இளமையை சிறையிலேயே தொலைத்த பேரறிவாளன்! | தினகரன் வாரமஞ்சரி

இளமையை சிறையிலேயே தொலைத்த பேரறிவாளன்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த பேரறிவாளன், 31ஆண்டுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது இளைஞராக இருந்த பேரறிவாளன் விடுதலையாகி வெளியே வரும்போது முதுமையடைந்திருக்கிறார். அவருடைய இளமை சிறையில் முடிந்து விட்டது.

இதற்குள் ஏராளமான போராட்டங்கள். சட்டரீதியாகவும் சமூக ரீதியாகவும் நடைபெற்றுள்ளன. குறிப்பாக பேரறிவாளனுடைய தாயார் அற்புதம்மாள் நீண்ட பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார். தன்னுடைய மகனுக்காக அவர் பல நூற்றுக்கணக்கான மனிதர்களைச் சந்தித்திருக்கிறார். பல ஆயிரம் மைல் தூரம் நடந்திருக்கிறார், பயணித்திருக்கிறார். ஏறக்குறைய அவருடைய வாழ்க்கையும் இந்த அலைச்சல்களோடு முடிந்துள்ளது.

ஆனாலும் இறுதியில் வெற்றி கிடைத்து விட்டது. நம்பிக்கை வென்றுள்ளது. இந்த விடுதலை, இந்த வெற்றி எல்லாத் துயரையும் அலைச்சல்களையும் மகிழ்ச்சியினால் துடைத்து விட்டது.

பேரறிவாளனுடைய விடுதலையை தமிழகம் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளது. தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடக்கம் பல்வேறு அரசியற் தரப்பினரும் இதை வரவேற்றுள்ளனர். சமூக வலைத்தளங்களிலும் பரவலாக வரவேற்பே காணப்படுகிறது. ஊடகங்கள் முதன்மையளித்து பேரறிவாளனின் விடுதலையைக் குறித்து எழுதியும் பேசியும் வருகின்றன.

இந்த விடுதலை மாநில அரசின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் நிரூபித்திருக்கிறது என்கின்றனர் நோக்கர்கள். காரணம், சி.பி. ஐ (மத்திய அரசு) தொடுத்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் ஒருவரே பேரறிவாளன்.

மரண தண்டனையை நீதி மன்றம் பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றியபோது – குறைத்தபோது - அதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு வந்து விட்டது. அரசியலமைப்பின் 142ஆவது பிரிவின்படி மேற்படி குற்றச் சாட்டில் சிறையிலுள்ள எழுவருடைய விடுதலையையும் சாத்தியப்படுத்தும்படிசட்டசபையிலும் அமைச்சரவையிலும் தீர்மானமெடுத்தது தமிழக அரசு. அப்படி எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநருக்குப் பரிந்துரைத்தது.

இருந்தபோதும் இதில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என ஆளுநர் ஜனாதிபதியிடம் அதைத் தள்ளி விட்டார். ஜனாதிபதியின் தீர்மானத்துக்காக ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இருந்தும் பதில் இல்லை. காரணம், சட்டத்தையும் விட, நீதியையும் விட அரசியலுணர்வும் அரசியல் லாபநட்டக் கணக்கும் மேலோங்கியிருந்ததேயாகும்.

இந்த நிலையில் மாநில அரசின் பரிந்துரையின் அடிப்படையில் பேரறிவாளனுடைய விடுதலையை அங்கீகரிப்பதற்கு – ஏற்றுக் கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லையா என்று மாநில அரசின் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அந்தக் கேள்விக்கான பதிலே இப்போது பேரறிவாளனின் விடுதலையாகும்.

இது சில விசயங்களில் முன்னேற்றத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

1. மாநில அரசின் அடிப்படைத் தத்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2. குற்றத்தில் பங்கோ இல்லையோ ஒருவர் 30ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தது போதும். அவருக்கான தண்டனை இதற்கு மேல் தேவையில்லை என்ற உணர்வைப் பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது. அதுவே இந்த விடுதலையை எல்லோரும் கொண்டாடக் காரணம். இதைப்போல ஏனையவர்களும் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்களுடைய விடுதலையும் சாத்தியமாகும் என்ற உணர்வும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

3. அற்புதம்மாளின் நீண்ட போராட்டம் வெற்றியடைந்திருப்பது பலருக்கும் பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்தியச் சிறைகளிலும் இலங்கை போன்ற நாடுகளிலும் இந்த மாதிரி குற்றத்தோடு தொடர்பு பட்டும் தொடர்பற்றும் பலர் பல ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடைய உறவுகளுக்கு இது பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

4. எந்த நிலையிலும் இந்தியாவில் சட்டமும் நீதியும் வெற்றியடைந்துள்ளது என்பது நிரூபணமாக்கப்பட்டுள்ளது.

இப்படிப் பல விசயங்கள் உண்டு.

ஆனால், காங்கிரஸூம் பா.ஜ.கவும் இதை எதிர்த்துள்ளன. இந்த விடுதலைக்கு எதிராக காங்கிரஸ் சில இடங்களில் போராட்டங்களையும் நடத்தியுள்ளது. பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் முதல் அனைத்துத் தரப்பினரும் இதைப் பகிரங்கமாகவே கண்டித்துள்ளனர்.

அப்படியென்றால், சட்டத்தைக் குறித்தும் அரசியல் சாசனத்தைக் குறித்தும் இவர்களுடைய நிலைப்பாடு என்ன? புரிதல் என்ன? என்ற கேள்விகள் எழுகின்றன. சட்டத்துக்கும் நீதித்துறைக்கும் அப்பால் தனிப்பட்ட உணர்வுகளும் அரசியல் நிலைப்பாடும்தான் பெறுமானமுடையதா என்ற கேள்வியும் இதனோடு உண்டு.

