நுவரெலியாவில் அமோக வசூல் தரும் டீசல், மண்ணெண்ணெய் கொள்ளை வர்த்தகம்! | தினகரன் வாரமஞ்சரி

நுவரெலியாவில் அமோக வசூல் தரும் டீசல், மண்ணெண்ணெய் கொள்ளை வர்த்தகம்!

எரிவாயு நிலையங்கள் தவிர வெளியாரிடம் இருந்து பெற்றோல் டீசல் மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவை பெற்றுக் கொள்ள வேண்டாம். என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கான்ஜன விஜேசேகர கேட்டுக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக தன்னுடைய டிவிட்டரில் இது தொடர்பாக அவர் நீண்ட பதிவொன்றை 25.05.2022அன்று பதிவிட்டிருந்தார்.

இவருடைய இந்த தகவலை உறுதிப்படுத்துவது போல பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ 25.05.2022அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் பொழுது சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27000லீற்றர் பெற்றோல் 22000லீற்றர் டீசல் 10000லீற்றர் மண்னெண்ணை கைப்பற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில் இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் ஒரு புறம்: அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மறுபுறம் என்றால் அத்தியாவசிய பொருட்களுக்கு செயற்கையாக எற்படுத்தப்படுகின்ற தட்டுப்பாடு பூதாகரமாகக் கிளம்பியுள்ளது.

இதற்கிடையே பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக நீண்ட வரிசைகளில் நின்று அந்த பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமை. இதன் காரணமாக வரிசைகளில் நின்று கொண்டிருந்தவர்கள் உயிரை விடுகின்ற மிகவும் துர்ப்பாக்கியமான சம்பவங்களும் நடக்கின்றன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பல அத்தியாவசிய பொருட்களை இலஞ்சம் கொடுத்தும் அதிக விலை கொடுத்தும் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதாக பொது மக்களிடம் இருந்து தொடர்ந்தும் புகார் கிடைத்த வண்ணம் உள்ளது. இந்த விடயத்தை ஊடகங்கள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டையும் பொது மக்கள் முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டு ஒரு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தடன் என்னுடைய தேடலை நோக்கி பயணிக்க ஆரம்பித்தேன்.

எங்கிருந்து இதனை ஆரம்பிப்பது என்ற கேள்வியுடன் பயணத்தை ஆரம்பித்த போது எனக்கு தென்பட்ட ஒரு விடயம் மண்ணெண்னை டீசல் பெற்றோல் மற்றும் எரிவாயுயை பெற்றுக் கொள்வதிலேயே மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த பொருட்களுக்கே அதிகம் தட்டுப்பாடும் நீண்ட வரிசையும் காணப்படுகிறது. இந்தப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நீண்ட வரிசையில் நின்றவர்களே தங்களுடைய உயிரையும் மாய்த்துக் கொண்டுள்ளனர்.

இதற்காக நான் நுவரெலியா மாவட்டத்தில் கந்தப்பளை, ஹட்டன் மஸ்கெலியா ஆகிய பகுதிகளுக்கு பயணம் செய்து இந்த ஆய்வை மேற் கொண்டேன். ஏனெனில் இந்தப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக அதிக விலை கொடுத்தே இவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்டத்திற்கு ஒரு மாதத்திற்கு 84638லீற்றர் மண்ணெண்ணையும் சமையல் எரிவாயு 48456 (12.5கிலோ) சிலின்டர்களும் தேவைப்படுவதாகவும் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் புள்ளிவிபர பிரிவிற்கு பொறுப்பான கே.பி.விஜேரத்ன தெரிவிக்கின்றார். இந்த புள்ளிவிபரமானது 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பிறப்பு இறப்பு கணிப்பீட்டின்படியே கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி 780000பேருக்கே இந்த மண்ணென்ணையும் சமையல் எரிவாயுவும் தேவைப்படுவதாக கே.பி.விஜேரத்ன குறிப்பிடுகின்றார்.

அதே நேரத்தில் நுவரெலியா மாவட்டத்தில் 25எரிவாயு நிரப்பு நிலையங்கள் இருப்பதாகவும் அவற்றில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 16நிரப்பு நிலையங்களும் இந்திய நிறுவனத்திற்கு சொந்தமான 9நிரப்பு நிலையங்களும் இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தலுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

அதே நேரம் நுவரெலியா மாவட்டத்திற்கு மாதாந்தம் 35இலட்சம் லீற்றர் டீசலும் 22இலட்சம் லீற்றர் பெற்றோலும் தேவைப்படுவதாக கொட்டகலை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானத்தின் பொறுப்பாளர் தெரிவிக்கின்றார்.

எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு நானும் பொது மக்களுடன் பயணிக்க ஆரம்பித்தேன். முதலில் கந்தப்பளை பகுதிக்கு விஜயம் செய்த நான் அங்குள்ள விவசாயிகளை சந்தித்து தங்களுக்கு தேவையான அளவு விவசாயத்திற்கு மண்ணெண்ணெய் பெற்றோல் கிடைக்கின்றதா? என்பதை ஆராய்ந்தோம். விவசாயத்திற்கு நீர் பாசனத்திற்கு மண்ணெண்ணெய் கிருமி நாசினி தெளிப்பதற்காக பயண்படுத்தப்படுகின்ற கருவிகளுக்கு பெற்றோலும் பாவிக்கப்படுகின்றது.

கந்தப்பளை நகரில் வசிக்கின்ற பல விவசாயிகளையும் கண்டு விடயங்களை கேட்ட பொழுது பலரும் உண்மையை சொல்வதற்கு தயாராக இல்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. ஆனால் பாலச்சந்திரன் என்பவர் தனது அனுபவத்தையும் தான் எவ்வாறு பெற்றோல் மண்ணென்னை பெற்றுக் கொள்கின்றேன் என்பதையும் எங்களுடன் பகிர்ந்து கொண்டதுடன் தனது பெயருடன் விடயத்தை வெளிப்படுத்தினாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை என்பதையும் எங்களிடம் கூறினார்.

நான் கடந்த 30வருடங்களாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றேன். என்னிடம் 25பேர் தினமும் தினக்கூலிகளாக வேலை செய்கின்றார்கள். எனது தேவைகளுக்காக வாரத்திற்கு 300லீற்றர் மண்ணெண்ணெயும் 25லீற்றர் பெற்றோலும் தேவைப்படுகின்றது. இதனை என்னால் வரிசையில் நின்று பெற்றுக்கொள்ள முடியாது.எனவே நான் எங்களுடைய பகுதியில் இருக்கின்ற நிரப்பு நிலையங்களில் வேலை செய்கின்றவர்களிடம் எனக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுத் தருமாறு கேட்பேன். அவர்கள் தங்களுக்கு மேலதிகமாக ஒரு தொகை கிடைக்குமாக இருந்தால் அதனை பெற்றுத் தர முடியும் என கூறினார்கள்.நான் வேறு வழியில்லாமல் மேலதிகமான ஒரு தொகையை கொடுத்தே பெற்றுக் கொள்கின்றேன்.

இது தவறு என்பதை நான் அறிவேன் ஆனாலும் நான் மட்டுமல்ல பெரிய அளவில் விவசாயத்தில் ஈடுபடுகின்ற பலரும் இவ்வாறே செய்கின்றனர். ஆனால் யாரும் இதை வெளியில் சொல்வதில்லை. என்னைப் பொறுத்த அளவில் அநேகமான விவசாயிகளிடம் தேவைக்கு அதிகமான பெற்றோல் டீசல் இருப்பில் இருக்கவே செய்கிறது. தட்டுப்பாடு இல்லாமல் பொருட்கள் கிடைக்குமாக இருந்தால் மேலதிகமான தொகையை கொடுத்தே தேவைக்கு அதிகமாகவோ வாங்கி வைக்க வேண்டிய தேவை ஏற்படாது. இதன் மூலம் பாதிக்கப்படுகின்றவர்கள் சிறு விவசாயிகளே. காரணம் அவர்களுக்கு மேலதிகமான ஒரு தொகையை செலுத்தி பெற்றோல் அல்லது மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வது சிரமம். மேலும் ஒரே நேரத்தில் பெரும் தொகையை பெற்றுக் கொண்டு இருப்பில் வைத்துக் கொள்வதற்கான பொருளாதாரமும் அவர்களிடம் இல்லை.

இது இவ்வாறு இருக்க நுவரெலியா நகரில் பேருந்து உரிமையாளரான பிரதீப் பிரசன்ன (புனைப் பெயர்) என்பவரிடம் இது தொடர்பாக பேசினோம். ஆரம்பத்தில் அவர் எங்களிடம் பேசுவதற்கு தயங்கினார். பின்பு பெயர் குறிப்பிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பேசினார்.

"நான் ஒரு தனியார் பேருந்து உரிமையாளர் இருக்கின்றேன். என்னிடம் 16பேருந்துகள் இருக்கின்றன. அவற்றில் சொகுசு பேருந்து 6. சாதாரண பேருந்து 10.

