இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அடித்தளமிட்டுள்ள மோடியின் ஐரோப்பிய விஜயம் | தினகரன் வாரமஞ்சரி

இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு அடித்தளமிட்டுள்ள மோடியின் ஐரோப்பிய விஜயம்

ஜேர்மனியின் அரச தலைவருடன் முக்கிய  இருதரப்பு சந்திப்பு; இந்தியாவின் வர்த்தகத்துறை அபிவிருத்திக்கு அதிக வாய்ப்புகள்

ஐரோப்பிய கண்டத்தில் 10 இலட்சத்துக்கும்அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். ஜெர்மனியிலும் கணிசமான அளவு இந்தியர்கள் உள்ளனர். ஐரோப்பாவுடனான இந்திய உறவுகளுக்கு இந்திய வம்சாவளியினர் உறுதியான பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.

கொரோனாவின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளுடன் வர்த்தக உறவுகளைமேம்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டு வருகிறது. உக்ரைன்-ரஷ்ய போர் காரணமாக ஐரோப்பிய பொருளாதா ரம் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐரோப்பாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ளார்.

இவ்விஜயத்தின் போது முதலில் அவர் ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஜெர்மனி பயணத்தை முடித்து கொண்ட பிரதமர் மோடி டென்மார்க் சென்றார்.

டென்மார்க்கில் இரண்டாவது, இந்தியா - நோர்டிக் மாநாட்டில் மோடி பங்கேற்றார். இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியுடன் டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன் மற்றும் நோர்வே ஆகிய நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்கு மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனியில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் எடுத்துக் கொண்டு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியது.

இந்தப் புகைப்படம் 1993 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அமெரிக்காவுக்குப் பயணம் செய்துவிட்டுத் திரும்பிய போது ஜெர்மனியின் பிராங்பேர்ட்டில் தங்கியிருந்தபோது எடுக்கப்பட்டதாகும்.

ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவின் நட்பு மேலும் வலுப்படுத்தப்படும் என்றும், கூடுதல் ஒத்துழைப்புத் திட்டங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெர்மன் சான்சலர் Olaf Scholz உடன் மோடி நடத்திய பேச்சுக்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக இந்திய செய்திகள் தெரிவித்தன. இந்தியா – ஜெர்மனி இடையேயான கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதில், ஜெர்மனியின் புதிய சான்சலர் Olaf Scholz பங்கேற்றார்.

ஜெர்மனி பயணத்தை முடித்துக் கொண்டு மோடி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு சென்றார். அங்கு, அவர் அந்நாட்டுப் பிரதமர் Mette Frederiksen ஐ சந்தித்தார். முதல் முறையாக டென்மார்க் சென்ற நரேந்திர மோடி, இருதரப்பு ஆலோசனை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற வர்த்தக தொழில் அதிபர்கள் கூட்டத்திலும், இந்திய வம்சாவளியினர் கலந்து கொண்ட கூட்டத்திலும் அவர் பங்கேற்றார்.

பேர்லினுக்கான மோடியின் பயணம், பிரதமர் ஸ்கோல்சுடன் விரிவான இருதரப்பு விவாதம் நடத்துவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தக ஒத்துழைப்பைப் பொறுத்தவரை இது முக்கிய சந்திப்பாகும். இந்தியா தனது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்து கொள்வதற்கு மோடியின் இவ்விஜயம் பெரிதும் பயனளிக்குமென்பது நிட்சயம்.

2021 இல் இந்தியாவும், ஜேர்மனியும் தூதரக உறவுகள் அமைந்ததன் 70 ஆவது ஆண்டைக் கொண்டாடின. 2000 ஆம் ஆண்டு முதல் இருநாடுகளும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளன. ஜெர்மனி பிரதமருடன் இரு தரப்புக்கும் பயன் விளைக்கும் பாதுகாப்பு, பிராந்திய மற்றும் உலக நிகழ்வுகள் பற்றி மோடி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டார்.

