ஈழத்து நவீன கவிதை முன்னோடி மஹாகவி உருத்திரமூர்த்தி | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து நவீன கவிதை முன்னோடி மஹாகவி உருத்திரமூர்த்தி

ஈழத்து கவிதை வளர்ச்சி ஒரு மதிப்பீடு என்ற கட்டுரையில் பேராசிரியர் கலாநிதி செ. யோகராசா பின்வருமாறு குறிப்பிடுகிறார்:  

ஈழத்து நவீன கவிதை பிரக்ஞைபூர்வமாக முகிழ்ப்பது ஏறத்தாழ நாற்பதுகளின் நடுப்பகுதியிலேயாகும். இவ்விதத்தில் மறுமலர்ச்சி, பாரதி (கொழும்பு), பாரதி (மண்டூர்) சஞ்சிகைகளில் எழுதிய கவிஞர்கள் முக்கியம் பெறுகின்றனர். மஹாகவி, சாரதா, அ.ந.கந்தசாமி, நாவற்குழியூர் நடராசன், கே. கணேஷ் என இவர்கள் பலராயினும் இவர்களுள் முதன்மை இடம் பெறுபவர் மஹாகவியே!  

மஹாகவி மேற்கண்டவாறு முதன்மையிடம் பெறினும் ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளில் முதன்மையானவர் என்ற விதத்திலே இவரது முழுமை 1950களிலேயே ஆரம்பிக்கிறது. பாரதிதாசனுக்குப் பின்னர் தளர்ச்சி கண்ட நவீன தமிழ்க் கவிதை மீண்டும் எழுச்சியுறுவது இவரூடாகவே என்பது மிகையன்று. இவ்விதத்தில் சமகால வாழ்வை நோக்கி, சிறுகதைக்குரிய பண்புகளோடு, யதார்த்தப் பாங்குடன் நவீன கவிதையைத் திசை திருப்பினார் மஹாகவி. காட்சிப்படுத்தல்,பேச்சோசைப் பாங்கு, உணர்வு அழுத்தத்திற்கேற்ப அடி அளவு மாற்றம் முதலியன இவரால் அறிமுகமாகின. இத்தியாதி பண்புகள் சிலவற்றை சிறந்த முறையில் தேரும் திங்களும் வெளிப்படுத்துகிறது எனலாம்.  

 ஊரெல்லாம் கூடி ஒருதேர் இழுக்கிறதே  

வாருங்கள் நாமும் பிடிப்போம் வடத்தை  

என்று  

வந்தான் ஒருவன்....  

நில் என்றான் ஓராள்  

நிறுத்து என்றான் மற்றோராள்  

புல் என்றான் ஓராள்  

புலை என்றான் இன்னோராள்  

கொல் என்றான் ஓராள்  

கொளுத்து என்றான் வேறோராள்  

கல்லொன்று வீழந்து  

கழுத்தொன்று வெட்டுண்டு  

பல்லோடு உதடு பறந்து சிதறுண்டு  

சில்லென்று செந்நீர் தெறித்தது  

நிலம் சிவந்து  

மல்லொன்று நேர்ந்து  

மனிசர் கொலையுண்டார்....  

மேலும் மஹாகவி குறும்பா வடிவத்தை அறிமுகப்படுத்தியமை, (சமூகப் பிரச்சினையை எடுத்துரைக்க அது சிறந்த வடிவமாக இருந்தமையை இன்று வரை பலராலும் உணரப்படவில்லை) நவீன காவிய வளர்ச்சிப் போக்கில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தியமை,கவிதை நாடக முயற்சிகள் என்பனவும் கவனத்துக்குரியன (ஞானம் சஞ்சிகையின் 100ஆவது இதழ்- செப் டெம்பர் 2008).  

குறும்பா எனப் பெயரிட்டு அழைக்கப்படும் யாப்பு ஆங்கிலத்தில் லிமரிக்ஸ் என்ற பெயரில் அமைவது. எட்வேட் லியர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. லிமரிக் கவிதை வடிவத்தினை முதன் முதலில் 1966-ஆம் ஆண்டில் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் மஹாகவி. 'லிமரிக்'குக்கு அவர் சூட்டிய தமிழ்ப் பெயர் 'குறும்பா'. உருவத்தில் குறுகியது. எனவே 'குறும்பா'. படிக்கிறவர்கள் 'இவ்வளவு குறும்பா? 'என்று கேட்பார்கள்; எனவே உருவம், உள்ளடக்கம் இரண்டையுமே குறிக்கும் பொருத்தமான பெயர் குறும்பா.  

இளம்பிறை என்ற சஞ்சிகையிலே 1965ஜனவரியிலிருந்து மஹாகவி குறும்பாக்களை எழுதினார். 1966இல் மஹாகவியின் குறும்பா ஒரு தொகுதியாக வெளிவந்தது. பின்னர்' தமிழுக்கு அறிமுகமாகும் புதிதான கவிதை வடிவம்' என்னும் சிறப்புக் குறிப்புடன் மித்ர பதிப்பக வெளியீடாக 2002ஆம் ஆண்டில் வெளி வந்த இத்தொகுப்பின் உள்ளே 100குறும்பாக்கள்' என்னும் அறிமுகமும் இடம்பெற்றிருந்தது.  

'மஹாகவி குறும்பா' என்னும் தொகுப்பில் முதலாவதாக இடம்-பெற்றிருக்கும் குறும்பா:  

'உத்தேசம் வயது பதினேழாம்.  

உடல் இளைக்க ஆடல் பயின் றாளாம்.  

எத்தேசத் தெவ்வரங்கும்  

ஏறாளாம்! ஆசிரியர்  

ஒத்தாசையால்,பயிற்சி பாழாம்' (ப. 27)  

தமிழரின் சொத்தான ஓர் அரியகலை, நமது கண் முன்னாலேயே பாழாக்கப்படுவதை மஹாகவி இக் குறும்பாவில் படம்பிடித்துக் காட்டுகின்றார். இந்த அவலத்தை, ஆபாசமற்ற வார்த்தைகளில், ஆனால் உயிர்த் துடிப்பு சற்றும் குலைந்து போகாத வகையில் சித்திரித்துக் காட்டி இருப்பது மஹாகவிக்கே உரிய தனிச்சிறப்பு ஆகும்.  

மேலும், மஹாகவி பழைய மரபான யாப்பு வடிவங்களைப் பேச்சு வீசைப் பாங்கில் எளிமைப்படுத்தினார். சாதாரண பேச்சு வழக்குச் சொற்கள் கருத்து தொடர்புகளுக்கு ஏற்ற வகையில் சிறு வாக்கியங்களாகத் தொடரும்போது அவற்றினூடே வெண்பா, விருத்தம், கட்டளைக் கலிப்பா முதலிய யாப்பு வகைகளின் வடிவ நிலை புலப்பட்டு நிற்றல் மஹாகவி கவிதைகள் பலவற்றின் பொதுப் பண்பாகும்.  

சோமு வாதம்பி சுறுக்காய் வெளிக்கிடன்  

நேரமாச்செல்லே? நெடுக இருக்கிறை?  

என்னதவிற்காரரர் இன்னும் வரவில்லை?  

ஒத்துக்காரர்தான் அடுக்களைக்குள் நிற்கிறார்  

ஊமையன்ரை காரருக்குச் சொன்னியெல்லே..?  

சொல்லிவிட்டேன்  

காரை இன்னும் காணன் வருவானோ கட்டாயம்?  

வந்து விட்டான் போல வரட்டும் வெளிக்கிடுவம்  

(கோடை நாடகம் உரையாடற் பகுதி)  

'நவீன உள்ளடக்கங்களை வெளியிட யாப்பு உதவாது' என்ற புதுக்கவிதையாளரின் கொள்கை ஆதாரம் அற்றது எனக் காட்டியவர் இவர் என்று கூறுகிறார் - பேராசிரியர் எம்.ஏ. நுஃமான்.  

இன்றைய நடைமுறை வாழ்க்கையை யதார்த்தபூர்வமாக கவிதையில் சித்தரித்து காட்டியமை தமிழ் கவிதைக்கு மஹாகவி வழங்கிய முக்கிய பங்களிப்பாகும்.  

'இன்னவைதாம் கவிஎழுத  

ஏற்றபொருள் என்று பிறர்  

சொன்னவற்றை, நீர் திருப்பிச்  

சொல்லாதீர், சோலை கடல்  

மின்னல், முகில், தென்றலினை  

மறவுங்கள். மீந்திருக்கும்  

இன்னல், உழைப்பு, ஏழ்மை, உயர்வு  

என்பவற்றை பாடுங்கள்'  

என்று தன் ஆரம்ப காலத்திலேயே அவர் கவிதை எழுதினார். நிகழ்கால பிரச்சினைகளையும், கவிதையின் பாடுபொருளாக்கி அதனை இன்றைய யுகத்திற்கு இழுத்து வரல் அவசியம் என்று பிற்காலத்தில் அவர் எழுதினார்.  

