
மலையக பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் காடுகளை அழித்து பாதைகளை அமைக்கும் போது ஓடைகளுக்கு குறுக்காக சிறிய பாலங்களை அமைத்தனர். இவற்றை போக்குகள் என அழைத்தனர் இவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற் பாறைகளை யானைகளால் கூட தூக்கமுடியாத அளவு அளவில் பெருத்தவை.
இன்றும் மலையக பெருந்தோட்ட பாதைகளில் இந்த போக்குகள் உள்ளன இவற்றில் பஸ்சேவைகளும் நடைபெறுகின்றன. அந்த அளவு உறுதிமிக்கது. இயந்திரங்கள் இன்றி இவ்வளவு பெரிய பாறைகளை எவ்வாறு தூக்கினர்? பூதங்களின் துணையுடன் அமைத்தார்களா? ஆச்சரியம் தான்!
இவற்றை அமைத்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள். இவர்கள் நல்ல பலசாலிகளாக இருந்துள்ளனர். வெள்ளைக்கார துரைமார்களின் குதிரைகள் கட்டுப்பாடை இழந்து ஒடியபோது குறுக்கே மறித்து தனது கைகளால் நிறுத்தியுள்ளனர்.
இப்படி அசுர பலம்படைத்தவர்களாக இவர்கள் இருந்துள்ளனர். ஒரு மூட்டை சீமை உரத்தை மலை உச்சிக்கு தலையில் சுமந்து சென்றுள்ளனர்.
அவர்களின் வாரிசுகளுக்கு இந்த உடல் உரம் இல்லாதுபோனது ஏன் என்ற கேள்வி எழுதுகிறது அல்லவா? எமது உணவு முறைதான் காரணம் என்று சொல்லலாம். அன்று அவர்கள் உண்ட உணவு வகைகளும் அளவும் இன்று நாம் உண்ணும் உணவிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டவை.
அன்று குரக்கன், மொச்சை, மாசி, பருப்பு வகைகள், கருவாடு, முட்டை என்பன தினசரி அவர்கள் உணவில் இருந்துள்ளது. ஒரு கொத்து அரிசி சோறும் ஒரு கோழியும் சாப்பிட்டவர்களும் இருந்துள்ளனர்.
வீடுகள் தோறும் கோழி வளர்த்தனர். ஆடுகளையும் வளர்த்தனர். இவை வியாபார நோக்கதுடன் அல்ல. தினமும் மாமிச உணவுகளையும் உண்டு வந்தனர். இன்று நாம் உண்ணும் உணவு தரத்திலும் அளவிலும் குறைவானது. சத்து குறைவானது. சத்தான உணவு செலவு மிக்கது. அன்று போதை பழக்கம் இருக்கவில்லை.
கள்ளு, சாராயம் இருந்தாலும் வியாதி அளவில் காணப்படவில்லை. உணவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிற்பட்ட காலப்பகுதியில் மலையக நகர் பகுதிகளில் மதுக் கடைகள் வந்தன. எம்மவர்கள் அரசியலுக்கு வந்ததும் தோட்டப் பகுதிகளில் தோட்ட குடியிருப்புகளுக்கு மத்தியிலும் மதுக் கடைகள் வந்தன. மதுபாவனை உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது.
வீட்டுக்கு ஒரு ஆட்டை அடித்து சமைத்த மீதியை உப்பிட்டு அடுப்புக்கு மேல் கட்டி தொங்கவிட்டு விடுவர். தேவைப்படும்போது அதில் தேவையான அளவு எடுத்து சமைப்பர். ஆட்டுக்கால் சூப்பு, ஆட்டு இரத்த பொரியல், ஆட்டு குடல் பால்கறி என எத்தனையோ விதமான இறைச்சி சமையல் முறைகள் வழக்கில் இருந்தன.
ஆட்டு இரத்தத்தில் சின்ன வெங்காயம், குண்டு கொச்சிக்காய் போட்டு பொரித்து எடுத்து சோற்றுடன் சிறு பராயத்தில் சாப்பிட்டிருக்கிறேன். ஆடு வெட்ட அன்று அனுமதி தேவையில்லை. வெள்ளைக்காரர் நிர்வாகம் கண்டு கொள்வதில்லை.
