சவால்களை முறியடித்தவாறு அதியுச்ச வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்! | தினகரன் வாரமஞ்சரி

சவால்களை முறியடித்தவாறு அதியுச்ச வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்!

உலகின் நான்காவது பொருளாதாரவல்லரசாகஇந்தியாவை சர்வதேசம்கணித்துள்ளது. பாரத தேசமானது உலகின் முக்கிய வல்லரசுகளில் ஒன்றாக மாத்திரமன்றி, பொருளாதார வல்லரசாகவும் வளர்ச்சியடைந்து வருகின்றது என்பதே சர்வதேச பொருளாதாரநிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் 2022ஆம் நிதியாண்டில் 7.5சதவீதம் வளர்ச்சியடையும் என்றும், அடுத்த 2023ஆம் நிதியாண்டில் 8வீதம் வளர்ச்சியடையும் என்றும் ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும்.

இந்தியாவில் எதிர்வரும் ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியானது, அதன் உள்கட்டமைப்பில் பொது முதலீட்டை அதிகரிப்பதால் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும். மேலும், தனியார் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலமும் பொருளாதாரம் ஆதரவு பெற்று வளர்ச்சியடையும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்திருந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, அதனால் ஏற்படும் எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருட்களின் விலையேற்றம் ஆகியன கருத்தில் கொள்ளப்பட்டு இந்த கணிப்பு உள்ளது. இந்தக் கண்ணோட்டம், கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசிகளால் ஏற்பட்ட நீடித்த முன்னேற்றத்தை கருத்தில் கொண்டுள்ளது.

இந்தியா நிலையான பொருளாதார மீட்சிக்கான பாதையில் உள்ளது. தளவாடங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் கொள்கை, தொழில்துறை உற்பத்தியை எளிதாக்குவதற்கான ஊக்கத்தொகை மற்றும் விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை நாட்டின் விரைவான மீட்சிக்கு துணைபுரியுமென்று நம்பப்படுகின்றது.

நாட்டில் பருவநிலை சீராக இருக்கும் பட்சத்தில், விவசாய உற்பத்தி அதிகரிக்குமென்பது உறுதியாகும். அத்துடன் விவசாயிகளின் வருமானமும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய வளர்ச்சிக் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முன்னறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதேநேரம் இந்தியாவின் அயல்நாடான பாகிஸ்தானில் மிக மோசமான அளவுக்கு பொருளாதார வளர்ச்சி உள்ளது. அதாவது அந்நாட்டில் பொருளாதார வளர்ச்சி 4சதவீதமாக மட்டுமே உள்ளது.

மேலும் 2021-_2022நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.3வீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10.1%ஆக இருக்கும் என்றே முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக சிறிது சரிவு ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் உள்கட்டமைப்பு, கிராம அபிவிருத்தி மற்றும் சுகாதாரம் ஆகியவை மீது கவனம் செலுத்துவதன் மூலமும், அதிக தொகையை இதில் செலவு செய்வதன் மூலமும் சரிவில் இருந்து மீள முடியும் என்பதே நம்பிக்ைகயாகும்.

ஆனால் மறுபுறத்தில் 2022_ -23ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 9சதவீத வளர்ச்சி அடைந்து வேகமாக முன்னேறும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் அனைத்து நிறுவனங்களின் அறிக்ைககளும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையே எதிர்வு கூறுகின்றன.

உலக பொருளாதார நிைலவரம் குறித்து மேம்படுத்தப்பட்ட புதிய அறிக்கையை, ஐ.எம்.எப் அண்மையில் வெளியிட்டிருந்தது.

