கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்காது | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை ஏற்காது

தற்போதைய தென்னிலங்கை அரசியல் நிலவரம் தொடர்பாக வடக்கின் அரசியல் தலைவர்களது நிலைப்பாடு பற்றி  வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவிகே சிவஞானம் தெரிவித்துள்ள கருத்துக்கள்...

கேள்வி:- நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- நாட்டின் குழப்ப நிலை தொடரும். புதிய பிதமரும் அவ்வாறே தெரிவித்துள்ளார். இன்னும் காலங்கள் எடுக்கலாம். பிரதமர் சரியான பாதையில் செல்வரா என்பதும் கேள்விக்குறியாக தான் எனது மனதில் தோன்றுகின்றது. 15அமைச்சர்களைத் தான் நியமிக்கப் போவதாக  கூறியிருக்கின்றார். முழுமையாக நியமிக்க அவரால் முடியவில்லை. ஜனாதிபதியிடம் யார் யார் அமைச்சர்கள் என்று சொல்ல முடியவில்லை. இவ்வாறான நி​ைலமை நீடிக்கின்ற பொழுது, பலமான ஒருவராக அவர் இல்லை. பிரதமர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக இல்லை. பொதுஜன பெரமுனவின் உறுப்பினராக தான் இருக்கின்றார். அவரின் பெரும்பான்மையின் அடிப்படையில் தான் பிரதமராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். ஆகையினால், இந்த குழப்பம் தொடரப் போகின்றது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதென்றால். டொலர் அதிகரிக்க வேண்டும். இன்னும் சரியான நிலைப்பாடு வரவில்லை.  மூன்று வாரத்தின் பின்னர் தான் மதிப்பீட்டை செய்யலாம் என நினைக்கின்றேன்.

கேள்வி:- தமிழக முதலமைச்சரினால் வழங்கப்படுகின்ற உதவித் திட்டங்கள், தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி, சிங்கள மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினால், சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் மீது நல்லெண்ணம் தோன்றியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சிங்கள மக்களுடன் ஏன் இணைந்து செயற்படக்கூடாது?

பதில்:- நாங்கள் சிங்கள மக்களின் நல்லெண்ணத்தை பயன்படுத்தி, அரசாங்கத்துடனும், அரசாங்கம் சார்ந்தவர்களுடனும் பேசி, ஒரு தீர்வுக்கு வர வேண்டுமென்று தான் பல முயற்சிகளை முன்னெடுக்கின்றோம். அதில் தீவிரமாக இருக்கின்றோம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

கேள்வி:- சமஸ்டியை  கைவிட்டு, 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதனூடாக தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கும் , அதிகாரங்களை பெறுவதற்கமான முயற்சிகளிலும்  ஈடுபடக்கூடாது?

பதில்:- கட்டமைப்பு வேறாக இருக்கலாம். முறைமை கூட்டாட்சி முறைமையாக இருக்க வேண்டும். மாகாண சபை முறைமைக்குள்ளும் கூட்டாட்சி முறைமை வரலாம். இணைப்பாட்சி, அல்லது கூட்டாட்சி தான் எங்களுக்கு தேவையாக இருக்கின்றது. சின்னதொரு மாற்றத்திற்காக, எங்களது அங்கீகாரம் எமது இனத்தின் அடையாளங்கள், அதன் பாதுகாப்பு என்பனவற்றைக்  கைவிட வேண்டிய அவசியமில்லை. 13வது திருத்தத்தில் இருக்க வேண்டியது கூட இல்லாமல் போய்விட்டது. மாகாண சபை முறைமை இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம். அது இருக்க வேண்டும். அது பாராளுமன்றத்திற்கும், உள்ளூராட்சிக்கும் இடையில் இருக்க வேண்டிய கட்டமைப்பு . அது வேறு. எமது அரசியல் இலக்கு, நோக்கம் தன்னாட்சி.  நாங்கள் பிரிவினை கோரவில்லை.

கேள்வி:- சுமந்திரனுக்கு சட்டம் மறுசீரமைப்பு குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் கட்சிகள்  ஏன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படக்கூடாது. ஏன் அமைச்சுப் பதவிகளைப் பெறக்கூடாது?

பதில்:- தமிழ் மக்கள் என்று பார்க்கும் போது, டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் போன்றவர்கள் அமைச்சுப் பதவிகளை எடுக்கத்தான் போகிறார்கள். எங்களைப் பொறுத்தவரை அமைச்சுப் பதவியென்பது ஒரு கூட்டுப் பொறுப்பிற்குள் செல்கின்ற  விடயம். பொறுப்புக் கூறல் என்று அமைச்சுக்குள் போவதென்றால், இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் சரியாக செய்யுமா என்பது கேள்விக்குறி. அதன் வரலாறு அப்படித்தான். எல்லா விடயங்களுக்கும் அமைச்சுக்குள் போய் இருந்துகொண்டு பொறுப்பெடுக்க முடியாது. எம்மால்  அமைச்சுப் பதவிகளை ஏற்க முடியாது. ஆனால் பங்காளியாக இருக்க முடியும். தமிழ் தேசிய கூட்டமைப்பை பொறுத்தவரையில் எங்களுக்கு அமைச்சுப்பதவிகளை எடுக்கும் எண்ணம் கிடையாது. அது எங்களுக்குப்  பாதகமாக அமையும். ஆனால், நல்ல செயற்பாடுகளுக்கு நாங்கள் ஆதரவாக இருப்போம்.  எனவே சுமந்திரன் சட்ட மறுசீரமைப்பு குழுவில் அங்கம் வகிப்பதனால் நன்மை பயக்கும் என்று தான் நினைக்கின்றேன். இந்தக் குழுவில் எங்களுடைய பல பிரச்சினைகளைப் பேசலாம். அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம். ஆனால், அரசாங்கத்தின் பங்காளி கட்சியாக மாற தயாராக இல்லை.

கேள்வி:- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வருமாறு கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசுடன் இணைந்து செயற்பட தமிழ் தேசிய கூட்டமைப்பு தயாரா?

பதில்:- அரசாங்தத்திற்கு எதிரான நிலைப்பாட்டில், ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் பங்காளியாகவும் இருக்கவிரும்பவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு எமது கட்சி நிச்சயமாக ஆதரவு வழங்கும். அதேநேரம் பாதகமான நிலைப்பாடு வந்தால் அதை நாங்கள் எதிர்ப்போம். நடுநிலையான முடிவுகளைத் தான் நாங்கள் எடுப்போம். அமைச்சுப் பதவிகள் எடுக்காது. ஆதரவு  கொடுக்க வேண்டியதற்கு ஆதரவு கொடுப்போம்.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றார். நிலைப்பாட்டை அவதானம் செய்து ஒரு முடிவுக்கு வரலாம். தற்போது நாங்கள் எதிரான நிலைப்பாடு எடுக்கவில்லை.

கேள்வி:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால அரசியல் திட்டங்கள் என்ன?

பதில்:- தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எங்களுடைய அரசியல் இலக்கு மற்றும் நோக்கம் ஸ்திரமானது. அதனால், ஆட்சி மாற்றம் வந்தாலும் சரி, தேர்தல் வந்தாலும்  சரி, எமது நிலைப்பாட்டை எமது மக்கள் முன் வைப்போம். எமது இனத்தின் அடையாளத்தை இந்த நாட்டில் பாதுகாத்துக்கொண்டு, எமது தாயகத்தில் எமது கல்வி, கலாசாரம், பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய கட்டமைப்பையும், நி​ைலமையையும் உருவாக்கிக்கொண்டு, இப்போது எந்த நிலைப்பாட்டில் இருக்கின்றோமோ? அந்த நிலைப்பாட்டில் இருந்து மாற மாட்டோம். தமிழ் மக்களின் உரிமைகளை மீட்க, பாதுகாக்க, தொடர்ந்தும் பாடுபடுவோம்.

சுமித்தி தங்கராசா

Comments