நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் ரணிலின் வருகை | தினகரன் வாரமஞ்சரி

நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் ரணிலின் வருகை

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கபதவியேற்றிருக்கிறார். நொந்து நூலாகிப் போயுள்ள இலங்கைப்பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தவே தான் பிரதமாரகப் பதவியேற்றதாகக்கூறியிருக்கிறார். அவரது பதவியேற்பின்ஏற்புடைத்தன்மை தொடர்பில் கடும் விமர்சனங்கள் நிலவுகின்ற போதிலும் இப்போது ஆட்சியிலிருப்போருக்குஇவரைவிட நம்பகரமான தெரிவுஇருந்திருக்க வாய்ப்பில்லை.

முன்னரும் பொருளாதார நிலைமைகள் சீர்கெட்டுப்போன பல்வேறு சந்தர்ப்பங்களில் இவர் தலையிட்டு நிலைமைகளை சீர்செய்து எதிரணியினருக்கு ஆடுகளத்தை சாதகமாக்கிவிட்டு காணாமல் போயிருக்கிறார்.  

சுதந்திர இலங்கையில் ஆட்சியமைத்த முதலாவது கட்சியின் தலைவராக கடந்த பொதுத்தேர்தலில் தனது ஆசனத்தையும் இழந்து தேசியப்பட்டியல் மூலம் தன்னைப் பாராளுமன்றில் உள்வாங்கிக் கொண்டவரென்று கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்ட போதிலும் பிரித்தானியாவின் வின்ஸ்டன் சேர்ச்சில் எவ்வாறு போர்க்காலப் பிரதமராகப் பதவியேற்றாரோ அதே பாணியில் தானும் சீரழிந்து போயுள்ள இலங்கைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் சவாலான பணியை எற்று பதவியேற்றதாக ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும் போது கூறினார்.  

பதவியேற்பின் பின்னர் கொள்ளுப்பிட்டி வாலுகாராமயவில் வழிபாடுகளை முடித்த பின்னர் அங்கிருந்த மதகுரு ஒருவர் முன்னைய அரசாங்கம் விட்ட பிழைகளை விடவேண்டாமென்றும் அவ்வாறு செய்தால் யானைகளும் பேரை வாவியில் குளிக்க வேண்டியேற்படுமென்ற நையாண்டி கலந்த எச்சரிக்கையையும் விடுத்தார். கங்காராமயவின் குருவொருவரும் இதே கருத்துப்பட ஆசி வழங்கியமையையும் காணமுடிந்தது. இரு பிரதான பெளத்த மதபீடங்களின் குருமாரும் எச்சரிக்கை கலந்த ஆசீர்வாதங்களை புதிய பிரதமருக்கு வழங்கினர். ஆகவே புதிய பிரதமரின் வருகையை இலங்கையின் பெளத்த குருமார் எச்சரிக்கை கலந்த விடயமாகவே பார்க்கின்றமை தெளிவாகத் தெரிகிறது.  

ஒரு மாதத்திற்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் 'கோட்டா கோ கம' வழங்கியுள்ள அனுபவங்கள் இதற்கு பங்களித்துள்ளன என்பது இரகசியமான ஒரு விடயமல்ல. ஒரு முழுமையான முறைமை மாற்றத்தைக் கோரி நிற்கும் இளைய சமுதாயத்தை இந்த ஆட்சி மாற்றம் எவ்விதத்திலும் திருப்திப்படுத்தாது என்பதை மதகுருமார் நன்கு அவதானித்த பின்னரே இவ்வாறான ஒரு எச்சரிக்கையை விடுத்திருக்கின்றனர்.  

ஆனால் தனது பணி சிதைந்துபோயுள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதே என்று புதிய பிரதம மந்திரி மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். இவர் பதவியேற்ற மறுநாள் வெள்ளிக்கிழமை இலங்கையின் பங்குச் சந்தைச் சுட்டெண்கள் சடுதியான முன்னேற்றத்தைக் காட்டின. அத்துடன் நீண்ட நாட்களுக்குப்பிறகு இலங்கை ரூபாவிற்கு எதிராக டொலரின் பெறுமதியில் ஒரு வீழ்ச்சியையும் அவதானிக்க முடிந்தது. டொலர் ஒன்றிற்கு 390ஆகக் காணப்பட்ட நாணயமாற்று வீதம் வெள்ளியன்று 365ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. 

இவ்விரு விளைவுகளும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதனால் ஏற்பட்ட வர்த்தக நம்பகத்தன்மை மேம்பாட்டின் விளைவு என ஒரு சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் மத்தியவங்கி நாணயமாற்றுவீத வீச்செல்லை ஒன்றை அறிமுகப்படுத்தி வெளியிட்ட சுற்று நிருபம் ஒன்றின் விளைவினால் டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி ஏற்ப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்.  

