இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆழத் தடம்பதித்த எஸ்.பொன்னுத்துரை | தினகரன் வாரமஞ்சரி

இலக்கியத்தின் அனைத்துத் துறைகளிலும் ஆழத் தடம்பதித்த எஸ்.பொன்னுத்துரை

எஸ்.பொ. என எழுத்துலகில் பிரபல்யம் பெற்றிருந்த எஸ். பொன்னுத்துரை தடம்பதிக்காத இலக்கியத் துறைகள் எதுவுமே இல்லை. சிறுகதை, நாவல், நாடகம், வானொலி நாடகம், கட்டுரை, உருவகக் கதை, கவிதை, Creative essays, ஆய்வு, மொழிபெயர்ப்பு, பத்தி எழுத்து, விமர்சனம், பதிப்பு முயற்சிகள் என இவர் சகலதுறைகளிலும் தடம் பதித்துள்ளார்.  

இவர், ஞானம் சஞ்சிகைக்கு ஒரு நீண்ட தொடர் நேர்காணலை வழங்கியுள்ளார். அந்த நேர்காணலில் தனது எழுத்துலக ஆரம்பம் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: '1948இல் தமிழகத்திலிருந்து ப. ஜீவானந்தம் என்ற கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் முதன்முதலில் யாழ்ப்பாணத்திற்கு வந்தவர். அவர்தான் முதன்முதலில் யதார்த்த இலக்கியம் பற்றியும் மக்கள் இலக்கியம் பற்றியும் முற்போக்கு இலக்கியம் பற்றியும் பேசினார். அவருடைய வழிநடத்தலின் காரணமாகவும் பின்னர் தமிழ்நாட்டில் மாணவனாக இருந்த பொழுது கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயலாற்றியதினாலும் அங்கே புடம்போடப்பட்டு எழுத்தாளனாக இலங்கைக்கு வந்தேன். இந்தியாவில் வாழ்ந்த காலத்தில் இந்தியப் பத்திரிகையிலும் எழுதினேன். எனது அங்கீகாரம் பெற்ற எழுத்துக்கள் 1955இன் பின்னரே எழுதத் தொடங்கினேன் '  

1946இல் வீரகேசரியில் வெளிவந்த மலர்கள் என்ற கவிதையுடன் இவரது இலக்கியப் பயணம் தொடங்கியது. 

1961இல் வெளிவந்த தீ என்ற நாவல் அவரை ஒரு பிரச்சினைக்கு உரிய எழுத்தாளராக உலகுக்கு அறிவித்தது. இந்த நாவலை அவர் தனது 29ஆவது வயதில் எழுதினார். பாலியல் தீ யினால் கதாநாயகன் பொசுக்கப்படுவதை துலாம்பரமாக விபரிப்பது அந்ந நாவல். நாயகன் அந்த வேட்கைகளையும் அவற்றைத் தீர்த்துக் கொண்ட வகைகளையும் தற்கூற்றாக விபரிக்கும் விதத்தில் படைக்கப்பட்டிருந்தது தீ நாவல். வசதிபடைத்த ஒரு இளைஞன் தன்னுடைய வாழ்வில் சந்தித்த ஆறு பெண்களுடன் கொண்ட உறவுகள் பற்றி விபரிக்கிறது இந்நாவல். தீ நாவலின் பல பகுதிகள் தனது சொந்த அனுபம் என அவர் ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணலில் கூறியிருக்கிறார். 

சுதந்திரனில் எஸ்.பொ எழுதிய ஒப்பற்ற நாவல்தான் சடங்கு இலங்கை கிளறிக்கல் சேவன்ற் ஒருவன் ஒருகாலத்தில் எவ்வாறு தன் ஆசைகளையும் ஏக்கங்களையும் மறைத்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒருவனாய் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்வதற்கான ஒரு Social Doccument. இந்த நாவல் தமிழகத்தில் ராணிமுத்து பிரசுரமாக வெளிவந்து 145,000பிரதிகள் விற்பனையாகின என்பதும் ஒரு சாதனையாகும்.   எஸ்.பொ.வின் வரலாற்றில் வாழ்தல் சுயசரிதை 2000பக்கங்களில் வெளிவந்தது. இந்த நூல் எஸ். பொ.வின் தனிப்பட்ட வாழ்க்கையை மட்டுமல்ல இலக்கியம் தொடர்பான பன்முகப் பரிமாணங்களையும் விபரிக்கிறது. 

இவரது அப்பாவும் மகனும்| காவியம் தொடங்கி மாயினி நாவல்வரை சிங்கள பெளத்தவாதத்திற்கு எதிரான எழுத்துக்கள். மாயினி நாவல் ஈழத்து அரசியல் சார்பான இனவாத அரசியலின் வரலாற்றை மிக விஸ்தாரமாக பரந்த தளத்தில் பேசுகிறது. இந்த நாவலில் நடமாடும் பாத்திரங்களாக வாசுதேவ நாணயக்காரா, சிறிமா பண்டாரநாயக்க, எஸ். ஜே. வி. செல்வநாயகம், அனுரா பண்டாரநாயக்கா, பிரேமதாசா, சந்திரிகா, அன்ரன் பாலசிங்கம், மகாத்மா காந்தி, எம். ஜீ. ஆர், ராஜிவ்காந்தி, முதலாம் விமலதர்ம சூரியன், ஹிட்லர் ஆகிய பாத்திரங்களைக் காணமுடியும். 

1992இல் நனைவிடை தோய்தல் வெளியானது. ஐம்பதுகளில் இருந்த யாழ்ப்பாணத்தின் புவியியல் அமைப்பையும் கலாசாரத்தையும் புரிந்துகொள்ள நனவிடை தோய்தல் தவிர வேறு எந்தப் படைப்பும் தமிழில் தோன்றவில்லை. எஸ்.பொ. தனது இளமைக் காலத்தில் காணப்பட்ட பல்வேறு விடயங்களையும் சுவாரஸ்யமாகச் சொல்வதில் வெற்றிகண்டுள்ளார். 

சிக்கலான இந்து, பௌத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு முறையே அவா, வீடு, நியமம், இத்தா ஆகிய சிறுகதைகளை எழுதிய துணிச்சல் மிக்க எழுத்தாளர் இவர். 

 எஸ்.பொ. அங்கதச் சுவையில் அரச உயர்மட்டத்தில் இடம்பெறும் லஞ்ச லாவண்ணியங்களை பந்தநூல் எனப்படும் வினாக்குறியின் தலைப்புடன் 1972இல் வெளியிட்டார். இந்த நூல் நச்சாதார்க்கும் இனியர் உரையுடன் கூடியதாக யாத்திரை செய்யும் பிரமிப்பைக் கொடுக்கும். 

மட்டக்களப்பு மாப்பிள்ளை என்ற நாடகம் எஸ்.பொ.வினால் எழுதப்பட்டு இலங்கை வானொலியில் சானாவினால் ஒலிபரப்பப்பட்டது. இதில் யாழ்ப்பாண வட்டாரப் பேச்சு வழக்கு, மட்டக்களப்புத் தமிழ், மட்டக்களப்பில் வாழும் முஸ்லிம்களின் தமிழ், பறங்கியர் பேசும் தமிழ், பரம்பரையாக வாழ்ந்து வரும் சிங்களவர் பேசும் தமிழ் என அனைத்து மொழி வழக்குகளையும் அந்த நாடகத்தில் புகுத்தியிருந்தார். இதனைவிட இவரது பல ஓரங்க நாடகங்களும் உரைச்சித்திரங்களும் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன. 

கோஷ் என்ற கதை யாழ்ப்பாணத்தில் நடைபெறுகிறது. விலை என்ற கதை மட்டக்களப்பில் நடைபெறுகிறது. வேலி என்ற கதை திருக்கோணமலையில் நடைபெறுகிறது. அந்தந்தப் பிரதேசத்துக்குரிய பேச்சு மொழியில் அக்கதைகளை எழுதியுள்ளார். 

ஆண்மை என்ற 15கதைகள் அடங்கிய 400பக்கங்கள் கொண்ட தொகுதியில் இவரது சொல்லாட்சியின் முழுத்துவத்தைக் காணலாம். எல்லாக் கதைகளுக்கும் ஒரே தலைப்பு ஆண்மைதான். இப்படியாக ஒரே தலைப்பில் 15வெவ்வேறு கதைகள் அடங்கியிருப்பது புதுமை. உலகத்திலே இப்படியாக வரும் முதல்தொகுதி இதுதான் எனக் குறிப்பிட்டுள்ளார் அ. முத்துலிங்கம். 

எஸ். பொ. ஆபிரிக்க இலக்கியங்கள் சிலவற்றை தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 

புதியசொற்களை உருவாக்குவதற்கு எழுத்தாளனுக்கு உரிமை உண்டு என்று குறிப்பிடும் எஸ்.பொ. மிலேனியம் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அதன் பொருள் விளங்குமாறு புத்தாயிரம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர். அதே போன்று புலம்பெயர் இலக்கியம் என்ற சொல்லையும் அவர் அறிமுகப்படுத்தினார். மற்றும் முன்னீடு, சுவைஞன் பறப்பு, கதைஞன் போன்ற இன்னும் பல சொற்களை அவர் உருவாக்கினார். 

