்கான மக்கள் குரல் உரக்கவே எழுந்திருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகளில், நடத்தையில், அவர்களின் வரப்பிரசாதங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்புகிறார்கள். ஒருநாள் அமர்வுக்கு மில்லியன்கள் செலவு செய்யப்படுகின்றன. உறுப்பினர்கள் பல வரப்பிரசாதங்களை அனுபவிக்கிறார்கள். எனவே மக்களால் கேள்வி எழுப்பப்பட முடியும்.

இதே சமயம் மக்களுக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. மிகச் சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்து, இன, மத உணர்வுகளுக்கு அப்பால், அவர்கள் சாதிக்கக்கூடியவர்களா என்பதை மட்டும் பார்த்து பாராளுமன்றத்துக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும். இன்று யாரையெல்லாம் மோசம் எனக் குறிப்பிடுகிறார்களோ அவர்கள் அனைவரையும் அனுப்பி வைத்தவர்கள் மக்களே! அடுத்த முறை மக்கள் தங்கள் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டும்.

Comments