ஆடுகள் மட்டும் அல்ல; மாடுகளை அறுத்தும் பங்கிட்டு உண்டு வந்தனர். மாடுகளை வெட்டும் இடங்கள் மாடுவெட்டு பள்ளம் என அழைக்கப்பட்டது.
இன்றும் மலையகத்த்தில் பல தோட்டங்களில் மாடு வெட்டு பள்ளங்கள் உள்ளன. கண்டி, கலஹா குறூப் அப்பர் கலஹாவில் ஓரிடம் பழைய மாடுவெட்டு பள்ளம் என அழைக்கப்படுகின்றது. இவற்றுக்கு மேலாக காட்டு விலங்குகளை வேட்டையாடி உண்டனர். வீடுகள் தோறும் வேட்டை நாய்கள் வளர்த்தனர்.
தோட்டங்கள் தோறும் வேட்டைக்காரர்கள் இருந்தனர். வேட்டை இறைச்சியை தமது தேவைபோக குறைந்த விலைக்கு விற்றனர்.
மான், மரை, முயல், முள்ளம்பன்றி, பன்றி, அழுங்கு போன்ற காட்டு விலங்குகளை வேட்டையாடி தனது இறைச்சித் தேவையை பூர்த்தி செய்தனர். இவை பயிர்களை அழிப்பதால் தோட்ட நிர்வாகங்கள் வேட்டையாடுவதை கண்டு கொள்வதில்லை.
எனவே தொழிலாளர்கள் அனுமதி பெற்ற துப்பாக்கிகளை வைத்திருந்தனர். குறைந்தபட்சம் 30 குடும்பங்களில் ஒருவரிடம் துப்பாக்கி இருந்தது.
1970, 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி காலப்பகுதியில் இத் துப்பாக்கிகளை அரசு மீளப்பெற்றது. எனவே வேட்டை நாய்களை துணையாகக் கொன்டு விலங்கு வேட்டையில் ஈடுபட்டனர். எனினும் வேட்டையாடுவது படிப்படியாக குறைந்து வந்தது.
வேட்டையாடும் காட்டு விலங்குகளின் மாமிசத்தை நோய்களுக்கான இயற்கை மருந்தாக பயன்படுத்தினர். முள்ளம் பன்றியின் குடல் பாகங்களை வெயிலில் காயவைத்து தீராத வயிற்று வலிக்கு சீரகத்துடன் சேர்த்து அவித்து, அந்த அவித்த நீரை குடித்தனர். காட்டுப் பன்றிகளின் மாமிசத்தை வெளி மற்றும் உள் மூல நோய்களுக்கான மருந்தாகவும் பயன்படுத்தினர்.
வெளவால் இறைச்சியை தீராத சளி மற்றும் காச நோய்களுக்கு மருந்தாகவும் உண்டனர். முள்ளம் பன்றி ஒரு நாளில் விடியமுன் 108 வகையான மரவேர்களை உண்பதாகவும் அது மருத்துவ குணம் உடையதாகவும் கருதினர்.
காய்ச்சல் என்றால் நண்டு இரசம், வெடக்கோழி இரசம். இப்படி மாமிசத்தை மருந்தாக பயன்படுத்தி மாமிச பிரியர்களாக நல்ல கட்டு மஸ்தான உடலோடு ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.
மரை மற்றும் மாட்டு இறைச்சியை வெள்ளைப் பூண்டுடன் சேர்த்து சமைத்து தேன் கலந்து சாடிகளில் இட்டு உணவுடன் சேர்த்து உண்டு வந்தனர்.
இவ்வாறு தொடர்ந்து உண்டு வந்தால் ஆஸ்மா குணமடையும் என்பது இவர்களின் நப்பிக்கையாக இருந்தது. எம்மவர் இறைச்சி வகைகளை அதிகமாக விரும்பி உண்ண ஆங்கிலேயர் ஊக்குவித்தனர்.
தோட்டங்கள் தோறும் பன்றிகளை வளர்த்தனர். இந்தப் பன்றிகளுக்கு உணவாக வற்றாளைக் கிழங்குகளை பயிர்செய்தனர். ஞாயிற்றுக் கிழமைகளில் பன்றிகளை அறுத்து ஒரு வீட்டுக்கு 5 இறாத்தல் வீதம் கொடுப்பர். இப்படி பெற்ற இறைச்சியை அடுத்த வாரம் வரை பயன்படுத்த அடுப்புக்கு மேலாக கட்டி உலர்த்தி பழுதடையாது பார்த்துக் கொள்வது அன்றைய வழக்கம். ஏனெனில் அப்போது பிரிட்ஜ் கிடையாது!
கண்டி, புப்புரஸ்ச டெல்டா தோட்டப் பகுதிகளில் மாமிசத்தை உலர்த்தி பக்குவப்படுத்துவது சுகந்திரத்திக்கு பின்பும் வழக்கில் இருந்துள்ளது. இன்றும் எம்மவர் இறைச்சி வகைகளை விரும்பி உண்டு வந்தாலும் மாமிச வகைகள் முன்னரைப்போல் தாராளமாகக் கிடைப்பதில்லை.
தற்போது காட்டு விலங்குகளை வேட்டையாட முடியாது தடை உள்ளது. இச் சட்டங்கள் எமது நாட்டில் உருவாக்கப்பட்டவை அல்ல. இவ்விலங்கு வதை சட்டம் எந்த வகையிலும் எமக்கு பொருந்தாது. காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை தடை செய்த பின் இந்த இயற்கை சமநிலை மாறி காட்டு விலங்குகளின் பெருக்க அசுர வேகத்தில் உயர்கிறது. போதிய உணவு கிடைக்காததால் மக்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
இதனால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். பல தோட்டப் பகுதிகளில் இரவுவேளை மட்டுமல்லாமலும் பகலில் கூட நடமாட அச்சமாக உள்ளது. காட்டுப் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வீட்டு வளவுக்குள் வருகின்றன.
விவசாயத்தை நாசம் செய்யும் இந்த காட்டு விலங்குகளை ஒருவர் வேட்டையாடி அவற்றின் தோலை உரிக்கு முன்னரேயே அக்கம்பக்கத்தவர் பொலிசுக்குத் தகவல்கொடுத்து இதை செய்யும் இந் நபர்கள் கசிப்பு காச்சுபவரையும் கள்ளசாராயம் விற்பவரையும் காட்டி கொடுக்க முன்வருவதில்லை.
காட்டு விலங்குகளை வேடையாடி உண்ண அரசு அனுமதிக்க வேண்டும். காட்டு விலங்குகளை வேட்டையாடி உடலுக்கு தேவையான புரதசத்தை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். தற்போது கோழி ஒரு கிலோ 900/= ரூபா, ஆட்டிறச்சி 2500/=, மாட்டிறச்சி 1500/=, முட்டை 30/= பருப்புவகை எல்லாம் 600/= அதிகம்.
இன்றைய சூழலில் விவசாயத்தை நாசம் செய்து மனிதனுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் மிருகங்களை வேட்டையாடி உணவாகக் கொள்ளும் வகையில் அரசு தன் அலுங்குப் பிடியைத் தளர்த்த வேண்டும். உணவுப் பஞ்சம் ஒன்றையும் போஷாக்கு குறைபாட்டையும் நாடு எதிர்கொண்டிருக்கிறது. இதன் அர்த்தம் சிறுத்தைகளை வேட்டையாட வேண்டும் என்பதல்ல. ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கு மாத்திரம் தளர்வை அனுமதிக்கலாம். தொழிலாளர்கள் ஊட்டத்துடன் இருந்தால்தான் அவர்களால் ஊக்கமுடன் தொழில் செய்ய முடியும். உணவுக்காக காட்டுயிர்களை வேட்டையாட அனுமதி வேண்டும்!
தெல்தோட்ட ஆர். நவராஜா ...?