ஈழத்து நாவல் இலக்கிய முன்னோடி சித்திலெப்பை | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து நாவல் இலக்கிய முன்னோடி சித்திலெப்பை

ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம் என்ற ஆய்வு நூலினை எழுதிய கலாநிதி நா.சுப்பிரமணியம், ஈழத்து தமிழ் நாவலிலக்கிய  முதன் முயற்சிகள் பற்றித் தனது நூலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

'பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கிய முதன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன. 1856ஆம் ஆண்டில் வெளிவந்த காவலப்பன் கதையே தமிழில் வெளிவந்த முதலாவது நாவலென்று மு. கணபதிப்பிள்ளை கருதுகிறார். Parly the Porter      என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கமாக அமைந்த இது யாழ்ப்பாணம் ரிலிஜஸ் சொசையிட்டியின் வெளியீடாகும். ஸன்னா மூர் என்பார் இதன் ஆசிரியர். இந்த நூல் பார்லே என்ற சுமைதாங்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புகளுடன் தமிழ்நாட்டிலே வெளிவந்துள்ளது. இந்த நூற்பிரதிகள் கிடைக்கவில்லை. இதனை நாவல் என்று கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது. காவலப்பன் கதை மேலை நாட்டுச் சமயக் கதைகளிலொன்றாக விருக்கலாம்.

கலாநிதி சுப்பிரமணியனின் ஐயம் சரியானதே என்பதாக அமைந்துள்ளது ஆய்வாளர் என். சரவணன் என்பார் எழுதிய ஷகட்டவிழ்க்கப்படாத காவலப்பன் கதை- இலங்கையின் முதலாவது நாவல் எது? என்ற கட்டுரை. இக்கட்டுரை கார்த்திகை 2020ஜீவநதியில் வெளிவந்தது.

'காவலப்பன் கதையானது மூர் ஹன்னாஹ் என்பவர் 1796இல் இயற்றிய Paley Poter என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூலப்பிரதியை இக்கட்டுரைக்காகத் தேடி எடுத்தபோது அந்த நூலானது அட்டையோடு சேர்த்து 12பக்கங்கள் மட்டுமே கொண்ட சிறு நூல் என்பதைக் காண முடிந்தது. 1856ஆம் ஆண்டு மூர் எழுதிய படைப்புகள் அனைத்தும் மீண்டும் ஒரே நூலாகத் தொகுக்கப்பட்டபோது அந்த நூலில் இந்தக்கதை வெறும் நான்கே பக்கங்களுக்குள் அடங்கிவிட்டன. இன்னும் சொல்லப்போனால் மொத்தமே சுமார் 4500சொற்களை மட்டுமே கொண்ட கதை. அதை ஒரு சிறுகதை என்று வேண்டுமென்றால் கூறலாமேயொழிய ஒரு நாவலாக தமிழில் எப்படி அடையாளப் படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆங்கில உலகில் எங்குமே இக்கதையை ஒரு நாவலாக அடையாளப்படுத்தியதில்லை. குறைந்தபட்சம் ஒரு குறுநாவல் உள்ளடக்கத்தைக்கூட இது கொண்டிருக்கவில்லை. ஆகவே காவலப்பன் கதை என்கிற நூல் வெளிவந்திருந்தாலும்கூட அது நாவலாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது'

இந்நிலையில், 1885இல் வெளிவந்த அசேன்பேயுடைய கதை ஈழத்தின் முதலாவது தமிழ் நாவல் என்பது நிரூபணமாகின்றது. இந்நாவல் பற்றி நா. சுப்பிரமணியன் தனது நூலில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்

'இலங்கை சுப்றீம் கோட்டுப் பிறக்றரும் முஸ்லிம் நேசன் பத்திரிகைப் பத்திராதிபரும் ஆகிய சித்திலெப்பை மரைக்கார் இயற்றிய அசன்பேயுடைய கதை 1885ஆம் ஆண்டு முஸ்லிம் நேசன் அழுத்தகத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.  இந்த நூலின் புதிய பதிப்பொன்று அசன்பேயுடைய சரித்திரம் என்ற தலைப்புடன் 1974இல் திருச்சிராப்பள்ளி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய கழக வெளியீடாக வந்துள்ளது. இதன் கதை மத்திய கிழக்கு நாடுகள் இந்தியா ஆகியவற்றை நிலைக்களனாகக் கொண்டது| எனக் குறிப்பிட்டதோடு நாவலின் கதைச்சுருக்கத்தையும் தந்துள்ளார்:

மிசுறு தேச (எகிப்து) காயீர் பட்டினத்து யூசுபு பாக்ஷா என்னும் இராஜவம்சத்தவருக்குப் பிறந்த மகன் குழந்தைப் பருவத்திலேயே கடத்தப்பட்டு  பம்பாயில் ஜகுபர் என்பவரிடம் வளருகிறான். இக் குழந்தைக்கு அஸன் என்ற பெயரிட்டனர். பதினான்னு வயதில் ஜகுபரை விட்டுப்பிரிந்து வஞ்சகரின் சூழ்ச்சிக்காளான இவன் அவற்றினின்று தப்பிக்க கல்கத்தா நகருக்குச் சென்று அங்கிருந்த ஆங்கில தேசாதிபதி நாயகத்தின் ஆதரவில் கற்று மேம்படுகிறான். லார்டு டெலிங்டனின் மகள் பாளினாவின் காதலனாகிறான். மிசுறு தேசத்திலிருக்கும் தனது பெற்றோரைக்காணச் செல்கிறான். அங்கும் பல சூழ்ச்சிகட்கு ஆட்பட்டுத் தப்பித் தீயோரைப் பிடித்துக் கொடுக்கிறான். இவ்வீரச் செயல்களுக்காக, பே என்னும் கௌரவ விருதைப் பெறுகிறான்.

இக்கதையம்சம் மர்மச் சம்பவங்களுடனும் வீரசாகச் செயல்களுடனும் இஸ்லாமிய பண்பாட்டு அம்சங்களுடனும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் எம். ஏ. நுஃமான் சித்திலெப்பையின் அசன்பே சரித்திரம் என்ற தனது கட்டுரையில் (ஞானம் - டிசம்பர் 2011இதழ்) பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

'சித்திலெப்பையின்  நாவல் வெளிப்படையாகவே அறப்போதனை நோக்கம் கொண்டது. இஸ்லாமிய வாழ்க்கை முறையின் உயர்வைக் காட்டுவது ஆசிரியரின் நோக்கம் என்று தெரிகிறது. தனது பிரதான பாத்திரமான அசனை இஸ்லாமிய நம்பிக்கையில் ஆழ வேரூன்றிய ஒரு நவீன இளைஞனின் மாதிரி உருவாக அவர் படைத்திருக்கிறார்.... அசனுக்கும் பாளினுக்கும் இடையிலான திருமணத்தை இஸ்லாத்துக்கும் மேற்குலகிற்கும் இடையிலான திருமணம் பற்றிய ஒரு 19ஆம் நூற்றாண்டுப் பார்வையாக  நாம் விளக்க முடியும். சித்திலெப்பை தனது கதாநாயகனுக்கு அவனது மத பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த ஒரு பெண்ணையன்றி மேலைத்தேயப் பண்பாட்டில் வளர்ந்த ஒரு பெண்ணைச் சோடியாக்குவது அன்றைய சூழலில் மிகுந்த முக்கியத்துவம் உடையது. சித்திலெப்பை பழமைவாத அல்லது மரபுவழி இஸ்லாத்தையும் மேற்குமயமாதலையும் நிராகரிக்கிறார். அவர் இஸ்லாம் மயப்படுத்தல் மூலமான ஒரு நவீன மயப்படுத்தலை விரும்பினார் என நாம் கருதலாம். அவரது காலத்தைப் பொறுத்தவரை இதை ஒரு முற்போக்கான கருத்துநிலை எனக் கருத முடியும்'