இந்தியா- ஜெர்மனி இடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையின் முக்கிய தூண்களில் நீண்டகால வர்த்தக உறவுகள் ஒன்றாகும். இரு நாடுகளிலும், கொவிட் பெருந்தொற்றுக்கு பிந்திய பொருளாதார மீட்டுருவாக்க நடவடிக்கைகளுக்கு இவ்விஜயம் பெரிதும் வலுவூட்டுவதாக அமையும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

ஐரோப்பிய கண்டத்தில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர். ஜெர்மனியிலும் கணிசமான அளவு இந்தியர்கள் உள்ளனர். ஐரோப்பாவுடனான இந்திய உறவுகளுக்கு இந்திய வம்சாவளியினர் உறுதியான பங்களிப்பு வழங்கி வருகின்றனர். எனவே இந்தப் பயணத்தின் வாயிலாக ஐரோப்பாவுடனான உறவுக்கு மேலும் உரமூட்டியுள்ளார் மோடி.

பிரதமர் மோடி தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும்போது, பாரிசில் ஜனாதிபதி மக்ரோனை சந்தித்துப் பேசினார். ஜனாதிபதி மக்ரோன் மிக அண்மையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முடிவுகள் அறிவிக்கப்பட்டு பத்து நாட்களுக்குள் மோடி தனது வாழ்த்தை நேரில் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய பிராந்தியம் பல சவால்கள் மற்றும் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சமயத்தில் மோடியின் விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பொருளாதார அபிவிருத்தியில் அவரது இப்பயணம் மிகுந்த பலன் தருமென்பதே பொருளாதார வல்லுநர்களின் நம்பிக்கையாகும். இந்தியா தனது பங்கேற்பு நிகழ்ச்சிகள் மூலம், அமைதி மற்றும் முன்னேற்றத்துக்கான தனது இலட்சியத்துக்கு முக்கிய நண்பர்களாக ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொண்டு வருகின்றது.

இதேவேளை பிரதமர் மோடி தனது விஜயத்தின் பின்னர் ஜேர்மனியின் அரச தலைவருக்கு இதயப்பூர்வ நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த ஆண்டில் மோடியின் முதல் வெளிநாட்டுப் பயணம், ஜெர்மனியில் இருந்து தான் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் வெளிநாட்டுத் தலைவருடனான அவரது முதல் தொலைபேசி உரையாடலும் ஜேர்மனிய அரச தலைவருடன்தான் நடைபெற்றது. இதுபோன்ற அனைத்து முதல் நடவடிக்கைகளும், இந்தியாவும் ஜெர்மனியும், முக்கியமான இந்த நட்புறவுக்கு எந்தளவு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

ஜனநாயக நாடுகள் என்ற முறையில், இந்தியாவும் ஜேர்மனியும், பல்வேறு பொதுவான நற்பண்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த நற்பண்புகள் மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன் அடிப்படையில், கடந்த பல ஆண்டுகளில் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு நட்புறவு குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ளது.

கொரோனாவுக்கு பிந்திய உலகில், மற்ற வளரும் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா வேகமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. உலகளாவிய மீட்பு நடவடிக்கைகளில் இந்தியா முக்கிய தூணாக திகழ்கிறது. அண்மையில், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் அவுஸ்திரேலியாவுடன், குறுகிய காலத்தில் வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியா தடையற்ற வர்த்தக வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விரைவில் முன்னேற்றத்தை எட்ட உறுதி பூண்டுள்ளது. இந்தியாவின் திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர் மற்றும் வல்லுநர்கள், பல்வேறு நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பாற்றியுள்ளனர். இந்தியா – ஜெர்மனி இடையிலான விரிவான புலம்பெயர்தல் மற்றும் போக்குவரத்து ஒத்துழைப்பு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான செயல்பாடுகளுக்கு வகை செய்யும் என நம்பப்படுகின்றது.

சாரங்கன்...

Comments