ரணில் காலத்தில் நடைமுறைக்கு வந்த சமூகநலத் திட்டங்கள் மீண்டும் உயிர்பெற வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

ரணில் காலத்தில் நடைமுறைக்கு வந்த சமூகநலத் திட்டங்கள் மீண்டும் உயிர்பெற வேண்டும்!

மறைந்த வேலாயுதம் நல்லாட்சிக் காலத்தில் பசுமை பூமி திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு காணி உறுதியுடன் கூடிய வீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்தார். ஆனால் இக்காணி உறுதிப்பத்திரங்கள் சட்டரீதியிலானவையா என்ற கேள்வியை புத்திஜீவிகள் எழுப்பவே செய்தனர். ஏனெனில் தனியார் நிறுவனங்கள் குத்தகைக்குப் பெற்றுக் கொண்டுள்ள பெருந்தோட்டக் காணிகள் அனைத்துமே காணி சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு சொந்தமானவை. இது தவிர அரச காணிகள் விநியோகம் செய்யப்படுமிடத்து வழங்கப்படும் காணி உறுதிகள் அந்தந்த காணிகளுக்குப் பொறுப்பான அமைப்புகளுக்கூடாகவே வழங்கப்படுகின்றன. சுவர்ண பூமி, ஜெய பூமி என்றெல்லாம் காணி உறுதிகளுக்கு பெயர்கள் உண்டு. 2015இல் பெருந்தோட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட காணி உறுதிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழுவே தயார் செய்திருந்தது. இக்காணி உறுதிகள் பொதுவான காணி உரிமைப்பத்திர நியமப்படி விற்பனை செய்யவோ கைமாற்றம் செய்யவோ உரிமை பெற்றிருந்தன. எனினும் இதில் சில குறைபாடுகள் இருந்ததாக அமரர் வேலாயுதம் கூட ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அமரர் வேலாயுதம் மறைவுக்கு பின் அப்போதைய அமைச்சர் பழனி திகாம்பரம் அதே தன்மையைக் கொண்ட காணி உரிமைப் பத்திரங்களையே வழங்கி வந்தார். இதில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. ஏற்கனவே ஒரு தடவை அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானும் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களுக்கு காணி உரிமங்களை வழங்கி வைத்தனர். பின்னர் தான் அம்பலமானது இந்த காணி உரிமைப் பத்திரங்கள் சட்டரீதியானவை அல்ல என்பது. எனவே பசுமை பூமி காணி உரிமைப் பத்திரங்களும் அப்படி ஆகிவிடக்கூடாது.  

முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கூடாக வழங்கப்பட்ட காணி உரிமைப் பத்திரங்கள் நம்பகத்தன்மை வெளிப்படுத்தப்படாமலேயே உள்ளது. இதேவேளை பழனி திகாம்பரமே பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்களையும் கையாண்டார். குறைகள் இருந்தபோதும் அவரின் செயற்பாடுகள் நம்பிக்கையூட்டுவதாகவே அமைந்தன. எனினும் ஆட்சி மாற்றத்தின் பின் இந்த வீடமைப்புத் திட்டம் முடங்கிப் போய்விட்டது.

பெருந்தோட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சராக ஜீவன் தொண்டமான் நியமனம் பெற்றிருந்தாலும் கொவிட் தொற்று, பின்னர் பொருளாதார வீழ்ச்சி போன்ற காரணங்களால் வீடமைப்புத் திட்டம் நடைமுறைக்கு வரவில்லை. இந்திய அரசின் நிதியொதிக்கீட்டின் பேரிலான தனி வீட்டுத் திட்டத்தைக் கூட தொடர முடியாத இக்கட்டே இதுவரை நிலவுகின்றது. முன்னைய ஆட்சியில் முழுமை பெறாத சுமார் 1000வீடுகளை (இந்திய நிதி உதவியிலான வீடமைப்புத் திட்டம்) புூரணத்துவப்படுத்தி பயனாளிகளிடம் கையளித்ததாக ஜீவன் தொண்டமான் கூறியிருந்தார்.  

ஜீவன் தொண்டமான் அமைச்சராவதும் ஆகாததும் அவர் சார்ந்த விடயம். ஆனால் யாரோ ஒருவர் அமைச்சராவது மலையகத்தை பொறுத்தவரை விசேடமானது. ஏனெனில் தற்போதைய சூழலில் பெருந்தோட்ட சமூகத்துக்கான அடிப்படையானதும் அத்தியாவசியமானதுமான சில விடயங்கள் செயலற்றுப் போயுள்ளன. பெருந்தோட்டத் தனிவீட்டுத் திட்டம், காணி உறுதிப்பத்திரம் வழங்கல், மலையக அதிகார சபை அடக்கம், பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்படுவதற்கான முன்னகர்வுகள் முடக்கம் என அவசர காரியங்களுக்கான இயங்கு நிலைக்குத் தேவை ஏற்பட்டுள்ளது.  