கடந்த ஆண்டு ஒக்ேடாபரில் வெளியிட்ட உலக பொருளாதார புள்ளிவிபரத்துடன் தற்போதைய அறிக்கையை ஒப்பிடும் போது, 2022_ -23ஆம் நிதியாண்டில் இந்தியா, ஜப்பான் ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரம் மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நடப்பு 2021_ -22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5சதவீதமாக இருக்கும் என ஒக்ேடாபர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தற்போது, 0.5சதவீதம் அதிகரிக்கப்பட்டு 9சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்படி இந்திய பொருளாதாரம் 2022_- 23ஆம் நிதியாண்டில் 9சதவீதம் வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் தொடர்ந்து வேகமான பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்ற சிறப்பை இந்தியா தக்க வைத்துக் கொள்ளும்.

இதேகாலத்தில் புதிய மதிப்பீட்டின்படி ஜப்பான் பொருளாதாரம் 3.2சதவீதத்திலிருந்து 3.3சதவீதமாக அதிகரிக்கும். நடப்பு நிதியாண்டில் அமெரிக்க பொருளாதாரம் 5.2சதவீதம் வளர்ச்சி காணும் என முந்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, தற்போது 4சதவீதமாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆகவே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியானது ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உச்ச அளவிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேபோல சீனாவின் பொருளாதார வளர்ச்சி, 5.6சதவீதத்தில் இருந்து 4.8சதவீதமாக சரிவடைந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியாவின் கடன் வளர்ச்சி எதிர்பார்க்கும் அளவிற்கு மேம்படும். மேலும் எதிர்பார்த்ததற்கும் மேலாக நிதித் துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பதால் முதலீடுகளும், நுகர்வு மற்றும் தேவைப்பாடும் அதிகரிக்கும்.

கொரோனா பாதிப்பு காரணமான வேலை இழப்பு, தொழில் முடக்கம், வருமான இழப்பு, ஏழை_-பணக்கார ஏற்றத் தாழ்வு அதிகரிப்பு, கல்லூரிகள் மூடப்பட்டதால் கேள்விக்குறியான இளைஞர்களின் எதிர்காலம் போன்ற பல்வேறு சவால்களுக்கும் மத்தியில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி வியக்க வைக்கின்றது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய நெருக்கடிகளால் இந்தியா தனது பொருளாதாரத்தில் பல்வேறு சவால்களை சந்திக்க நேர்ந்தது. இதனால் அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டன. ஆனாலும் இந்த நெருக்கடிகளிலிருந்து விவசாயம், தொழில்துறை மீண்டு வந்திருக்கின்றன.

விநியோகச் சங்கிலியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல், மூலதன செலவினங்கள் மற்றும் ஏற்றுமதி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவது ஆகியவை அடுத்த நிதியாண்டுகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் எதிர்வரும் காலத்தில் தொற்றுநோய் தொடர்பான பொருளாதார சீர்குலைவு இருக்காது என்பதால் இந்திய பொருளாதாரமானது வளர்ச்சிப் போக்ைகயே காண்பிக்கும் என்பதே நம்பிக்ைகயாகும்.

இந்தியாவில் தொழில்துறை, நுகர்வு, ஆகியவற்றில் நிதிநிலையை சமநிலையில் வைத்திருக்க தேவையான நிதி நிலை அரசிடம் இருப்பதாகவும், எனவே தேவைப்படும் போது மூலதனச் செலவினங்களை அதிகரிக்க அரசு திறனுடன் இயங்கும் எனவும் அறிக்ைககள் தெரிவிக்கின்றன.

பொருளாதாரத்தில் கொந்தளிப்பான நிகழ்வுகள் நடக்கும்போது நிதி சந்தைகள் அழுத்தத்துக்குள்ளாவது வழக்கம். ஆனால் இந்திய நிதி சந்தைகள் கொரோனா காலத்தில் விதிவிலக்காக சிறப்பாகச் செயல்பட்டு உச்சங்களை எட்டின.

தற்போதுள்ள சவாலான பொருளாதார சூழலில் நாடு முழுவதும் 2020_-2025காலகட்டத்தில் உலகத் தரம் வாய்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கி, தொழில் சூழல் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது அவசியம். இதன் மூலம் உள்கட்டமைப்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முதலீடுகளை ஈர்க்கவும் இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.

சாரங்கன்

Comments