இன்றைய சூழ்நிலையில் டீசல் பெற்றுக் கொள்வது என்பதே ஒரு பெரும் போராட்டமே எனவே நான் டீசலை அதிக விலை கொடுத்தே வாங்குகின்றேன். ஆனால் என்னிடம் டீசல் தட்டுப்பாடு கிடையாது. அதற்கு காரணம் நான் மேலதிக தொகையை கொடுத்தே டீசல் வாங்குகின்றேன்.

அதுவும் விடியற்காலை ஒரு மணி இரண்டு மணியளவில் நித்திரை கொள்ளாமல் இந்த டீசலை பெற்றுக் கொண்டே எனது தொழிலை நடத்துகிறேன். நான் ஒரு நாளைக்கு 5000முதல் 7500ரூபா வரை மேலதிகமாக செலுத்தியே டீசல் பெற்றுக் கொள்கிறேன். வேறு வழியில்லை. என்ன செய்வது எங்களுடைய தொழிலை கொண்டு செல்ல வேண்டும். என்னை நம்பி சுமார் 25குடும்பங்கள் உள்ளன."

அடுத்ததாக நாங்கள் சந்தித்த நபர் நுவரெலியாவில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு மரக்கறிகளை கொண்டு செல்கின்ற லொரி உரிமையாளர் பரமநாதன்.

"நான் 4லாரிகள் வைத்திருக்கின்றேன். உண்மையை சொல்ல வேண்டுமாக இருந்தால் இந்த டீசல் தட்டுப்பாடு ஏற்பட்ட நாளில் இருந்து என்னுடைய வருமானம் நன்றாகவே இருக்கின்றது.

ஏனெனில் நான் லொரிக்கு வாங்கும் கூலியை அதிகரித்துள்ளேன். ஏனெனில் சாதாரண விலைக்கு அல்லாமல் அதிக விலை கொடுத்தே டீசல் வாங்குகின்றேன். தட்டுப்பாடு இல்லாமல் டீசல் கிடைக்கின்றது. எனது வாகனங்கள் தினந்தோறும் கொழும்பு கண்டி தம்புள்ளை சென்று வருகின்றன. எனது வியாபாரத்தில் பாதிப்பு இல்லை. எனவே கொச்சையாக சொல்ல வேண்டுமாக இருந்தால் மேலதிகமாக கொடுத்து டீசல் வாங்குகின்றேன். வேறு வழியில்லை எனது தொழிலை செய்ய வேண்டும்.வேறு தொழில் எங்களுக்கு தெரியாது.இப்பொழுதும் என்னிடம் இருப்பில் 200லீட்டருக்கு குறையாத டீசல் இருப்பில் இருக்கின்றது. இந்த நிலையை ஒழிக்க வேண்டுமாக இருந்தால் தட்டுப்பாடு இல்லாமல் பொருட்கள் கிடைக்க வேண்டும். டீசல் மட்டுமல்ல இன்று பல பொருட்கள் அதிக விலை கொடுத்தே அல்லது கையூட்டு கொடுத்தே வாங்கப்படுகின்றது.

கடை உரிமையாளர் வரதகுமார்

என்னை பொறுத்தவரையில் எல்லா பொருட்களும் தட்டுப்பாடு இல்லாமல் என்னிடம் உள்ளன. நான் அதிக விலை கொடுத்து வாங்குகின்றேன். அதிக விலைக்கு விற்கின்றேன். விரும்பியவர்கள் வாங்கலாம். நான் யாரையும் வற்புறுத்தி விற்பனை செய்வதில்லை. வேறு எதனையும் கூறுவதற்கு நான் தயாரில்லை. இன்று நாட்டில் கட்டுப்பாடு விலை என்று ஒன்று இல்லை. அப்படியானால் எப்படி அதனை கட்டுப்படுத்துவது? அதனை அரசாங்கமே பார்த்துக் கொள்ள வேண்டும்.

வசந்தி (புனைப் பெயர்)

நான் ஏற்கனவே சிறிய சாப்பாட்டுக் கடை ஒன்றை நடத்தி வந்தேன் விலைவாசி காரணமாக என்னால் அதனை தொடர்ந்து நடந்த முடியவில்லை. எனவே நான் தற்பொழுது எனது வீட்டடில் டீசல், பெற்றோல்,மண்ணெண்ணெய் விற்பனை செய்கின்றேன். ஆதிக விலைக்கே விற்பனை செய்கின்றேன். இரவு எத்தனை மணியானாலும் தேவையானவர்களுக்கு இதனை வழங்குகிறேன். கடந்த ஏப்ரல் வசந்த காலத்தின் நல்ல இலாபம் கிடைத்தது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்த பலரும் டீசல் பெற்றோல் இல்லாமல் என்னிடமே வாங்கினார்கள். நான் இங்கிருக்கின்ற ஒரு பெற்றோல் நிலையத்தில் வேலை செய்கின்ற உறவினர் மூலமாக இந்த பொருட்களை பெற்றுக் கொள்கிறேன். அவருக்கு ஒரு தொகையை கொடுக்கின்றேன். என்னை பொறுத்த வரை இது இலகுவான இலாபகரமான ஒரு வியாபாரம்.

பெற்றோல் நிலைய உரிமையாளர் சந்தருவன் (புனைப் பெயர்)

அதிக விலைக்கு இரவு நேரங்களில் டீசல் மண்ணெண்ணெய் விற்கப்படுவதாக பலமுறை என்னிடம் பொலிசார் விசாரணை செய்தார்கள்.அதற்கான ஆதாரங்கள் எதனையும் அவர்கள் கண்டு பிடிக்க முடியவில்லை. எங்களுடைய ஊழியர்கள் அப்படி செய்கின்றார்களா என்பது தெரியவில்லை. ஏனெனில் நாங்கள் இரவு நேரங்களில் வீடுகளுக்கு சென்று விடுகின்றோம். காலையில் வந்தவுடன் இருப்பு கணக்கை மாத்திரமே பார்க்க முடியும். அதிக விலைக்கு விற்றார்களா என்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியாது.சில வேளைகளில் அப்படியும் நடக்கலாம்.

நுவரெலியாவில் உள்ள நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபையிடம் தொடர்பு கொண்டு இந்த விடயங்கள் தொடர்பாக வினவிய பொழுது கே.பி.விஜேரத்ன என்பவர் எம்முடன் பேசினார். நாங்கள் அண்மையில் கினிகத்தேனை பகுதியில் சமையல் எரிவாயு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அங்கு சென்று அவற்றை கைப்பற்றியதுடன் அதனை பொது மக்களுக்கு விற்பனை செய்தோம். அந்த தொகையை எங்களுடைய நுகர்வோர் அதிகார சபையின் அரசாங்க நிதியத்திற்கும் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாவையும் அறவிட்டோம்.

ஆனால் எங்களுடைய சட்டங்களுக்கு அமைய எங்களால் கடைகளில் பெற்றோல் டீசல் மண்னெண்ணை விற்பனை செய்வதையோ அதிக விலைக்கு விற்பனை செய்வதையோ கைப்பற்றவோ அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவோ முடியாது. அதனை பொலிசாரே செய்ய வேண்டும்.

இதே நேரம் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றின் அடிப்படையில் 27.05.2022அன்று 36388வாகனங்களை ஆய்விற்கு உட்படுத்திய பொழுது அதில் 1347வாகனங்கள் பலமுறை எரிபொருட்களை பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதன் மூலம் நிச்சயமாக இந்த விடயத்தில் ஊழல் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என குறிப்பிடுகின்றார் பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ.

இது தொடர்பாக கணணித்துறையில் புள்ளிவிபரங்களை முகாமைத்துவம் செய்கின்ற அமிர்தநாதன் என்பவருடைய கருத்து இது.

உண்மையிலேயே இந்த எரிபொருள் நெருக்கடிக்கு முக்கிய காரணம் அதனை சரியான முறையில் முகாமைத்துவம் செய்யாமையே. இதனை முகாமைத்துவம் செய்ய முடியும் அதற்காக உடனடியாக ஒரு செயலியை செயற்படுத்த வேண்டும். இதன்மூலம் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக ஒரு இலத்திரனியல் அட்டையை பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யலாம். இதன் மூலம் வாகனத்தின் இலக்கம் உட்பட்ட தகவல்களை இதற்கு உட்படுத்தி ஒவ்வொரு முறை எரிபொருள் பெறுகின்ற பொழுதும் அதனை உட்படுத்துவதன் மூலமாக கடைசியாக அவர் எங்கே எப்பொழுது எவ்வளவு எரி பொருள் பெற்றுக் கொண்டார் என்ற தகவலை பெற்றுக் கொள்ள முடியும்.இதன் மூலமாக சரியான முகாமைத்துவம் செய்ய முடியும் வெளிநாடுகளில் இந்த விடயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒருவருக்கு ஒரு வாரத்திற்கு பெற்றுக் கொள்ளக்கூடிய ஆகக்கூடிய எரிபொருள் அளவையும் அதில் குறிப்பிட முடியும்.

இப்படி பல முறைகள் இருக்கின்றன. இதனை நடைமுறைப்படுத்த துணிச்சல் வேண்டுமே! என்று புன்னகையுடன் கூறி முடித்தார் இவர்.

நுவரெலியா எஸ்.தியாகு

Comments