இலங்கைக்கு அமுதூட்ட வந்த தமிழக நிவாரண கப்பல்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு அமுதூட்ட வந்த தமிழக நிவாரண கப்பல்!

சென்னைக்கு சென்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் இலங்கை துணைத் தூதுவரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. உரையாடிக் கொண்டிருந்தபோது, இலங்கை சிங்கள சமூகம் தமிழகத் தமிழ்ச் சமூகத்தைத் தவறாக புரிந்து வைத்திருப்பதைப் போலவே தமிழகத்திலும் சிங்களவர்களை பேய் பூதம் போல நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவரிடம் கூறினேன். அவர் அதை ஏற்றுக் கொண்டார். புரிந்து கொள்ளாமை தான் பிரச்சினை என்றால் ஏன் தமிழக பத்திரிகையாளர்களை இலங்கைக்கு கூட்டிச் செல்லக் கூடாது? இலங்கையின் பல பகுதிகளுக்கும் அழைத்துச் செல்லலாம்; சாதாரண சிங்களவர்களுடன் பழகச் செய்யலாம்; சிங்களம் பத்திரிகையாளர்களை தமிழ்ப் பத்திரிகையாளர்களுடன் நெருங்கி உறவாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தலாமே! இதேபோல சிங்கள ஊடகவியலாளர்களையும் தமிழகம் அழைத்துச் சென்று இதுதான் தமிழகம், இவர்கள்தான் தமிழர்கள் என்பதை உணர்த்தலாம் அல்லவா? என்றேன்.

அவரோ அர்த்த புஷ்டியுடன் புன்னகைத்துவிட்டு என் கேள்விக்கு பதில் சொன்னார்.

"நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. இப்படி ஊடகவியலாளர்களை பழக விட்டால் பல தப்பபிப்பிராயங்கள் களையப்பட்டு விடும். ஆனால் பிரச்சினையே அங்கேதான் இருக்கிறது. அங்கே சிங்கள அரசியல்வாதிகளுக்கும் இங்கே தமிழ்த் தலைவர்மாருக்கும் இவ்விரு சமூகங்களும் தமது தப்பப்பிராயங்களைக் களைந்து தமக்கிடையே புரிந்துணர்வை வளர்த்துக் கொள்வதில் அக்கறை கிடையாது. இரு சமூகங்களுக்கும் இடையே முரண்பாடுகளும், சந்தேகங்களும் நீடிப்பதையே அவர்கள் விரும்புகிறார்கள். அப்போதுதானே இருபக்கத்திலும் பக்காவாக அரசியல் செய்யலாம்! எனவே அந்த சந்தேகங்களும் முரண்பாடுகளும் தொடரவே செய்யும் பிரதர்!" என்றார் துணைத் தூதுவர்.

தமிழர், சிங்களவர் என்ற பாகுபாடு அல்லது இழிவுபடுத்திப் பார்ப்பதென்பது அரசியலில் காணப்படும் அளவுக்கு இலங்கை சமூகத்தில் இல்லை. திட்டமிட்ட ரீதியாக சிங்களத்தரப்பினாலும் தமிழ்த் தரப்பினாலும் ஆண்டாண்டு காலமாக இனப்பாகுபாடு சிந்தனை போற்றி வளர்க்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கூட வெளிப்படையான வெறுப்புணர்வாக சமூகத்தில் இது காணப்படுவதில்லை. எனவே இனங்கள் இடையே உண்மையாகவே பாகுபாடுகள் கிடையா. அவை அரசியல்வாதிகளினால் அவர்களின் தேவைகளுக்காக உருவாக்கப்பட்டு போஷிக்கப்படுபவை என்பதே நிதர்சனம்.

