மக்களின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் நிலை | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல் நிலை

அரசியல் ஸ்திரத்தன்மை, மக்களின் இயல்பு வாழ்க்கையை  உறுதிப்படுத்தவே அவசரகால நிலை பிரகடனம்

பொருளாதார அச்சுறுத்தலுக்கு  மத்தியில் மக்களை மேலுமொரு  அச்சுறுத்தல் நிலைக்கு தள்ளிவிட  ஒருபோதும் அனுமதிக்க முடியாது

அவசரகால நிலை  அறிவிப்பு குறித்து  அரசாங்கம் விளக்கம்

 

நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி நிலையை வெற்றி கொள்ளும் வகையில் மேற்கொள்ளவேண்டிய மறுசீரமைப்புக்கு தேவைப்படும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்குரிய மக்களின் இயல்பு வாழ்க்கையை தடையில்லாமல் முன்னெடுத்துச் செல்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறுகிய மற்றும் நீண்டகால செயற்பாடுகளின் பிரதிபலனாகவே இலங்கை சுதந்திரத்துக்கு பின்னர் இத்தகைய பாரிய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியையும் சந்தித்துள்ளது. இந்த நிலையிலிருந்து நாட்டை கட்டியெழுப்பும் வகையில் எமது அரசியல், பொருளாதார, சமூக மறுசீரமைப்பு மேற்வேகொள்ளப்பட வேண்டும்.

அதன்படி, குறுகிய காலத்தில் எமது வெளிநாட்டு கையிருப்பை முகாமைத்துவம் செய்தல், பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை  இயல்பு நிலைக்கு கொண்டுவருதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டியுள்ளது.

மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மதத்தலைவர்கள், பொருளாதார விற்பன்னர்கள், வர்த்தக சமூகத்தினர், சட்டத்தரணிகள் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நெருக்கடிகளை வெற்றி கொள்வதற்கு மறு சீரமைப்பின் அவசியத்தை இக்காலங்களில் தெரிவித்து வருகின்றனர். இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி வெளியிட்டுள்ள அறிக்கையில் மறுசீரமைப்புக்கான பல்வேறு ஆலோசனைகள் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொருளாதாரம் மற்றும் கடன் நெருக்கடியை குறுகிய காலத்துக்குள் முகாமைத்துவம் செய்ய வேண்டியது நாட்டில் தற்போது நிலவும் பெரும் சவாலாகும். மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை ஆரம்பித்து அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு பலமான, அதேவேளை ஸ்திரமான அரசாங்கம் இருக்க வேண்டியது முக்கியமாகுமென சட்டத்தரணிகள் சங்கம் அதன் மூலம் தெரிவித்துள்ளது.

நிதி, நிவாரணங்களை பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடனும் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கு சாதகமான பிரதி பலன்கள் கிடைத்துள்ளன.

அந்த சாத்தியப்பாட்டுக்கிணங்க தேவையான பலம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவது, அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி நிலை முக்கிய நிபந்தனைகளாகும்.

கடந்த சில தினங்களாக தலைநகர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆத்திரமூட்டும் ஆவேசமான எதிர்ப்புப் போராட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகியுள்ளன.

எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு தடை ஏற்பட்டுள்ளன. ரயில் போக்குவரத்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்பத்திரிகளில் வழமையான நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் நோயாளிகள் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஆடைத் தொழில் உட்பட உற்பத்தித்துறை செயற்பாடுகள் அவ்வப்போது தடை ஏற்படுத்தப்படுகின்றன. பிள்ளைகள் பாடசாலைக்கு போகமுடியாத நிலை, அரச, - தனியார் இரு தரப்பினரும் நிறுவனங்களுக்கு கடமைக்காக சமுகமளிப்பதில் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி பொருளாதார நெருக்கடியை மேலும் அதிகரிக்கவே வழிவகுத்துள்ளன.

இத்தகைய நிலையில் மக்களின் பாதுகாப்பு மற்றும் இயல்பு வாழ்க்கையை கட்டியெழுப்புதல், அத்தியாவசிய சேவை, விநியோகங்கள் மற்றும் சேவைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லுதல், பொதுமக்கள் சுதந்திரமாக தமது பயணங்களை மேற்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

என்று தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments