லண்டனில் மலையக இலக்கிய மாநாடு | தினகரன் வாரமஞ்சரி

லண்டனில் மலையக இலக்கிய மாநாடு

அறுபதுகளுக்குப்பின் கிளர்ந்தெழுந்த மலையக இலக்கிய வளர்ச்சியில் தினகரனின் பங்கு மகத்தானதாகும்.பேராசிரியர் க.கைலாசபதி தினகரனின் ஆசிரியராக இருந்தபோது மலையக இலக்கியத்தை தினகரனில் நீரூற்றி வளர்த்தாரென்று சொல்வது பொருந்தும். அவர் சி.வி.வேலுப்பிள்ளை, என்.எஸ்.எம்.ராமையா, சாரல் நாடன் ஆகியோரது மலையக எழுத்துகளுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்திருந்தார். தினகரனில் சி.வி.வேலுப்பிள்ளையை மலையகத் தலைவர்களைப்பற்றி தொடர்ந்து எழுதுமாறு ஊக்குவித்து 26வாரங்கள் அவரது கட்டுரைகளை கைலாசபதி தினகரனில் தொடர்ந்து வெளியிட்டார். அந்தக்கட்டுரைகள்தான் இன்று தொகுக்கப்பட்டு 64ஆண்டுகளுக்குப்பின் 'மலையக அரசியல் தலைவர்களும் தளபதிகளும்' என்ற தலைப்பில் லண்டனில் நடைபெறவிருக்கும் மலையக இலக்கிய மாநாட்டில் வெளியிடப்படவிருக்கிறது என்பது தினகரனுக்கு உண்மையில் பெருமை சேர்க்கும் செய்தியாகும்.  

மலையக இலக்கியத்தின் பிதாமகன் என்று மு.நித்தியானந்தன் குறிக்கும் சி.வி.வேலுப்பிள்ளையின் மிக முக்கிய நாவல்கள் தினகரன் ஏட்டிலேயே வெளியாகின என்பது எங்களுக்கு பெருமை தருகிறது. தினகரனின் உதவி ஆசிரியராகவிருந்த மு.நித்தியானந்தன் எழுதிய மிக முக்கிய இலக்கிய வரலாற்றுத் தொடரான 'துங்ஹிந்த சாரலில்...' என்ற இலக்கியத் தொடர் கட்டுரை தினகரனிலேயே வெளியாகியது. 'மலையகப் பரிசுக் கதைகள்' பாரிஸ், லண்டன், கொழும்பில் வெளியான போது தினகரன் தலையங்கங்கள் எழுதிக் கெளரவித்திருக்கிறது.   பேராசிரியர் கைலாசபதிக்குப் பின்னர் தினகரன் ஆசிரியராக இருந்த கலாசூரி ஆர் சிவகுருநாதனது பங்களிப்பும் இவ்விடத்தில் ஞாபகம் ஊட்டப்பட வேண்டும். மலையகத்தில் எழுத்தாளர்கள், சிறுகதை ஆசிரியர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் என பலரும் இன்று சமூகத்தில் இனங்காணப் படுவதற்கு இவரது பங்களிப்பும் இன்றியமையாதது.  

 அதன் பின்னர் சிறிது காலம் ஆசிரியராக இருந்த இலக்கிய ஆர்வலர் மறைந்த ராஜ ஸ்ரீகாந்தனின் மலையகத்துக்கான இலக்கிய பணியையும் நாங்கள் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். அவ்வாறு தினகரனின் ஆசிரியர்களாக இருந்த சகலருமே மலையக இலக்கியத்துக்கு தங்களால் ஆன பணிகளை செய்தே வந்துள்ளனர். 

ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு, குறிப்பாக மலையகத்து இலக்கிய வளர்ச்சிக்கு தினகரன் ஆற்றிய சேவை வரலாற்றில் பதிவு பெற்றிருக்கிறது. அப்பெரும் பாரம்பரியத்தின் வழிநின்று இன்றும் மலையக ஆக்கங்களுக்குத் தொடர்ந்து தினகரன் ஆதரவு கரம் நீட்டி நிற்கிறது.  