இப்போது காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் கோட்டா கோகம தொடர் ஆர்ப்பாட்டம் வெகுஜன அரசியல் சிந்தனையில் பல முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதிமொழிகளை அள்ளி வீசி, இனவாதக் கருத்துகளை உதிர்ந்து, கூழைக்கும்பிடுபோடுவதால் மாத்திரம் ஒருவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பும் கலாசாரம் அல்லது மடத்தனத்தின் உச்சத்தை இப் பாராளுமன்றத்தில் பார்த்து வருகிறோம். கோட்டாகம அனேகமாக இக்கலாசாரத்தில் இருந்து, - அரசியல்வாதிகளின் பேச்சில் கிறங்கிப்போய் விடும் தன்மையில் இருந்து, - வாக்காளர்களை விடுவித்துவிடும் என நம்பலாம். அதே சமயம் சிங்கள உள்ளங்களில் படிந்திருக்கும் இனவாதக் கறையையும் இக் 'கம' அகற்றிவிட வேண்டும். ஏனெனில் இந்நாடு வங்குரோந்து நிலை அடைவதற்கு அரசியல்வாதிகளின் தொடர் சுரண்டல் மட்டும் காரணம் அல்ல; இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதும் காரணம் என்பதை மறந்துவிடலாகாது.

இந்த இனவாதத்தைப் போலவே போற்றி வளர்க்கப்பட்ட மற்றொரு சிந்தனைதான் இந்திய எதிர்ப்பு வாதம். இதுவும் பள்ளிக்கூடங்களிலேயே வளர்த்தெடுக்கப்படுகிறது. சரித்திர பாடத்தைக் கற்பித்தலின் ஊடாக.

இந்தியாவுக்கு பக்கத்தில் இலங்கை இருப்பதால் பெரியண்ணன் மனப்பான்மையுடன் சிங்கள சமூகம் இந்தியாவை சந்தேகத்துடன் பார்க்கிறது. சோழர் படையெடுப்பில் சிங்கள மன்னர்கள் ஔிந்து வாழ வேண்டிய காலமொன்றிருந்தது. எனவே, இந்தியா மீண்டும் இலங்கையில் ஊடுருவில் நிகழ்த்தலாம் என்பது அவர்களின் சரித்திரகால அச்சம்.

1971ஜே.வி.பி ஆயுதகிளர்ச்சிக்கு முன்பாக அந்த இயக்கம் சிங்கள இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு வகுப்புகளை நடத்தியது. அதில் ஒன்று இந்திய விஸ்தரிப்பு வாதம். இந்தியா இலங்கையின் மீது ஒரு கண் வைத்திருக்கிறது. அதன் பார்வையில் மாற்றம் கிடையாது. இலங்கையில் வசிக்கும் நாடற்றவர்களான பத்துலட்சம் தமிழ் வம்சாவளி தோட்ட மக்கள் இன்றைக்கும் இந்திய விசுவாசிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்திய ஊடுருவல் நிகழுமானால் இவர்களை இந்தியா பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்பது இந்திய விஸ்தரிப்பு வாதத்தில் ஒரு பகுதி. அந்த ஆயுத எழுச்சி வெற்றிபெற்றிருந்தால் தோட்டத் தமிழர்களின் கதி அதோகதியாகி இருக்கலாம்.

அதன் பின்னர் இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையடுத்து இந்திய சமாதானப் படை இலங்கை்கு அனுப்பப்பட்டது. உடனே பலருக்கும் இந்திய விஸ்தரிப்பு வாதம் தான் நினைவுக்கு வந்திருக்கும். ஆனால் இந்தியாவுக்கு இலங்கையில் நீடித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை. அதன்படியே திரும்பப் படைகளை அழைத்துக் கொண்டுவிட்டது இந்தியா. 1988- 89ஜே.வி.பி ஆயுத கிளர்ச்சியின்போதும் இந்திய நிறுவனங்களின் மீது தாக்குதல், இந்திய பண்டங்களை வாங்க வேண்டாம் என்ற பிரசாரம் என்பனவற்றை இந்திய எதிர்ப்பு மனப்பான்மைக்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இந்தியா பக்கத்து நாடாக இருந்தாலும், அவ்வப்போது உதவிகள் செய்து வந்தாலும், மொழி, கலாசாரம், பாரம்பரிய தொடர்புகள் என்பன மிக நெருக்கமாகக் காணப்படுகின்ற போதிலும் இந்தியா மீது சந்தேகக்கண் கொண்டு பார்ப்பது தொடரத்தான் செய்கிறது. இதற்கு இங்கே காணப்படும் அரசியல் சூழல்களும் முக்கியக் காரணம். சிங்கள மக்களுக்கு இந்தியாவுக்கு அண்மித்து இலங்கை காணப்படுவது அல்ல பிரச்சினை. இந்தியாவின் தென்பகுதியில், இலங்கையின் வட முனைக்கு அருகே ஏழரைக் கோடி தமிழர்கள் தனி மாநிலமாக வசித்து வருவதும் அவர்களின் தொகுப்புள் கொடி உறவுகளாக இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வருவதும்தான் அவர்களின் சந்தேகங்களும், அவ நம்பிக்கையும் தொடர்வதற்கான காரணம்.

இதை படிப்படியாக நீக்கலாம் என்றால் அரசியல்வாதிகளுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் அதில் ஆர்வம் இல்லை. இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் வைத்திருப்பதன் மூலம்தானே பிரதான சிங்கள மற்றும் தமிழ்க்கட்சிகள் தமது அரசியலை வெற்றிகரமாக நடத்தி வருகின்றன!

புத்தர் இந்திய பெரு நிலப்பரப்பில் தோன்றியவர் என்ற வகையில் எல்லா முக்கிய பௌத்த புனித தலங்கள் வட இந்தியாவிலேயே அமைந்துள்ளன. பெரும்பாலான இலங்கை பௌத்த யாத்திரிகர்கள் இப்பௌத்த யாத்திரையை சென்னையில் இருந்து ஆரம்பிப்பதே வழமை. சிங்கள மொழி இந்திய மொழிகளின் புணர்ச்சியால் உருவானது. மகாவம்சத்தின்படி விஜயனின் வருகையின் பின்னர் உருவான மொழி. ஒரு மொழி உருவாகி வளர்ந்து நிலைப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளாவது செல்லும். அதேபோல சிங்கள கலாசாரம், நடனம், இசை, பண்பாடு, மத நம்பிக்கைகள் மற்றும் கலாசார பண்புகள் என்பனவும் இந்தியாவில் இருந்து பெற்றுக் கொண்டவையே. இவ்விடயத்தில், தமது ஆதாரங்களை வட இந்தியாவில் இருந்தே பெற்றுக்கொண்டதாக சிங்கள அறிஞர்கள் ஒத்துக் கொண்டாலும் தமிழர்கள் மற்றும் தமிழில் இருந்து பெற்றவை சொற்பமே என்றுதான் சொல்ல விரும்புகிறார்கள். இதை பாரம்பரிய தமிழ் வெறுப்பு, சந்தேகம் என்பதாகவே எடுத்துக்கொள்ளவேண்டும். இன்னும் ஒரு சின்ன உதாரணம். இந்திப் படங்களையும் பாடல்களையும் வெளிப்படையாகவே விரும்பி ரசிக்கும் சிங்கள மக்கள் தமிழ் சினமாவை விரும்பிப் பார்த்தாலும் அதை வெளிப்படுத்தத் தயங்குவார்கள். ஒரு சிங்களக் குடும்பம் 25வருடங்களாக தமிழ்க் குடும்பத்துடன் நெருங்கிப் பழகினாலும் தமிழ் பேச்சு மொழியை விளங்கிக் கொள்ளாதவர்களாகவே காணப்படுகின்றனர். இதை பொதுப்படையாகவே சொல்கிறோம். தமிழர்கள் சிங்களத்தை அனாசயமாகக் கையாள்வதைப்போல சிங்களவர்களால் தமிழ்பேச முடிவதில்லை என்பதற்கு அவர்களிடையே நீண்டகாலமாகவே வளர்த்தெடுக்கப்பட்டுள்ள தயக்க உணர்வு தான் காரணமோ தெரியவில்லை.

1970- 77காலப்பகுதியில் இந்தியத் தமிழர்கள் மீதான வெறுப்பை வெளிப்படையாகவே பார்க்க முடிந்தது. அக்காலத்தில் தற்காலிக வதிவிடவிசா (Temporary Residential visa) பெற்று பல இந்திய நாட்டு வர்த்தகர்கள் இலங்கையில் வர்த்தகம் செய்துவந்தனர். அக்காலத்தில் இலங்கை வானொலி வர்த்தக சேவையில் ராஜா பீடி, கல்கி பீடி, ஐந்து பூ பீடி, சொக்கலால் ராம்சேட் பீடி ஆகிய பீடிக் கம்பனி விளம்பரங்கள் அடிக்கடி ஒலிபரப்பாகும். இவர்கள் வட இந்தியர்கள். போத்தல் வர்த்தகம் முதல் இறக்குமதி வர்த்தகம்வரை பெரிதும் சிறிதுமாக பல தமிழ் வர்த்தகர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இலங்கையின் பொருளாதார வளத்தை சுரண்டி இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதாக சிங்கள மக்கள் நம்பவைக்கப்பட்டனர். அக் காலத்தில் நாடற்றவர் நிலை காணப்பட்டதால் ஒருவர் தனக்கு பிடிக்காத ஒருவர் மீது பொலிசில், இவர் திருட்டுத்தனமாக இலங்கை வந்தவர் என்று புகார் கொடுத்தால் அவரை கைதுசெய்து கொம்பனி வீதி முகாமில் தள்ளி விடுவார்கள். ஏனெனில் மிகப்பல இந்திய வம்சாவளியினரிடம் தான் இலங்கைப் பிரஜைதான் என்று நிரூபிப்பதற்கான 'கடுதாசி'கள் இருக்கவில்லை. இக்காலப்பகுதியில்தான் 'ஒன்ன பலபங் பெனலா யனவா கள்ளத்தோணிலா' என்ற பைலா பாடல் பிரபலம் பெற்றது அனேகமாக இதைப் பாடியவர் என்டன் ஜோன்ஸ்ஆக இருக்கலாம். இப்பாடலில், எமது வருங்கால முதலாளிகள் இந்தக் கள்ளத்தோணிகள்தான் என்று ஒரு வரி வரும். ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா எழுபதில் பதவிக்கு வந்ததும் இந்த TRP நடைமுறையை நீக்கிவிட்டு இந்தத் தமிழர்களை (இந்திய முதலாளிமார்) இந்தியாவுக்கு திரும்பு அனுப்பிவிட்டார். ஆனால் இன்று சுரண்டல் மூலம் இந்நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்தவர்கள் இந்தியர்கள் அல்ல, இந்த இலங்கைப் பிரஜைகளே என்பது ஒரு கசப்பான உண்மை.

இந்த வரலாற்றை - அதாவது இந்திய எதிர்ப்புணர்வை - இங்கே நினைவுபடுத்த வைத்தது தமிழகம் அனுப்பி வைத்திருக்கும் நிவாரணக் கப்பலே!

இலங்கையில் இந்திய எதிர்ப்புவாதம் காணப்படுவதைப் போலவே தமிழகத்திலும் சிங்கள எதிர்ப்புவாதம் நீண்ட காலமாகவே காணப்படுகிறது. ஆரம்பத்தில் கூறியதைப்போலவே சிங்கள எதிர்ப்பு/ வெறுப்பு வாதம் தமிழகத்தில் சிலருக்கு வருமானம், செல்வாக்கு, மற்றும் வாக்குகளைப் பெற்றுத்தரும் ஒன்றாகக் காணப்படுகிறது. இலங்கை தொடர்பான செய்திகள் திரித்து கூறப்படுவது அஙகே சர்வசாதாரணம். இலங்கை உள்நாட்டுப் போர் எரிகிற தீயில் எண்ணெய் வார்த்ததாக அமைந்தது. இலங்கை்கு உதவ வேண்டும் என்ற தீர்மானம் கூட இலங்கை வாழ் தமிழர்களுக்கு மட்டுமே என்ற அளவிலேயே ஆரம்பமாகி பின்னர் இலங்கையர் அனைவருக்கும் என்றானதை அந்த எதிர்ப்பு வாதத்துடன் இணைத்து பார்க்க வேண்டும்.(அடுத்த வாரமும் கப்பல் வரும்)

அருள் சத்தியநாதன்

Comments