சிங்கள இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு மலையகத்திலும் ஒலிக்க வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

சிங்கள இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு மலையகத்திலும் ஒலிக்க வேண்டும்!

ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இக் கட்சிகள் சொந்தக்காலில், சொந்த சின்னத்தில் நின்று தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும். பெரிய கட்சிகளின் சின்னங்களில் வாக்கு கேட்பது என்பது சோரம் போகும் அரசியல். பெரிய கட்சிகளுடன் கூட்டு சேரும்போது நிபந்தனைகளை கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. அடிவருடித் தனம் இங்கே ஆரம்பித்து விடுகிறது

பாகிஸ்தானில் மதவாத அரசியலைப் பார்க்க முடியும். முதலாவது அவர்களது மையம் சார்ந்த முரண்பாடுகள், சுன்னி - ஸியா போன்றவை. இரண்டாவது இந்திய விரோத அரசியல் வடிவம். அதை இந்து என்றும் சொல்லலாம். இந்தியாவில் இந்து - முஸ்லிம் மதவாத அரசியல்வாதி இந்தியாவில் நல்ல அரசியல் லாபத்துடன் விற்பனை செய்யப்படக்கூடிய சரக்கு. பா.ஜ.க இன்று வட மாநிலங்களில் மாத்திரமின்றி கர்நாடகத்திலும், மலைப்பாங்கான மணிப்பூரிலும் செல்வாக்கு மிக்க கட்சியாக விளங்குகிறது என்றால் அதற்குக் காரணம், இந்து - முஸ்லிம் என்ற கேவலமான மதவாதம்தான்! இந்தியாவின் வட மாநிலங்களில் வாழும் கிராம மக்களை, முஸ்லிம்களால் பாதிக்கப்பட்ட சமூகமே இந்து சமூகம் என்ற விஷயத்தை திரும்பத் திரும்பச் செய்வதன் மூலம் நம்பச் செய்து விடலாம் என்ற உளவியலை தமது வெற்றிக்கான வழியாக பா.ஜ.க திரும்பத் திரும்ப உபயோகித்து வெற்றியும் கண்டு வருகிறது. இவ்வாறு மதமும் சாதியும் இந்தியாவில் வெற்றிகரமாக பிரயோகிக்கப்படக்கூடிய ஆயுதங்களாகத் திகழ்கின்றன.  

இலங்கையிலும் இதுதான் கடந்த 70ஆண்டுகளாக நிலவும் அரசியல் உத்தி. தமிழ் அரசியல்வாதிகள் தமது இருப்புக்காக சிங்கள துவேஷ அரசியலையும், சிங்களவர்களின் பாரம்பரிய இந்திய சந்தேகத்தை தமிழர் வெறுப்பு அரசியலாக தென்னிலங்கையில் சிங்களக் கட்சிகளும் பயன்படுத்தி வந்துள்ளன. ஶ்ரீ எதிர்ப்பு போராட்டம், தமிழ் எழுத்து அழிப்பு போராட்டம், இனக் கலவரங்கள், தமிழ்த் தீவிரவாதம், தமிழர் மீதான சந்தேக அரசியல் - 2019இல் பச்சை இனவாத மதவாத தேர்தல் பிரசாரம் என்பன அரசியல் கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் பதவிகளையும் அதிகாரங்களையும் அளித்திருக்கலாம். ஆனால் நாடு வங்குரோத்து அடைந்திருக்கிறது என்பதை மிகமிகத் தாமதமாகத்தான் தென்னிலங்கை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளார்கள்.  

எனவே காலிமுகத்திடல் 'கோட்டாகோஹோம்' போராட்டத்தை எதிர்கால அரசியல் வடிவம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை கட்டமிட்டும், சட்டமிட்டும், ஆதார கற்களை அமைத்தும் எடுத்துச் சொல்லிவரும் வடிவமாகத்தான் நாம் பார்க்க வேண்டும். வியட்நாம் யுத்தம் உக்கிரமடைந்து அமெரிக்கா தன் பொருளாதார வளங்களையும் மனித வளத்தையும் அப்போரில் இழந்து கொண்டிருந்தபோது அமெரிக்காவில் இளைஞர்களின் அமைதிவழிப் போராட்டங்கள் உக்கிரம் பெற்றன. வெற்றியா, தோல்வியா அல்லது அமெரிக்க பெருமையா என்பதெல்லாம் எமக்கு வேண்டாம்; அப் போரில் இருந்து அமெரிக்கா உடனடியாக வாபல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அமெரிக்க இளைஞர்களின் போராட்ட அடிநாதமாக விளங்கியது. அதன்படியே அமெரிக்கா தலைகுனிந்து வியட்நாமை விட்டு​ வெளியேறியது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்க இளைஞர்களுக்குக் கிடைத்த வெற்றி இது. அமெரிக்காவில் தோன்றி வளர்ந்த ஹிப்பி கலாசாரத்தைக் கூட வியட்நாம் போர் வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட கலாசாரம்தான்.  