ஆனால் இலங்கைப் பங்குச் சந்தை அரசியல் மாற்றங்களுக்கு உயர் உணர்திறன் கொண்டதாக இருப்பது தெரிகிறது. ஆகவே இவை இரண்டையும் நல்ல சமிக்ஞைகளாகக் கருதினாலும் எதிர்காலத்தில் டொலர் உள்வருகைகள் முறைசார்ந்த வழிகள் ஊடாக நாட்டுக்குள் அதிகரிப்பதன் மூலமே இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிக்க முடியும்.  

புதிய பிரதமர் பதவியேற்ற உடனேயே இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சீன ராஜதந்திரிமார் சந்தித்து வாழ்த்துக்களைக் கூறி இலங்கைக்கு தங்களது ஒத்துழைப்புகள் வழங்கப்படுமெனத் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்து அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. மகிந்த ராஜபக்ஷ பிரதமராக தெரிவு செய்யப்பட்டவேளை மேலே குறிப்பிட்ட நாடுகளின் பெரும்பாலானவை மெளனம் காத்தமையும் குறிப்பிடத்தக்கது.  

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் அமைப்பொன்றை தாபிக்க உதவி வழங்குமாறு இந்நாடுகளிடம் புதிய பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். இது சாதகமாகப் பரிசீலிக்கப்படுமெனவும் தெரிகிறது. பாராளுமன்றத்திலும் கூட ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த செய்ய வேண்டியவற்றை விரிவாகப் பேசியிருக்கிறார்.  

அப்போதெல்லாம் அதற்கு எதிராகப் பேசிய பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் அதே கட்சி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் முன்வைக்கும் பொருளாதார திட்டங்களுக்கு எவ்வாறு ஆதரவு வழங்கப் போகின்றனர் எனத் தெரியவில்லை. பிரதான எதிர்க்கட்சியும் சுதந்திரக்கட்சியும் ஏனைய கட்சிகளும் புதிய அரசாங்கத்தில் பங்கு பற்றப் போவதில்லை எனவும் ஆனால் பொருளாதாரத்தை சீர்படுத்த புதிய அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளைக் குழப்பப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளன. ஆனால் இலங்கை அரசியலில் கட்சித்தாவலைத் தடைசெய்யும் சட்ட ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரங்குச் சேட்டை காட்டுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே தென்படுகின்றன.  

புதிய ஆட்சி மாற்றம் போத்தலின் மூடியை மட்டுமே மாற்றியுள்ளது. உள்ளடக்கம் உட்பட மற்றையவை யாவும் அப்படியே நலமாக உள்ளன. குறைந்தபட்சம் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் விலை அதிகரிப்பு பற்றாக்குறை நீண்டவரிசை,  நீண்ட மின்வெட்டு போன்ற வாழ்வா சாவா என்ற போராட்டத்திற்கு முடிவுகாண ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பார். அதற்கு மேற்குலக நாடுகளின் உதவியும் அனுசரணையும் கிட்டும். ஆனால் உடனடியாக எல்லாம் சரியாகி நிலைமைகள் வழமைக்குத் திரும்பிவிடும் என எதிர்பார்க்க முடியாது.  

ஆயினும் ரணிலின் வருகை ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இது நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கும். வர்த்தக நம்பக்தன்மையை மேப்படுத்த உதவும். ஆனால் சர்வதேச ரீதியில் உலகப்பொருளாதார நிலைமைகள் இலங்கைக்கு இப்போது சாதகமானதாக இல்லை. குறிப்பாக நீண்டுசெல்லும் ரஷ்ய உக்ரைன் யுத்தம், எரிபொருள் விலை அதிகரிப்பு, மேற்குலக நாடுகளில் சடுதியாக அதிகரித்துச் செல்லும் பணவீக்கம், உலகப் பொருளாதாரத்தில் இப்போது அவதானிக்கப்படும் மெதுவடைதல் (slowdown) என்பன இலங்கைப் பொருளாதாரத்தின் மீட்சியை தாமதப்படுத்தலாம்.  

பொருளாதாரத்தை மீட்டெடுக்க புதிய அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிக்கும் பட்சத்தில் இப்போது மக்களால் வெறுக்கப்படும் பொதுஜன முன்னணி பொருளாதார வெற்றியைக் காரணம் காட்டி மீள மக்கள் மத்தியில் ஆதரவு தேடலாம். ஒருவேளை அம்முயற்சி தோற்றுப் போனால் அதற்குரிய பழியை தற்போதைய பிரதமர் கடைப்பிடித்த கொள்கைகளின் மீது போட்டு தப்பியும் விடலாம். போராட்டக்களக்காரர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments