கடினம் நிறைந்த மூன்று வாரங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

கடினம் நிறைந்த மூன்று வாரங்கள்!

நாடு எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நிலைமைகள் குறித்து அவ்வப்போது உயர்மட்டத்திலிருந்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டு மக்களுக்கு உண்மை தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட  முக்கியஸ்தர்கள் சிலர் மிகுந்த அக்கறையாக உள்ளனர். நாட்டின் பொருளாதார நிலைமையின் ஆபத்தை அவர்கள் அடிக்கடி  கூறிவருகின்றனர்..

இந்நிலையில், எரிபொருள் மற்றும் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் பிரதமர் பாராளுமன்றத்தில் ஓரிரு தினங்களுக்கு முன்னர் வலியுறுத்தியிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்துப் பாராளுமன்றத்துக்கு விளக்கமளித்திருந்தார்.

அடுத்து வருகின்ற மூன்று வாரங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாக இருக்கப் போகின்றன என்றும், எரிபொருள் மற்றும் எரிவாயுவை சிக்கனமாகப் பயன்படுத்துவதுடன் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் பிரதமர் கோரியிருந்தார். இதற்கும் அப்பால் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்குரிய அபாயமான சாத்தியக்கூறு பற்றியும் அவர் விளக்கியிருந்தார்.

பிரதமர் தெரிவித்திருக்கும் இந்தக் கருத்துத் தொடர்பில் நாட்டு மக்கள் அனைவரும் தீவிர கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியம். எரிவாயு மற்றும் எரிபொருளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீண்ட நாட்களாக கியூ வரிசைகளில் காத்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டுக்குத் தேவையான எரிபொருள் மற்றும் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலரோ அல்லது டொலரைக் கொள்வனவு செய்வதற்குப் போதுமான இலங்கை ரூபாயோ எரிபொருள் கூட்டுத் தாபனம் மற்றும் இலங்கை மின்சாரசபை ஆகியவற்றிடம் இல்லை.

எனவே, ஒவ்வொரு முறையும் எரிபொருள் கப்பல் மற்றும் எரிவாயு கப்பலிலிருந்து அவற்றை கரைக்குக் கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சும் அதிகாரிகளும் உரிய நாணயத்தைத் திரட்டுவதற்குக் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொள்கின்றனர். குறிப்பாக மாதமொன்றுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 500மில்லியன் அமெரிக்க டொலர்களைத் திரட்டி வேண்டியிருப்பதாக மின்சக்தி மற்றும் சக்திவலு அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு நிலை யில் பிரதமர் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் 'மாதத்திற்கு  500மில்லியன் டொலர்களை எரிபொருளுக்காக நாடு செலவிடுகிறது.  தற்போதைய நெருக்கடியால் எரிபொருள் விலை உயரும் அபாயம் உள்ளது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.  இந்த ஆண்டு இறுதிக்குள் உலக மசகு எண்ணெய் விலை 40வீதம் வரை உயரும் என்று சிலர் மதிப்பிட்டுள்ளனர்.  இந்த நிலையில் எரிபொருளுக்கான கூப்பன் முறையை அறிமுகப்படுத்தும் யோசனையை நிராகரிக்க முடியாது.  எப்படியாவது அடுத்த ஆறு மாதங்களுக்கு 3300மில்லியன் டொலர் பெறுமதியான எரிபொருளைத் தேடிக் கொள்ள வேண்டும்.

எரிவாயு இறக்குமதி செய்ய ஒரு மாதத்திற்கு 40மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும்.  நாங்கள் தற்போது எரிவாயு இறக்குமதி செய்ய பலதரப்பு உதவி, உள்ளூர் நாணயம் மற்றும் இந்திய கடன்களைப் பயன்படுத்துகிறோம். அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிவாயுவிற்கு 250மில்லியன் அமெரிக்க டொலர்  தேவைப்படுகிறது.

மேலும், அடுத்த மூன்று வாரங்கள் எரிபொருளுக்கு கடினமான காலமாக இருக்கும். நாம் அனைவரும் எரிபொருள் மற்றும் எரிவாயுவை முடிந்தவரை கவனமாக உபயோகப்படுத்த வேண்டிய நேரம் இது.  பயணங்களை முடிந்தவரை மட்டுப்படுத்த வேண்டும்.  எனவே, இந்தக் காலகட்டத்தில் தேவையில்லாமல் சிந்திப்பதையும், தேவையில்லாமல் எரிபொருள் மற்றும் எரிவாயுவை பதுக்குவதையும் தவிர்க்குமாறு அனைத்து குடிமக்களையும் கேட்டுக் கொள்கிறேன்.  அந்தக் கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் உணவை சிரமமின்றி வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.  பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  அந்த கடினமான மூன்று வாரங்களுக்குப் பிறகு, எரிபொருள் மற்றும் எரிவாயுவை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க நாங்கள் முயற்சி செய்கிறோம்.  இந்த கடினமான மூன்று வாரங்களை பொறுமையாக எதிர்கொள்வோம்' எனக் கூறியிருந்தார்.

அது மாத்திரமன்றி உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக் கூடிய சாத்தியம் தொடர்பில் கடந்த சில நாட்களாக அரசியல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் தமது வீடுகளில் இயன்றளவு பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான கோரிக்கைகளை அலட்சியம் செய்வதற்கான காலம் இல்லை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

 'எங்கள் அறுவடை குறைந்துள்ளது.  இவ்வாறான நிலைமையை சிறுபோகத்தில் எதிர்கொள்ள வேண்டியுள்ளதுடன், அடுத்த பெரும்போகத்தை வெற்றியடையச் செய்வதற்கு இப்போதிருந்தே நாம் கடுமையாக உழைக்க வேண்டும். 

ஆனால் அந்த அறுவடை பெப்ரவரி 2023இறுதியில்தான் கிடைக்கும்.  அரிசியைப் பற்றி பார்க்குமிடத்து, நம் நாட்டின் வருடம் ஒன்றிற்கான அரிசியின் தேவை 2.5மில்லியன் மெட்ரிக் தொன் ஆகும்.  ஆனால் எங்களிடம் 1.6மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி மட்டுமே கையிருப்பில் உள்ளது.

இந்த நிலை நெல் மற்றும் பல பயிர்களுக்கும் பொதுவானது.  அதனால், சில மாதங்களில் உணவு விடயத்தில் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.  நமது அன்றாட உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும். 

ஒரு மாதத்திற்கு 150மில்லியன் டொலர் அளவில் செலவாகும்' என்ற புள்ளி விபரங்களையும் பிரதமர் பாராளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

எனவே, பயிர்ச்செய்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படுவது மாத்திரமன்றி, விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதற்கு   தேவையான உரத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை குறித்தும் பிரதமர் பிரஸ்தாபித்திருந்தார். அது மாத்திரமன்றி மருந்துப் பொருட்களின் தேவை மற்றும் பற்றாக்குறையான மருத்துகளை வெளிநாடுகளின் உதவியுடன் பெற்றுக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் பற்றியும் அவர் விளக்கிக் கூறியிருந்தார்.

அடுத்த ஆறு மாதங்களில் நம் வாழ்க்கையை சாதாரணமாக வைத்திருக்க 5பில்லியன் டொலர்கள் தேவை என்றும், மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இணையாக ரூபாயை வலுப்படுத்த இன்னும் 5பில்லியன் டொலர் தேவை. அதாவது அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டை மிதக்க வைக்க 6பில்லியன் டொலர்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.

நாட்டை சாதாரண நிலைமையில் வைத்துக் கொள்வதற்கு இந்தளவு தொகை நிதி தேவைப்படும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அது மாத்திரமன்றி இலங்கையின் நட்பு நாடுகளிடமிருந்தும் உதவிகள் கோரப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜப்பான், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் இலங்கைக்கு உதவி செய்வதற்கான மாநாடொன்று நடத்தப்படவுள்ளது. இதற்கான இணக்கத்தை உரிய நாடுகள் தெரிவித்துள்ளன.

இவ்வாறான பின்னணியில், நாட்டில் அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையொன்றை ஏற்படுத்த வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் முக்கிய பொறுப்பாக உள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மையானது பொருளாதா ரீதியில் நாட்டை மீட்டெடுப்பது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய கொள்கை ரீதியான தீர்மானங்களுக்கு மிகவும் அவசியமானதாகும்.

இதன் ஒரு கட்டமாகவே பாராளுமன்றத்தின் அதிகாரத்தைப் பலப்படுத்தக் கூடிய வகையில் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கான கோரிக்கை வலுத்துள்ளது.

இருந்தபோதும் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் அரசியல்வாதிகள் மத்தியில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுவதாகவே அரசியல் அவதானிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குறிப்பாக ஆளும் பொதுஜன பெரமுன கட்சிக்குள்ளேயே முரண்பாடான நிலைப்பாடு காணப்படுவதாகத் தெரியவருகிறது.

குறிப்பாக இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அரசியல் மற்றும் உயர் பதவிகளில் வருவதற்குத் தடையை ஏற்படுத்துவது குறித்த சரத்துக்கு பசில் ராஜபக்ஷவும் அவருக்கு ஆதரவானவர்களும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.    21ஆவது திருத்தத்துக்கு தான் எதிர்ப்பு என்பதை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய பின்னர் பசில் ராஜபக்ஷ பகிரங்கமாக ஊடகங்களில் கூறியிருந்தார். எனவே, கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கக் கூடிய அவர், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதே பலருடைய எதிர்பார்ப்பாகவுள்ளது.

மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்கக் கூடிய வகையில் அரசியல்வாதிகள் தமது சொந்த விருப்பு வெறுப்புக்களைக் களைந்து செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இக்கட்டான சூழ்நிலையில் கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி நாட்டையும், எதிர்கால சந்ததியையும் மீட்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதுதான் இன்றைய நிலையில் பிரதானம்.

சம்யுக்தன்

Comments