அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே நாட்டின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

அரசியலமைப்புக்கு உட்பட்டதாகவே நாட்டின் அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட வேண்டும்!

மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதாரப் பிரச்சினை மற்றும் அரசியல் குழப்பம் என்பன அரசியலமைப்புக்கு கட்டுப்பட்டு பாராளுமன்றத்தின் ஊடாக தீர்க்கப்படவேண்டும் என முன்னாள் அமைச்சரும், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அரசாங்கம் எடுத்த சில தவறான கொள்கைத் திட்டங்கள், கொவிட் தொற்றுநோய் மற்றும் ரஷ்ய – உக்ரைன் மோதல் போன்ற காரணிகள் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள மோசமான நிலைக்கு வலுச் சேர்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து அவர் எமக்குப் பேட்டியளித்தார்.

கே: இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் காண வேண்டிய தீர்வுகள் எதுவாக இருந்தாலும் அது பாராளுமன்றத்தின் ஊடாகவே முன்வைக்கப்பட வேண்டும். பொருளாதார ரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அந்தத் தீர்வுகள் காணப்பட வேண்டுமானால், நாட்டின் அரசியலமைப்பிற்குக் கட்டுப்பட்டிருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் என்று வரும் போது, பெரும்பாலான விடயங்கள் பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பானவை, எனவே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடிவெடுக்க உரிமை உண்டு.

கே: மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனக் கோரி, ஆயிரத்திற்கும்  மேற்பட்ட தொழிற்சங்கங்கள்  கொழும்பில் அண்மையில்   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன?   இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கிடைக்காத நிலையில் டீசல், பெட்ரோல், எரிவாயு மற்றும் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவும் பின்னணியில் அழுத்தம் கொடுக்கும் குழுக்களின் கோரிக்கை நியாயமானது. அரசுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவது இயற்கையானது. எவ்வாறாயினும், நான் முன்னர் குறிப்பிட்டது போல், தற்போதுள்ள அரசியலமைப்பிற்குள் நாம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

எனவே, இந்த நாட்டில் நிலையான பொருளாதார நிலைமையை உருவாக்குவதற்கு நாம் கடமைப்பட்டவர்களாகவும் பொறுப்பாகவும் இருக்கிறோம். அரசாங்கம் அந்த இலக்கை நோக்கிச் செயற்பட்டு வருகின்றது. எனவே அனைத்து அரசியல் கட்சிகளின் உதவியும் எமக்குத் தேவை.

கே: தற்போதைய அரசியல் நெரு க்கடியை தீர்க்காமல் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என்று சிலர் கூறுகின்றனர். இது பற்றி?

பதில்: முதலில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இரண்டாவதாக, அரசியல் நெருக்கடி தலைதூக்குவதைக் கண்டோம். இப்போது அதற்கு நேர்மாறாக இருக்கிறது. அரசியல் ஸ்திரத்தன்மை ஒன்றுடன் ஒன்று இணைந்திருப்பதால் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பெறுவது அவசியம். சமூக எழுச்சியும் இந்த முழு சம்பவங்களின் ஒரு பகுதியாகும்.

மக்களுக்குப் பொருளாதார நிவாரணம் வழங்குவதற்கு தேவையான அரசியல் ஸ்திரத்தன்மையை வழங்க வேண்டியது கட்டாயமான தேவையாகும்.

கே: இதுவரை போராட்டங்களில்  கலந்து கொள்ளாத   இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், தங்களின் அடிப்படைத்  தேவைகளை அரசு உறுதி செய்யத் தவறி விட்டதாகக் குற்றஞ்சாட்டி, முதன்முறையாக வீதிக்கு வந்துள்ளனர். இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: சில கொள்கை ரீதியான தவறுகளுக்கு உண்மையில் நாங்களும் பொறுப்புக் கூற வேண்டும். நிதியமைச்சர் அலி சப்ரி அண்மையில் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது அந்த உண்மையை ஒப்புக் கொண்டார். முக்கியமாக மூன்று விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். வரலாற்று ரீதியாக, நாம் 1977ஆம் ஆண்டு தொடங்கி கடனில் மூழ்கியிருக்கும் நாடு மற்றும் நமது கடன் சுமை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. அதனால்தான் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்ததும், இனி கடன் வாங்குவதில்லை, திட்டக் கடன்களை கூட பெறுவதில்லை என்ற கொள்கை முடிவை எடுத்தோம்.

அதனால்தான் ஜப்பானில் இருந்து வந்த முன்மொழியப்பட்ட மோனோ ரயில் திட்டத்தை ரத்து செய்தோம். எனவே, நாங்கள் கடன் வாங்கவில்லை. கடன் சுமை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மிகவும் சிக்கலானதாகவும் அதிகமாகவும் இருந்தது. இரண்டாவது விடயம், தனியார் துறையினர் அதிக வணிகத்தில் ஈடுபடுவதை உறுதி செய்வதற்காக, அவர்களின் திரட்டப்பட்ட நிதி முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் திருப்பி விடப்பட வேண்டும் என்பதற்காக, வரிகளைக் குறைப்பதற்கு கொள்கை ரீதியாக அரசாங்கம் எடுத்த முடிவு தவறானாது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டமையால் வணிக செயற்பாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் இயல்பான திறனைக் கொண்டு முன்னேறும் வாய்ப்பை இழந்தமை மூன்றாவது காரணியாகும்.

