டொலர் செலுத்த வழியில்லை; பயிற்சியாளர்கள் விலகல்! | தினகரன் வாரமஞ்சரி

டொலர் செலுத்த வழியில்லை; பயிற்சியாளர்கள் விலகல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை யாவரும் அறிந்ததே. சுகாதாரத்துறை, கல்வித்துறை, போக்குவரத்துத்துறை அனைத்துமே முடங்கிய நிலையிலேயே உள்ளது. இவை எல்லாவற்றுக்கும் டொலர் நெருக்கடி மற்றும் பொருளாதார சிக்கல்களே காரணமாகும். இலங்கையின் விளையாட்டுப் பயிற்சியாளர்களாக அதிகமாக வெளிநாட்டுப் பயிற்சியாளர்களே நியமிக்கப்படுகின்றனர். கடந்த மாதம் கூட இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இங்கிலாந்துநாட்டைச் சேர்ந்த சில்வர்வூட்டை நியமித்துள்ளனர். வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படும் போது அவர்களுக்கான கொடுப்பனவுகளை டொலர்களிலேயே செலுத்த வேண்டியுள்ளதால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் பிரச்சினை காரணமாக விளையாட்டுத்துறையிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை உதைபந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம் மற்றும் கபடி அணிகளுக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர்கள் பதவிகளைச் விட்டுச்செல்ல தீர்மானித்துள்ளனர்.

இலங்கை கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளரும், தொழில்நுட்ப இயன்குனருமான பொஸ்னியாவைச் சேர்ந்த அமீர் அலஜிக் டொலரில் சம்பளம் பெறுவது கடினமான விடயம் என்பதால் புட்போல் ஸ்ரீலங்கா, மற்றும் அதன் தலைவர் ஜஸ்வர் உமருடன் நடந்த பேச்சுவார்த்தையின் பின் அவர் சேவையை முடித்துக்கொள்ள இணங்கியுள்ளார். இவர் 2020ம் ஆண்டு இலங்கை உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இணைந்தார். இவரின் பயிற்சியின் கீழ் இலங்கை அணி நம்பிக்கை அளிக்கக் கூடிய விதத்தில் விளையாடி வருகிறது. குறிப்பாக கடந்தாண்டு நடைபெற்ற நான்கு நாடுகளுக்கிடையிலான போட்டித் தொடரில் இலங்கை கால்பந்தாட்ட அணி சிறப்பாகச் செயற்பட்டிருந்தது. பிரதமர் சவால் கிண்ணத்துக்காக நடைபெற்ற இத்தொடரில் இலங்கை இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது. இது இலங்கை கால்பந்தாட்ட அணி 18 வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச போட்டித் தொடரில் இறுதிப்போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த முதல் சந்தர்ப்பமாகும். அண்மையில் முடிவுற்ற மாகாணங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டித் தொடரும் சிறப்பாக நடைபெற்று பல கிராமங்களிலிருந்தும் இளம் வீரர்கள் உருவாவதற்கும் இவரின் பங்களிப்பும் ஒரு காரணமாகும்.

இதேவேளை இதுவரை யூரோக்களில் ஊதியத்தைப் பெற்றுவந்த இலங்கை கடற்கரை கரப்பந்தாட்ட பயிற்சியாளர் பின்லாந்தைச் சேர்ந்த ஒய்லண்ட் ராம்டோவின் சேவவையை நிறுத்துவதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது. இவர் 2021ம் ஆண்டு இலங்கை அணிக்கு பயிற்சி வழங்க நியமிக்கப்பட்டார். சர்வதேச கடற்கரை கரப்பந்தாட்ட சம்மேளனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முதல்தர பயிற்சியாளரான இவரின் பயிற்சியின் கீழ் இலங்கை ஆண்கள், பெண்கள் கடற்கரை கரப்பந்தாட்ட அணிகள் ஆசிய விளையாட்டுப் போட்டிக்குத் தகுதி பெற்றமை குறிப்பிடத்தக்கது. இவர் ஜூலை மாதம் இங்கிலாந்து பர்மிங்ஹாமில் ஆரம்பமாகவிருக்கும் கொதன்வெல்த் விளையாட்டுப் போட்டி வரை இலங்கை கரப்பந்தாட்ட அணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார், நெருக்கடி காரணமாக முன்கூடிய தனது சேவையை முடிக்கவிருக்கிறார்.

மேலும் இலங்கை கபடி அணியின் பயிற்சியாளராகச் செயற்பட்டு வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த கே. எஸ். பாஸ்கரனுக்கு டொலர்களில் சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அதற்குப் பதிலாக ரூபாவில் சம்பளம் வாங்க அவர் தயக்கம் காட்டியுள்ளார். இதனால் இம்மாதத்துக்கான சம்பளத்தை மாத்திரம் தங்கத்தில் வழங்கினோம். அதாவது அவரின் சம்பளத்துக்குப் பெறுமதியான தொகையை இலங்கை ரூபாயில் தங்கம் வாங்கிக்கொள்வதற்காக செலுத்தப்பட்டதாக கபடி சம்மேளகத்தின் தலைவர் அனுர பத்திரன தெரிவித்தார்.

பயிற்சியாளர்களின் விலகலினால் இலங்கை விளையாட்டுத்துறை இவ்வாறு பாதிக்கும் நிலையில் எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள சர்வதேச விளையாட்டு விழாக்களிலும் இந்த டொலர் பிரச்சினை விஸ்வரூமெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை மாதம் இங்கிலாந்து பர்மிங்ஹாம் பொதுநலவாய விளையாட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்குகொள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் ஏற்கனவே தமது பயிற்சிகளை ஆரம்பித்துள்ளனர். இதில் பங்குகொள்ளும் வீரர்களுக்கான இருப்பிட வசதிகளை போட்டி ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்து கொடுத்தாலும் அவர்களுடன் செல்லும் அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கான தங்குமிட வசதிகளை இலங்கை ஒலிம்பிக் சங்கம்தான் ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போதைய நெருக்கடி நிலையில் அதிகாரிகளுக்கும், மேலதிக வீரர்களுக்குமான தங்குமிட வசதிகளைச் செய்து கொடுப்பதில் மிகப்பெரிய நெருக்கடி நிலையை இலங்கை ஒலிம்பிக் சங்கம் சந்தித்துள்ளது.

மேலும் அதைத் தொடர்ந்து சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டு விழாவில் பங்குகொள்ளும் பொருட்டு இலங்கையிலிருந்து அதிகளவான வீரர்களைக் கொண்ட அணியைத் தயார் செய்து வருகிறது. டொலர் பிரச்சினையால் தொடர்ந்து வெளிநாட்டுப் பயிற்சியாளர்கள் வெளியேறி வருவதால் இந்த விளையாட்டு விழாவுக்காக தயாராகும் வீர, வீராங்கனைகளும் பெரும் சிரமத்தை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. மேலும் நீச்சலில் பங்குகொள்ளும் வீரர்களுக்கு தங்களது விமான டிக்கெட்டுகளை அவர்களது செலவிலேயே பெற்றுக்கொள்ள முடியுமானால் பொதுநலவாய விளையாட்டுவிழாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்ற தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளது.

எம்.எஸ்.எம்.ஹில்மி...

Comments