ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் விஸ்தரிப்பு ஐரோப்பாவை நிலைகுலையச் செய்யுமா? | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் விஸ்தரிப்பு ஐரோப்பாவை நிலைகுலையச் செய்யுமா?

உலகளாவிய ரீதியில் ரஷ்ய- உக்ரைன் போர் பாரிய உலகப் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஐரோப்பாவே அதிகம் பாதிப்பினை எதிர்கொண்டுவருகிறது. ஐரோப்பாக் கண்டத்தில் ரஷ்யாவின் முக்கியத்துவம் சார்ந்து அதிக நெருக்கடியை அமெரிக்காவும் மேற்குலகமும் ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமான மோதல் மீளவும் ஏற்பட ஆரம்பித்துள்ளது. ஆனால் பனிப்போர் காலம் போலவே அமெரிக்கா ரஷ்யாவுடனான போரை நேரடியாக எதிர்கொள்ளாது ரஷ்யாவின் அயல்நாடுகளையும் புவிசார் அரசியல் ரீதியான நாடுகளையும் கொண்டு ரஷ்யாவை தாக்கி வருகிறது. இதில் உக்ரைன் மட்டுமல்ல ரஷ்யாவும் அதிக இழப்புக்களை எதிர்கொண்டது போல் சுவீடனும் பின்லாந்தும் சந்திக்கவுள்ளதாகவே கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இக்கட்டுரையும் நேட்டோவின் அடுத்த கட்ட விஸ்தரிப்பான சுவீடன் மற்றும் பின்லாந்து தொடர்பில் ரஷ்யாவிற்கும் பிராந்தியத்திற்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தேடுவதாக அமையவுள்ளது. 

முதலாவது, பின்லாந்து தனது கிழக்கு பகுதியில் நீண்ட எல்லையை ரஷ்யாவோடு பகிர்ந்து கொள்வதுடன் 1955இல் ஐக்கிய நாடுகள் அமைப்பில் சேர்ந்து கொண்டது. ரூஷ்யப் பேரரசின் அங்கமாக இருந்த பின்லாந்து ரஷ்யப் புரட்சிக்கு பின்பே தனித்தேசமாகியது. இருந்த போதும் நடுநிலைக் கொள்கையைக் கடைப்பிடித்த பின்லாந்து சோவியாத் யூனியனுக்கு எதிரான எந்த அணியிலும் தன்னைச் இணைத்தக் கொள்ளாத கொள்கையைக் கொண்டிருக்கும் உடன்பாட்டோடு செயல்பட்டது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்பு அக்கொள்கையின் கீழ் ரஷ்யாவுடன் செயல்பட்டது. ஆனால் ஐரோப்பிய யூனியனிலும் ஏனைய பொருளாதார ஒருங்கிணைப்புக்களிலும் ஒன்று சேர்ந்து செயல்பட்டதுடன் ரஷ்யாவின் நலனுக்கு விரோதமாக செயல்படுவதில்லை என்ற கொள்கையை கடைப்பிடித்துக் கொண்டது. அதற்கான அடிப்படை பின்லாந்தினது புவிசார் அரசியலாகும். அதாவது ரஷ்யாவின் அயல் நாடாகவும் இராணுவ முக்கியத்துவம் மிக்க நாடாகவும் அமைந்திருந்தமையே பிரதான காரணமாகும். ரூஷ்யப் பேரரசுக் காலம் முதல் தற்போது வரை ரஷ்யாவின் செல்வாக்குப் பிராந்தியமாகவே பின்லாந்து காணப்பட்டது. 

