நாட்டுக்காக முழு அளவில் எல்லோரும் ஒன்றுபடுவதே இன்றைய தேவை | தினகரன் வாரமஞ்சரி

நாட்டுக்காக முழு அளவில் எல்லோரும் ஒன்றுபடுவதே இன்றைய தேவை

நாட்டில் இரண்டு விடயங்கள்  தொடர்பான உரையாடல்கள் தீவிரமாக நடக்கின்றன. ஒன்று மக்கள் தரப்பில் நிகழ்வது. இது முற்று முழுதாகவே பொருளாதார நெருக்கடிகளைச் சார்ந்தது. அதாவது வாழ்க்கைப் பிரச்சினையைப் பற்றியது. உயிர்வாழ்தலைப் பற்றியது.  

மற்றது அரசியல் தரப்பில் நிகழ்வது. இது அரசியலமைப்புத் திருத்தம் (21ஆவது திருத்தம்) மற்றும் எந்தப் புதிதும் இல்லாத, பயன் குறைந்த - வழமையான - எதிரெதிர் மனப்பாங்குடன் விவாதங்களை நடத்துவது, சலிப்பூட்டும் வகையில் வக்கிரம் நிறைந்த ஆளை ஆள் குற்றம் சாட்டுதல் எனத் தொடர்வது.

மக்கள் தினமும் – ஒவ்வொரு நொடியிலும் – பலவகையான நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நாளாந்த வாழ்க்கை முற்று முழுதாகவே கேள்விக்குள்ளாகியுள்ளது. எரிபொருளுக்காக மணிக்கணக்காக – நாட்கணக்காகக் கூடத் தெருவிலே நிற்க வேண்டிய நிலை. உணவுப் பொருட்களுக்காக க்யூவில் நிற்க வேண்டும். எரிவாயுவைத் தேடித்திரிவது. மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு, விவசாய உள்ளீடுகளைப் பெறுவதில் சிரமம் என முடிவற்ற அலைச்சலில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதை விட நொடிக்கு நொடி ஏறிக் கொண்டிருக்கும் விலை உயர்வு. இதை ஈடுகட்டக் கூடிய அளவுக்கு வருவாயில்லை. இப்படிப் பல தொடர் பிரச்சினைகள். 

இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களை, மாதங்களை எப்படிக் கடப்பது என்று தெரியாமல் எல்லோரும் திகைத்துப்போயிருக்கிறார்கள். பசியும் பஞ்சமும் பட்டினியும் தலைவிரிக்கத் தொடங்கியுள்ளன. பட்டினிச் சாவுகளும் பசியினால் தற்கொலை முயற்சிகளும் நிகழ்கின்றன என்று செய்திகள் வரத் தொடங்கியுள்ளன.  

ஆனால், இதைப்பற்றி, இந்த நிலைமை தீவிரமடைந்து வருவதைப் பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி அரசியற் தரப்பினர் உள்ளனர், செயற்படுகின்றனர். இதில் எந்தத் தரப்பும் விதிவிலக்கல்ல. அரசாங்கம் இன்னும் முறையாகவும் முழுமையாகவும் இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் முயற்சியில் இறங்கவில்லை. அப்படி இறங்கியிருந்தால் அது இப்பொழுது அதற்கான ஏற்பாடுகளைச் செய்து பொறிமுறைகளை உருவாக்கியிருக்கும். இப்பொழுது நடந்து கொண்டிருப்பதெல்லாம் உடனடியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற அளவில் மேற்கொள்ளப்படும் கடன் பெறுதல், உதவி கோருதல் போன்றவையே. இது அவசியமே. கடன் மூலமும் உதவிகளின் வழியாகவும்தான் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், இப்படியே இதைத் தொடர முடியாது.  

 ஆனால் நிதியமைச்சர் என்ற வகையிலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ள பிரதமர் என்ற வகையிலும் தன்னால் முடிந்த அளவுக்கு நிதி நெருக்கடியைத் தணிப்பதிலும் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்ப்பதிலும் முயற்சிகளை எடுப்பேன் என்று உறுதியளித்திருக்கிறார் ரணில் விக்கிரமசிங்க. இதற்கு அவர் ஒரு படிமுறைத்திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். அவருடைய அறிவிப்பின்படி அடுத்த ஆண்டு சற்று முன்னேற்றமும் 2025இல் சமநிலையடையக் கூடிய அளவிலான பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.  