இவரது எழுத்துநடை சிறப்பு வாய்ந்தது. சொற்களைச் செதுக்கியும் புதுக்கியும் வீரியம் ஏற்றும் வல்லாளர் இவர். அறுபதுகளில் முற்போக்கு அணியினருடன் முரண்பட்டு இவர் முன்வைத்த 'நற்போக்கு' இலக்கியக் கோட்பாடு பெருஞ் சர்ச்சைக்கு உள்ளாகியது.  

'நற்போக்கின் பிரதான அம்சம் என்பது தமிழ்த்துவம். தமிழ்த்துவம் என்பது மரபு ரீதியான தமிழ் இலக்கியங்களுடைய வேரிலிருந்து உறிஞ்சப்பட்டு புதிய இலக்கியம் படைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்லாமல் தமிழ் மொழியும் தமிழ் இலக்கியத்தின் தனித்துவங்களும் பேணப்பட வேண்டும். தமிழ்த் தேசிய உணர்வும் தமிழ்த் தேசியத்தை வளம்படுத்துவதற்கான சுதந்திர சுயாதீனமுள்ள தமிழ் மண்ணும் இருக்கவேண்டும்' என ஞானம் நேர்காணலில் விளங்கப்படுத்தியுள்ளார். 

1998ஆம் ஆண்டு இவரது மித்ர பதிப்பகம் தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மித்ர பதிப்பகத்தின் உருவாக்கம் உலகத்தமிழ் இலக்கிம் என ஒன்றை உருவாக்குவதாக அமைந்தது.  

யாழ்ப்பாணம் நல்லூரில் சண்முகம், அம்மாக்குட்டி தம்பதிக்கு 24.-05-.1932இல் மகனாகப் பிறந்த பொன்னுத்துரை, தனது ஆரம்பக் கல்வியை யாழ். புனித சம்பத்திரிசியார் கல்லூரி, யாழ் பரமேஸ்வராக் கல்லூரி ஆகியவற்றில் பெற்றவர். உயர்கல்வியை சென்னை கிறித்தவக்கல்லூரி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பெற்று பி.ஏ. பட்டம் பெற்றவர். தமிழ் ஆசிரியராக யாழ்ப்பாணம், மலைநாடு, கொழும்பு, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும் ஆங்கில ஆசிரியராக நைஜீரியாவிலும் பணியாற்றியவர். 

இவரது மனைவி பெயர் திருமதி ஈஸ்வரம். பிள்ளைகள், டாக்டர் அனுர, புத்ர, மித்ர, இந்திரா, மேகலா ஆகியோராவர். 

இவர் பத்துக்கும் மேற்பட்ட புனைபெயர்களில் எழுதியுள்ளார். இவரது நாவல்களாக (1) தீ, (2) சடங்கு, (3) மத்தாப்பு, (கூட்டு முயற்சி), (4) தேடல், (5) மணிமகுடம், (6) மாயினி என்பனவும் சிறுகதைத் தொகுதிகளாக, (1) வீ, (2) சதுரங்கம் (கூட்டுமுயற்சி), (3) அவா, (4) ஆண்மை, (5) கீதை நிழலில், (6) பூ, (7) எஸ்.பொ. கதைகள், (8) உறவுகள் ஆகியனவும் வெளிவந்துள்ளன. கட்டுரைத் தொகுதிகளாக,(1) இஸ்லாமும் தமிழும், (2) காந்திய தரிசனம், (காந்திய கதைகள், (4) ? -அங்கத நூல்கள், (5) எஸ்.பொ. அறிக்கை, (6) நனவிடை தோய்தல், (7) நீலாவணன் நினைவுகள், (8) பெருங்காப்பியம் பத்து, (9) பனிக்குள் நெருப்பு, (10) தீதும் நன்றும், (11) முன்னீடு, (12) இனி (இனியொருவிதி செய்வோம்) ஆகியனவும், கவிதைத் தொகுதிகளாக (1) அப்பையா, அப்பாவும் மகனும் ஆகியனவும் நாடக நூல்களாக (1) வலை, (2) முறுகல், (3) ஈடு, (4) சாவு, (5) முதல்முழக்கம், (6) அனாதைகள் (6) அந்தநாள் (7) கூண்டுக்கு வெளியே என்பனவும் வெளியாகியுள்ளன. 

இவரது பணிகளைப் பாராட்டி கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனை இயல்விருது 2010இல் வழங்கப்பட்டது. ஞானம் சஞ்சிகை தனது 115ஆவது இதழை எஸ். பொ. சிறப்பிதழாக வெளியிட்டது. எஸ்.பொ. 26-.11.-2014இல் அமரரானார். 

Comments