ஆனால் அரசியல் பிரதிநிதித்துவம் இருந்தாலும் ஆட்சியில் அங்கம் கிடைக்காது போனால் எதுவுமே ஆகாது. அரசியல் அதிகாரம் என்பது இங்கு முக்கியமானது. இதுவரை அரசியல் அதிகாரம் கிடைத்திருந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் மலையக தலைமைகள் பெரிதாக எதனையும் சாதித்து விடவில்லை என்பது வேறு விடயம். இடைக்கால அரசாங்கம் என்ற நிலைமையை மாற்றி எஞ்சியிருக்கும் இரண்டரை வருடங்களுக்கும் இதே ஆட்சியை தொடர வைக்கும் இலக்கோடு பிரதமர் ரணில் விக்ரமசிங்க காய்நகர்த்துவதாகத் தெரிகின்றது. தவிர உடனடியாக ஒரு தேர்தலைச் சந்திக்கும் நிலையில் நாட்டின் நிதி நிலைமை இல்லை.  

எனினும் தீர்க்கதரிசனம் மிக்க ஒரு செல்நெறியைத் தெரிவு செய்தாக வேண்டிய நிலையில் மலையகக் கட்சிகள் இருக்கின்றன. தமிழ் முற்போக்குக் கூட்டணி ஒன்றும் ரணிலை எதிராளியாக பார்க்கப்போவது இல்லை.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு முடிவை எடுக்கும் பட்சத்தில் அது மலையக மக்களிடம் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தாது என்பது இ.தொ.காவுக்கும் தெரியும். த.மு கூட்டணிக்கும் புரியும். ஆனால் இக்கட்சிகளின் தயக்க நிலைக்குக் காரணம். எதிர்வரும் வாரங்களில் 21ஆவது அரசியல் சட்ட திருத்தம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படலாமென தெரிகிறது.

 அப்படி நிகழ்ந்தால் கூடிய விரைவில் அச்சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு வரும். அது நிறைவேற்றப்பட்டதன் பின் மலையகக் கட்சிகள் தமது தற்போதைய போக்கில் நெகிழ்வுத் தன்மையை காட்டப்போவது என்னவோ நிச்சயம். அதற்கிடையில் ஏதாவது நடந்தாலும் நடக்கலாம்.   தற்போது பெருந்தோட்ட மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறார்கள். நிரந்தர வருமானமின்றி அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளதால் தர்மசங்கடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.கா ஸ்டாலின் அன்புடன் அனுப்பி வைத்த அரிசியை ஆசையாய் வாங்கிப் போனார்கள். பத்து கிலோ அரிசியை விநியோகிப்பதில் பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுத்ததன் மூலம் ரணில்தான் மக்கள் மனதில் வந்திருப்பார். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கி ரணிலுக்கு வரவேற்பை பெற்றுத் தந்துள்ளார்.  

இது தற்கால நிவாரணம். மலையக சமூகத்துக்கு விடிவு தரக்கூடிய வேலைத்திட்டங்களே அவசியம். பிரதமர் ரணில் ஒரு பெரும் போக்கான அரசியல்வாதி. பெருந்தோட்ட மக்கள் அவர்மீது ஓர் அபிமானத்தைக் கொண்டிருக்கின்றார்கள். ஜீவன் தொண்டமான் 1000ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுத்தந்தாலும் அதன் பயன் இன்னும் தோட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை. இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தோட்டக் கம்பனிகளுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக அச்சுறுத்துகிறார். கம்பனி தரப்பு பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சப்போவது கிடையாது.  

இதேசமயம் கட்சிகள் தமது சுயநலத் தேவைகளுக்காக மட்டும் மலையக மக்களை பகடைக் காய்களாக பயன்படுத்த எண்ணினால் அது நம்பிக்கைத் துரோகம். இதுவரை அதிகமாக இப்படித்தான் நடந்து வந்திருக்கிறது. மக்களுக்காக அரசியல் செய்வது தான் மதிநுட்பம். கடந்த ஆட்சியில் ரணில் பிரதமர். மலையக மக்களைப் பொறுத்தவரை சில நல்ல காரியங்களுக்கு கைகொடுத்தார். தனிவீட்டுத் திட்டம், காணி உறுதி கையளித்தல், மலையக அதிகார சபை, பிரதேச சபை சட்ட திருத்தம், 5பிரதேச செயலகங்களுக்கான முன்னகர்வு இப்படி சில. இப்போதும் ரணில்தான் பிரதமர்.  

புதிதாக ஏதேனும் கிட்டாவிட்டால் கூட ஏற்கனவே ஆரம்பித்த வேலைத் திட்டங்களையாவது முன்னெடுக்க பச்சைக்கொடி காட்டுவாரா ரணில்?    

பன். பாலா

Comments