இரண்டாவது, பின்லாந்தின் அயல்நாடான சுவீடன் ரஷ்யாவுடன் எல்லையைக் கொண்டுள்ளது. சுவீடன் பேரரசுக்குள் அங்கமாக இருந்த பின்லாந்தை ரூஷ்யப் பேரரசிடம் இழந்த வரலாற்றைக் கொண்டது. கருங்கடலால் பிரிக்கப்பட்ட பகுதியைக் கொண்ட இரு நாடுகளும் ரஷ்யாவின் கருங்கடல் ஆதிக்கத்திற்கு சவால்விடும் புவியியல் அமைப்பினைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. சுவீடன் தாராள ஜனநாயகத்தில் வலுவான தேசமாக அமைந்தாலும் இலகுரக ஆயுதங்களை உற்பத்தி செய்யும் நாடு என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகை புவிசார் அரசியல் நெருக்கத்தைக் கொண்ட இரு நாடுகளும் ரஷ்யா -உக்ரைன் போரை அடுத்து தமது பாதுகாப்பை முதன்மைப்படுத்திக் கொண்டு நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளன. அத்தகைய விண்ணப்பத்தை நேட்டோ தலைமையகத்தில் இரு நாட்டின் பிரதிநிதிகளும் சமர்ப்பித்துள்ளன. இதனை வரவேற்றுள்ள நேட்டோவின் தலைவர் ஸ்டொல்டன் பேர்க் இது ஒரு வரலாற்று தருணம் இதனை நாம் கைப்பற்ற வேண்டும் என்றார். உலகிலேயே பலமான இராணுவக் கூட்டணியாக விளங்கும் நேட்டோவில் 30நாடுகள் அங்கம் பெறுகின்றன. அவற்றில் ஏதாவதெரு நாடு புதிதாக இணையும் நாட்டை நிராகரித்தால் அங்கத்துவம் சாத்தியமற்றும் போகும். அத்தகைய நிலையையே துருக்கிய நாட்டுத் தலைவர் எட்டோர்கன் அறிவித்துள்ளார். அதாவது சுவீடனும் பின்லாந்தும் நேட்டோவில் இணைவதை துருக்கி தடுத்து நிறுத்தியுள்ளது என்றே தெரிகிறது. அதற்கு துருக்கி கூறும் காரணம் குர்திஸ் பேராளிகளுக்கு எதிராக துருக்கி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் போது  சுவீடன் மற்றும் பின்லாந்து துருக்கிக்கு எதிரான தடைகளை ஏற்படுத்திய நாடுகள் எனக் குற்றம் சாட்டியுள்ளது. இத்தகைய குற்றச்சாட்டை விட வேறு ஏதும் காரணங்கள் உண்டா என்பதே பிரதான கேள்வியாகும். குறிப்பாக துருக்கி ரஷ்யாவின் எஸ்-400ரக ஏவுகணைகளை அமெரிக்க தயாரிப்பான எப்-17விமானங்களுக்கு பதிலாக பெற்றுக் கொண்டமை கவனத்திற்குரியதாகும். அதாவது அமெரிக்க தயாரிப்பு போர் விமானங்களை நேட்டோவின் அங்கத்துவ நாடு என்ற அடிப்படையில் துருக்கி கோரிய போதும் அமெரிக்கா வழங்க மறுத்திருந்தது. அதனை அடுத்தே ரஷ்யத் தயாரிப்பான ஏவுகணையை துருக்கி பெற்றுக் கொண்டது. இது அமெரிக்கா துருக்கி மோதல் மட்டுமல்ல நேட்டோவுடனான துருக்கியின் முரண்பாடும் ஏற்பட காரணமாகியது. அதிலும் டொனால் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அதிக முரண்பாடுகளை இரு நாட்டுக்கும் இடையில் அதிகமாகக் காணப்பட்டது கவனத்திற்குரியதாகும். எனவே இத்தகைய எதிர்ப்பினூடாக துருக்கி ரஷ்யாவை ஆதரிப்பதன் விளைவாக அமையலாம் அல்லது அமெரிக்காவிடம் மீளவும் எப்-17ரக விமானங்களை கொள்ளவனவு செய்ய துருக்கி முனைய வாய்ப்புள்ளது. இதில் எது நிகழ்ந்தாலும் துருக்கிக்கு இலாபகரமானதாகவே அமையும். காரணம் ஈரான் மற்றும் இஸ்ரேலுடனான பகைமையை எதிர்கொள்வதற்கான ஆயுததளபாடங்கள் அவசியமானவை. இதில் ரஷ்யாவுடனான உறவு இரு நாடுகளையும் மேற்காசியாவில் எதிர்கொள்ள அவசியமானவையாகவே துருக்கி கருதுகிறது. அதனையே இஸ்ரேலும் கருத்தில் கொண்டு ரஷ்யாவை உக்ரைன் போரில் ஆதரித்தது என்பது நினைவு கொள்ளத் தக்கதாகும். ஆனால் இத்தகைய நடவடிக்கை ரஷ்யாவிற்கு பாரிய விளைவைத் தரப்போகின்ற விடயமாகவே தெரிகிறது. 

மூன்றாவது, சுவீடனை விட பின்லாந்து ரஷ்யாவுடன் மிக நீண்டகாலமாகப் ஒன்றித்து பயணித்த நாடு. உலக வரலாற்றில் சோவியத் யூனியனுக்கு எதிரான நாடுகளுடனோ ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளுடனோ அல்லது அணிகளுடனோ இணையாது நடுநிலை வகுத்த நாடு பின்லாந்து என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது மட்டுமன்றி இரு நாடுகளும் ரஷ்யாவின் பாதுகாப்பு அரண்களாக புவியியல் ரீதியில் காணப்படும் நாடுகள் என்பது கவனத்திற்குரியதாகும். கருங்கடலை பங்கிடும் நாடுகளில் பிரதான இடத்தில் அமைந்துள்ளன. ரஷ்ய கடற்படையின் இருப்பு அதிகம் கருங்கடலில் தங்கியுள்ளது என்பதுவும் கவனத்திற்குரியதாகும். இதனால் நேட்டோவில் இரு நாடுகளும் இணைவதென்பது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமைய வாய்ப்புள்ளது. 