ஏறக்குறைய இதே மனநிலையைக் கொண்டவர்களிற் சிலர் இவ்வாறான நோக்குநிலையில் சில கேள்விகளை எழுப்பி விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

“1991-ல் ராஜீவ் காந்தி மட்டும் இறக்கவில்லை. அவருடன் சாதாரண மக்களும்,போலீஸாருமாக 19பேர் கொலையுண்டனர்”. இப்படி இறந்தவர்களின் குடும்பங்களின் துயரையும் அவர்களுடைய நிலையையும் இதுவரையில் யாராது சிந்தித்திருக்கிறீர்களா? இவர்கள் என்ன தவறு செய்தனர்? எதற்காகக் கொல்லப்ப

டனர்? இந்தக் குடும்பங்கள் என்ன தவறு செய்தன? எதற்காக அவை இழப்பையும் துயரத்தையும் தாங்கிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான நிவாரணம் என்ன? என்பது இவர்களுடைய வாதம்.

மேலும் “பூந்தமல்லி நீதிமன்றம், பேரறிவாளன் உள்பட பலருக்கு தூக்குத் தண்டனை விதித்தது.பிறகு அப்பீல் செய்து ஆயுள் தண்டனையாக்கி,இப்போது அதையும் நீக்கி விட்டு விடுவிக்க வேண்டும் என்பது என்பது சரிதானா.சோனியாவே மன்னித்து விட்டார், பிரியங்கா மன்னித்து விட்டார் என்பதெல்லாம் ஒரு வாதமாகுமா?

இந்த வழக்கை அரசியலாக்கி, சட்ட மன்றத்தில் குற்றவாளிகளை விடுவிக்க தீர்மானமும் போட்டு நீதியைக் கேலிக் கூத்தாக்கி இருப்பது இன்று யார் மண்டையிலும் ஏறாது. ஏனென்றால் பேரறிவாளன் விடுதலை என்பது இன்று மாஸ் ஹிஸ்ட்ரியா நிலையில் சகலரையும் பிடித்து ஆட்டுவிக்கிறது.சட்டசபையில் தீர்மானம் போட்டு தமிழக சிறையில் உள்ள எல்லா கைதிகளையும் கூட விடுவிக்க முடியுமா? பேரறிவாளனை விட அவர்கள் எந்த விதத்தில் தாழ்ந்தவர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வண்ணநிலவன் – ராமச்சந்திரன்.

இதைப்போல வெவ்வேறு கோணங்களில் இந்த விவகாரம் விவாதிக்கப்படுகிறது. இதனால் இது சட்டம் மற்றும் நீதித்துறையிலும் சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் உண்டாக்கியுள்ளது. எதிர்காலத்தில் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில் இது பாதிப்பை உண்டாக்கும்.

அது நீதித்துறையிலும் சில மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று மறுத்துரைக்கின்றனர் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஒருவர். “இந்தியாவில் சட்டம் வலுவானது. நீதித்துறை பலமானது. அது குற்றவாளிகளாக அடையாளம் காண்போரை நடவடிக்கைக்கு உட்படுத்தியே தீரும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தொடக்கம் சசிகலா வரையில் இதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு. தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இதுதான் உண்மை” என்கின்றார் அவர்.

ஆகவே பேரறிவாளனின் விடுதலை ஒரு தொடர் நடவடிக்கைக்கான தொடக்கப் புள்ளியாக இருக்கும். இது பல விதங்களில் முன்மாதிரிகளை உருவாக்கியுள்ளது.

ஆனால், துரதிருஸ்டவசமாக தமிழ் நாட்டில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அதற்கப்பால் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததே தவறு. அதனோடு தெரிந்தும் தெரியாமலும் சிக்கிக் கொண்டவர்கள் இவ்வளவு காலம் சிறைக்குள்ளிருக்க வேண்டி வந்தது துயரம். இருந்தாலும் பேரறிவாளனின் விடுதலை பலருக்கும் வெற்றியே. இது அடுத்த கட்டமாக எஞ்சியுள்ள ஆறு பேருடைய விடுதலைக்கான கதவுகளைத் திறந்து விடக் கூடும். சிலவேளை நிரந்தரமாக மூடி விடும் அபாயமும் உண்டு” என்கிறார் அவர்.

இதைத்தான் நாமும் எதிர்பார்க்கிறோம். அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில்.

பேரறிவாளனும் அவருடன் சிறைப்படுத்தப்பட்டிருந்த ஏனைய அறுவரும் தங்கள் இளமையை சிறைக்குப் பரிசளித்துள்ளனர். அல்லது அவர்களுடைய இளமையை – வாழ்க்கையை சிறை குடித்து விட்டது. இதற்குக் காரணம் அரசியல் படுகொலையே. விடுதலைப்புலிகள் ராஜீவ் காந்தியைக் கொல்ல முற்பட்டதன் விளைவே இதுவாகும். இதனால் ராஜீவ் காந்தியும் இல்லை. இறுதியில் புலிகளும் அவர்களுடைய தலைமையும் இல்லை. மிஞ்சியது இந்த மாதிரி சிறையிருப்புகளும் அலைக்கழிப்புகளும் துயருமே.

காலம் மாறி, காட்சிகள் மாறினாலும் துயரங்களின் நீட்சி மாறவில்லை. 

சகிதா 

Comments