பெருந்தோட்டப் பாதை அபிவிருத்தி அன்றும் இன்றும் | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்டப் பாதை அபிவிருத்தி அன்றும் இன்றும்

பெருந்தோட்டப் பகுதிகளின் அபிவிருத்திக்காக பல்வேறு தரப்புகளிடம் இருந்து கிடைக்கும் நிதி முறையாகவோ முழுமையாகவோ பயன்படுத்துவது கிடையாது என்ற குற்றச்சாட்டு நெடுநாளாகவே இருக்கிறது.

குறிப்பாக பெருந்தோட்டப் பகுதிகளுக்குச் செல்லும் பாதைகளைச் சீரமைப்பதில் இடம்பெறும் குளறுபடிகள் ஏராளம். வழமையாக தோட்டப் பாதைகளை தோட்ட நிர்வாகங்கள்தான் பராமரிக்கும். இது ஆங்கிலேயர் காலத்திலிருந்து நிலவிவரும் சங்கதி.

இதன் பின்னர் மத்திய மலைநாட்டில் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் நோக்கத்தில் இரும்புப் பாதைகளை அமைக்கும் எண்ணமும் அவர்களுக்கு வந்தது. இதற்காக வேண்டியே 1820களில் தென் இந்தியாவிலிருந்து இந்திய வம்சாவளித் தமிழர்களை இங்கு கொண்டு வரவேண்டி நேர்ந்தது.

இதேநேரம் ஒல்லாந்தர் காலத்திலேயே இந்திய தமிழர்கள் இங்கு பணியாற்ற அழைத்துவரப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது. வாசனைத் திரவிய வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த ஒல்லாந்தருக்கு இவர்கள் ஒத்தாசைப் புரிந்திருக்கலாம் என்ற கருதுகோளும் இருக்கவே செய்கின்றது. எது எப்படியாயினும் பெருந்தொகையிலான இந்திய வம்சாவளித் தமிழர்கள் இங்கு வரவும் நாடளாவிய ரீதியில் போக்குவரத்து வசதிகள் செய்யப்படவும் காரணமாக இருந்தவர்கள் பிரித்தானியரே என்பதில் ஐயம் இல்லை. ஆங்கிலேயர் ஏறக்குறைய 3000 அடிக்கு மேலுள்ள மலைப் பிரதேசங்களில் தேயிலைப் பயிர்ச் செய்கையை ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்களே.

பெருங்காடுகளாகவும் கொடிய மிருகங்கள் வசிக்கும் பிரதேசங்களாவும் காணப்பட்ட மலைநாட்டை வளம் கொழிக்கும் புூமியாக மாற்றி அந்நியச் செலாவணியை அள்ளித்தரும் பொருளாதார தோட்டமாக உருவாக்கிய அவர்களே.

காலக்கிரமத்தில் தோட்டத் தொழிற்சாலை, தோட்ட அதிகாரிகளின் வசிப்பிடங்கள் வரை தார்ப்பாதை போடப்பட்டன. ஆனாலும் பெரும்பாலான தோட்டப் பாதைகள் பிரதான பாதைகள் இணைப்பு வரை மண்பாதை அடிக்கடி பழுதுப்பார்க்கப்பட்டும் செப்பனிடப்பட்டும் வந்ததால் பொதுவாக அது போக்குவரத்துக்கு உகந்ததாகவே அமைந்தன. இதற்காக பெருந்தொகை பணம் செலவிடப்பட்டது.

ஆனால் ஆங்கிலேய நிர்வாகத்துக்கு எதிரான முழக்கங்கள் சுதந்திரத்துக்கு பின் அதிகரிக்கப்பட்டது. ஆங்கிலேய நிர்வாகம் சிறுகச்சிறுக தோட்ட அபிவிருத்தியில் தமது கவனத்தை குறைக்க ஆரம்பித்தது. 1970களில் தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்டன. எனினும் தோட்டப் பாதை அபிவிருத்திக் குறித்துப் பெரிதும் கவனம் செலுத்தவில்லை. 1992இல் மீண்டும் பெருந்தோட்டங்கள் தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் ஒருசில தோட்ட நிர்வாகங்களைத் தவிர அநேகமானவை தோட்டப் பாதைகள் பற்றி கவனம் செலுத்தவில்லை. சில தோட்ட நிர்வாகங்கள் தோட்டப் பாதைகளைச் சிறப்பாக சீரமைத்துள்ளதுடன் அதனுடாக பிரவேசிக்கும் தனியார் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது பெருந்தோட்டப் பாதைகளின் பொதுவான நிலை பற்றிய ஆய்வு என்ன சொல்கிறதாம். பல தோட்டங்களின் பாதைகள் பழுதடைந்து காணப்படுகின்றன. பல தோட்டங்களுக்கு வாகனங்கள் செல்ல போக்குவரத்து வசதிகளே இல்லை. குன்றும் குழியுமாக சிதிலடைந்து காணப்படும் தோட்டப்பாதைகளில் தனியார் வாகனங்களைக் கூலிக்கு அமர்த்துவதற்காக பெருமளவு பணம் செலவிட வேண்டியுள்ளது.

போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால் இன்றும் கூட பல தோட்டங்களில் மக்கள் தலைச்சுமையோடு கால் நடையாக செல்ல வேண்டியுள்ளது.

2006ஆம் ஆண்டு பெருந்தோட்ட மக்கள் சமூக அபிவிருத்திக்காக தேசிய நடவடிக்கை திட்டத் தயாரிப்பிற்கான ஆய்வின்போது பெருந்தோட்டப் பிரதேசங்களில் 8000 கிலோமீட்டர் பாதைகளும் 2000 கிலோமீட்டர் தோட்ட இணைப்புப் பாதைகளும் புனரமைக்கப்பட வேண்டியுள்ளதாக இனம் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலங்களில் மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகளுக்கூடாக சில இடங்களில் தோட்டப் பாதைகளின் சீரமைப்பு இடம் பெற்றுள்ளது. ஆனால் இங்கும் ஏகப்பட்ட குளறுபடிகள் இடம் பெறுவதாக தெரிகின்றது. ஒதுக்கப்பட்ட பணம் செலவழிக்கப்பட்டும் புூர்தியாகாத பாதைகள், தரக்குறைவான பாதை நிர்மாணிப்புகள், சீர்செய்யப்பட்டு சில மாதங்களுக்குள்ளேயே பழையபடி குன்றும் குழியுமாக விழிபிதுங்கும் பாதைகள் என்று குறைபாடுகள். தோட்டப் பாதைகளை புனரமைப்புச் செய்வதில் பல்வேறு மோசடிகள் இடம்பெறுவதாகவே மக்கள் விசன ப்படுகின்றார்கள். சில தோட்டங்களில் மக்கள் அதிகமாக பயன் படுத்தாத பாதைகளைக்கூட புனரமைத்துக் கைவரிசை காட்டப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இன்று கொங்கிறீட் பாதைகள் அமைக்கப்படுவதே ஒரு முறைமை ஆகிவிட்டது. தோட்டப் பகுதிகளிலும் இம்முறைமையே உள்வாங்கப் படுகின்றது. நெடுஞ்சாலை அமைப்பதில் கூட மோசடிகள் இடம் பெறுவதும் அவை கண்டுக் கொள்ளப்படாமலே விடப்படுவதும் சாதாரணம். இனி பெருந்தோட்டப் பகுதிகளைப் பற்றிச் சொல்லவா வேண்டும். தோட்ட மக்கள் இது பற்றிக் கவனம் செலுத்துமளவுக்கு கரிசனை கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதை ஆராயக்கூடிய அறிவும் நேரமும் அவர்களுக்கு இல்லை. பாதை வசதி இல்லாவிட்டால் பலமாக கோஷமிடுவார்கள். பாதைகள் அமைக்கப்படும்போது அவதானம் செலுத்த நினைப்பது இல்லை. மீண்டும் குறுகிய காலத்தில் பழுதாகிப் போனால் திரும்பவும் குறைகூறுவார்கள். இடைக்காலத்தில் எதனையும் கண்டு கொள்வதில்லை. இதுவரை காலமும் தோட்டக் கட்டமைப்புக்குள் இருந்த பாதை புனரமைப்பு பணி இனி பிரதேச சபைகளின் முழு பங்களிப்புடன் இடம் பெற கடந்த ஆட்சியின்போது பிரதேசசபை சட்ட மூலத்தில் திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் பிரதேச சபைக்கூடான வரப்பிரசாதங்கள் பெருந்தோட்ட பகுதிகளை சென்றடைவதில் காணப்பட்ட சட்டரீதியிலான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.

எனவே இனியும் தோட்ட நிர்வாகங்களை குறைக்கூறிக் கொண்டு இருக்க முடியாது. தேசிய ரீதியில் விரைவு நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவது அவசியமானதே. அதேபோன்று பெருந்தோட்டப் பகுதி அபிவிருத்திக்காக தோட்டப் பாதைகளை சீரமைப்பதும் முக்கியமானதாகும்.

 

பன். பாலா ...?

 

Comments