இந்தியாவின் அர்ப்பணிப்புகளை களங்கப்படுத்தும் குற்றச்சாட்டு! | தினகரன் வாரமஞ்சரி

இந்தியாவின் அர்ப்பணிப்புகளை களங்கப்படுத்தும் குற்றச்சாட்டு!

கச்சதீவு விவகாரமானது இதுவரை காலமும் தமிழ்நாட்டிலேயேஅதிக பேசுபொருளாக இருந்து வந்தது. இலங்கையிடமிருந்துகச்சதீவை எவ்வாறாவது மீட்டெடுக்க வேண்டுமென தமிழகஅரசியல்வாதிகளும், மீனவர்களும் அடிக்கடி குரலெழுப்பி வருகின்றனர்.இலங்கைக்கே சொந்தமான ஒரு தீவுதான் கச்சதீவு என்பதைதமிழ்நாட்டின் அரசியல்வாதிகள் பலரும், அங்குள்ள மீனவர் சங்கங்களும் இன்னுமே மனதளவில் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

ஆனால் இன்று கச்சதீவு விவகாரமானது இலங்கையிலும் பேசுபொருளான விவகாரமாகி விட்டது. தென்னிலங்கை அரசியல் களத்தில் மாத்திரமன்றி, வடக்கு அரசியல்வாதிகள் மற்றும் அங்குள்ள மீனவர் சங்கங்கள் மத்தியிலும் இன்று கச்சதீவு விவகாரம் பரபரப்புக்குரிய விடயமாகி விட்டது. தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல்வாதிகள், கச்சதீவு விவகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டையும் இந்தியாவையும் கண்டிக்கத் தொடங்கியுள்ளனர்.

அதேநேரம் வடக்கிலுள்ள மீனவர் சங்கங்களோ கச்சதீவில் 'கைவைக்க' வேண்டாமென தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் தமிழக மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்து வருகின்றன. வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரான சீ. வி. கே. சிவஞானமும் சில தினங்களுக்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதேவிதமான வேண்டுகோளொன்றை முன்வைத்திருந்தார்.

"உலகத் தமிழ் மக்களின் தலைவராக நீங்கள்தான் கருதப்படுகின்றீர்கள். உங்களைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் வேறானவர்கள் அல்லர். இருநாட்டுத் தமிழர்களும் உங்களால் ஒரேவிதமாகவே நோக்கப்பட வேண்டியவர்களாவர். எனவே வடபகுதித் தமிழர்களையும், தமிழக மக்களையும் சமமாகவே கருதி கச்சதீவை மீளக் கோரும் எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள்" என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளார் சீ.வி.கே. சிவஞானம்.

ஆனால் இத்தனைக்கும் கச்சதீவு விவகாரம் குறித்து இந்திய மத்திய அரசு இதுவரை எந்தவொரு அறிவிப்பையுமே வெளியிடவில்லை என்பதுதான் விந்தையான விடயம்! கச்சதீவை இந்தியா மீளப்பெற வேண்டுமென்ற கருத்தை பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் இதுவரை ஒருபோதுமே கூறியதில்லை. அதேசமயம் அது சம்பந்தமான மறைமுக அழுத்தத்தையும் கூட இந்தியா ஒருபோதும் இலங்கை மீது பிரயோகித்ததில்லை.

அவ்வாறிருக்கையில், கச்சதீவை மீட்டெடுத்துக் கொள்வதற்கு இந்தியா முற்படுவதாக தென்னிலங்கை அரசியல் சக்திகள் சமீப காலமாக உரத்துக் குரலெழுப்பி வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மீதுதான் தென்னிலங்கை அரசியல்வாதிகள் இது சம்பந்தமாக அதிகம் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை மக்களுக்கு உணவு நிவாரணங்களை வழங்கி விட்டு, கச்சதீவைக் கைப்பற்றிக் கொள்வதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து மக்கள் சந்திப்பொன்றில் கண்டனம் வெளியிட்டிருந்தார். அரசியலுக்காகவே அவர் அக்கருத்தைத் தெரிவித்திருக்கக் கூடும்.

உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் வடபகுதியில் மக்கள் ஆதரவைத் திரட்டுவதற்கு மக்கள் விடுதலை முன்னணி கடுமையான பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது. வடபகுதி மீனவர் சங்கங்களின் ஆதரவைப் பெறுவதற்காக கச்சதீவு விவகாரத்தை மக்கள் விடுதலை முன்னணி கருவியாகப் பயன்படுத்துவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

அதேவேளை கச்சதீவு தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு ஏற்கனவே கவலையொன்று உள்ளதையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டுவது பொருத்தமாகும். கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமாக இருக்கும் போதே தமிழக மீனவர்கள் கச்சதீவையும் தாண்டி இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடித்து வருகின்றனர். அவ்வாறிருக்ைகயில், கச்சதீவை இந்தியா மீளப்பெற்றுக் கொள்ளும் நிலைமையொன்று ஏற்படுமானால் தமிழக மீனவர்கள் வடபகுதி கடல்பரப்பை முற்றாகவே ஆக்கிரமித்து விடுவார்கள் என்பதே வடக்கு மீனவர்களின் கவலையாகும்.

ஆனால் கச்சதீவு சம்பந்தமாக தற்போது உருவாகியிருக்கின்ற பரபரப்புகளை நன்றாக ஆராய்ந்து பார்க்கின்ற போது, ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. கச்சதீவை மீட்க வேண்டுமென்பது இந்திய மத்திய அரசின் நிலைப்பாடு அல்ல. அது சம்பந்தமாக இந்தியா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கருத்து எதையும் தெரிவித்ததுமில்லை. தென்னிலங்கையில் அரசியலுக்காகவே இவ்விவகாரம்அரசியல்வாதிகளால் பெரிதுபடுத்தப்படுகின்றது என்பது மட்டும் தெளிவாகப் புலப்படுகின்றது.

தமிழ்நாட்டில் கச்சதீவு விவகாரம் பொருட்படுத்தப்படுவது புதிய விடயமல்ல. அக்காலம் தொடக்கம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை தங்களது அரசியலுக்காக அவ்வப்போது முன்னிலைப்படுத்தியே வருகின்றனர்.

கச்சதீவை இந்தியா எவ்வாறாயினும் மீண்டும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் தமிழக அரசியல்வாதிகளின் கோரிக்கையாக இருக்கின்றது. கச்சதீவை இந்தியா தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுமானால் தமிழக மீனவர்கள் தங்குதடையின்றி இலங்கைக் கடல் எல்லைக்குள் பிரவேசித்து சுதந்திரமாக மீன்பிடித்துக் கொள்ளலாமென்பதுதான் தமிழக அரசியல்வாதிகளின் எண்ணமாகும்.

இலங்கைக் கடல் எல்லைக்குள் வைத்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்ற ஒவ்வொரு தடவையும் தமிழகத்தில் கச்சதீவு விவகாரம் சூடு பிடித்துக் கொள்கின்றது. கச்சதீவை இந்தியா மீட்டெடுத்துக் கொண்டால் மட்டுமே தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க வழியேற்படுமென்று தமிழக அரசியல்வாதிகளாலும், அங்குள்ள மீனவர் அமைப்புகளாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

ஆனால் தமிழகத்தின் குரல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவின் முடிவைத் தீர்மானித்து விட முடியாது. தமிழக கோரிக்ைககளுக்கும் இந்திய மத்திய அரசின் எண்ணங்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா தனிப்பெரும் தேசமாகும். இந்திய தேசத்தின் நலன்களை அடிப்படையாக வைத்தே அதன் வெளிநாட்டுக் கொள்கைகளும் அமைவதுண்டு. கச்சதீவு விவகாரத்திலும் இந்தியாவின் கொள்கை அவ்வாறானதுதான்.

இந்தியா தனது அயல்நாடுகளைப் பொறுத்தவரை இலங்கையை மிக நெருங்கிய நண்பனாகவே எப்போதும் கருதி வந்துள்ளது.

அன்றைய காலம் தொடக்கம் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்ட வேளைகளிலெல்லாம் விரைந்து ஓடோடி வந்து துயர்துடைக்கின்ற முதல் நாடாக இந்தியா உள்ளது. வரலாற்று ரீதியாக நோக்குகின்ற போது இதற்கான உதாரணங்களாக பல சம்பவங்களைக் கூற முடியும்.

2020ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொவிட் பெருந்தொற்று இலங்கையில் தீவிரமடைந்திருந்த போது இந்தியா துரிதமாகச் செயற்பட்டு தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைத்தது. கொவிட் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதில் இந்தியா முதன் முதலாக உதவி புரிந்த நாடு இலங்கை ஆகுமென்பது குறிப்பிடத்தக்கது. 'அயல்நாட்டுக்கே முன்னுரிமை' என்பதுதான் இந்தியாவின் கொள்கையாக இருந்து வருகின்றது. அந்த நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதுமே தவறியதில்லை.

அதன் பின்னர் இலங்கை பொருளாதார நெருக்கடியினால் கலங்கி நின்ற போது இந்தியா வழங்கிய உதவிகளை எக்காலமும் மறந்து விட முடியாது. எரிபொருள், உணவு, மருந்துகள், இரசாயனப் பசளை உட்பட பலவிதமான உதவிப் பொருட்களை இந்தியா தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கி வருகின்றது.

இந்தியா தனது உதவிகளில் ஒருபோதுமே நிபந்தனைகளை இலங்கைக்கு விதித்ததில்லை. இலங்கையின் இன்றைய துயரைத் துடைப்பதிலேயே இந்தியா கண்ணுங்கருத்துமாக இருந்து வருகின்றது. சர்வதேச நிதி அமைப்புகளிடமிருந்து இலங்கைக்கு நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் இந்தியா அக்கறை செலுத்தி வருகின்றது.

இவ்வாறெல்லாம் இருக்கையில், கச்சதீவை மீட்டுக் கொள்வதற்கு இந்தியா முற்படுவதாக அரசியல்வாதிகள் புரளிகளைக் கிளப்பி விடுவது உண்மையிலேயே வேதனைக்குரியதாகும். எமது நாட்டின் துயர்துடைப்பதில் கவனம் செலுத்துகின்ற அயல்நாட்டின் நோக்கத்தில் களங்கம் கற்பிக்கும் வகையில் இவ்வாறு கருத்துகளை வெளியிடுவது நன்றிக்குரிய செயலல்ல என்பதுதான் விடயமறிந்தோரின் கருத்தாகும்.

எஸ்.சாரங்கன்

Comments