“அவளுக்கும் ஒரு லெஹெங்கா” | தினகரன் வாரமஞ்சரி

“அவளுக்கும் ஒரு லெஹெங்கா”

தேவையோடு காத்திருந்த குடும்பமொன்றுக்கு துணை செய்து. அவர்களும் நோன்புப்  பெருநாளை மகிழ்வோடு கொண்டாட துணை  புரிந்த அல்லாஹ்வைத் துதித்து.  அவர்களது உதடுகள் முணுமுணுத்தன.

 

தலைநகரில் தலைநிமிர்ந்து நிற்கும் பெரிய ஆடைகள் விற்பனை நிலையம் அது. நோன்புப் பெருநாள் விற்பனை கலகலப்பாக நடந்துகொண்டிருந்தது. புத்தம் புதிய டிசைன்களில் கண்ணைக் கவரும் கலர்களில் விதம் விதமான ஆடையணிகள் நிரப்பப் பட்டிருந்தன. வாடிக்கையாளர்கள் உற்சாகத்தோடு தமக்குப் பிடித்தமான ஆடைகளை தேர்வு செய்து கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு மத்தியில் ரினாஸ், அவரது மனைவி, மகள் அம்ரா மூவரும் கூட மும்முரமாக ஆடைத் தெரிவில் ஈடுபட்டிருந்தனர். பல புதிய டிசைன் ஆடைகளை புரட்டிப் புரட்டிப் பார்த்த பின் அம்ரா இறுதியாக ஒன்றைத் தெரிவு செய்தாள்.

“உம்மா! இந்த லெஹெங்கா நல்லாருக்கும்மா! இத வாங்கிடுவோம்மா.” உம்மாவிடம் ஒரு லெஹெங்காவை நீட்டினாள் அம்ரா.

“சரி மக! அத கையில வச்சிக்கோங்கோ. நா இத பாத்து முடிக்கிறன்”. சொல்லிவிட்டு தனது தெரிவுகளைத் தொடர்ந்தாள் அம்ராவின் உம்மா.

தனது கையில் வைத்திருந்த லெஹெங்காவின் அழகை இரசித்துக்கொண்டிருந்த அம்ராவின் நினைவில் கடந்த வாரம் தனது பாடசாலையில் நடைபெற்ற தமிழ்-சிங்கள புத்தாண்டு ஒன்றுகூடல் நிகழ்ச்சி நிழலாடியது.

X--------------X-----------X---------------X----------X

அம்ரா கொழும்பின் பிரபலமான மகளிர் கல்லூரியில் பதினோராம் வகுப்பில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறாள். அவளது கல்லூரியின் வருடாந்த தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. அது ஒரு கொண்டாட்ட நிகழ்ச்சி என்பதால் மாணவிகள் பாடசாலை சீருடையையோ அல்லது விரும்பிய எந்தவித ஆடைகளையோ அணிந்து வருவதற்கான சுதந்திரத்தை அக்கல்லூரி வழங்கியிருந்தது.

பெண்கள் கல்லூரியல்லவா! கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடுவார்களா மாணவிகள்? ஒவ்வொரு மாணவியும் தத்தமது விருப்பபடி விதவிதமான புத்தம்புதிய டிசைன்களில், கண்ணைக்கவரும் நிறங்களில் அலங்கரித்து வந்திருந்தனர்.

ஒவ்வொரு மாணவிக்கும் தனது ஆடை மீது ஒருவித பெருமிதம். ஆனாலும், தன்னைவிட சிறப்பாக அணிந்திருந்தவர்கள் மீது ஒருவித இலேசான பொறாமையும் வரத்தான் செய்தது. இவர்களுக்கு மத்தியில் ஒரேயொரு மாணவி கரீமா மட்டும் பாடசாலை சீருடை அணிந்து, வெள்ளை ஆடையுடன் தனித்துத் தெரிந்தாள்.

“என்ன கரீமா நீ மட்டும் யுனிபோர்ம்ல. வேறேதாவது சல்வாராவது உடுத்திட்டு வந்திருக்கலாம் தானே!”

அம்ரா உட்பட அவரது தோழிகள் கரீமாவை குடைந்து எடுத்தனர்.