நான்காவது இரு நாடுகளுக்கும் எதிராக இன்னோர் போர் முனையை ரஷ்யா திறக்குமாயின் ரஷ்யாவின் இருப்பு பாரிய கேள்விக்குரியதாக அமையும். அதனையே மேற்கு நாடுகளும் நேட்டோ அணியும் விரும்புகின்றன. அதிலும் அமெரிக்கா போரில் நேரடியாக ஈடுபடாது ரஷ்ய நட்பு நாடுகளையும் அயல் நாடுகளையும் முன்னகர்த்தி ரஷ்யாவின் வலுவை தோற்கடிக்க முயன்று வருகின்றது. அதற்குள் ஏற்கனவே உக்ரைன் பலியிடப்பட்டுவிட்டது. தற்போது பின்லாந்தும் சுவீடனும் அகப்பட்டுள்ளன. ரஷ்யா மேற்குக்கு எதிராக போரையே முதன்மைப்படுத்தும் நாடாக உள்ளதனால் இரு நாடுகளுக்கும் எதிராக போரை நிகழ்த்த திட்டமிட வாய்ப்பு அதிகமுண்டு. துருக்கி மேற்குடன் சமரசம் செய்ய மறுக்குமாயின் மட்டுமே போர் தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது. அல்லது ரஷ்யாவின் மேற்குப் பகுதியிலும் போர்க் களமொன்றுக்கான சூழல் உருவானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் ரஷ்யா மேற்குக்கு எதிராக தந்திரங்களை கையாள்வதை விட போரையே முதல் தெரிவாகக் கொள்ள விளைகிறது.  

ஐந்தாவது, பொருளாதமார ரீதியில் உலகம் வேகமாக நெருக்கடியை எதிர்கொள்வது போல் ரஷ்யாவும் போர்களால் அதிக நெருக்கடியை எதிர் கொள்ள வாய்ப்புள்ளது. குறிப்பாக ரஷ்யாவின் நாணயம் வளர்ச்சியடைந்தாலும் எரிவாயு மற்றும் பெற்றோலியத்தால் மேற்கு ஐரோப்பா பாதிப்படைந்தாலும் மேற்கு ஓரணியாகச் செயல்படுகிறது. அதன் இராணுக் கூட்டு மட்டமல்ல பொருளாதாரக் கூட்டும் பலமானது. தற்போதைய நெருக்கடியை வெற்றி கொண்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பின்லாந்துடனான உறவை படிப்படியாக ரஷ்யா தகர்க்க ஆரம்பித்துள்ளது. மின்சார விநியோகத்தை நிறுத்தியதனால் 30சதவீத அதிகரிப்பை பின்லாந்து எதிர்நோக்கியுள்ளது. அடுத்து எரிவாயுவை நிறுத்துவது பற்றிய முடிவை அறிவிக்கவுள்ளது. படிப்படியாக உக்ரைன் நிவைமையை நோக்கி பின்லாந்து செல்லவுள்ளதை கோடிட்டுக் காட்டுகிறது.  

ஆறாவது, உகரைனின் மரியப்போ  நகரம் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமை உக்ரைனுக்கு மட்டுமல்ல இப்பிராந்திய நாடுகளுக்கே ஆபத்தானதாக அமைய வாய்ப்புள்ளது. ரஷ்யா தோற்கிறது என மேற்கு ஊடகங்கள் கூறிக் கொண்டாலும் போரில் மூலோபாய நிலங்கள் கைப்பற்றப்படுவது முக்கியமான திருப்பமாக அமையும். அது சுவீடன், பின்லாந்து மற்றும் ஜோர்ஜியாவுக்கும் ஆபத்தானதாகவே அமையும். 

எனவே ரஷ்யாவின் போர் முனையை அதிகரிப்பதன் மூலம் மேற்கு நாடுகள் ரஷ்யாவை இலகுவில் தோற்கடித்துவிடலாம் எனக் கணக்குப் போடுகின்றன. ஆனால் ரஷ்யாவின் நேட்டோவுக்கு எதிரான போர் என்பது அதிக மாற்றத்தை பிராந்திய மட்டத்தில் ஏற்படுத்தப் போகிறது. மேற்கு ஐரோப்பா பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்க ஆரம்பித்துள்ளது. பின்லாந்தினதும் சுவீடனதும் நகர்வு ரஷ்யாவை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக எழுச்சி பெற வைப்பதற்கான வாய்ப்பையே அதிகரிக்கப் போகிறது. இதனால் போர் விஸ்தரிக்கவும் ஐரோப்பா நிலைகுலையவும் வழிவகுக்கப் போகிறது. இது அமெரிக்காவுக்கு வாய்ப்பானதாகவே அமையவுள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல சீனாவுக்கும் இலாபகரமானதாகவே தெரிகிறது. ஆனால் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி அனைத்து எதிர்பார்க்கையையும் தலை கீழாக மாற்றிவிடக் கூடியது. அதனை நோக்கியே உலக நாடுகள் பயணிக்கின்றன. 

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments