அரசியல் - பொருளாதார நெருக்கடிக்கெதிரான போராட்டங்கள்; புதிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்ப உதவுமா? | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் - பொருளாதார நெருக்கடிக்கெதிரான போராட்டங்கள்; புதிய இலங்கை தேசத்தினைக் கட்டியெழுப்ப உதவுமா?

(கடந்த வாரத் தொடர்)ஆனால், அந்த வாதம் 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் பின்னர் செல்லுப்படியற்றதாகி விட்டது. அதனை இனியும் முன்வைக்க முடியாது. ஆகவே, இம்முறையினை ஒழிப்பது தொடர்பாக சிறுபான்மை கட்சிகள் தயக்கம் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உறுதியான பாராளுமன்ற அரசாங்க முறையொன்றின் மூலம் சிறுபான்மை மக்களின் நலன்களை பாதுகாக்க முடியும். அதற்கு உலகில் பல நாடுகளை உதாரணமாக கொள்ளலாம் (கனடா, நியுசிலாந்து, பிரித்தானியா). மே மாதம் 11ம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரையிலும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு நிறைவேற்று ஜனாதிபதி முறையும் காரணமென்பதனை இன்று அவர் புரிந்துக்கொண்டுள்ளார். ஆயினும் அது காலம் கடந்த ஞானமாகும்.

தற்போதைய போராட்டங்களினூடாக வலியுறுத்தப்பட வேண்டிய பிரிதொரு முக்கியமான விடயம் மத சார்பற்ற இலங்கையினை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் தொடர்பான கருத்தாடலாகும். இன்றைய போராட்டங்களுடைய நிலையான பெறுபேறு இலங்கையினை மதசார்பற்ற நாடாக நிலைமாற்றம் செய்வதன் மூலம் ஏற்படலாம். புதிய இலங்கை தேசம் என்பது மதசார்பற்றதாக அமைய வேண்டும்.   அவ்வாறன்றில் கடந்த 74ஆண்டுகளாக உரமூட்டி வளர்க்கப்பட்டுள்ள இன, மத மற்றும் மொழி பிரதேச தேசியவாதம் தொடர்ந்தும் இலங்கை தேசத்தினை அழித்துக் கொண்டே இருக்கும். அந்த அழிவு காலத்திற்கு காலம் புதிய புதிய வடிவங்களில் வடகிழக்கு தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் என்ற அடிப்படையில் இந்த நச்சு வட்டும் சூழன்று கொண்டு இருக்கும். ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு தரப்பினர் இலக்கு வைக்கப்படுவர் என்பது எமது கடந்தகால இலங்கை அனுபவமாகும். மதச்சார்பற்ற தேசம் ஒன்று உருவாக்கப்பட்டால் அது மதத் தலைவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதற்கான வாய்பினை வழங்கும். இலங்கை தேசத்தின் தற்போதைய நெருக்கடிக்கு அரசியலில் இருந்து மதத்தனை பிரித்து வைக்காமை பிரதான காரணமாகும். ஆகவே,  தற்போதைய நெருக்கடிக்கு பௌத்த பிக்குகளும் பொறுப்பு கூற வேண்டும் என்ற கோசமும் இன்று எழுச்சி பெற்று வருவதனை காணமுடிகின்றது. இது ஒரு முற்போக்கான அபிவிருத்தியாகும். இக்கருத்தாடலை தொடர்ச்சியாக பேணவேண்டும், சமூகமயப்படுத்த வேண்டும்.

புதிய ஜனநாயக கலாசாரத்தின் எழுச்சி

இந்தப் போராட்டங்களின் ஊடாக பலமான ராஜபக்ஷ ஆட்சிக்கு எதிராக சுதந்திரமான அச்சமின்றி கருத்துக்களை வெளியிடுவதற்கு சாதகமான சூழ்நிலையொன்று உருவாகியுள்ளது; அவர்களின் ஆதிக்கத்தினை அச்சமின்றி விமர்சிப்பதற்கு குறிப்பாக, அரசியலில், நிர்வாகத்தில், சட்டத்தினை அமுல்படுத்;துவதில், தேசிய பாதுகாப்பில், ஊடகத்தில், நீதியினை நிர்வகிப்பதில் மற்றும் தனியார் துறையில், நிலைமை ஏற்பட்டிருப்பதாக பேராசியர் ஜயதேவ உயன்கொட குறிப்பிடுகின்றார். இது ஒரு முக்கியமான மாற்றமாகும். ஒரு பலமான, சர்வாதிகார ஆட்சியாளரை எதிர்ப்பது சாதாரண விடயமல்ல. மிகவும் இருக்கமான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலே இத்தகைய எதிர்ப்புகள் இடம்பெற்று வருகின்றன. மே மாதம் 9ம் திகதி ஆர்பாட்டக்காரர்கள் மீது குண்டர்கள் மேற்கொண்ட தாக்குதல்கள் இப்போராட்டத்தினை முடிவிற்கு கொண்டு வந்து விடும் என பலரும் அச்சம் கொண்டார்கள். ஆனால் ஒரு சில மணித்தியாலத்திற்குள்; மீண்டும் இளைஞர்கள், ஏனைய தரப்பினரின் ஆதரவுடன் அணித்திரண்டு தமது போராட்டத்தினை தொடர்ந்தது மாத்திரமல்லாமல், தாக்குதல் மேற்கொண்டவர்களையும் அடையாளம் கண்டு தக்க பாடம் கற்பித்து, அந்த தாக்குதலின் பின்னால் இருந்த சூத்திரதாரர்களையும் அம்பலப்படுத்தினார்கள்.  இது இந்தப் போராட்டத்திற்கு புதிய பரிணாமத்தினை வழங்கியதுடன், இதுவரைக்காலம் கைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் போராட்டத்தில் இணைந்துகொள்ள வழி செய்தது. இது இப்போராட்டத்தின் பொது நோக்கத்தினை மேலும் வலுப்படுத்தியுள்ளது எனலாம்.

இதன் மூலம் வெளிப்பட்ட பிரிதொரு விடயம் யாதெனில், இந்தப் போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்தியலை, தலைமையினை, படிநிலையமைப்பினை, தனிப்பட்டவர்களை அடிப்படையாகக் கொண்ட மரபு ரீதியான ஊழல் நிறைந்த மற்றும் பாராளுமன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட போராட்டம் என்பதனையாகும்.  இதுவும் ஒரு வகையான நேரடி ஜனநாயக முறையாகும். இதன் காரணமாக போராட்டக்களம் திறந்ததாகக் காணப்படுகின்றது. எந்தவொரு சமூக வகுப்பினையும் இன, மத, பால்நிலை மற்றும் வேறுப்பட்ட அடையாளத்தினை கொண்டவர்களும் எந்நேரமும் வந்துபோகக்கூடிய இடமாக காணப்படுகின்றது.

போராட்டங்கள் ஒரு பக்கம் வெற்றிகரமாக இடம்பெற்று வரும் அதேவேளை, இதன் பிரதிபலிப்புகளை சட்டத்தினையும் நீதியினையும் நிர்வகிக்கும் நிறுவனங்களின் செயற்பாடுகளில் அவதானிக்க முடிகின்றது. நீதி மன்றங்களின் அண்மைக்கால தீர்ப்புகள், மனித உரிமை ஆணைக்குழுவின் சுயாதீன செயற்பாடுகள், குறிப்பாக அரச அடக்குமுறையினை கண்டித்து அறிக்கை வெளியிடுவது, பொலிஸ்மா அதிபர் மற்றும் இராணுவ தளபதிகளை விசாரணைக் குட்படுத்தியுள்ளமை, ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல் வழக்குககளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மீள ஆரம்பித்துள்ளமை மற்றும் கணக்காய்வாளர் திணைக்களத்தின் செயற்பாடுகள் என்பன அண்மைய உதாரணங்களாகும். இவை எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற கேள்வியினையும் இங்கு முன்வைக்க வேண்டும். தீவிர நிறுவன மறுசீரமைப்புகளின் மூலம் இது சாத்தியமாகலாம்.(​தொடரும்)

கலாநிதி இரா.ரமேஷ்,
சிரேஷ்ட விரிவுரையாளர்,
அரசியல் விஞ்ஞானத்துறை,
பேராதனைப் பல்கலைக்கழகம்

 

 

Comments