எல்லோருக்கும் ஏதோ ஒரு பதிலை சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தாள் கரீமா. அவளது பதிலில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் அவளது மனதில் வெளியில் சொல்ல முடியாத ஆழ்ந்த கவலையும் நிறைந்திருந்தது. புத்தாண்டு ஒன்று கூடல் முடிந்து மாணவிகள் கல்லூரியிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். கரீமா வர்ண உடை அணியாமல் பாடசாலை சீருடையில் வந்திருந்தது அம்ராவை உறுத்திக் கொண்டேயிருந்தது. அம்ரா கரீமாவை அழைத்தாள்

“கரீமா! இங்க வாடி!”

“என்ன அம்ரா?” கேட்டுக்கொண்டே அவளருகில் வந்தாள் கரீமா.

“உண்மையை சொல்லுடி! ஏன் நீ ஸ்கூல் யுனிபோர்ம்ல வந்த. ஏதாவது ஒரு சல்வார போட்டுட்டு வந்திருக்கலாம்தானே!” அம்ரா ஆதங்கத்தோடு கேட்டாள்.

“இல்ல அம்ரா! அது வந்து....” கரீமா தயங்கினாள்.

“என்ன வந்து... போயி... உண்மைய சொல்லுடி” அம்ரா விடாப்பிடியாகக் கேட்டாள்.

வேறு வழியில்லாமல் கரீமா பேசத் தொடங்கினாள்.

“இல்ல அம்ரா! எங்கட வாப்பா மௌத்தான பொறவு உம்மா தனியா கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறாங்க. இது உனக்கு தெரியும்தானே. அவங்களே எல்லா செலவுகளையும் செய்றாங்க, என்னயும் தம்பியையும் படிக்க வைக்கிறதுத்கே ரொம்ப கஷ்டபடுறாங்க. கொலேஜுக்கு அனுப்புறதே பெரிய பாடு. இதுல நல்ல உடுப்பு வாங்குறது எப்புடிடீ...? அதான் உள்ளத உடுத்து சமாளிக்கிரம். என்னட்ட இப்ப இருக்கிற உடுப்ப உடுத்துட்டு வந்து உங்கட உடுப்போட பாத்தா ரொம்ப கேவலமா இருக்கும் டீ. அதாலதான் ஸ்கூல் யுனிபோர்ம்லேயே வந்து சமாளிச்சிட்டேன்.”

கரீமா தன்னிலை விளக்கமளித்தபோது அம்ராவுக்கு அவளது நிலைமை நன்றாகவே புரிந்தது. அவள் கரீமாவைப் பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்த்தாள்.

 

***

 

கரீமாவின் வாப்பா சிறு வியாபாரம் செய்து வரவுக்கேற்ப சிறப்பாக வாழ்ந்தவர். தனது பிள்ளைகளை சிறப்பாக படிப்பிக்க வேண்டுமென்று செலவைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் கரீமாவை இந்தக் நல்ல கல்லூரியிலும் அவளது தம்பியை இன்னுமொரு சிறந்த ஆண்கள் பாடசாலையிலும் சேர்த்திருந்தார்.

தாய், தந்தை, மகள், மகன் எனச் சேர்ந்து அவர்களது சிறிய குடும்பம் சீராக சென்று கொண்டிருந்தபோது திடீரென ‘கொரோனா’ எனும் கொடும் நோய் அவளது தந்தையின் உயிரைப் பறித்து, அந்த குடும்பத்தையே சீர்குலைத்தது.

எல்லா குடும்பச் சுமைகளும் அவளது தாயின் தலையிலேயே விழுந்தது. வேறு யாருமே துணைக்கு வராத போது அவள் கற்ற கல்வி மட்டுமே அவளுக்குத் தோள் கொடுத்தது.

தனியார் பாடசாலையொன்றில் ஆசிரியையாக சேர்ந்து உழைக்கத் தொடங்கினாள். கூடவே டியுசன் வகுப்புகளையும் நடாத்தினாள்.