இதைச் சாத்தியப்படுத்தக் கூடிய அரசியற் சூழல் உள் நாட்டிலும் வெளியிலும் நிலவுமா என்பது கேள்வியே. மட்டுமல்ல, தற்போதுள்ள அரசாங்கம் கூட அந்தளவு காலத்துக்குத் தாக்குப்பிடிக்குமா என்பதும் சந்தேகமே. இதையும் பிரதமர் உள்ளுணர்ந்திருக்கிறார். ஆட்சி மாறினாலும் அதிரடியாக இந்தப் பொருளாதாரத் திட்டத்தை மாற்றாமல் தொடர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருப்பதிலிருந்தே இதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இதையும் கடந்தே அரசும் நாட்டின் அரசியற் சக்திகளும் சிந்திக்க வேண்டும். செயற்பட வேண்டும். அதையே இன்றைய நிலை எதிர்பார்த்து நிற்கிறது. இல்லையெனில் எதிர்காலம் மிகப் பாழடைந்து விடும். அபாயக்குழியில் வீழ்ந்து விடும். அதற்குப் பின் இந்த அரசியலை யாராலும் தொடரவும் முடியாது. தாக்குப் பிடிக்கவும் முடியாது. நாடே தன்னுடைய இறைமையை இழந்து பிறர் தயவில், பிறர் ஆளுகைக்குள் சிக்குண்டு விடும்.  

இதொன்றும் அதீதமான கற்பனையோ அளவுக்கு மிஞ்சிய எச்சரிக்கையோ இல்லை. நடைமுறையில் உருவாகப்போகும் யதார்த்தம்  - உண்மை.    இப்போதைய பொருளாதார நெருக்கடி என்பது பிறரை  - வெளியாரை முற்று முழுதாகவே நம்பியிருக்க வேண்டிய நிலையில் உள்ளது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எந்தப் பொருளும் கையிருப்பில் இல்லை. உணவுப் பொருட்களும் சரி, எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள், விவசாய உள்ளீடுகள் அனைத்தும் அனைத்துமே.  ஆகவே அத்தனையும் இறக்குமதி செய்யப்பட்ட நிலையிலேயே அந்தந்த இடங்களுக்கு – நேரடி விநியோகத்துக்குச் செல்கின்றன. இதை விடக் கவனிக்க வேண்டியது, எதையும் இறக்குமதி செய்வதற்கான பணம் இல்லை என்பது. டொலர் இல்லாத காரணத்தினால் துறைமுகத்துக்கு வெளியே கப்பல்கள் தரித்து நிற்கின்றன. வெளியாரின் உதவிகள் மூலமாகத்தான் நாளாந்தம் ஏதோ போய்க் கொண்டிருக்கிறது.  இப்படியே எத்தனை நாளைக்கு இந்த நிலைமையில் தொடர முடியும்?  

அப்படியென்றால், மாற்றுப் பொருளாதாரப் பொறிமுறைகள் சமாந்தரமாக உருவாக்கப்பட வேண்டும். அந்த மாற்றுப் பொருளாதாரப் பொறிமுறைகளைத் தனியே அரசாங்கம் மட்டும் உருவாக்க முடியாது. அதில் எதிர்க்கட்சி தொடக்கம் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிக்கின்ற அத்தனை தரப்புகளும் பங்கேற்பது அவசியம்.  இப்படிச் சொல்லும்போது “இதற்காகத்தானே தேசிய அரசாங்கத்தை அமைக்கச் சொன்னோம். அதற்கு ஜனாதிபதி இணங்கவில்லையே!” என்று யாரும் பதிலளிக்கக் கூடும். இதொன்றும் புதிய சேதியுமல்ல. புதிய உண்மையுமல்ல. இலங்கை அரசியற் பாரம்பரியமே இப்படித்தான் உள்ளது. எந்த நெருக்கடியைத் தணிப்பதற்கும் – தீர்ப்பதற்கும் ஏற்ற வகையில் தேசிய ஒருமைப்பாட்டை எட்டுவதைப்பற்றி எவரும் சிந்திப்பதே இல்லை. பதிலாக எரிகின்ற வீட்டில் பிடுங்குவது  மிச்சம். பிணத்திலே கழற்றுவது லாபம் என்றே ஒவ்வொரு தரப்பும் சிந்திப்பதுண்டு. இப்பொழுதும் இதுவே நடக்கிறது.  

ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்றைப் பற்றி இன்னும் சிந்திக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். அது தவறாகவும் இருக்கலாம். இருக்கலாம் என்று சொல்வதை விட அது தவறு? என்றே எடுத்துக் கொள்வோம்.

அதற்காக நாட்டையும் மக்களையும் இப்படியே அழிவில் விட்டு விடலாமா?

விரும்பியோ  விரும்பாமலோ ஜனாதிபதி அமைத்துள்ள அமைச்சரவையை ஏற்றுக் கொண்டுதானே பாராளுமன்றம் இயங்குகின்றது. நாடு முழுவதிலும் நிர்வாக  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படியிருக்கும்போது இதை விட்டு விலகி நின்று  கொண்டு தனியே வழமையைப்போல அரசியல் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளாமல் இணைந்த பொருளாதாரக்  கொள்கை ஒன்றைப் பற்றி பேசவும் விவாதிக்கவும் அதன் விளைவாகத் திட்டமொன்றை உருவாக்கவும்  வேண்டும்.  சில வேளை அரசாங்கத்தின் தரப்பில் போதாமைகளும் தவறுகளும் பலவீனங்களும் இருப்பின் அதற்குப் பதிலாக மாற்றுத் திட்டங்களையும்  தீர்வுகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கலாம். இதில் எதிர்க்கட்சிகள் தனித்தும் செயற்பட முடியும்.  சேர்ந்தும் செயற்பட முடியும். சிலவேளை அரசாங்கத்தினால் செய்ய முடியாத –அதனால் உருவாக்க முடியாத  ஒரு திட்டத்தை எதிர்த்தரப்பில் உள்ள எவராவது செய்யவும் கூடும்.

அப்படி உருவாக்கப்படும் பொருளாதாரத் திட்டத்தை அரசிடம் சமர்ப்பித்து அதை நடைமுறைப்படுத்தக் கோரலாம். இப்பொழுது தேவை அவசர நடவடிக்கையே. இந்த அவசர நடவடிக்கையில் அனைவருடைய பங்களிப்புமே.

இதற்கான அரசியல் ஒழுங்கொன்றைப் புதிதாக நாம் உருவாக்க வேண்டும். சுய விருப்பு –வெறுப்புகளை விட்டு மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு செயற்பட வேண்டிய ஒழுக்கம் ஒன்று தேவை. இந்த ஒழுக்கம் ஒரு செழுமையான அரசியற் பண்பாடாக வளர்ச்சியடையுமாக இருந்தால் இன்றைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மட்டுமல்ல, எதிர்காலத்தில் இலங்கையில் உருவாகவுள்ள நெருக்கடிகளைத்தீர்ப்பதற்கும் அது உதவும். அதோடு நீண்ட காலமாகவே தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கும் இது பயன்படும்.  ஆனால், துரதிருஷ்டவசமாக இதுவரையில் எந்த அரசியற் தரப்பும் எந்த ஒரு பொருளாதாரத் திட்டத்தையும் தயாரிக்கவும் இல்லை. அதைப்பற்றிச் சிந்திக்கவும் இல்லை.  பதிலாக எளிமையான முறையில் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுவதிலேயே குறியாக உள்ளன. இதனால் என்ன பயன்? ஆகவே மக்களுடைய தேவைகள், நலன்கள், விருப்பங்களுக்கு வெளியே – அவற்றுக்கு மாறாகவே இந்த அரசியற் தரப்புகள் உள்ளன. அரசாங்கமோ அமைச்சரவையை நீட்டிக்கொண்டு போகிறது. இதை விட 30வரையான இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.   ஒரு பக்கத்தில் அரசுப் பணியாளர்களையே குறைப்புச் செய்வதைப்பற்றிச் சிந்திக்கும் அரசாங்கம் அமைச்சரவையில் ஏன் அளவுக்கு அதிகமான ஆட்களின் நியமனம்? என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது.    நாடு இன்றிருக்கின்ற நிலையில் செலவீனங்களைக் குறைத்து வளங்களைப் பெருக்க வேண்டும். எல்லோரும் முழு அளவில் நாட்டுக்காக ஒன்று பட்டு உழைக்க வேண்டும்.  இல்லையேல் கூட்டு நெருக்கடியை அனைவரும் சந்திக்க வேண்டும். சில வேளை கூட்டு அழிவையும் கூட.

கருணாகரன்

Comments