இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து போனதற்கான உண்மைக் காரணிகள் எவை? | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து போனதற்கான உண்மைக் காரணிகள் எவை?

தற்பொழுது எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரநெருக்கடியிலிருந்து எமது நாட்டைமீட்டெடுப்பதற்கான கடும் பிரயத்தனங்கள்அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சர்வதேசநாடுகளிடம் ஒத்துழைப்புகளைக் கோரிவரும் அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவியைப்பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை இலங்கைமத்திய வங்கியும், நிதி அமைச்சும் மேற்கொண்டுள்ளன.

இருந்தபோதும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் நாளுக்கு நாள் சிரமங்களை எதிர்கொண்டே வருகின்றனர். பொருட்களின் விலைகள் அடிக்கடி உயர்ந்து செல்வதால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.

நாட்டின் பொருளாதார சூழல் குறித்து உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்காமையே நெருக்கடிகளுக்குக் காரணம் எனப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்ஹவும் கூறி வருகின்றனர். அவர்களது கருத்தில் உண்மை இல்லாமலில்லை.

நாடு எதிர்கொண்டுள்ள தற்போதைய இக்கட்டான சூழ்நிலையின் உண்மைத் தன்மையை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதுடன், நீண்டகால பொருளாதார ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு அரசியல்வாதிகள் குறுகிய அரசியல் இலாபம் கருதாது, கட்சி பேதங்களை மறந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ பாராளுமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற அரசாங்க நிதி பற்றிய குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் எரிபொருட்களுக்கு விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட போது தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டிருந்தது. எனினும், அவ்வாறானதொரு விலைச்சூத்திரத்தை மீண்டும் கொண்டுவர நேர்ந்திருப்பதையும் அவர் இங்கு சுட்டிக் காட்டியிருந்தார்.

இவ்வாறான பின்னணியிலேயே நாட்டின் எதிர்காலத்துக்காக சிறந்த நோக்கத்தில் கொண்டு வரப்படும் கொள்கைத் திட்டங்களை அரசியல் இலாபங்களுக்காக எதிர்க்காமல் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு கட்சி பேதம் இன்றி அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியிருந்தார்.

'அண்மைக் காலமாக வரவுசெலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது மதிப்பீடு செய்யப்படும் அரசாங்கத்தின் வருமானம் உண்மை நிலைமைக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியம் அற்ற வகையில் குறிப்பிடப்படுவதால் பாராளுமன்றம் பிழையாக வழிநடத்தப்படுகிறது.

இவ்வாறு அதிக தொகை வருமானமாக மதிப்பீடு செய்யப்படுவதால் அதற்கு ஏற்ற வகையில் அமைச்சுகளின் செலவினங்களுக்காக அதிக தொகை ஒதுக்கப்படுகிறது. இறுதியில் உண்மையான வருமானத்திலும் விட செலவினங்கள் பன்மடங்கு அதிகமாக அமைந்து விடுகின்றன.

இதனால் துண்டுவிழும் தொகை அதிகரிப்பது மாத்திரமன்றி, அதனை ஈடுசெய்வதற்காக கடன்சுமைக்குள் தள்ளப்பட வேண்டி ஏற்படுகிறது' என்பதையும் மத்திய வங்கியின் ஆளுநர் இங்கு விளக்கிக் கூறியிருந்தார்.

எனவே ஆட்சியாளர்கள் யாராக இருந்தாலும் வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கும் போதும் சரி, பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்லும் போதும் சரி உண்மையான தகவல்களை மக்களுக்கு வழங்கி அவற்றுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுப்பதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

கடந்த காலத்தில் பாராளுமன்றக் குழுக்களுக்கு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் அழைக்கப்பட்ட போது சரியான புள்ளிவிபரங்களை அவர்களுக்கு வழங்கத் தவறியியிருந்தமை குறித்தும் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் நிதி அமைச்சு மற்றும் மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் குறித்தும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் மேலும் விளக்கமளித்த மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிடுகையில், எங்கிருந்தாவது டொலர்களைப் பெற்றுக் கொடுத்தாலும் மின்சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லிட்ரோ காஸ் போன்ற நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள அதிக நஷ்டம் காரணமாக டொலர்களைக் கொள்வனவு செய்வதற்கு அவர்களிடம் போதிய ரூபா இல்லாமல் உள்ளது.

தற்போதைய நிலையில் எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 600மில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுவதாகவும், ஏற்கனவே வேறு திட்டங்களுக்காக வழங்கப்படவிருந்த தொகையை இந்தத் தேவைக்குப் பயன்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், முதல் சுற்றில் தொழில்நுட்பப் பிரிவின் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்து, கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடிய 3-4மாத காலப்பகுதி சவால் மிக்கதாக அமையும் என்றும், இதனை எதிர்கொள்ள முடிந்தளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய வங்கி பாராளுமன்றத்துக்கு விளக்கமளித்தது.

இதுஇவ்விதமிருக்க, ‘கோப் குழு’ என அறியப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு முன்னிலையிலும் இலங்கை மத்திய வங்கி இந்த வாரம் அழைக்கப்பட்டிருந்தது.

மத்திய வங்கி தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும், திறைசேரியின் செயலாளரும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் குறிப்பிடத்தக்க முடிவொன்று எடுக்கப்பட்டமை அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான காரணங்கள் மற்றும் இந்த நிலைக்குச் செல்லத் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட பாராளுமன்றக் குழுவொன்றை அமைக்குமாறு அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் தலைவர் (கோப் குழு) பேராசிரியர் சரித ஹேரத் பரிந்துரைத்தார்.

