சில இடங்களில் எரிபொருள் விநியோகிப்பதில் சிக்கல் | தினகரன் வாரமஞ்சரி

சில இடங்களில் எரிபொருள் விநியோகிப்பதில் சிக்கல்

ஊழியர் பாதுகாப்பு முக்கியமென எச்சரிக்கை  

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெருக்கடிகளை ஏற்படுத்தல், ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளுதல், விதிகளை மறித்தல் மற்றும் எரிபொருள் பௌசர்களுக்கு  அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தால் எரிபொருள் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேக்கர தெரிவித்துள்ளார்.

அத்தகைய எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாெதன்ற கொள்கை ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்

அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு உட்பட நாடு முழுவதும் எரிபொருள் விநியோகம்  தொடர்ச்சியாக நடைபெற்று வரும் நிலையில் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டும் வீதிகளை மறித்தும் நெருக்கடி நிலை ஏற்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பில் அமைச்சுக்கு முறைப்பாடு   கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

எரிபொருள் போக்குவரத்து மேற்கொள்ளும் பௌஸர்களுக்கு திட்டமிடப்பட்ட குழுக்களினால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி குழுவினர் எரிபொருள் பௌஸர்களை வீதிகளில் மறித்து தமது பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் பௌஸரை தீ வைத்துக் கொளுத்தப் போவதாக அச்சுறுத்தல் செய்து வருகின்றனர்.

எரிபொருள் விநியோகத்தை முறையாக மேற்கொள்ளுதல் மற்றும் எரிபொருள் பௌஸர் சாரதி மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதால் எரிபொருள் விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை நேற்றைய தினம் கொழும்பின் பல்வேறு பிரதேசங்களிலும் திருகோணமலை உள்ளிட்ட வெளி மாவட்ட பகுதிகளிலும்  எரிபொருளுக்காகவும் மண்ணெண்ணெய்க்காகவும்   சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்வதற்காகவும்  மக்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதுடன் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டது. சில பகுதிகளில் வரிசையில் நின்றவர்களுக் கிடையே மோதல்களும் ஏற்பட்டுள்ளன. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments