புலம்பெயர் உறவுகள் தாயகத்தில் தடையின்றி முதலிடும் சூழல் அவசியம் | தினகரன் வாரமஞ்சரி

புலம்பெயர் உறவுகள் தாயகத்தில் தடையின்றி முதலிடும் சூழல் அவசியம்

தற்போதைய தென்னிலங்கை அரசியல் நிலவரம் தொடர்பாக வடக்கின் அரசியல் தலைவர்களது நிலைப்பாடு பற்றி வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்துக்கள்...

கேள்வி :- தற்கால அரசியல் நிலைமை தொடர்பாக உங்களின் நிலைப்பாடு? 

பதில்:- ரணிலின் தலைமையில் கட்சி சார்பற்ற அரசாங்கம் நடைபெறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் ரணிலின் இன்றைய ஆதரவாளர்கள் கோடாபயவின் ஆதரவாளர்களே. அவர்களுக்கு எதிராக ரணில் செல்ல முடியாது. இக்கட்டான நிலையிலே தான் ரணிலின் பயணம் தொடர்கின்றது. பொருளாதார அவலங்களில் இருந்து நாட்டை மீட்க ரணில் எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. 

2. கேள்வி :- தமிழக முதலமைச்சரினால் வழங்கப்பட்ட உதவித் திட்டங்கள் சிங்கள மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்று தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தியதன் அடிப்படையில் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட உதவியினால் சிங்கள மக்கள் மத்தியில் நல்லெண்ணம் உருவாகியுள்ளது. அதை தமிழ் மக்கள் சாதகமாக பயன்படுத்த முடியாதா? 

பதில்:- இன்று காலி முகத்திடலிலும் ஏனைய இடங்களிலும் தமிழ் மக்களை சக குடிமக்களாக நடத்தும் ஒரு இயல்பு சிங்கள மக்களிடையே பரவி வருகின்றது. அந்த மன மாற்றத்திற்கு தமிழ் நாட்டின் உதவிகளும் காரணமாக இருக்க முடியும். 

3. கேள்வி :- சமஷ்டி கோரும் நாங்கள் சிங்கள மக்களின் தமிழ் மக்கள் மீதான நல்லெண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு இனப்பிரச்சினை தீர்வு விடயம் தொடர்பாக ஏன் கோரிக்கை வைக்கக்கூடாது? 

பதில்:- அதைத்தான் நாங்கள் தற்போது செய்து வருகின்றோம். இம் மாதம் 17ந் திகதி பாராளுமன்றத்தில் நான் இருந்த போது வாக்கெடுப்பின் போது பிரதமர் ரணில் தான் வீற்றிருந்த ஆசனத்தை விட்டெழுந்து பாராளுமன்ற முன்றிலைக் கடந்து எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்த என்னிடம் வந்து தனக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக நன்றி தெரிவித்து, தற்போதைய நெருக்கடி நிலை கடந்த பின் தமிழர்களின் சகல பிரச்சினைகளையும் தான் ஒவ்வொன்றாகத் தீர்க்கப் போவதாகவும் அதற்கு நாம் தமக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ரணில் வழக்கமாகத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கு அவர்கள் கேட்கும் தனிப்பட்ட உதவிகளைத் தாராளமாக வழங்குவார். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கமாட்டார். அவரிலும் இன்று ஒரு மாற்றம் தெரிகின்றதோ என்று சிந்திக்க வேண்டியுள்ளது! இருந்து தான் பார்ப்போமே? 

4. கேள்வி :- சுமந்திரனுக்கு சட்டமறுசீரமைப்பு குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி அரசாங்கத்தில் ஏன் இணைந்து செயற்படக்கூடாது? 

பதில்:- சுமந்திரனுக்கு ஒரு தனிப்பட்ட அங்கத்துவம் கிடைத்துள்ளது. அவர் அதனை மொத்தத் தமிழ் மக்களின் விடிவுக்காகப் பாவிக்க வேண்டும். எமக்குப் பதவிகள் தந்தால் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்போம் என்பது வட கிழக்குத் தேசியத் தமிழ் கட்சிகளின் பொதுவான பாரம்பரியம் அல்ல. பதவி கொடுத்தால் ஆதரிப்பதும் பணம் பெற்று வாக்களிப்பதும் ஒன்று தான். வெக்கங் கெட்ட செயல்! ஆனால் நாட்டின் நலன் கருதி உடன் பயணிப்பது உத்தமர்களின் செயல்.  

5. கேள்வி :- ஏன் அமைச்சுப் பதவிகளை பெறக்கூடாது? அமைச்சுப் பதவிகளை பெறும் எண்ணங்கள் உண்டா? 

பதில்:- அமைச்சுப் பதவிகள் பெற்ற டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் தமிழ்ப் பிரச்சினைகளைத் தீர்த்துள்ளார்களா? எமக்குத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். அமைச்சுப் பதவிகள் பெறுவது ஒரு பொருட்டல்ல. ஆனால் நிபந்தனைகள் விடுப்பதும் எழுத்து மூல உத்தரவாதங்களைக் கேட்பதும் ஆட்சியாளர்களின் மனோநிலையைக் கணித்து அடுத்த நடவடிக்கைகளில் இறங்குவதற்காகவே. அநேகமாக எனது நிபந்தனைகளுக்குச் சாதகமான எழுத்து மூலமான பதில் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்காது என்பது எனது கணிப்பு. வாய்ச் சொற்களை நம்பி, பிரபுத்துவ உடன்பாடுகளை நம்பி நற்றாற்றில் விடப்பட எமது கட்சி ஆயத்தமில்லை.  

6. கேள்வி :- எதிர்கால திட்டங்கள் தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? 

பதில்:- திட்டங்களை முன்வைக்க உள்ளோம். புலம்பெயர் உறவுகள் முன் வந்து எமது தாயகத்தில் தடைகள் எதுவுமின்றி முதலீடுகள் செய்ய இடமளிக்க வேண்டும் என்று கோர உள்ளோம். ரணிலின் பதிலைப் பொறுத்தே திட்ட அமுல்ப்படுத்தல்களின் முன்னேற்றங்கள் இருப்பன.  

சுமித்தி தங்கராசா

Comments