பொருளாதாரத்தை வழிநடத்திய ஒரு சிலரின் தீர்மானங்கள் காரணமாக முழு நாடும் இன்று பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டிருப்பதாகவும், இதனைக் குற்றமாகக் கருதி விரைவில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதும் கோப் குழுவின் நிலைப்பாடாக அமைந்தது.

நாடு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் நிலைக்குச் செல்வதற்கு காரணமாக அமைந்த விடயங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டிருந்தது.

தற்போதைய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு காலப் பகுதியில் வரி வீதத்தைக் குறைப்பதற்கு எடுத்த தீர்மானம் மற்றும் தொற்றுநோய் சூழல் என்பன இதற்குப் பிரதான காரணங்களாக அமைந்ததாக இங்கு கூறப்பட்டது. அது மாத்திரமன்றி, நாணய மாற்று விகிதத்தை மிதக்க விடாது ஒரே தொகையில் தக்கவைத்திருப்பதற்கு எடுத்த தீர்மானம் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் கோப் குழு விசாரணைகளில் புலப்பட்டிருந்தது.

2020ஏப்ரல் - மார்ச் மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன்பெறச் சென்ற போது இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இவ்வாறான பின்னணியில் கடன்வசதியொன்றைப் பெறுவதாயின் இலங்கை கட்டாயம் கடன் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டும் என சர்தேச நாணய நிதியம் அப்போதைய மத்திய வங்கி ஆளுநருக்கு அறிவித்துள்ளது.

இருந்தபோதும் முன்னைய மத்திய வங்கியின் ஆளுநரும், நிதி அமைச்சும் இவ்விடயத்தில் அசட்டையைக் கடைப்பிடித்தமை தவறானதெனவும்   இங்கு தெளிவாகப் புலனானது. மத்திய வங்கியின் நாணயச் சபையினால் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஒரு சிலரின் தீர்மானங்கள் தாக்கம் செலுத்தியுள்ளன.

அதேநேரம், முன்னாள் நிதி அமைச்சர் இவ்வாறான நிலைமை குறித்து ஒருபோதும் பாராளுமன்றத்துக்குத் தெரிவித்திருக்கவில்லை என்றும், நிதி அமைச்சர் சார்பில் சபைக்குக் கருத்துக்களைத் தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் உரிய புள்ளிவிபரங்களை வழங்காது அனைவரையும் பிழையாக வழிநடத்தியிருப்பதாகவுமம் கோப் குழுவின் உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியிருந்தார். இது பாரியதொரு தவறு என்பதும் இங்கு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், 2019நவம்பர் சர்வதேச நாணய நிதிய அறிக்கைக்கு அமைய இலங்கையின் கடன் நிலைபேறான நிலையில் காணப்பட்டுள்ளது. எனினும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் சில மாதங்கள் கழித்து வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் முன்யை நிலைமைக்கு முற்றுமுழுதும் மாற்றான நிலைமையே காணப்பட்டுள்ளது. குறிப்பாக அப்போதிருந்த ஜனாதிபதி செயலாளரின் தலையீட்டின் ஊடாக 600பில்லியன் ரூபா வரியைக் குறைப்பதற்கான தீர்மானம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்றும் இங்கு கேள்வியெழுப்பப்பட்டது.

புதிய தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாகப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

மத்திய வங்கியின் கையிருப்பைப் பயன்படுத்தி நாணய மாற்று விகிதத்தைத் தொடர்ந்தும் பிடித்து வைத்திருக்காது மிதக்க விடவேண்டும் என்று நாணயச் சபையின் உறுப்பினராக இருந்த சஞ்ஜீவ ஜயவர்த்தனவும் தானும் கடுமையாக எதிர்த்ததாக நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர் கலாநிதி ராணி ஜயமஹா தெரிவித்தார்.

இருந்தபோதும் நாணயச்சபையின் உறுப்பினர்கள் மூவருடைய தீர்மானத்துக்கு அமைய நாணயமாற்று விகிதம் ஒரே தொகையில் தக்கவைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அப்போது மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன், திறைசேரியின் முன்னாள் செயலாளர் மற்றும் நியமிக்கப்பட்ட நாணயச் சபை உறுப்பினராக சமந்த குமாரசிங்க ஆகியோரின் விருப்பத்துக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற பல்வேறு பிழையான முடிவுகள் நாட்டின் பொருளாதாரத்தில் கடினமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்திருந்தமை இந்தக் கலந்துரையாடல்களின் போது புலப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் காணப்படும் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்க சேவையில் உள்ளவர்களைக் குறைந்தளவு பயன்படுத்தி பணிகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி, எதிர்வரும் மூன்று வாரங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான வேலைத்திட்டத்தை உடனடியாகத் தயாரிக்குமாறும் கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தனவிடம் பரிந்துரைத்தார்.

இது இவ்விதமிருக்க, அரசாங்கத்தின் புதிய நிதியமைச்சராகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் செலவினங்கள் குறிப்பாக அரசாங்க ஊழியர்களின் சம்பளத் தேவை உள்ளிட்டவற்றுக்கு மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிட வேண்டியிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எதுவாக இருந்தாலும் இந்த நிலைமை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் உணவுப் பஞ்சம் ஏற்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. எனவே, இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒத்துழைப்புடன் செயற்படுவதுடன், இவற்றுக்குக் காரணமான அரசியல் சக்திகள் நிலைமையை உணர்ந்து சுயநலமின்றி பொதுநலத்துடன் செயற்படுவதே காலத்தின் தேவையாகும். மக்களின் எதிர்ப்பார்ப்பு அதுவேயாகும்.

சம்யுக்தன்

Comments