ஒற்றுமையே பலம் | தினகரன் வாரமஞ்சரி

ஒற்றுமையே பலம்

“இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்கும் தன்மை யவர்”
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

வேற்றுமையை விட்டு ஒற்றுமையுடன் யாரெல்லாம் வாழ்கின்றார்களோ, அவர்களை தோற்கடிக்க முடியாது என்பதே அதன் கருத்தாகும். 

ஒற்றுமை எனப்படுவது இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் அவசியமான ஒன்றாகும். ஆதிகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாகவே குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தார்கள். 

கூட்டமாக வாழ்ந்து வருதல் அவர்களுக்கு பாதுகாப்பைத் தந்ததோடு, குழுவாக வேட்டையாடி அதன் மூலம் கிடைக்கின்ற உணவை பகிர்ந்துண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள்.  

மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் உட்பட அனைத்து உயிரினங்களும் ஒற்றுமையாக வாழ்தலை விரும்புவதோடு, அவை பெரும்பாலும் கூட்டாகவே வாழ்கின்றன.

ஏனைய விலங்குகளால் ஆபத்து நேரும் போது ஒன்றாகத் திரண்டு அதனை எதிர்கொள்கின்றன. காடுகளில் வாழும் விலங்குகளான யானைகள், மான்கள், சிங்கங்கள் அனைத்துமே கூட்டாக வாழ்பவையே. 

ஒற்றுமைக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்கும் பறவையினம் காகம். காகங்கள் ஏதேனும் சிறு உணவைக் கண்டால் கூட, சத்தமாகக் கரைந்து தன் கூட்டத்தை அழைத்தே உண்ணும்.  

மேலும் தேனீக்கள் ஒற்றுமைக்கு மற்றுமொரு சிறந்த எடுத்துக்காட்டு. தேனீக்கள் தனித்தனியாக தேனை சேகரித்த போதும், அதனை சேர்ந்தே சேமித்து வைக்கின்றன. 

தமது வாழ்விடத்தை ஏதேனும் ஒரு ஆபத்து நெருங்கும் போது கூட்டாகச் சென்று தாக்குகின்றன. அத்துடன் எறும்புகள், கறையான் போன்றவையும் ஒன்றாகச் சேர்ந்து மண்ணைக் குடைந்து வாழ்விடத்தை அமைக்கின்றன.  இவ்வாறு விலங்குகளும் பறவைகளும் ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து கூட்டாகச் செயற்படுகின்றன.

இவ்வுலகில் வாழ்கின்ற மனிதர்கள் அனைவரும் இனம், மதம், மொழி என பிரிந்து வேற்றுமையோடு வாழ்கின்றனர்.    இதனால் இனமத கலவரங்களும் ஏனைய பல சச்சரவுகளும் சமூகத்தில் தோற்றம் பெற்று, மனித இனமே அழிவுப்பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் ஒற்றுமையானது மிகவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நல்லிணக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே அனைவரும் அமைதியான சூழலில் வாழ முடியும்.

ஒவ்வொரு மனிதனும் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான். எனவே தவறுகளை மன்னிக்கும் குணமும், புரிந்துணர்வும் அவசியமாகும். 

ஆரம்பகால மனிதர்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து கூட்டுக் குடும்பங்களாக வாழ்ந்தார்கள். “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற பழமொழிக்கேற்ப கூட்டாக விவசாயம் செய்து உணவை பகிர்ந்துண்டு ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்காலத்தில் இந்த முறைமை அருகி தனிக்குடும்பமாக வாழ்வதையே விரும்புகின்றார்கள்.  இதற்கு பிரதான காரணமாக விளங்குவது மக்களிடையே சகிப்புத்தன்மையும், சுயநலமும் அதிகரித்து வருவதாலாகும்.  எனவே மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடனும், ஒருவர் மீது ஒருவர் உள்ளார்ந்த அன்புடனும் வாழவேண்டும். ஒற்றுமையுடன் வாழ்ந்தால் மட்டுமே இந்த சமுதாயம் சீர்கேடுகள் ஏதுமற்று சிறப்பாக விளங்கும். 

இயந்திரமயமான இந்த மனித வாழ்க்கை அழகாக மாற வேண்டுமாயின் நாம் அனைவரும் விட்டுக்கொடுப்புடன், ஒருவரை ஒருவர் அன்பு செய்து வாழவேண்டும். 

ஆர்.  ராஹினி,
வெளிமடை. 

Comments