அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்தால் மாத்திரமே நாட்டில் இனிமேல் ஸ்திரத்தன்மை! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்தால் மாத்திரமே நாட்டில் இனிமேல் ஸ்திரத்தன்மை!

நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அராங்கத்தை உறுதியாகப் பேணும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கநியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர்.

இவர்களில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மாத்திரமன்றி ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள்மற்றும் ஆளும் கட்சியிலிருந்து சுயாதீனமாகச் சென்ற 10கட்சிகளின் கூட்டணியின் உறுப்பினர் எனப் பலரும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான பின்னணியில் அரசியல் ரீதியில் நீண்டகால ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அமைச்சரவையில் 21ஆவது திருத்தத்துக்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள விஜயதாச ராஜபக்ஷ கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தற்பொழுது நடைமுறையில் உள்ள 20ஆவது திருத்தத்தைத் திருத்தும் வகையிலும், 19வது திருத்தத்தில் காணப்பட்ட முக்கியமான விடயங்களை மீண்டும் நடைமுறைப்படுத்தும் வகையிலும் 21ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவதற்கான யோசனையை முன்வைத்திருந்தார்.

குறித்த வரைவை கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடுவது என கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்துவது, பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்துவது போன்ற விடயங்கள் இந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயாதீனக் குழு சார்பில் 19ஆவது திருத்தத்தை மீண்டும் கொண்டுவரக் கூடிய 21ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தனிநபர் சட்டமூலங்களாக சபாநாயகரிடம் ஏற்கனவே கையளிக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அதன் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தனிநபர் சட்டமூலத்தைச் சமர்ப்பித்திருந்ததுடன், சுயாதீனக் குழு சார்பில் விஜயதாச ராஜபக்ஷ மற்றுமொரு தனிநபர் சட்டமூலத்தை சமர்ப்பித்திருந்தார்.

இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் உயர்பதவிகளுக்கு நியமிக்கப்படுவதைத் தடுப்பது, பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பலப்படுத்தி ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்தல் உள்ளிட்ட பல யோசனைகள் அதில் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட விஜயதாச ராஜபக்ஷ அரசாங்கத்தின் சார்பில் 21வது திருத்தச்சட்டமூலத்துக்கான வரைவை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார். இருந்தபோதும் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைபில் முன்னர் பல தரப்பினராலும் முன்மொழியப்பட்டிருந்த முக்கியமான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லையென்றும், குறிப்பாக இரட்டைப் பிராஜவுரிமை விடயம் உள்ளிட்டவை அதிக கவனம் செலுத்தப்படவில்லையென்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தை நீக்குவதற்கு பொதுஜன பெரமுனவினர் விரும்பவில்லையென்ற என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இருந்தபோதும், கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 21ஆவது திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதில் சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், 43வது படையணி, விமல் வீரவன்ச உள்ளிட்ட 10கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இரட்டைப் பிரஜாவுரிமை விடயத்தை 21ஆவது திருத்தத்தில் இல்லாமல் செய்வது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சுயாதீன ஆணைக்குழுகளைப் பலப்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இருந்தபோதும் ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதை இரண்டாம் கட்டமாக முன்னெடுப்பது என்றும், சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாத அரசியலமைப்புத் திருத்தமொன்றுக்குத் தற்பொழுது செல்வது என்ற முடிவும் இங்கு எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கலந்து கொள்ளாமையால் அவர்களையும் இணைத்துக் கொண்டு எதிர்வரும் 03ஆம் திகதி மீண்டும் கூடி 21வது திருத்தச்சட்டமூல வரைபை இறுதிப்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொண்டிருக்கவில்லை என்றபோதும் அவர்கள் தமது யோசனைகளை நீதி அமைச்சருக்கு அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் பாராளுமன்றத்துக்கோ அல்லது ஏதாவது உயர்பதவிக்கோ தெரிவு செய்யப்படுவதைத் தடுப்பது, அமைச்சுக்களின் செயலாளர்கள் அரசியலமைப்புப் பேரவையின் மாத்திரம் ஊடாக நியமிக்கப்படுவது, பாராளுமன்றத்தின் காலத்தைக் குறைப்பது, ஜனாதிபதி அமைச்சுப் பதவியை வகிப்பதைத் தடுப்பது உள்ளிட்ட திருத்தங்கள் 21ஆவது திருத்தச்சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அவர்கள் முன்மொழிந்துள்ளனர். அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் கட்சிகளின் கூட்டத்தில் இவ்விடயமும் கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்விதமிருக்க, பாராளுமன்ற குழுக்களைப் பலப்படுத்துவது தொடர்பிலும் கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ‘கோப் குழு’ என அறியப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு மற்றும் ‘கோபா குழு’ என அறியப்படும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு உள்ளிட்டவற்றை மேலும் பலப்படுத்தி, அவற்றின் செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற நிலையியற் கட்டளையில் திருத்தங்களைக் கொண்டுவரவிருப்பதாக சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்திருந்தார். இதற்கான யோசனையை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் கையளிக்கவிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இலங்கையின் அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டிய தேவையை போராட்டக் காரர்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அரசியல் ரீதியான மாற்றம் அவசியம் என்பதை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் கூட அண்மையில் 21ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அனைத்துத் தரப்பினரும் இந்த விடயத்தை ஏற்றுக் கொண்டிருப்பதால் அரசியல் கட்சிகள் தமக்கான பொறுப்பினை சரியாக நிறைவேற்றுவதற்கு முன்வர வேண்டும் என்பதே மக்களின் விருப்பாகும். நாட்டில் ஸ்திரமான அரசியல் நிலைமையொன்று காணப்பட்டாலே பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடிவதுடன், சர்வதேச நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்கும்.

பி.ஹர்ஷன்

Comments