வாடகை வீடாயினும் கொழும்பில் வசதியாக வாழ்ந்து வந்த வீட்டை அதன் உரிமையாளரிடம் திருப்பி ஒப்படைத்துவிட்டு வெல்லம்பிட்டியில் சிறியதொரு வீட்டை வாடகைக்கு எடுத்து வாழத் தொடங்கினாள். அவளது ஒரே நோக்கம் இரு பிள்ளைகளையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனால் எல்லா செலவுகளையும் குறைத்து பிள்ளைகளின் கல்வி செலவுகளுக்கே முன்னுரிமை கொடுத்தாள்.

கரீமாவும், தம்பியும் தம் குடும்ப நிலையை புரிந்து, தாயின் சிரமம் அறிந்து சிக்கனமாக வாழப் பழகிக் கொண்டார்கள். உள்ளதைக் கொண்டு சமாளித்துக் கொண்டார்கள்.

கரீமாவும் கல்லூரியில் மேலதிக செலவு வரும் விடயங்களை எப்போதும் தவிர்த்துக் கொள்வாள். அதன் மற்றுமொரு பிரதிபலிப்பே இந்த பாடசாலை சீருடை விடயம். நினைத்துப் பார்த்த போது அம்ராவின் கண்கள் இலேசாகக் கலங்கின.

“சொரி கரீமா! டோன்ட் வொரி. எல்லாம் சரியாயிடும். இன்ஷா அல்லாஹ்!”

ஆறுதல் கூறி விடைபெற்றாள் அம்ரா. ஆனாலும் அவளது மனம் மிகவும் கனத்தது.

‘கரீமாவுக்கு ஏதாவது செய்யணுமே!’ உலேன்ர எண்ணம் அம்ராவின் மனதில் ஒலித்தது.

 

***

 

“என்னடி யோசிக்கிறே!” தாயின் குரல் கேட்டுத் தெளிந்த அம்ரா உடனடியாகவே தாயிடம் கேட்டாள்

“உம்மா இதே லெஹெங்காவுல அந்த கலர்ல உள்ளதையும் வாங்கித் தாங்களே!”

“ஒன்று போதும் அம்ரா! வேறேதாவது கொறஞ்ச வெலயில வாங்குங்களே!”

“இல்லம்மா இதயே வாங்கித் தாங்க” அவள் வாங்கிய அதே லெஹெங்காவில் இன்னுமொரு நிறத்துல உள்ளத எடுத்து அதனையே வாங்கித்தருமாறு வற்புறுத்தினாள் அம்ரா.

அம்ராவின் வற்புறுத்தலை மறுக்க முடியாத ரினாஸ் அந்த லெஹெங்காவையும் வாங்கிக் கொடுத்தார்.

நோன்புப் பெருநாள் ‘ஷொப்பிங்’ முடிந்து காரில் ஏறிய போது அம்ரா கேட்டாள், “வாப்பா’ நோன்பு திறக்க நெறய நேரம் இருக்குதானே! கொஞ்சம் வெல்லம்பிட்டிக்கு போயிட்டு வருவமா?”

“ஏம்மா! இந்த நேரத்தில வெல்லம்பிட்டிக்கு போகணும்?”

ரினாஸ் கேட்ட போது அம்ரா தனது தோழி கரீமா பற்றிய அனைத்தையும் விளக்கமாகக் கூறினாள். இரண்டாவது லெஹெங்காவை கரீமாவுக்குத்தான் வாங்கியதாகவும் அதனை கொடுத்துவிட்டு வரவே வெல்லம்பிட்டியவில் உள்ள கரீமாவீன் வீட்டுக்குப் போக வேண்டுமென்றும் விளக்கினாள்.

“போயிட்டு வருவமே வாப்பா!” கெஞ்சினாள் அமரா. அம்ரா சொன்ன கரீமாவின் கதையை கேட்டபின் அம்ராவின் கெஞ்சலை ரினாஸால் மறுக்க முடியவில்லை.

“சரிம்மா! எட்ரஸ் இருக்கா? இல்லாட்டி கோல்பண்ணி கேட்டுப்பார்” என்றார். தந்தையின் பதிலால் உற்சாகமடைந்த அம்ரா உடனே கரீமாவுக்கு ‘போன்’ செய்தாள்.

‘நல்ல காலம் ‘சூம்’ வகுப்புகளுக்காக கரீமாவுக்கு அவளது உம்மா ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தது. இல்லாட்டி எப்படித்தான் அவளோட பேசுறது?’ தன் மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் அம்ரா.