அறிஞர் சித்திலெப்பை கண்டியில் பிறந்தவர். இவரது தந்தை முகம்மது லெப்பை அக்காலத்தில் ஆங்கிலம் கற்ற மிகச் சிலருள் ஒருவர். பிரித்தானிய ஆட்சியாளரால் 1833ஆம் ஆண்டில் இலங்கையின் முதல் முஸ்லிம் வழக்கறிஞராக நியமனம் பெற்றவர். இவருக்கு மூன்றாவது குழந்தையாக 1838ஜூன் 11இல் கண்டியில் பிறந்தவர்தான் முகம்மது காசிம் சித்திலெப்பை.

இவர், திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் குர்ஆன் ஓதல், மார்க்க சட்ட திட்டங்கள் பற்றிய அறிவு பெற்றதோடு, அரபு, தமிழ், ஆங்கிலம் சிங்களம் ஆகிய மொழிகளிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். இவர் தந்தையைப் போன்றே சட்டக் கல்வியிலும் சிறந்து விளங்கினார்.

கண்டி மாவட்ட நீதி மன்றத்திலே 1862இல் வழக்கறிஞராக நியமனம் பெற்ற சித்திலெப்பை 1864ஆம் ஆண்டில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக  நியமனம் பெற்றார். சமகாலத்தில் பிரசித்த நொத்தாரிசாகவும் பணிபுரிந்தார். கண்டி மாநகரசபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமையாற்றிய இவர், சிறிது காலம் மாநகரசபை உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.

கல்வியை முன்னிறுத்தி சமுதாயத்தை மேம்படச் செய்யும் முயற்சிகளில் தீவிரமாக இவர் ஈடுபட்டார். முஸ்லிம்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த 1882ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் திகதி முஸ்லிம் நேசன் என்ற பெயரில் அரபு தமிழ் வார இதழ் ஒன்றினை ஆரம்பித்தார். தமது வாரப்பத்திரிகை மூலமாகத் தமது சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு தாம் ஆற்றவிருந்த தொண்டுகள்பற்றி விளக்கினார். 1884ஜூலை மாதத்திலிருந்து இவரது நாவல் அசன்பேயுடைய கதை முஸ்லிம் நேசனில் தொடராக வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.  இஸ்லாத்தின் மீது அவர் கொண்டிருந்த பக்தியானது தமது சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்கான பரிகாரங்களைத் தேட அவரைத் தூண்டியதால் அவர் தமது சட்டத் தொழிலையும் கண்டி மாநகர சபையில் உறுப்பினர் என்ற வகையில் தமக்கிருந்த தகுதியையும் தூக்கி எறிந்தார். தமது பிற்கால வாழ்க்கை முழுவதையும் தமது சமுதாயத்தின் மேம்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் தீவிரமாக ஈடுபடுவதற்காக 1984இல் அவர் தலைநகர் கொழும்பைத் தனது வாழ்விடமாகக் கொண்டார்.

1884ஆம் ஆண்டில் கொழும்பு, புதிய சோனகத் தெருவிலே முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலையை அவர் தோற்றுவித்தார். இப்பாடசாலை பின்னர், 'அல்-மதரசதுல் கைரியா' என்னும் பெயரில் இயங்கியது. இதுவே பிற்பாடு கொழும்பு சாஹிரா கல்லூரியாக மலர்ந்தது. அடுத்துவந்த ஆண்டுகளில் பல பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்கான பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. சித்திலெப்பை பெண்கள் கல்வியிலும் அதிக அக்கறை காட்டினார். 1891இல் பெண்களுக்கான பாடசாலை ஒன்றை இவர் கண்டியில் ஆரம்பித்தார்.

முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கத்தின் தந்தை, முஸ்லிம் பத்திரிகைத்துறை முன்னோடி, ஈழத்தின் முதலாவது நாவலை எழுதியவர் போன்ற பல்துறை சிறப்புகளைக் கொண்ட சித்திலெப்பை 05-.02.-1898இல் அமரத்துவம் அடைந்தார். (தொடரும்)

Comments