அரபு நாடுகளில் ஏற்பட்ட தனிநபர் ஆட்சிமுறைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி அரவு வசந்தம் என அழைக்கப்பட்டது. இலங்கையின் இளைஞர் கிளர்ச்சியை அரபு வசந்தம் என்ற பெயரை உபயோகித்து அழைக்கலாமா என்ற ஒரு விவாதம் உள்ளது. இலங்கை ஒரு ஜனநாயக நாடு; ஐந்து வருடங்களுக்கு இப் போராட்டத்தை ஒப்பிடுவதற்கில்லை என்ற ஒரு கருத்து பலமாக முன்வைக்கப்பட்டது. எனவே எவரும் இதை அரபு வசந்தத்துடன் ஒப்பிடுவதில்லை. இப்போராட்டத்தில் வன்முறை இல்லை. அலரிமாளிகையில் இருந்து புறப்பட்டு வந்தவர்கள் இளைஞர்களின் அமைதி ஆர்ப்பாட்டத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதன் விளைவாகவே நாட்டில் வன்முறை வெடித்தது என்பதை மறந்துவிடக் கூடாது.  

இப்போராட்டம் 50நாட்களைக் கடந்த பின்னரும் தன் பிரதான இலட்சியத்தை அடையவில்லை என்பது உண்மையானாலும் இதுவரை இருந்த அமைச்சரவை கலைந்துபோக வழிசெய்தது. பிரதமரை பதவி விலக வைத்தது. பின்னர் அமைக்கப்பட்ட அமைச்சரவையும் அற்ப ஆயுசில் கலைந்துபோக வழிவகுத்தது. மத்திய வங்கிக்கு புதிய தகுதிவாய்ந்த ஆளுநரை கொண்டுவந்தது. 21ம் திருத்தத்துக்கு வழிசெய்திருக்கிறது. இளைஞர் போராட்டத்தில் படித்தவர்களும், உயர் பதவிகளில், உயர்மட்டத்தில் தானுண்டு தன் சொகுசு வாழ்க்கையுண்டு என்றிருந்தவர்களையும், பெண்களையும், மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள், விமானத் துறையில் பணியாற்றுபவர்கள், கலைஞர்களையும் இணைத்து வெகுஜன போராட்டமாகவும் மாற்றத்தை விரும்பும் சகல மக்களின் குறியீடாகவும் காலிமுகத்திடல் போராட்டம் மாறி இருக்கிறது.  

எழுபது ஆண்டுகளில் இப்படி ஒன்று நடந்ததே இல்லை. அரசியல்வாதிகள் சொன்னார்கள் மக்கள் செய்தார்கள் என்பதுதான் இவ்வளவு கலமாக இருந்த கதை. அரசியல்வாதிகள் ஏவுகிறவர்களாகவும் மக்கள் ஏவப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். இப்போதுதான் மக்கள் முதல் தடவையாக, நம்மால் ஏவப்படுபவர்களே அரசியல்வாதிகள் என்பதை உணர்ந்திருக்கிறார்கள். அரசியல்வாதிகள் விலை மிகுந்த ஆடம்பரக் கார்களை மக்களை பயமுறுத்தும் ஒரு உத்தியாகவே பயன்படுத்தி வந்தார்கள். அரசியல்வாதிகள் குறிப்பாக அமைச்சர்கள் நடந்து வரும்போது அவரைச் சுற்றி ஒரு படை வந்து கொண்டிருக்கும். சாமானியர்களை அப்பாலே போ எனப் பிடித்துத் தள்ளும். ஆறுமுகன் தொண்டமானிடம் இந்த 'நடப்பை' அப்போது பார்க்க முடிந்தது. அவருக்கு விசுவாசமான ஒரு வாட்டசாட்டமான பொலிஸ்காரர் இப்படித்தான் பிடித்துத் தள்ளுவார். தயாராக இல்லை என்றால் கீழே விழுந்து விடுவோம்.  

சிங்களத்தில் போராட்டத்தை 'அரகலய' என அழகாக அழைக்கிறார்கள். அது ஒரு முக்கியமான, அதிகம் உபயோகத்தில் உள்ள ஒரு சொல்லாக இன்று மாறியிருக்கிறது.  

அரசியல்வாதிகளினால் மிகவும் பாதிப்படைந்த, சீரழிந்த சமூகமாக பெருந்தோட்ட சமூகத்தைச் சொல்லலாம். இதற்கு நிறைய உதாரணம் சொல்லலாம். மக்களுக்கு குடியுரிமையும், வாக்குரிமையும் கிடைத்த பின்னர் மலையக அரசியல்வாதிகள் பதவிகளில் ஏறி அமர்ந்து சொகுசு வாழ்க்கையை கமிஷன் வாழ்க்கையை எவ்வாறு நடத்துவது என்பதிலேயே குறியாக இருந்திருக்கிறார்களே தவிர மலையக சமூகம் ஏற்றம் பெறுவதற்கு உண்மையாகவெ உழைப்பவர்களாக இல்லை.   ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவார்கள். இக் கட்சிகள் சொந்தக்காலில், சொந்த சின்னத்தில் நின்று தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும். பெரிய கட்சிகளின் சின்னங்களில் வாக்கு கேட்பது என்பது சோரம் போகும் அரசியல். பெரிய கட்சிகளுடன் கூட்டு சேரும்போது நிபந்தனைகளை கோரிக்கைகளை முன்வைப்பதில்லை. அடிவருடித் தனம் இங்கே ஆரம்பித்து விடுகிறது. சிங்கள இளைஞர்கள் இன்று நாங்கள் சொல்கிறபடி சொல் என சாட்டையை கையில் எடுத்திருக்கிறார்கள். இலங்கையில் தமிழ் வீடுகள், கடைகள் பற்றி எரிவதே வழமை. முதல் தடவையாக அரசியல்வாதிகளின் வீடுகள் எரிந்துள்ளன. வான்முறைகளில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அதன் வரியைத் தமிழர்கள் அறிவார்கள். எனவே வன்முறையும் வீடு எரிப்பும் எவ்வகையிலும் தீர்வாகாது. வீடு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் பொக்கிஷம் என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.  

எனவே மலையக தமிழ் இளைஞர்கள் அற்ப சொற்பங்களுக்காக அரசியல்வாதிகளின் அடிகளை வருடுவதா அல்லது சிங்கள இளைஞர்களைப்போல சாட்டையைக் கையில் எடுத்துக் கொள்வதா என்பதை தீர்மானிக்கும் காலம் இது. காலிமுகத்திடல் 'அரகலை'யில் இருந்து மலையக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்றியமையாதவை உள்ளன. எந்த நாளையும் போல மலையக தமிழ் வாக்காளர்கள் மீது சவாரி செய்து பதவிகளைப் பிடித்து புறமுதுகு காட்டும் வேலை இனிமேலும் செல்லுபடியாகாது என்பதை அவர்களுக்கு சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.  

பெரிய பெயர், பாரம்பரியம், பெரிய குடும்பம், பழைய சாதனைக் கதைகள், வௌ்ளைக்காரத் துரைமாரைவிட மோசமான முதலாளிகளாக - ஜெயலலிதா பாணியைப் பின்பற்றி - தம்மை​ வெளிப்படுத்தும் சங்க முதலாளி பாணி, கோவில் மணி, படிக்கட்டு அமைத்தல், விளையாட்டு உபகரணங்களை வழங்குதல், சாராயம் சோற்றுப் பார்சலுக்கு வாக்குகளை வாங்குதல் போன்ற முதலாளி பாணி அரசியல் என்பனவற்றுக்கு முடிவுகட்ட வேண்டியிருக்கிறது.  

1978முதல், பின்னர் 1990முதல் மலையக அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியின் மொத்தத் தொகை என்ன; அதனால் விளைந்த பலன்கள் என்ன என்பதெல்லாம் இளைஞர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம்.  

இது மலையகத்தின் படித்த இளைஞர்கள் சிந்திக்க வேண்டிய தருணம். எமது எதிர்கால அரசியல் எவ்வாறு எதை எவற்றை நோக்கி அமைய வேண்டும் என்பதை இளைஞர் சமூகம் தீர்மானிக்க வேண்டும்.

'கோட்டாகோகம' வைப்போல இங்கேயும் ஒரு சிந்தனைப் பட்டி உருவாக்க வேண்டும். நாங்கள் ஆமாம் சாமி - அமாங்கையா - அல்ல என்பதை இளைஞர்கள் நிரூபித்தாக வேண்டும்.  

சி.ப. சீலன்

Comments