பொருளாதார சிக்கலால் குப்புறக் கவிழ்ந்திருக்கும் மலையக வீடமைப்புத் திட்டம் | தினகரன் வாரமஞ்சரி

பொருளாதார சிக்கலால் குப்புறக் கவிழ்ந்திருக்கும் மலையக வீடமைப்புத் திட்டம்

இ.தொ.கா. ஒரு ஸ்திரமான அரசியல் நிலைப்பாட்டை தற்போதைய நிலையில் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் உட்கட்சிப் பூசலாகக்கூட இருக்கலாம். இப்படி விமர்சிப்பதற்குக் காரணம் இருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சர்வகட்சி மாநாடு ஒன்றைக் கூட்டியிருந்தார். எவரும் எதிர்பார்த்திராதபடி இதில் தாம் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார் ஜீவன் தொண்டமான்.  

அறிவித்தப்படியே நடக்கவும் செய்தார். ஜீவன் தொண்டமானின் தீர்மானம் பற்றி பல்வேறு எதிர்வுகூறல்கள் இடம்பெற்றன. இது சுயநல ஊடல் நாடகம் என்று பேசப்பட்டது. அனைத்தையும் ஆவேசமாக மறுத்தார் ஜீவன் தொண்டமான். பின்னர் திடுதிப்பென்று அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக பகிரங்கப்படுத்தினார். இங்கு தான் உள்குத்து உதயமானதாகத் தெரிகிறது. ஜீவனைவிட தொழிற்சங்க, அரசியல் அனுபவமுள்ளவர் மருதபாண்டி ராமேஸ்வரன். இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினரும் அதன் துணைத்தலைவர்களில் ஒருவருமாவார் இந்த ராமேஸ்வரன். 

அரசாங்கத்திலிருந்து அதிரடியாக விலகல் என்பது ராமேஸ்வரனுக்கு உடன்பாடில்லாத சங்கதி. இதனை ஜீவனிடமும் அவர் சொல்லி வைத்தார். எனினும் அது எடுபடவில்லை. ஜீவன் தனது தீர்மானத்தில் பிடியாக இருந்தார். இந்நிலையில் தான் காலிமுகத்திடல் போராட்டம் தீவிரமானது. ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஓரங்கட்டி இளைஞர்கள் முழக்கமிடவே பலருக்கு தேள்கொட்டிய கதையானது. 

கடந்த 9ஆம் திகதி அலரிமாளிகையின் அருகிலும் காலி முகத்திடலிலும் போராட்டக்களத்திலிருந்த நிராயுதபாணி இளைஞர்கள் மீது காடையர்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மூலகாரணமாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவே இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  

இ.தொ.காவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு இன்றோடு முடிந்தது என்று ஜீவன் ட்விட்டர் போட்டார். இதனைத் தொடர்ந்து பாராளுமன்றம் கூடியது. ஜீவனும் ராமேஸ்வரனும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்துக்கு ஆதரவான கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அதனை மேசைமீது தட்டி ராமேஸ்வரன் ஆமோதித்ததை காணொளி காட்சிமூலம் பலரும் கவனித்திருப்பார்கள்். அதேவேளை ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்க வியுூகங்களை வகுத்துக் கொண்டிருந்தார். அவர் தம்மோடும் தொடர்புகொண்டு ஆதரவு கோரியதாக ஜீவன் கூறியிருந்தார். எதிர்பார்த்தது போலவே மறுநாள் ரணில் பிரதமராக பதிவியேற்றார். அவருக்கு தமது முழு ஆதரவும் கிடைக்கும் என்று ஜீவன் ஊடகங்களுக்குத் தொிவித்தார். இதன்மூலம் இ.தொ.கா. அரசாங்கத்தோடு இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது எழுதப்படும் வரை அது இடம்பெறவில்லை. 

இதனிடையே கடந்த 17ஆம் திகதி இரண்டு பிரேரணைகள் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்காக விடப்பட்டன. அதில் முதலாவது பிரேரணை பிரதி சபாநாயகர் தெரிவு. இதில் அரசாங்கத்தின் சார்பில் ஒருவரும் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள்சக்தி சார்பில் ஒருவரும் நிறுத்தப்பட்டனர். இரகசிய வாக்கெடுப்பு நடந்தது. அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட்டவர் 109வாக்குகளும் எதிர்க்்கட்சி சார்பில் போட்டியிட்டவர் 78வாக்குகளும் பெற்றனர். இதில் இ.தொ.காவின் ஆதரவு எதிர்கட்சிக்கே கிடைத்திருக்க இடமுண்டு. ஏனெனில் இதனையடுத்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஏ. சுமந்திரன் பாராளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்துக்கு புறம்பாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மீதான குறைகூறல் பிரேரணை விவா தத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார். இப்பிரேரணை மீது மீண்டும் ஒரு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இதில் ஜீவன் தொண்்டமானும் ராமேஸ்வரனும் அதற்கு ஆதரவாகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது  

இவ்வாறான செயற்பாடுகள் சமகால தேசிய அரசியல் ரீதியிலான கொதிநிலையின் அழுத்தம் காரணமாக கூட இடம்பெறலாம். அதேநேரம் தமது எதிர்பார்ப்பின் இலக்கினை ஆட்சியாளருக்கு உறுத்தலாக வெளிபடுத்தும் பாங்காகக்கூட அமையலாம். இதுதானே அரசியல். இதேசமயம் மலையகத்தில் மற்றுமொரு கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணி மட்டும் ஸ்திரமான போக்கை கொண்டிருப்பதாகக் கூறமுடியாது. அங்கும் அரசியல் சதுரங்க ஆட்டம் இடம்பெறவே செய்கிறது. ஒருவகையில் இருகட்சிகளுக்கும் இடையில் செம போட்டி. 