இலங்கைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் தினகரனில் வெளியான மலையகம் சார்ந்த கட்டுரைகளின் பழைய இதழ்களை தேடி தினகரன் அலுவலகத்தை நாடுவது ஒன்றும் வியப்பல்ல.  

ஜூன் மாதம் 11ஆம் திகதி லண்டனில் நடைபெறும் மலையக இலக்கிய மாநாட்டை தினகரன் மனம் நிறைந்து வரவேற்கிறது. மலையகம் தொடர்பான இப்பெரும் மாநாட்டை நடத்த புலம்பெயர்ந்து வாழும் அனைத்துத் தமிழர்களும் பிரதேச எல்லைகளை மேவி நின்று ஒத்துழைப்பு வழங்கி வருவது பாராட்டுக்குரியது. 

மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களையும் நினைவிலிருத்தி, காத்தாயி, சி.வி.வேலுப்பிள்ளை, கோகிலம் சுப்பையா , இர.சிவலிங்கம், தமிழோவியன், சோ.சந்திரசேகரம் போன்றோரின் பெயரால் தனி அரங்குகள் அமைத்து அம்மாநாடு அமைவது பாராட்டுக்குரியது.  

மலையகத்தின் மூத்த, இளைய, புதிய எழுத்தாளர்களை இனங்கண்டு, நாவல், சிறுகதை, கவிதை, வரலாறு, அரசியல், சமூகவியல், சமூக அகழாய்வியல் , சட்டம், கூத்து, இன வரைவியல், மொழிபெயர்ப்பு, தாயகம் திரும்பிய தமிழர்கள் வாழ்நிலை என்று பல்துறைசார்ந்து இம்மாநாடு செயற்படுவது மாநாட்டு அமைப்பாளர்களின் பரந்து விரிந்த நன்னோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.  

மலையகத்திலிருந்து வெளியான நூல்களோடு அமெரிக்கா, லண்டன், கனடா, இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து வெளியான நூல்களையும் கணக்கிலெடுத்து பரந்த மலையக இலக்கியப் பரி மாணத்தை இம்மாநாடு தருகிறது. நோர்வே, டென்மார்க், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து லண்டன் உள்ளிட்ட உரையாளர்களை இணைத்து இம்மாநாடு செயற்படுவது மனங் கொள்ளத்தக்கது.  

மலையகச் சிறுவர்களின் ஓவியங்களைத் தெரிந்தெடுத்து, லண்டனில் வெளிப்படுத்துவதென்பது மலையகச் சிறுவர்களுக்கு பெரும் மனவெழுச்சியை ஏற்படுத்தவல்லது என்பதை மறுக்க இயலாது.  

இலங்கையிலும் பார்க்க இயலாத சஞ்சிகைகளையும் நூல்களையும் இம்மாநாட்டு மலையக நூல் கண்காட்சி காண்பிக்கவிருக்கிறது என்பதும் இம்மாநாட்டுக்குத் தனித்துவ முக்கியத்தை வழங்குகிறது.  

மலையக மக்களை இலங்கைக்குக் கொண்டுவந்து அவர்களை அரசியல் அனாதைகளாக்கி விட்டுச் சென்ற ஆங்கிலேயர்களின் தேசத்திலேயே மலையகத்தின் குரல் ஒலிக்கிறது என்பது நாம் அவதானிக்கவேண்டிய ஒன்றாகும்.  

லண்டனில் இம்மாநாட்டை நடத்துவதில் முன்னின்றுழைக்கும் மு.நித்தியானந்தன், கே. கிருஷ்ணராஜா, சாந்தகுணம், எச்.எச்.விக்கிரமசிங்க ஆகியோருக்கு தினகரன் மனமுவந்த பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறது.  

இம்மாநாடு மலையகத்தின் இலக்கிய வளர்ச்சிப்பாதையில் ஒரு மைல்கல்லாக நிலைபெறும் என்பது எமது நம்பிக்கை. லண்டனில் மட்டுமல்ல, தொடர்ந்தும் மலையக இலக்கிய மாநாடு செயற்பட்டு மலையக இலக்கிய வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறோம். அதுவே எமது எதிர்கால சந்ததியினருக்கு நாம் செய்யும் சிறந்த பணியாக அமையும் என்பது எங்கள் கருத்தாகும். 

Comments