இருப்பினும், நாங்கள் அவர்களுக்குச் சில உதவிகளை வழங்கியதால் ஓரளவு பாதுகாக்கப்பட்டனர். மறுபுறம், நாங்கள் எதிர்பார்த்த முடிவைக் கொண்டிருக்கவில்லை.

கொவிட்-19தொற்றுநோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டது. நாங்கள் மீண்டும் எழத் தொடங்கியதும் உக்ரைன்  ரஷ்யப் போர் தொடங்கியது. இதனால் எண்ணெய், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலைகள் உச்சவரம்புக்கு மேலே நகர்ந்தன. அந்த சூழ்நிலைகள் அனைத்தும் படிப்படியாக கடன்களை எடுப்பதை பாதித்தன. மேலும், வரி வருமானம், கொவிட்-19தொற்று மற்றும் உக்ரைன்-ரஷ்ய யுத்தம் தொடர்பான சில தவறான கணிப்புகள் இலங்கையின் பொருளாதாரத்தை பாதித்துள்ளன.

கே: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு குழுக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: உண்மையில், இது விவாதத்திற்குரிய தலைப்பாகும். 1978ஆம் ஆண்டு, மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன சில முற்போக்கான நகர்வுகளை எதிர்பார்த்து நிறைவேற்று ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார். இருப்பினும், காலங்காலமாக, நாங்கள் அதை அகற்ற முயற்சித்து வருகிறோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் எனக் கூறி பல அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் ஆட்சிக்கு வந்த போதிலும் எவரும் இதனை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இது இன்றும் ஒரு விவாதப் பொருளாகவே உள்ளது. அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் பிரகாரம் மாகாணங்களுக்கு பல அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த மாகாணங்கள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு அந்த மாகாணங்களை ஆளும் ஜனாதிபதியின் பிரதிநிதியால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நாம் நீக்கினால், மாகாணங்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான வேறு வழிகளையும் அதிகாரங்களையும் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும். அவைகள் மிகவும் கடினமான விடயங்களாகும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டுமாயின், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க முடியாது, ஆனால் நாம் விவாதித்து முன்னோக்கிச் செல்லக் கூடிய பல பிரச்சினைகள் உள்ளன.

கே: அரசியல்வாதிகள் கணக்காய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களின் கணக்கில் வராத சொத்துக்கள் அனைத்தும் அரசால் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்ற கருத்துப் பரவலாக முன்வைக்கப்படுகிறது. இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: வெளிப்படைத்தன்மையே சிறந்த கொள்கை என்று நான் நினைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் என்ற வகையில், ஒவ்வொரு வருடமும், சபாநாயகர் அல்லது ஜனாதிபதியிடம் எங்களது சொத்துப் பிரகடனப் படிவங்களை சமர்ப்பிக்கிறோம். அது ஒரு பொது நடைமுறையாகும். யார் வேண்டுமானாலும் விபரங்களை எடுக்கலாம். இது ஒரு நல்ல நடவடிக்கை மற்றும் இது ஒரு இரகசிய ஆவணம் அல்ல.

இறைவரித் திணைக்கள அதிகாரிகள்தான் விசாரணை நடத்த வேண்டும், மற்ற நபர்களின் சொத்து குறித்தும் விசாரிக்க வேண்டும். அவர்கள் தேவையற்ற வகையில் சொத்து சேர்த்திருந்தால் அவ்வாறானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அந்தச் சட்டங்கள் இந்த நாட்டில் மிகவும் பலவீனமாக உள்ளன.

கே: இலங்கையில் ஊழல் ஏன் நடக்கிறது என நீங்கள் நினைக்கின்றீர்கள்?    மோசமான ஆட்சிதான் இதற்கு முக்கிய காரணமா?

பதில்: இது மோசமான நிர்வாகத்தின் ஒரு பகுதியாகும். ஓரளவுக்கு முறையான சட்டங்கள் இயற்றப்படவில்லை. இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்ற பெரும்பாலான நிறுவனங்கள் மிகவும் பலவீனமாக உள்ளன, அவை பெரிய நபர்களின் பின்னால் செல்லவில்லை, சிறிய நபர்களே பிடிபடுகிறார்கள். அரசியல்வாதிகள் மட்டுமல்லாது சட்டத்தரணிகளும் சட்டத்தை வலுப்படுத்துவது மற்றும் ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவது அவசியம். அக்கடமை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் உரியதல்ல, சட்டத்தரணிகளுக்கும் இதில் பங்கு உள்ளது.

ஒவ்வொரு சமூகமும் உயர்மட்ட, நடுத்தர மற்றும் மிகக் கீழ்மட்டத்தில் இருந்து, அவர்கள் அனைவரும் செல்வத்தைக் குவிப்பதற்கான தேவையற்ற வழிகளில் வரிசையாக நிற்கிறார்கள். அவர்கள் வருமான வரி செலுத்துவதில்லை மற்றும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள்.

அர்ஜூன்

Comments