நடுநாயகமாக ரணில் இருப்பதால் மலையக மக்கள் மெளனமாகவே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவா்களைப் பொறுத்தவரை இந்த இரண்டு மலையக அணிகளில் ஏதாவது ஒன்று ஆட்சி செய்யும் அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்தால் மட்டுமே அற்ப சங்கதிகளேனும் நிறைவேற்றப்பட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். தானும் அது நப்பாசையா இல்லை தப்பாசையா என்பது காலத்தின் கரங்களில். 

இதனை நீங்கள் வாசிக்கும் நேரத்தில் மலையக கட்சிகளில் ஏதாவது ஒன்று ரணிலுடன் அணி சேர்ந்திருந்தால் ஆச்சரியப்பட வேண்டாம். தரா்கள். இனி இங்கே பேசவேண்டிய ஒரு பாரிய விவகாரம் இருக்கிறது. அது மலையக கட்சிகளின் முடிவை அடுத்து தொடர வேண்டிய ஒரு சமாச்சாரம். பெருந்தோட்ட வீடமைப்பு விடயமே அது. சமகால பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் ரணில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் இடைக்கால வரவுசெலவு திட்டத்தில் பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டத்திற்கு நிதியொதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எமக்கு படவில்லை. இந்திய நிதியுதவியிலான வீடமைப்புத் திட்டமும் சங்கடத்தை எதிர்நோக்கவே செய்கிறது. 

ஏனெனில் இந்திய அரசாங்கம் வீடொன்றுக்கு தலா 12இலட்சம் ரூபாவை வழங்குகிறது. கடந்த காலத்தில் வீடமைப்புக்கான உபகரணங்களின் விலை நிர்ணயப்படி வீடொன்று நிர்மாணிப்பதற்கு குறைந்தபட்சம் 15இலட்சமாவது தேவைப்பட்டது. முன்னைய ஆட்சியில் பழனி திகாம்பரமும் மஹிந்த ஆட்சியில் ஜீவன் தொண்டமானும் அரசாங்கத்துக்கூடான நிதியொதிக்கீட்டிலிருந்து எஞ்சிய தொகையை பெற்று வீடுகளைப் புூர்த்தி செய்து வந்தார்கள். அந்த வகையில் ஜீவன் தொண்டமான் முன்னைய ஆட்சியில் முழுமை பெறாத சுமார் 1000வீடுகளை பூரணப்படுத்தி பயன ாளிகளிடம் கையளித்திருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.  

இன்று வீடமைப்புக்குத் தேவையான பொருட்களின் விலை ஜீரணிக்க முடியாதபடி நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. சீமெந்தின் விலை மலைபோல உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வீடொன்றைக் கட்டிக் கொள்வது என்பது சவாலான சங்கதி. தனவந்தர்களே வீடுகட்டிக் கொள்ளத் தயங்கும்போது பெருந்தோட்ட மக்களின் நிலைபற்றி விவரிக்க தேவையில்லை. தற்போதைய நிலையில் இந்திய வீடமைப்புத் திட்டம் தொடர வேண்டுமானால் இலங்கை அரசின் நிதியுதவி நிச்சயம் தேவை. அதற்கான உந்துதலை தரவேண்டிய பொறுப்பு மலையகத் தலைமைகளை சார்ந்தே உள்ளது. ஆனால் அரசாங்கத்தில் பங்காளியாகாமல் எதுவுமே கிடைக்கப் போவதில்லை. இதுவே யதார்த்தம்.  

ஏனெனில் ஏற்கனவே ஒதுக்கியபடி இந்திய அரசாங்கத்திடம் இருந்து மேலதிகமாக எதனையும் எதிர்பார்க்க முடியாது. தவிர மொத்தமாக 14ஆயிரம் வீடுகளுக்கான நிதியினை வழங்க இந்திய அரசாங்கம் முன்வந்த நிலையில் மேலும் அதனை தொந்தரவு பண்ண இயலாதே. எனவேதான் மலையகக் கட்சிகள் எடுக்கப்போகும் முடிவு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.  

தற்போது பேரம்பேசல் ரீதியிலான அரசியல் காய்நகர்த்தல் அவசியமாகிறது. அதேநேரம் சோரம் போகும் அரசியல் நகர்வும் ஆபத்தானதே ஆகும். தேசியக் கட்சிகளின் நலனைவிட சமூகத் தேவைக்கான அர்ப்பணங்களே முக்கியம். தொடர்ந்தும் மதில்மேல் புூனைகளாக குழம்பிக் கொண்டிருந்தால் ஆகப்போவது எதுவுமே கிடையாது.

அதேவேளை தேசிய கட்சிகளாக தம்மையும் காட்டிக் கொள்ள அல்லது நிலைநிறுத்திக் கொள்ள மலையக கட்சிகள் எத்தனிக்கும் பட்சத்தில் மலையக சமூகம் பொறுமை காட்டுவது அவசியமானது. ஏதிர்ப்புகள் ஈடேறுவது உறுதியானால் அர்ப்பணிப்புகளுக்கு அர்த்தம் கிடைக்கவே செய்யும் புரிந்துக்கொள்ள வேண்டியவா்கள் புரிந்துக் கொண்டால் சரி. எடுக்கும் எந்த முடிவும் தொலைநோக்கு கொண்டதாக இருக்க வேண்டும்.   

பன். பாலா

Comments