'இன்றைய காலத் திருக்கும் மனிதர்கள்  

இன்றைய காலத் தியங்கும் நோக்குகள்  

இன்றைய காலத் திழப்புகள் எதிர்ப்புகள்  

இன்றைய காலத் திக்கட்டுக்கள்'   

இவரது கவிதைகளின் பாடுபொருள்களில் முக்கிய அம்சமாக சமகால உணர்வும், சமூக உணர்வும் அதிகம் காணப்படுகின்றன. இவையே மஹாகவியின் கவிதையாக்கங்கள் பலவற்றுக்கும் அடிநாதமாக அமைந்த உணர்வு நிலை. அவர் தனது மண், அதன் சமூகபண்பாட்டு அம்சங்கள் அங்கு வாழும் தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர் முதலியோரது முயற்சி, திறன் ஆகியவற்றில் ஈடுபாடும் கொண்டிருந்தார்.  

ஏழைகள், பாதிக்கப்பட்ட மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்போர் மீது அவருக்கு மிகுந்த அனுதாபம் ஏற்பட்டிருந்தது. அவர்களின் அந்த நிலைக்கு காரணமான சமூக முரண்பாடுகள் மீது அவர் வெறுப்புக் கொண்டார். அவரது பல்வேறு கவிதையாக்கங்களிலும் புலப்பட்டு நிற்கின்ற உணர்வு நிலைகள் இவைகள் எனலாம்.  

மஹாகவியின் இயற்பெயர் து. உருத்திரமூர்த்தி. இவர் 1927ஜனவரி 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்னும் கிராமத்தில் பிறந்தார். தமது 14ஆம் வயதில் கவிதை எழுத ஆரம்பித்தார். இவர் ஆரம்பத்தில் பண்டிதன் என்னும் புனைபெயரில் கவிதைகளை எழுதினார். பின்னர் மஹாகவி என்னும் புனைபெயரைத் துணிச்சலோடும் நம்பிக்கையோடும் சூட்டிக்கொண்டார். புதுக்கம்பன், புதுநாப்புலவன், மாபாடி, மஹாலட்சுமி முதலிய புனைபெயர்களிலும் கவிதை படைத்துள்ளார். தமது 16ஆம் வயதில் எழுதிய கவிதைகளை வானகம், புரட்சி, கவிக்கன்னி ஆகிய தலைப்புக்களில் சிறிய கையெழுத்துத் தொகுதிகளாக வெளியிட்டார் ;  

இவர், தமது 28ஆம் வயதில் திருமணம் முடித்தார். பாண்டியன் சேரன், சோழன், இனியாள், ஒளவை ஆகிய ஐந்து பிள்ளைகளின் தகப்பன் ஆவார்.  

1945நவம்பர் 20இல் கொழும்பு திறைசேரியில் எழுதுவினைஞராக தனது அரச சேவையை ஆரம்பித்த இவர், தொடர்ந்து திருகோணமலை கடற்படை அலுவலகத்திலும், பின்னர் கொழும்பு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திலும் பணியாற்றி, 1967இல் இலங்கை நிர்வாக சேவைக்கு தேர்வு பெற்றார். அதன்பின் மாவட்டக் காணி அதிகாரியாக (DLO) மன்னாரில் நியமனம் பெற்று, பின்னர் யாழ்ப்பாண மாவட்டக் காணி அதிகாரி (1968- - 1969), மட்டக்களப்பு அரச செயலகத் துணைவர் (1970) ஆகிய பதவிகளை வகித்து, 1971இல் கொழும்பு அரச கரும மொழித் திணைக்களத்தில் உதவி ஆணையாளராக நியமனம் பெற்றார்.  

(1) வள்ளி (2) வீடும் வெளியும் (3) மஹாகவி கவிதைகள் (4) மஹாகவியின் ஆறு காவியங்கள்: கல்லழகி, சடங்கு, ஒரு சாதாரண மனிதனது சரித்திரம், கண்மணியாள் காதை, கந்தப்ப சபதம், தகனம் (5) மஹாகவியின் மூன்று நாடகங்கள்: கோடை, புதியதொரு வீடு, முற்றிற்று(6) நூறு குறும்பாக் கவிதைகள் என்பன மஹாகவியின் நூல்களாக வெளிவந்துள்ளன.  

குறும்பா வடிவத்தை அறிமுகப்படுத்தியமை,பேச்சோசைப் பாங்கில் யாப்பு இலக்கணத்தில் அமைந்த கவிதைகளை எழுதியமை, காவிய வளர்ச்சிப் போக்கில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தியமை போன்ற செயற்பாடுகளின் முன்னோடி முதல்வர் மஹாகவி, 20-.06-.1971 அன்று இருதய நோயினால் அமரரானார்.  

Comments