தொலைபேசியில் கரீமாவின் முகவரியைப் பெற்று ‘கூகூள்’ துணையோடு கரீமாவின் வீட்டை நெருங்கினாலும் அவளது வீட்டின் அருகே காரைக் கொண்டு செல்ல முடியவில்லை. கரீமாவின் வாடகை வீடு அமைந்திருந்தது ஒரு சிறிய ஒழுங்கையில். கார் அதில் செல்ல முடியாததால் பிரதான வீதியில் ஓரமாக காரை நிறுத்தினார் ரினாஸ்.

“வாப்பா! நீங்களும் வாங்கலேன்! இத குடுத்திட்டு வந்திடுவோம்.” அம்ரா தந்தையையும் தன்னோடு அழைத்தாள். தாயாரை காரில் இருக்கச் சொல்லி விட்டு அம்ராவும், தந்தையும் கரீமாவின் வீட்டுக்குச் சென்றனர்.

சிறிய ஒழுங்கையில் இருந்த சிறிய வீடு அது. உள்ளே சென்ற அவர்களை கரீமா ஒருவித தயக்கத்தோடுதான் வரவேற்றாள். அம்ராவும் தந்தையும் ஒரே பார்வையில் அவ்வீட்டை அளந்து கொண்டனர்.

ஒரு பிரதான சாலை, ஒரு அறை, சமையலறை, குளியலறை அடங்கிய சிறிய வீட்டில் அத்தியாவசியப் பொருட்களை தவிர வேறெதனையும் அவர்களால் காண முடியவில்லை. தனது வீட்டில் உள்ள பொருட்களோடு அதனை ஒப்பிட்ட அம்ராவால் தன் கண்களில் துளிர்ந்த கண்ணீரைத் தடுக்க முடியவில்லை. அம்ராவின் தந்தையின் மனமும் கலங்கியது.

அம்ரா தன் வாங்கி வந்த ‘லெஹெங்கா’ பார்சலை கரீமாவின் கையில் கொடுத்து, “திஸ் இஸ் போர் யூ கரீமா! மை பெருநாள் கிப்ட்.” என்றாள்.

“என்ன அம்ரா! இதெல்லாம் எதுக்குடீ” என்றவள், தயக்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டாள்.

கொஞ்சம் நேரம் சம்பிரதாயபூர்வமாக பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் படுகின்ற கஷ்டங்களும், துன்பங்களும் ரினாசுக்கு நன்றாகப் புரிந்தது. விடைபெறும் போது தனது பேர்ஸை எடுத்த அவர் அதிலிருந்த ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் சிலதை அம்ராவின் கைகளில் திணித்தார்.

“அம்ராம்மா இத கரீமாட்ட குடுங்க!”

உற்சாகமாக அதனைப் பெற்ற அம்ரா கரீமாவிடம் அதனைக் கொடுத்தாள். அவள் அதனைப் பெற மறுத்த போதும் கட்டாயமாக கரீமாவின் கைகளில் திணித்து விட்டு விடைபெற்றனர்.

அம்ராவும் தந்தையும் தமது காரை நோக்கி திரும்பி நடந்த போது. அவர்களது உள்ளங்களில் ஒரு இனம்புரியாத திருப்தி நிறைந்தது. அது உதவி தேவைப்படுவோருக்கு உதவும்போது இறைவன் வழங்கும் மகிழ்ச்சி போலும்.

தேவையோடு காத்திருந்த குடும்பமொன்றுக்கு துணை செய்து. அவர்களும் நோன்புப் பெருநாளை மகிழ்வோடு கொண்டாட துணை புரிந்த அல்லாஹ்வைத் துதித்து. அவர்களது உதடுகள் முணுமுணுத்தன.

“அல்ஹம்துலில்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!”‘கரீமாவின் குடும்பத்த போல இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்தப் பெருநாளை கொண்டாட முடியாமல் தவிக்கிறார்களோ?’

இந்தக் கேள்வி அம்ரா, ரினாஸ் இருவரது உள்ளங்களிலும் ஒரே நேரத்தில் ஒன்றாகவே விஸ்வரூபமெடுத்தது.

கலாபூஷணம்

சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ்...?

 

Comments